Home / பொருளாதாரம் / இயற்கை வளம் / “நமக்கு சூடு சொரணை இருக்கிறதா?

“நமக்கு சூடு சொரணை இருக்கிறதா?

“தமிழக இயற்கை வளங்களும் நமது எதிர்காலமும்” என்ற தலைப்பில் இளந்தமிழகம் இயக்கத்தின் மதுரைத் தோழர்கள் அண்மையில்(ஆகத்து 31) நடந்த புத்தகத் திருவிழாவில் நடத்திய கருத்தரங்கில் சூழலியல் எழுத்தாளர். தோழர். நக்கீரன் அவர்களின்

உரை….இங்கே

எழுத்து வடிவில் இங்கே…

அனைவருக்கும் வணக்கம்!

இங்கே அனைவரும் விழித்திருக்கிறீர்கள். ஆனால், நம்மை 2020 வரையில் தூங்கச் சொல்லி இருக்கிறார்கள். ஏனென்று கேட்டீர்களானால் 2020 ல் இந்தியா வல்லரசு ஆகிவிடும். அதனால் அனைவரும் கனவு கண்டு கொண்டிருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். நாம் எப்பொழுது கனவு காண்போம்? தூக்கத்தில் தான் கனவு காண்போம். நாம் அனைவரும் விழித்திருப்பது ஒரு பெரிய ஆபத்து.

ஏன் கனவு காணச் சொல்கிறார்கள் என்று கேட்டால் – வளர்ச்சி என்றால் பூமியைப் பார்க்கச் சொல்லவே மாட்டார்கள், எப்பொழுதும் வானத்தை தான் காட்டுவார்கள்; கேட்டால், “அதோ பார் PSLV, அதோ பார் செயற்கைக்கோள் (Satellite), அதோ பார் அக்னி ஏவுகணை,” என்று சொல்லுவார்கள். நாமும் அதனை அண்ணாந்து வேடிக்கை பார்த்துவிட்டு கொஞ்சம் கீழே குனிந்து பார்த்தால், பூமியில் உள்ள நீரினை எவனோ ஒருவன் பறித்துக் கொண்டு சென்றிருப்பான். என்னவென்று விசாரித்தால், செயற்கைக்கோளை வைத்து எங்கே நீர்வளம் இருகிறதென்பதை அறிந்து, அதனை கோக-கோலா (Coca-cola) நிறுவனத்திற்கும், பெப்சி நிறுவனத்திற்கும் கொடுத்திருப்பான். அதனால் தான் அவன் கங்கைகொண்டான் வரை வந்திருக்கிறான். இந்த தண்ணீர் நமக்கு பயன்படும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை.

சரி. நிலத்திற்கு கீழே உள்ள தண்ணீரை தான் சுரண்டுகின்றான் என்று பார்த்தால், இங்கே ஒரு நதியையே விற்றுவிட்டார்கள். 1997-ம் வருடம் சத்திஸ்கர் மாநிலத்தில் “சியோனத்” (Sheonath) என்ற நதி ஓடிக்கொண்டிருந்தது. அது ஒரு சிறிய நதி தான், ஆனால் ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடிக் கொண்டிருந்த நதி, 24 கிலோமீட்டர் நீளமான நதி.

அந்த நதிக்கரையில் விவசாயிகள் ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ஒரு சில விவசாயிகள் சிரம‌ப்படுகிறார்கள் என்று தொழிற்சாலை ஒன்று ஆரம்பித்துக் கொடுத்தார்கள். தொழிற்சாலை தொடங்கியவர்கள் தங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டனர். உடனே அரசாங்கம் ரேடியஸ் வாட்டர் (Radius Water Limited) என்ற தனியார் நிறுவனத்தை அழைத்து, “ஒரு பெட்டிக்கடை வைத்து பிழைத்துக்கொள்,” என்பது போல அங்கே ஒரு அணை கட்டிக்கொள்ள பிழைக்கச் சொல்லி அனுமதித்தது. அங்கே தொழிலதிபர்கள் கஷ்டபடுகின்றனர், அதனால் அணை கட்டி அந்த தண்ணீரை அவர்களுக்குக் கொடு என்று அரசாங்கம் சொன்னது.
இந்தப்பக்கம் இருக்கும் விவசாயிகள் பணக்காரர்கள். ஏனென்றால், இந்த நாட்டில் 24 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே இருப்பவர்கள் என்று சொன்ன அதிபுத்திசாலிகள் வாழும் நாடு இது.

