Home / சமூகம் / தருமபுரி தலித்துகள் மீதான தேசத் துரோக வழக்கும் – தமிழக அரசின் ஆதிக்க சாதி முகமும்

தருமபுரி தலித்துகள் மீதான தேசத் துரோக வழக்கும் – தமிழக அரசின் ஆதிக்க சாதி முகமும்

//இப்போது(செப்-22) கைதான 6 பேரின் தேசத் துரோக வழக்குகள்(என்.எஸ்.ஏ) உடைந்திருக்கிறது, வழக்கிற்கு பின்புலமாக இருந்து செயல்பட்ட தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(எஸ்.பி) அஸ்ரா கார்க் எந்த பொறுப்பும் கொடுக்கப்படாமல் தமிழக அரசால் ”இந்த வழக்குதான் காரணம்” என்று சொல்லப்படாமல் ”நீண்டநாள்” பயிற்சிக்கு இன்று(செப்-24) அனுப்பப்பட்டுள்ளார் என்ற செய்தியைப் பகிர விரும்புகிறோம். எனினும் இதில் பயிற்சிபெற்ற இன்னொரு எஸ்.பி. கொண்டுவரப்படுவார், அவ்வளவே. இதற்கு தீர்வென்ன என யோசிப்போம்.//

************************************

 தருமபுரி தலித் மக்கள் மீதான நக்சலைட் குற்றச்சாட்டும் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பாயும் தேசத் துரோக வழக்குகளும்

தருமபுரி மாவட்டம் நாய்க்கன் கொட்டாய் நத்தம் காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஒரு வருடத்திற்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினால் வன்னிய சாதிவெறித் தூண்டிவிடப்பட்டு எரிக்கப்பட்ட நிகழ்வுக்கு பழி தீர்க்கவும் சாதி ஆதிக்க வெறியர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாப்பதற்கும் மாவோயிஸ்ட் கட்சியுடனும்,துடி அமைப்புடன் இணைந்து ஆயுதப்  பயிற்சியில் ஈடுபட்டதாகவும், இளவரசன் நினைவு நாளை ஒட்டி அந்தப் பகுதி பாமக முக்கியமானவர்களை கொல்ல சதி செய்த்தாகவும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சூன் மாத இறுதியில் ஊடகங்களில் தமிழக காவல்துறை செய்தி வெளியிட்டது. காவல்துறையைக் கண்டித்தும், கைது செய்தவர்களை பாரபட்சமில்லாமல் தண்டிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் இராமதாசு அறிக்கை விடுத்தார்.

கைது செய்யப்பட்டவர்களின் சார்பில் நத்தம் காலனி மக்களின் குரலே வெளியில் கேட்காத நிலையில் தமிழகத்தின் சனநாயக முற்போக்கு அமைப்புகள் சில இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில் மனித உரிமை ஆற்றல்களும், முற்போக்கு அமைப்புகளும் ஒன்றிணைந்து உண்மையைக் கண்டறியும் நோக்கில் உண்மையறியும் குழு அமைத்து கடந்த சூலை மாதம் 5 மற்றும் 8ம் நாட்களில் தருமபுரி நத்தம் காலனி மக்களையும், அதிகாரிகளையும் சந்திக்க சென்றிருந்தது. அதில் இளந்தமிழகம் சார்பில் நானும் சென்றிருந்தேன், உண்மையறியும் குழு அறிக்கையின் செய்திகளை இங்கே தருவதற்கு முன் இப்போது (செப்-22) கைதான 6 பேரின் தேசத் துரோக வழக்குகள்(என்.எஸ்.ஏ) உடைந்திருக்கிறது, வழக்கிற்கு பின்புலமாக இருந்து செயல்பட்ட தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்( எஸ்.பி) அஸ்ரா கார்க் எந்த பொறுப்பும் கொடுக்கப்படாமல் தமிழக அரசால் ”இந்த வழக்குதான் காரணம்” என்று சொல்லப்படாமல் ”நீண்டநாள்” பயிற்சிக்கு இன்று(செப்-24) அனுப்பப்பட்டுள்ளார் என்ற செய்தியைப் பகிர விரும்புகிறோம். எனினும் இதில் பயிற்சிபெற்ற இன்னொரு எஸ்.பி. கொண்டுவரப்படுவார், அவ்வளவே. இதற்கு தீர்வென்ன என யோசிப்போம்.

