Home / கலை / மெளன சாட்சி

மெளன சாட்சி

Silent Evidence

மங்கிய மாலைப் பொழுது
இரவின் வணக்கத்துடன்
சில்லென்ற காற்று
சிலிர்த்த சாரல்
புன்னகைத்த உதட்டுடன்
கிடந்த பெற்றோர்
தத்தி எழுந்த பருவ கால நினைவு

மின்னல் வெட்டொளியின் ஊடே
பதற்றமாய் தம்பியுடன் தோழி
என்னை நோக்கி,
இருவரும் ஆடைகள் கலைந்து
சற்றே நிமிர்ந்து
அகன்று விரிந்த என் கண்களைக் கண்டு
பரிதாபகரமாய்
என்னைக் கடந்து இருளில் மறைந்தாள்

அம்மணமாய், ஆம் வாழத் துடித்த
அனைத்து உயிர்களும்
கடந்தது அவ்வாறே

தோட்டாக்களின் ஒளி துரத்த
பூட்சுகள் பின் தொடர
கருப்புத் திரையைக் கிழித்து
வந்த தோழி
மரத்தின் பின்னே
அமிலத்தில் மூழ்கிய மலர் போல்
சிதைத்து எரிக்கப்பட்டாள்

மழை நீரே கண்ணீராய்
கன்னத்தில் வடிய
துடிப்பற்று இருந்தது இதயம் மட்டுமல்ல
அசைவற்ற என் உடலும்
ஆம் என் சமூகத்தைப் போல்
எங்கள் இனக்கொலையின்
மெளன சாட்சியாய் –
ஒரு பிணம் !

– ம. பிரவீன் ராஜ்

About ம.பிரவீன்ராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*