அதனால் அவன் அந்த விவசாயிகள் பற்றிக் கவலைப்படவில்லை. அந்த நதியை 22 வருடங்கள் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, 39 கோடி ருபாய் செலவில் அணையைக்கட்டி லாபம் எடுக்க திட்டம்போட்டான். அத்திட்டத்தின் போது, நதியில் மீன்பிடித்தவர்களைத் தடுத்து, மீன் பிடிக்கக் கூடாது என்று கூறினான். ஏன் என்று கேட்டால், “இந்த நதியை நாங்கள் வாங்கிவிட்டோம்,” என்று சொல்லி இருக்கிறான். அதற்கு மீனவன், “இது ஆண்டாண்டு காலமாக நாங்கள் மீன் பிடித்த இடம். நாங்கள் கொடுக்கமுடியாது,” என்று சொன்னவுடன், அவர்கள் விரித்த வலைகளை எல்லாம் இயந்திரப்படகுகள் வைத்து அழித்து விடுகின்றனர்.

unnamed (3)

அதன்பின்னர் கால்வாய் வெட்டி விவசாயம் செய்ய முற்பட்டபோது, கால்வாய்களை மூடச் சொன்னான். அதற்கும் சளைக்காமல் விவசாயம் செய்ய, கிணறு வெட்டுகிறான் [விவசாயி]. அங்கேயும் விவசாயம் செய்யக்கூடாது என்று தடுக்கிறான் [தனியார் நிறுவனம்]. அதற்கு விவசாயி, “ஆற்றைத் தானே நீ வாங்கி இருக்கிறாய், என் கிணற்றை வாங்கவில்லையே,” என்று கேட்டதற்கு, அவன் சொல்கிறான், “கிணறு வேண்டுமென்றால் உனக்குச் சொந்தமாக இருக்கலாம், ஆனால் அதில் இருக்கும் தண்ணீர் எனக்குச் சொந்தம்,” என்று.

விவசாயம் செய்யத் தான் விடவில்லை என்று நொந்துகொண்டு, பெண்கள் துணிகளை அலசப் போனால், அங்கே படித்துறையைச் சுற்றிலும் வேலி கட்டி, “No Trespassers” (அத்துமீறிகளுக்கு அனுமதி இல்லை) என்று ஒரு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இது அனைத்தும் கதை அல்ல. நம் நாட்டில், சத்திஸ்கர் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம். அதன் பின்னர் அந்த மக்கள் பொங்கி எழுந்து போராடினார்கள். பல சிக்கல்களுக்குப் பின்னர், 2000-ம் ஆண்டு, தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை (Contract) ரத்து செய்தார்கள்.

இப்படி, தனியார் நிறுவனத்திற்கு ஆற்றை விற்றது எங்கேயோ சத்திஸ்கர் மாநிலத்தில் மட்டும் நடந்ததாக நினைக்காதீர்கள், நமது தமிழ்நாட்டிலும் அதேபோல் ஒரு ஆற்றை விற்றுவிட்டார்கள். அந்த ஆற்றின் பெயர் தான் பவானி.

பெக்டெல் (Bechtel) என்ற நிறுவனத்திடம் அது ஒப்படைக்கப்பட்டது. எப்படி என்று கேட்டீர்களானால், பொலிவியா (Bolivia) என்ற நாட்டில், கொக்கபம்பா (Cochabamba) என்ற நகரத்தில் இருந்து ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட பெக்டெல்லை, இரண்டு கரம் நீட்டி வா வா என்று கூப்பிட்டு நம்முடைய பவானி ஆற்றுத் தண்ணீரை விற்று, திருப்பூர் நகருக்கு கொடு என்று விட்டது [அரசாங்கம்].

தண்ணீர் தனியார் மயமாக்கப்பட்ட நிகழ்வு, முதன்முதலாக ஆசியாவிலேயே, அதுவும் தமிழகத்தில், திருப்பூரில் தான் நடந்தது.

நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சென்னைக்கு குடிநீர் வீராணம் ஏரியில் இருந்து எடுக்கப்படுகிறது. 200 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவரத்தெரிந்த நமது அரசாங்கத்திற்கு, வெறும் 56 கிலோமீட்டர் நீளமுள்ள [தொலைவிலுள்ள] பவானி ஆற்றிலிருந்து திருப்பூருக்கு தண்ணீர் கொண்டு வரத்தெரியாதா?

தெரியும். ஆனால் ஏன் செய்யவில்லை? சிக்கல் இதுதான். நாம் வெறுமனே இந்த அரசாங்கம், அந்த அரசாங்கம், இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்று பார்த்துக்கொண்டிருப்பதில் உபயோக‌மில்லை. இதற்குப் பின்னாடி யார் இயங்குகிறார்கள் என்பது தான் மிக முக்கியம். இதற்கு பின்னாடி இயங்குவது ஒரு உலக வட்டிக் கடை. அதனை அனைவரும் உலக வங்கி என்று சொல்லுவார்கள். அவனுக்கு பங்காளி ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் ஐ எம் எப் (IMF) – International Monetary Fund என்று சொல்லுவார்கள். அவன் [அது] ஒரு கந்து வட்டி நிறுவனம். கிராமங்களில் சொல்லுவார்கள், ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்று. ஆனால், இந்த உலக வங்கி புகுந்த நாடும், ஐ எம் எப் புகுந்த நாடும் சத்தியமாக உருப்படாது.

இவர்கள் இருவரும் எங்கிருந்து வருகிறார்கள் என்றால் – 1993-ல் இருந்து, உலகத்தில் எந்த நாட்டிற்கு கடன் கொடுத்தாலும், ஒரு தனியார் நிறுவனத்தை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு தான் இங்கே உலக வங்கியின் கடன்கள் அளிக்கப்படுகின்றன. இதற்கு எந்த அரசாங்கமும் விதிவிலக்கல்ல.

அவர்கள் [கடன்] வாங்கப் போகும் போது, நீங்கள் கவனித்திருக்கலாம், புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். உங்களில் யாருக்கேனும் அது என்னவென்று தெரியுமா? இதுவரைக்கும் புரிந்துள்ளதா? அது அவர்களுக்கு மட்டும் தான் புரியும். நமக்கு புரியக்கூடாது என்பதற்காகவே வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் படி பார்த்தீர்களானால், 2006-ம் ஆண்டிற்குப் பிறகு உலகத்தின் எந்த நாடுகளுக்கும், தமிழ் நாடோ இந்தியாவோ மட்டும் அல்ல, உலகத்தின் எந்த நாடுகளுக்கெல்லாம் இந்த உலக வங்கி கடன் கொடுத்ததோ அந்த நாடுகளிலெல்லாம் தண்ணீர் தனியார் மயமாக்கப்பட்டிருக்கிறது.

unnamed (1)

இதன் விளைவாகத்தான், இன்று சென்னையில் உள்ளது டீசாலினேசன் (desalination), கடல் நீரிலிருந்து உப்பு தயாரிக்கும் தொழிற்சாலை. அவன் வித விதமாக தண்ணீர் வியாபாரத்தை (திட்டம்) வைத்திருக்கிறான்.

நான் ஒன்று கேட்கிறேன். இந்த பூமியில் இருந்து ஆவியாகி மேலே போகும் தண்ணீரின் அளவு ஐந்து லட்சம் கன கிலோலிட்டர். இதில் நம் நிலத்தில் இருந்து மட்டும் 70000 கன கிலோலிட்டர் ஆவியாகி மேலே போகிறது. ஆனால், திரும்ப நமக்கு மழையாக வருவது ஒரு லட்சத்து பத்தாயிரம் கன கிலோலிட்டர். எழுபது ஆயிரம் சென்று ஒரு லட்சத்து பத்தாயிரம் திரும்பக் கிடைகின்றது என்றால், [அதிகமாக] நாற்பதாயிரம் கன கிலோலிட்டர் எங்கே இருந்து வந்தது? கடலில் இருந்து ஆவியாகக் கூடிய தண்ணீரை நமக்கு மழையாகக் கொடுக்கிறது இயற்கை. ஆக, நாம் அனுப்பியதை விட அதிகமாகக் கொடுக்கும் கனிவோடு தான் இருக்கிறது இயற்கை.