முதல் தகவல் அறிக்கை சொல்வதென்ன?

 கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷின் வாக்குமூலத்தை முன்வைத்து தயாரிக்கப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில்(FIR) (எண் 122/2014, கிருஷ்ணாபுரம் காவல் நிலையம், நாள் 28.06.2014) கூறப்படுவதாவது: சூன் 28அன்று காலை 5 மணி அளவில் நாய்க்கன் கொட்டாய் ஆரம்பப் பள்ளிக்கு அருகில் காவல்துறையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த பொழுது இரு சக்கர வாகனத்தில் வந்த சந்தோஷ் (22), அதியமான் (22), சங்கர் (35) ஆகியோர் சந்தேகமான முறையில் தப்ப முயன்றனர். விசாரிக்கையில் பிடிபட்ட சந்தோஷ் தானாகவே முன்வந்து அந்தப்பகுதி பா.ம.க தலைவரும் 2012 நத்தம் காலனித் தாக்குதலுக்குக் காரணமான மதியழகனைக் கொல்வதற்காக சங்கர் சக்தி, துரை, அசோக் சேர்ந்து சதித் .திட்டமிட்டு ஜூன் 28 காலை இரு குழுவாகப் பிரிந்து செல்வதாகவும்,ஒரு குழுவில் தாங்கள் வீச்சரிவாளுடன் வந்த்தாகவும், இன்னொரு குழுவில் அசோக்,சக்தி, துரை ஆகியோர் துப்பாக்கி வெடிகுண்டு சகிதம் கந்தன்குட்டை பக்கம் துப்பாக்கி வெடிகுண்டுடன் காத்திருந்த்தாகவும் ஒத்துக் கொண்டு வாக்குமூலம் அளித்தார். பின்னர் அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

 இவர்களுக்கு இந்த ஆயுதங்கள் கிடைத்த பின்னணியாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படுவது: 2012தாக்குதலுக்குப் பின் நத்தம் காலனிக்கு ‘ஆறுதல்’ சொல்லபலரும் வந்தபோது, அவர்களோடு மாவோயிஸ்ட்டு கட்சி தீவிரவாதிகளான காளிதாஸ், சந்திரா ஆகியோர் அங்கு வந்து, தங்கள் இயக்கத்தின் பின்னணியோடு ஆயுதப் பயிற்சி எடுப்பது மட்டுமே அவர்களுக்குப் பாதுகாப்பு எனக் கூறினர். அந்த அடிப்படையில் ‘துடி’அமைப்பின் மூலம் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 50 பேர்களுக்கு (27பெயர்கள் அறிக்கையில் குறிப்பிடப் படுகின்றன.) 2013 தொடங்கி அரக்கோணம், சென்னை மெரினா கடற்கரை,கந்தன்குட்டை ஆகிய பகுதிகளில் பல்வேறு வகை ஆயுதப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இறுதியில் காளிதாஸ் சந்திரா இருவரும் ஒரு நாள் இரவு நத்தம் காலனி வந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், இரண்டு வீச்சரிவாள்கள்,மூன்று பைப் வெடிகுண்டுகள் ஆகிவற்றைத் தந்து சென்றனர். ஆயுதப் பயிற்சி தொடங்கி வன்னிய சாதி பாமக-வின் முக்கிய தலைவர்களைக் கொல்வது வரைக்குமான திட்டம்  தீட்டப்பட்ட பின் இதற்கான செலவுகளுக்காக வீடு கொளுத்தப்பட்டதற்கு அரசு அளித்த இழப்பீட்டுத் தொகையிலிருந்து இம்மூன்று தலித் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நிதி வசூலிக்கப்பட்டது.