ஆனால் இங்கே என்ன நடக்கிறது என்று கேட்டீர்களானால், இயற்கையாக நடக்கக் கூடிய டீசாலினேசனை இவர்கள் செயற்கையாக செய்கிறார்கள். சென்னை, தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடமாக இருக்கலாம், ஆனால் மழை பற்றாக்குறை உள்ள இடம் அல்ல.

சென்னையில் வருடத்திற்கு 1100 மிமீ மழை பெய்கிறது. அது சென்னை மக்களின் நீர் தேவைக்கு போதும். தமிழ் நாட்டில் 760 மிமீ மழை கிடைக்கிறது. அதுவும் [மக்களின் தேவைக்கு] போதும். ஆனால், ஏன் போதவில்லை? இது தான் சிக்கல்.

தண்ணீரை மூன்று வகையாகப் பிரிக்கலாம், வர்ணங்களின் [நிறங்களின்] அடிப்படையில் – பச்சை நீர், நீல நீர், மற்றும் சாம்பல் நீர். இதில் நீல நீர் என்பது ஆற்றில், நிலத்தடியில், குளத்தில் கிடைக்கக்கூடிய நீர். பச்சை நீர் என்பது இதிலிருந்து ஆவியாகி மறுசுழற்சியில் இருந்து கொண்டிருக்கக்கூடிய நீர். இவை இரண்டும் தான் உலகம் தோன்றிய காலம் முதல் இந்த பூமியில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் தொழிற்புரட்சி ஏற்பட்ட பின்னர், இங்கே சாம்பல் நீர் என்று உருவாக்கப்பட்டது. அது தொழிற்சாலைகளின் கழிவுகள் – நிலத்தடி நீரில் சேர்ந்து நாசமாகிவிட்டது. ஒரு முறை நாசமாகிவிட்டால் அந்தத் தண்ணீரை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மீட்கவே முடியாது.

ஒரு சிறிய உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், நாம் வண்டிக்கு பயன்படுத்தக்கூடிய பேரிங் ஆயில் (Bearing Oil) எடுத்துக்கொள்வோம். ஒரு லிட்டர் ஆயில் ஆற்றிலோ, குளத்திலோ கலந்துவிட்டால், ஒரு லட்சத்து ஐம்பத்தி எட்டாயிரம் லிட்டர் தண்ணீர் நாசமாகிவிடும். அப்படியென்றால், இங்கே இருக்கக்கூடிய தொழிற்சாலைகள் எவ்வளவு தண்ணீரை நாசமாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

unnamed (2)

இப்போ, ஒரு ஊரில் தண்ணீர் தொட்டி இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். அந்தத் தண்ணீர்த் தொட்டியில் யாரேனும் விஷம் கலந்து விட்டால், அவனுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் படி ஒரு (Criminal) குற்றவாளி. ஆனால் அதே நஞ்சை அதனை [தண்ணீர்த் தொட்டியினை] விட பெரிய அளவில் உள்ள நிலத்தடி நீரில் கலந்து விட்டால் அவனுக்கு தண்டனை கிடையாது, அவனுடைய பெயர் தொழிலதிபர். இது தான் இன்றைக்கு ஓடிக்கொண்டிருக்கக் கூடிய தண்ணீர் ரகசியம்.

இவை எல்லாம் கண்ணுக்குத் தெரிந்து கொள்ளை அடித்துக் கொண்டு போகப்படும் தண்ணீர். கண்ணுக்குத் தெரியாமல் சில வேலைகளும் செய்து கொண்டிருக்கிறான்.

திருப்பூரில் அண்மையில் நம் தமிழ் நாட்டு அரசு பெருமைப்பட்டுக்கொண்டது, 18000 கோடி ரூபாய்க்கு இந்த வருடம் அந்நிய செலவாணி கிடைத்ததென்று. இந்த இடத்தில் நீங்கள் நன்றாக யோசனை செய்ய வேண்டும் – வெளிநாட்டில் இருப்பவனுக்கு பருத்தி விளைவிக்கத் தெரியுமா? என்றால், தெரியும்; பனியன் உற்பத்தி செய்யத் தெரியுமா? என்றால், தெரியும்; அதற்குத் தேவையான இயந்திரத்தை தயாரித்துக் கொடுத்ததே அவன் தான்.

இவ்வளவும் வைத்துக்கொண்டு ஏன் இந்த பனியனை அவன் நாட்டில் செய்யவில்லை? அவன் நாட்டில் செய்திருந்தால் எவ்வளவோ அந்நிய செலாவணியை மிச்சப்படுத்தி இருக்கலாமே. அதை ஏன் அவன் செய்யவில்லை?

நம் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் பாலாற்றின் தண்ணீரைப் பயன்படுத்தி தோல் பதனிட்டு அனுப்புவார்கள். இங்கே இருந்து அனுப்புவதை அவன் வாங்கிக்கொள்வான். இதையே அவன் நாட்டில் செய்து கொண்டால், எவ்வளவு அந்நிய செலவாணி மிச்சம்?

நீங்கள் 18000 கோடி அந்நிய செலவாணி கிடைத்ததென்று பெருமை படுவதற்கு பதில், அவன் 18000 கோடி அந்நிய செலாவணியை மிச்சப்படுத்தி இருக்கலாமே. ஏன் செய்யவில்லை?

சுவீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் (Stockholm) என்ற நகரத்தின் புனைப் பெயர் “சிட்டி ஆப் வாட்டர்” (City of Water). ஏனென்றால் அங்கே தண்ணீர் அவ்வளவு தூய்மையானதாக இருக்குமாம். ஏனடா இருக்காது? உனக்கு வேண்டிய பனியனையும், ஷூவையும் நாங்கள் தானே செய்து கொடுக்கிறோம். எங்கள் தண்ணீரை எல்லாம் நாசமாக்கிவிட்டு நீ மட்டும் “சிட்டி ஆப் வாட்டர்” என்று சொல்லிக்கொள்வாய். நாங்கள் அந்நிய செலவாணி என்று சொல்லிக்கொண்டு எல்லாவற்றையும் இழந்து வருகிறோம்.

இன்னொரு விஷயம். மூன்றாம் உலகப் போர் வந்தால் தண்ணீருக்குத் தான் வரும் என்று அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. அப்படி வந்தால் முதலில் எந்த நாட்டுக்குள் தண்ணீர் சண்டை வரும் என்று ஒருவர் யோசிக்கிறார். அவர் பெயர் டோனி எலன், புவி ஈர்ப்பு விஞ்ஞானி. அவரது கண்டுபிடிப்பில் உலகத்தில் எந்த நாடு மோசமான தண்ணீர் நிலைமையில் இருக்கிறது என்று பார்த்தால், வளைகுடா நாடுகள் தான் மோசமான தண்ணீர் நிலைமையில் இருக்கிறது. அப்படியானால் அங்கே தானே முதலில் சண்டை வர வேண்டும், ஆனால் அங்கே அனைவரும் [அதனைப் பற்றி கவலைப் படாமல்] மகிழ்ச்சியாகத் தானே இருக்கிறார்கள், என்று யோசிக்கிறார். அப்பொழுது தான் ஒரு விடையைக் கண்டுபிடிக்கிறார். அந்த விடை தான் “Virtual Water”, தமிழில் மறை நீர் [மாய நீர்] என்று சொல்லலாம்.

அவர் என்ன சொல்கிறார் என்றால், அவன் [வளைகுடா நாடுகள்] ஏன் சண்டை போட வேண்டும். அவன் தான் தனக்குத் தேவையான நீரை காசே இல்லாமல் விலையில்லாத் தண்ணீராக இறக்குமதி செய்துகொள்வானே; அதற்கு ஏன் சண்டை போட வேண்டும்? என்கிறார்.

என்னவென்று கேட்டால் [உதாரணதிற்கு], அரிசியை விளைவிக்க வேண்டுமானால் அதன் ரகத்திற்கு ஏற்ப தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு கிலோ அரிசிக்கு 5000 லிட்டர் தண்ணீர் தேவை என்று சொன்னால், அந்த 5000 லிட்டர் தண்ணீர், அரிசியை எடுத்துப் பார்த்தால் இருக்குமா? என்றால், இல்லை. ஆனாலும் அந்த அரிசிக்குள் மறைமுகமாக 5000 லிட்டர் தண்ணீர் ஒளிந்திருக்கிறது. அது தான் மறை நீர்.