unnamed (2)

இப்படியான குற்றச்சாட்டை முன்வைக்கும் முதல் தகவல்அறிக்கை, ‘கைப்பற்றப்பட்ட’ மேற்படி ஆயுதங்கள், ‘துடி’ அமைப்பு தாங்கள் ஆயுதப் பயிற்சி எடுத்ததை ‘ஒத்துக் கொண்டு’ வெளியிட்ட ஒரு அறிக்கை முதலானவற்றைக் கைப்பற்றிய வழக்கிற்கு சாட்சியாகக் காட்டுகிறது.

 நத்தம் காலனி மக்களிடம் விசாரித்த போது கிடைத்த செய்திகள்:

 சூன் 27ம் நாள் எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரம் ஒவ்வொருத்தராக சங்கர், அதியமான், சந்தோஷ் வேறுவேறு பிரச்சனைக்காக மதியம் 12 மணி முதல் மாலை 6 மணிவரை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளார். இரவு10 மணிஆகியும்எந்ததகவலும்இல்லாமல் இருந்தபோது,சிங்காரம் மீண்டும் அலைப்பேசியில்அழைத்து ஊர் ஆட்கள் வந்து மூணு பேரையும் கூட்டிப் போகும்படிசொல்லியுள்ளார், எந்த காவல் நிலையத்தில் வைத்துள்ளார்கள் எனச் சொல்லவில்லை. 14 ஆண்களும்,5 பெண்களும் புறப்பட்டுஒவ்வொரு காவல்நிலையமாகஅலைந்துகடைசியா B1 காவல்நிலையத்திற்குச்சென்றுள்ளனர். அங்கே 12 மணி அளவில் ஊர்க் கவுண்டர் சக்தி, ஊர்முக்கியஸ்தர் துரை, அசோக் மூன்று பேரையும் பிடித்துவைத்துள்ளனர். பின்னர் எதற்கு கைது செய்கிறோம் என்று சொல்லாமலேயே எல்லாரையும் அடித்து சிறைக்குக் கொண்டு சென்றனர்.

 காலையில் (ஜூன் 28) 4 மணிக்கெல்லாம் நத்தம் காலனிக்கு நூற்றுக் கணக்கான போலீஸ்காரர்கள் துரையை மட்டும் விலங்கு போட்டு இழுத்து வந்திருக்கிறார்கள். வீட்டில் கொட்டப்பட்ட மணலில் “ஆயுதங்களை எடுடா,எடுடா” என்று அடித்துள்ளார்கள், ஆஸ்த்மா இழுப்பு நோயுள்ள அவரை அவரது துணைவியாரின் முன்னாடியே கையை முதுகுக்குப் பின்னாடி வளைத்து அடித்துள்ளார்கள். அதன்பிறகு அவரை இளவரசன் நினைவிடம் பக்கம் இழுத்து கொண்டுபோய் அரசின் நலத்திட்டங்கள் மூலம் கிடைத்த கடப்பாறை, மண்வெட்டி ஆகிவற்றை அவரது துணைவியிடம் வாங்கி தோண்டச்சொல்லி ஆயுதங்கள் புதைத்துவைத்ததை எடுக்கச் சொல்லியுள்ளார்கள். அப்போது அங்கு மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரி அஸ்ரா கார்க்கும் இருந்துள்ளார். பின்னர் குழியில் அவர்களே கொண்டு வந்த துப்பாக்கியை அங்கே இருந்து எடுத்தமாதிரி காட்டியுள்ளார்கள். துரையின் 15 வயசு மகன் ஆனந்தை சமந்தாகுப்பம் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவனது தந்தை ஆயுதங்கள மறைத்துவைத்துள்ள இடத்தை சொல்லும்படியும்,இல்லையேல் அவனது தந்தையை என்கவுண்டரில் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்கள். சேலம் சிறையில் சென்று அவர்களை மக்களில் சிலர் பார்க்கச் சென்றிருந்தபோது அவர்களால் நிற்க கூட முடியவில்லை. அவர்களை மருத்துவமனையில் உடனடியாக சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டும் சேர்க்கவில்லை.