அவனுக்கு என்னென்ன தேவையோ, அதை எல்லாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துகொள்ளப்படும் போது, அவனுக்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் அவன் அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்கிறார்.

நம் தமிழ் நாட்டிலேயே எடுத்துக் கொள்வோம். நாமக்கலில் இருந்து முட்டை வருகிறது. ஒரு முட்டையில் உள்ள மறை நீர் (ஒரே ஒரு முட்டையில்), 200 லிட்டர். ஒரு நாளைக்கு 30 லட்சம் முட்டைகள் நாமக்கல்லில் இருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி ஆகிறது என்றால், ஒரு மாதத்திற்கு, ஒரு ஆண்டுக்கு, எவ்வளவு லட்சம் லிட்டர் தண்ணீர், எவ்வளவு கோடி லிட்டர் தண்ணீர் இங்கிருந்து ஏற்றுமதி ஆகிறது? ஒரு முட்டை என்ன விலை? நான்கு அல்லது ஐந்து ரூபாய் இருக்குமா? ஐந்து ரூபாய்க்கு 200 லிட்டர் தண்ணீரைக் கொடுத்துவிட்டு, இன்று ஒரு லிட்டர் தண்ணீரை ஐம்பது ருபாய் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோமே, நம்மை போல் வேறெவனும் மடையன் உண்டா? கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா?

சென்னையை எதற்கெடுத்தாலும் மாற்றி மாற்றி சொல்கிறார்கள், இந்தியாவின் டெட்ராய்ட் என்று. அங்கே, உண்மையான அமெரிக்காவின் டெட்ராய்ட்-திற்கு மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டான். ஆனால் இங்கே இன்னும் இந்தியாவின் டெட்ராய்ட் என்று சென்னையைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறான். அங்கே 1100 கிலோ எடையுள்ள ஒரு காரைத் தயார் செய்ய (அதன் நட்டு, ஆணி – bolt, டயர் எல்லாவற்றையும் சேர்த்து) நான்கு லட்சம் லிட்டர் தண்ணீர் வேண்டும். இந்த நான்கு லட்சம் லிட்டர் தண்ணீர் இருந்தால், இங்கே இரண்டாயிரம் மக்கள் தொகை உள்ள ஐந்து கிராமங்கள் பிழைத்துக்கொள்ளும். ஆனால் ஒரு ஆண்டுக்கு பல லட்சக்கணக்கான கார்கள் தமிழ் நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகிக் கொண்டிருக்கின்றன. நாம் அதை சொல்லக்கூடாது. ஏனென்றால் அந்நிய செலவாணி.

அப்படி அவர்கள் திட்டம் போட்டு, தொழிலே வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் எந்த தொழிலிற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறதோ அதையெல்லாம் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் தலையில் கட்டிவிட்டு, தண்ணீர் அதிகம் தேவைப்படாத தொழில்களாக அவர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் சிக்கல். இங்கே தெரியாமல் நான் கேட்கவில்லை. இங்கே இருக்கும் தண்ணீரை நீங்கள் அனுப்புகிறீர்கள்.

அதற்கடுத்து திருப்பூர் பிரச்சினைக்கு வருவோம். திருப்பூரில் பனியன் உற்பத்தி செய்து அனுப்புகிறார்கள். ஒரு பனியனில் இருக்கக்கூடிய மறை நீரின் அளவு 2700 லிட்டர். எத்தனை கோடி டி-சர்டுகள் ஒரு ஆண்டுக்கு நமது திருப்பூரில் இருந்து வெளியேறுகிறது, எத்தனை கோடி லிட்டர் தண்ணீர் ஓசியில் [இலவசமாக] அனுப்பிக்கொண்டிருக்கிறோம். இதற்கு ஒரு விலை இல்லையா?

பாலாற்றின் தண்ணீரை எடுத்துக் கொள்வோம். தோல் – ஒரு கிலோ பதனிடப்பட்ட தோல் இங்கே இருந்து அனுப்பப்படும் போது அதில் 26,600 லிட்டர் தண்ணீர் ஒளிந்திருக்கிறது. அதை யார் கேட்பது?
இவ்வளவையும் விடுவோம். இது ஒரு பக்கம் இருந்தாலும், நம்முடைய லைப்-ஸ்டைல் – இப்பொழுது புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் தலைமுறை. அதற்கு [அவர்கள்] பர்கர், பீட்சா என்று சாப்பிடுகின்றனர். நம் உணவு முறையை மாற்றுகிறார்கள். அவர்களின் உணவு முறையை நம் மீது திணிப்பதின் மூலம் நம் தண்ணீரை சுரண்டுகிறார்கள்.

unnamed

நீங்கள் சாதரணமாக நினைத்துக் கொண்டிருப்பீர்கள். இன்று எல்லா இடங்களிலும் பர்கர் வந்துவிட்டது. அந்த பர்கரில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது தெரியுமா? இன்று ஒரு நவீன இளைஞன் ஒரு உணவகத்துக்கு போனான் என்று சொன்னால், ஒரு பீர் மற்றும் பர்கர் சாப்பிட்டால், ஒரு பர்கரில் 2500 லிட்டர் தண்ணீர் இருக்கிறது, ஒரு பீரில் 75 லிட்டர் தண்ணீர் இருக்கிறது; ஆக 2575 லிட்டர் தண்ணீரை காலி செய்துவிட்டு வெளியே வருகிறான். நாம் தெரியாமல் கேட்டோம், போன தலைமுறையில் வெறும் வடையும், டீயும் தானே சாபிட்டோம்.

பிள்ளைகளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுக்கிறீர்கள். 100 கிராம் சாக்கலேட்டில், 260 லிட்டர் தண்ணீர் ஒளிந்துகொண்டிருக்கிறது. 260 லிட்டர் தண்ணீரை ஒழித்துவிட்டு, இங்கே பனை வெல்லத்தையும், கடலை – மானாவாரியாக விளையக்கூடியது – அதற்கு மழை பெய்தால் போதும்; பனைக்கு யார் தண்ணீர் ஊற்றினார்கள்? இது இரண்டையும் கலந்து செய்த கடலை மிட்டாயை ஒழித்துவிட்டோம். ஒரு சாக்கலேடுக்கும் அதற்கும் உள்ள வித்தியாசம் இது தான்.

இதற்கப்புறம் பார்த்தால் பிரட், வீட்டில் கேட்டால் நான் கோக-கோல (Coca-Cola) குடிப்பேன் என்பார்கள். கோக-கோலாவைப் பற்றி பேசவில்லை என்றால் விடியப்போவதில்லை. கோக-கோலாவை எடுத்துக்கொண்டால், ஒரு லிட்டர் கோக-கோலா தயாரிக்க ஏழு லிட்டர் கழிவு நீர் வெளியாகும். ஏழு லிட்டர் கழிவு நீர் வெளியாகி அது நிலத்தடி நீரில் சேர்ந்தால், அதில் ஒவ்வொரு லிட்டர் கழிவு நீரும், எட்டு லிட்டர் நிலத்தடி நீரை நாசமாக்கும். அதாவது, ஒரு லிட்டர் கோக-கோலா வாங்கப் போகும் போது மொத்தம் 56 லிட்டர், அந்த கோக-கோலா பாட்டிலை தயார் செய்ய நாலு லிட்டர் – நீங்கள் ஒரு லிட்டர் கோக-கோலாவை பருகும் போது நீங்கள் 60 லிட்டர் தண்ணீரை – நம் சொந்தத் தண்ணீரை – நாசமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

பாட்டில் தண்ணீர் – இதை யார் இங்கு வைத்தார்கள் என்று தெரியவில்லை. இந்த பாட்டிலில் இருப்பது ஒரு லிட்டர் தண்ணீர் தான்; ஆனால் அந்த பிளாஸ்டிக், செய்முறை எல்லாம் சேர்த்தால் அதில் கூடுதலாக ஐந்து லிட்டர் தண்ணீர் ஒளிந்திருக்கிறது. நீங்கள் இருபது ருபாய் கொடுத்து ஒரு பாட்டில் நீரை வாங்குவது பிரச்சினை இல்லை. அதனுள் ஐந்து லிட்டர் [ஒளிந்திருக்கிறது] – நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறீர்கள், அதனால் பிள்ளை வாங்குகிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; ஆனால் அவன் தண்ணீர் இல்லாமல் இன்னும் இரண்டு, மூன்று தலைமுறையில் சாகப் போகிறான்.