 கைது செய்யப்பட்டவர்களில் துரை மட்டும் சில வருடங்களுக்கு முன்பு பொடா சட்டத்தின்படி சிறைக்கைதியாகஇருந்தவர் (பொடா சட்ட விசாரனைசட்டவிரோதமானது என அரசே சில வருடங்களுக்கு முன்பு அதை நீக்கிவிட்டது). தற்போது மக்கள் எந்த அரசியல் இயக்கங்கள், இடதுசாரி அமைப்புகளில் ஈடுபடவில்லை. மாவோயிஸ்டுகள் கட்சிகளில் இருந்தோ, பிற இடதுசாரி ஆயுதப் போராளிகளோ இங்கு யாரும் வரவில்லை. ‘துடி’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளை, மாணவர்களை பள்ளிக் கூடத்திலும்,கல்லூரிகளிலும் சேர்க்கவே வலியுறுத்தி செயல்பட்டுள்ளனர். வேறு எந்த அரசியலும் பேசியதில்லை.

 கைது செய்யப்பட்டவர்களிடம் சேலம் சிறைக்கு சென்று விசாரித்த போது: முதலில் தருமபுரி காவல் நிலையத்திற்கும் பின்னர் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்கள். அங்கே மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரி(SP) முதல் அனைவரும் இருந்துள்ளார்கள், அனைவரையும் கண்மூடித்தனமாக உள்ளாடையோடு அடித்த போலீஸார், சிலரை தனியாக அழைத்து நிர்வாணமாகவும் அடித்து துன்புறுத்தியுள்ளார்கள். அதில் ஒருவர் மட்டும் 2013 ஏப்ரல் 5, 6 நாட்களில் நீர்ப்பெயல் என்ற ஊரில்‘துடி’ அமைப்பு நடத்தியதலித்துக்களான கல்வி குறித்த மத்திய அரசாணை 92 பற்றிய விழிப்புணர்வு முகாமில் பங்கேற்றுள்ளார். இதில் ஒரு நாளில் ஓய்வு நேரத்தை கழிக்க மெரினா கடற்கரைக்கு சுற்றிப்பார்க்க சென்றுள்ளார்கள். இளங்கலை அறிவியல் பட்டதாரியான சங்கர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவில் பொருட்கள் விற்கும் பிரிவில் பணிபுரிகிறார், காச நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இவரை ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக அடித்துள்ளார்கள். துடி அமைப்பு நடத்திய கல்வி குறித்தான விழிப்புணர்வுக்கும் போகாதவர்களை, துடி அமைப்பின் ஆயுதப் பயிற்சி பற்றி துருவிதுருவி கேட்டு கொடூரமாக அடித்துள்ளார்கள்.கைதாகியுள்ள திருப்பதி (20) இரண்டாம் ஆண்டு பாலி டெக்னிக் மாணவன். குடிப்பட்டியிலுள்ள அத்தை வீட்டுக்குப் போயிருந்த போது ஜூன் 29 காலை 4 மணிக்கு கைது செய்துள்ளனர். ஜட்டியுடன் அடித்து மற்றவர்களைக் கேட்ட அதே கேள்விகளைக் கேட்டுள்ளனர். இவர் துடி கல்விப் பயிற்சிக்குச் சென்றுள்ளார்.‘துடி’ அமைப்பில் பொறுப்பு வகித்த மைகேல் ராஜ் (22) பி.ஏ முடித்து ஆசிரியப் பயிற்சியும் பெற்றுள்ளார்,ஜூலை 4 காலை நாராயணபுரத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். இவரையும் ஆடையின்றி அம்மணமாக நிற்க வைத்து அடித்துள்ளனர்.இவர்கள் யாருமே காளிதாசையோ சந்திராவையோ சந்தித்ததில்லை என்கின்றனர். ஆயுதப் பயிற்சி குறித்து எல்லோரிடமும் எஸ்.பி அஸ்ரா கார்க் விசாரித்துள்ளார்.

unnamed (4)

‘துடி’ அமைப்பு பற்றி: அது தொடங்கப்பட்ட 2002 முதல் தலித் மாணவர்களின் கல்வி தவிர வேறு எதிலும் அவர்கள் கவனம் செலுத்துவதில்லைஎன அறிகிறோம். மிக்க மரியாதைக்குரிய ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற கிறிஸ்துதாஸ் காந்தி அவர்கள் தொடக்கம் முதல் இன்று வரை அதன் காப்பாளராக இருந்து வருகிறார்.

 கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ் அவரிடம் நாம் தொடர்புகொண்டு பேசியபோது: “எங்கள் அமைப்பு முழுக்க முழுக்க தலித் மாணவர்கள், இளைஞர்கள் மார்க்சீயம், தமிழ்த் தேசியம் முதலான எந்தக் கருத்தியலின் பாலும் ஈர்க்கப்பட்டு வீணாகாமல், குறிப்பாக எக்காரணம் கொண்டும் ஆயுதப் போராட்டம் பக்கம் சாயாமல்,கல்வியிலும் அம்பேத்கர் சிந்தனையிலும் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்டது. கடவுள் பிரச்சினை, காதல் திருமணம் தொடர்பான அரசியல் எதிலும் அம்மாணவர்களின் கவனம் திரும்பக் கூடாது என்பதே எங்கள் கவலை. அப்படியான ஒரு இயக்கத்தை ஆயுதப் பயிற்சி அளித்தது எனச் சொல்வதைப்போல ஒரு அபத்தம் வேறு எதுவுமே இல்லை” என ஆணித்தரமாகச் சொன்னார்.

 ‘துடி’ அமைப்பின் பொதுச் செயலாளர் பாரதி பிரபு கூறியது: “நாங்கள் இந்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றுடன் இணைந்து தலித் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வந்தோம். எங்கள் செயல்பாடுகள் வெளிப்படையானவை. மத்திய அரசின் ‘இளைஞர்களின் வளர்ச்சிக்கான ராஜிவ் காந்தி நிறுவனத்தின்’ (RGIYD) நிதி உதவியுடன் நாங்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம். தமிழக அரசின்‘ஆதி திராவிட நலத் துறை’யுடன் இணைந்து அரசாணை 92 குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைச் செய்துள்ளோம். மேல் மருவத்தூருக்கு அருகில் உள்ள நீர்ப்பெயல் கிராமத்தில் அருட்பணியாளர்கள் ஜெயசீலன், சுரேஷ் ஆகியோரின் உதவியோடு நாங்கள் நடத்திய கல்விப் பயிற்சியில் 70 மாணவிகளும், 50மாணவர்களும் பங்கு பெற்றனர். இவர்களில் 12 பேருக்கு பொறியியல் படிப்பில் இடம் கிடைத்தது.இருவரை லயோலா கல்லூரியில் சேர்த்தோம். உளவியல் ஆலோசனை மற்றும் ஓய்வுக்காக ஒரு முறை மெரீனா கடற்கரைக்கு இவர்களை அழைத்துச் சென்றது உண்மை.அதை ஆயுதப் பயிற்சியாக சித்தரிப்பதில் காவல்துறைக்கு உள்நோக்கம் உள்ளது” என்றார்.

unnamed (3)

தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் ‘தமிழ்ப் பண்பாட்டில் பவுத்தம்’ என்கிற தலைப்பில் ஆய்வு செய்த பாரதி பிரபு தாங்கள் செய்த கல்விப் பணிகளை மிக விரிவாகச் சொன்னார். 2013 ஜூன் 8 அன்று தருமபுரி பெரியார் மன்றத்தில் அரசாணை  92 குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தியது அனைவருக்கு தெரியும். வி.சி.க, மத்திய மாநில எஸ்.சி, எஸ்.டி ஊழியர் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து அவர்கள் இதைச் செய்தனர்.‘துடி’போன்ற ஒரு அமைப்பை ஆயுதப் போராட்டத்துடன் தொடர்பு படுத்டுவதைப் போல ஒரு அபத்தம் எதுவும் கிடையாது.இது தொடர்பாக எஸ்.பி அஸ்ராகார்க் அவர்களிடம் நாங்கள் பேசத் தொடங்கியவுடன், “அதில் கவனமாக இருக்குமாறு நான் என் புலனாய்வு அதிகாரியிடம் சொல்லியுள்ளேன்” என்றார்.

 நேரடி சாட்சிகள் பலரையும் விசாரித்தபோது அறித்த உண்மைகளும், காவல்துறை சொல்லும் கதையில் உள்ள முரண்பாடுகளும்-பொய்களும்:

 ஜூன் 27, மதியம் 12 மணி முதல் மாலை 6 மணிக்குள் அதியமான், சங்கர், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கி வாக்குமூலமாக எழுதிக் கையெழுத்து வாங்கியுள்ளனர் போலீஸார். இவர்களை அழைத்துச் செல்ல வாருங்கள் என வஞ்சகமாக B1 போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி அங்கே சக்தி, துரை, அசோக் ஆகியோரையும் கைது செய்து அவர்களையும் கடுமையாக அடித்துகையெழுத்து வாங்கியுள்ளனர். பின்னர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்த 27 பேர்களில் திருப்பதி என்கிற பாலிடெக்னிக் படிக்கும் மாணவனை குடிப்பட்டி என்னுமிடத்தில் கைது செய்தனர். ஜூலை 5 அன்று கொண்டாம் பட்டியைச் சேர்ந்த மைக்கேல் ராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் துடி அமைப்பில் செயல்பட்டவர்.இதுவரைக் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 8 பேர் போடப்பட்டுள்ள குற்றப் பிரிவுகள்: இ.த.ச பிரிவுகள் : 120 (பி),153 (ஏ), 153 (ஏ ஏ): இந்திய ஆயுதச் சட்டம் பிரிவுகள்: 25 (1) (ஏ) மற்றும் 27; 1908ம் ஆண்டு வெடி பொருட்கள் சட்டம் பிரிவுகள் 4 மற்றும் 5.

இவர்களில் முதல் அறுவர் கைதானதற்கு அடுத்த நாள் பெங்களூரு சென்ற காவற் படையினர் நத்தம் காலனியச் சேர்ந்த நால்வரைப் பிடித்து விசாரித்துப் பின் விட்டுள்ளனர். தொடர்ந்து இப்பகுதிகளைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் பெங்களூரில் வேலை செய்யும் இடங்களில் கண்காணிப்பது தொடர்வதாகவும், இதனால் மாவோயிஸ்ட் என அச்சமூட்டப்பட்டு இப்பகுதி தலித் இளைஞர்கள் பெங்களூருவில் வேலை செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இப்படிப் பலரும் பொய் வழக்கில் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நத்தம் காலனி மக்கள் ஜூலை 4அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடி தங்கள் குடும்ப அட்டைகள், வாக்காளர் அட்டைகள் ஆகியவற்றை ஒப்படைப்பதாக அறிவித்தனர். இனி கைது ஏதும் நடக்காது, ஆனால் தேடப்படும் மற்றவர்களை ஒப்படையுங்கள் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். அதற்குப் பின்னும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூன் 27 அன்று இரவு ஊர் மக்களுக்கும் எச்.பி அஸ்ரா கார்க் மற்றும் சி.பி.சி.ஐ.டி சிங்காரம் ஆகியோருக்கும் இடையில் அலைப்பேசி உரையாடல்கள் நடந்துள்ளது. இப்படி காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் ஜூன்28 காலை 5 மணிக்கு கையில் ஆயுதங்களுடன் பா.ம.க மதியழகனைக் கொல்லச் சென்ற போது நாய்க்கன்கொட்டாய்க்கு அருகில் பைக்கிலும் கந்தன் குட்டைக்கு அருகிலும் கைது செய்யப்பட்டனர் என்பது முற்றிலும் பொய்.