அப்பொழுது இந்த தண்ணீரை யார் நாசமாக்கினார்கள் என்று சொன்னால், “என் தாத்தா தான் நாசமாக்கினார், நாசமாகப் போக,” என்று அந்தப் பிள்ளை நாளை திட்டப் போகிறான். அதை நாம் வாங்கிக் கொண்டு தான் போக வேண்டும். அந்தப் பழியை நாம் சுமந்து கொண்டு போகப் போகிறோமா?, என்பது தான் இன்று நமக்கு முன் உள்ள மிக முக்கியமான கேள்வி.

இங்கே கேள்வி கேட்பது ஓயாது. ஒரு காலத்தில் நாம் வேப்பங் குச்சியைக்கொண்டு பல் துலக்கிக் கொண்டிருந்தோம். அதைப் பிடுங்கி வீசி விட்டு டூத் பேஸ்ட் (toothpaste), டூத் பிரஷ் (toothbrush) கொடுத்தான். அவனை நம்பி நாம் ஐம்பது வருடங்களாக துலக்கிக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது புதிதாகக் கேட்கிறான் – உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இருக்கிறதா?, என்று.

அவன் என்ன சொல்கிறான் என்றால் – ஊருக்குள் சாதரணமாக சொல்வார்கள், “ஏன்டா, உப்பு போட்டுத் தான் சாப்பிடுகிறாயா?,” என்று. நம்மை மறைமுகமாகக் கேட்கிறான், “ஏன்டா, உனக்கு சொரணை இருக்கிறதா?,” என்று. இது தெரியாமல், சரி உப்பு போட்டு தான் சாப்பிட சொல்கிறான் என்று உப்பு வாங்கப் போனால், அடுத்த கேள்வி கேட்பான், “உப்பில் ஐயோடின் இருக்கிறதா,” என்று.

இப்படி வரிசையாக அவன் கேட்டுக் கொண்டே தான் இருப்பான். நாம் கேட்க வேண்டும், ஒரு கோக-கோலாவை வாங்கப் போகும் போது, பாட்டில் தண்ணீரை வாங்கப் போகும் போது, அவன் கேள்வி கேட்பதற்கு முன்பு, நீங்கள் உங்களை ஒரு கேள்வி கேட்க வேண்டும் – இந்த தண்ணீர் என்பது என்னுடைய அடிப்படை உரிமை, இதை நான் விலைக்கு வாங்க மாட்டேன், என்று நினைத்துக்கொண்டு, உங்களையே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி – “நமக்கு சூடு சொரணை இருக்கிறதா?.” அப்படி இருந்தால், அந்த பாட்டிலை திருப்பிக் கொடுத்துவிடுவீர்கள். கொடுக்காதவர்களுக்கு…….“நன்றி, வணக்கம்.”

உரை தட்டச்சு – சோபனா – இளந்தமிழகம்.

புகைப்படங்கள் – அவனி அரவிந்தன் – இளந்தமிழகம்

About விசை

4 comments

  1. Best article I ever read in this issue. Narrator had captured well on the points delivered. I insist the admin can upload a audio file in this page which can be circulated with others. Please do some survey graphical charts for the statistical view point.
    Thanks for this worthy article for our coming future.

  2. எப்பா.. இவ்வளவு தெளிவாக , ஆழமாக தண்ணீர் பற்றிய விசயங்களை சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.
    நம் தலைமுறையும் வரும் தலைமுறையும் சந்திக்கும் சந்திக்கப்போகும் சிக்கல்களை சூடு சொரணையோடு சொல்கிறது.
    பொது நலவாதிகளும் சுயநலவாதிகளும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.

  3. The best article I have read in this topic ever! Expecting more…do include other topics other than water issues…all the best…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*