இதற்கிடையில் ஜூலை 10, 2014 அன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு விவேகானந்தன் முன்னதாகக் கைதுசெய்யப்பட்ட சக்தி, சந்தோஷ் முதலான ஆறு பேர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார் [எஸ்.சி.(தே.பா.ச) எண் 10/ 2014]. மாவட்ட ஆட்சியர் சிந்திக்காமல் (without applying his mind), காவல்துறையின் கூற்றை அப்படியே ஏற்றுத் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைதவறாகப் பயன்படுத்தியுள்ளார்.

unnamed

கைது செய்யப்பட்ட எட்டு பேர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு, இது தொடர்பான கிருஷ்ணாபுரம் காவல் நிலையம் முதல் தகவல் அறிக்கை (122/2014) முழுமையாக அழிக்கப்பட வேண்டும். கைது செய்து சித்திரவதை செய்யப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும்.தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் இட்ட உத்தரவிற்கு [எஸ்.சி.(தே.பா.ச) எண் 10/ 2014] மத்திய அரசும் மத்திய உள்துறைச் செயலகமும் ஒப்புதல்வழங்கக் கூடாது.

நத்தம் கிராமத்தில் தலித்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது எனில் எப்போது அது கைப்பற்றப்பட்டது? ஏன் பத்திரிகையாளர்கள் அப்போது அழைக்கப்படவில்லை? இது தொடர்பாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் கேள்வி எழுப்பியபோது இருட்டாக இருந்ததால் உங்களை அழைக்கவில்லை என்று பொறுப்பில்லாமல் எஸ்.பி பதிலளித்துள்ளார்.

கடந்த பல மாதங்களாக அப்பகுதிக்கு மாவோயிஸ்ட்டுகள் வந்து செல்வதும் நத்தம் தலித் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுப்பதும் காவல் துறைக்குத் தெரியுமெனில் ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் இளவரசன் நினைவு நாள் வரும் வரை காத்திருந்தனர்? இளவரசன் நினைவிடத்திற்கு அருகில் கடந்த ஓராண்டாக சி.சி.டி.வி காமரா பொருத்தப்பட்டுள்ளது நினைவிடத்திற்கு வருபவர்களை மட்டுமின்றி ஊருக்குள் வந்து செல்பவர்களையும் அது படமெடுக்கும். ஆயுதப் பயிற்சி அளித்தவர்கள் வருகையை அது படம் எடுக்கவில்லையா? இளவரசன் நினைவிடம் அருகில் ஆயுதத்தை துரை புதைத்து வைத்தார் என்றால் அதை சி.சி.டி.வி படம் எடுக்கவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.

காவல்துறையால் கடுமையாகத் தேடப்படும் ஆயுதப் போராளிகள் யாரும் அங்கு வந்து செல்வதற்கு வாய்ப்பில்லை. அப்படி வந்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கலாம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு இளவரசன் முதலாம் ஆண்டு விழாவை ஒட்டி இந்தக் கைது செய்துள்ளதற்கு உள்நோக்கம் இருக்கிறது. முதலாம் ஆண்டு கடுமையாக நடவடிக்கை எடுத்து ஒடுக்கிவிட்டால் பின் எப்போதும் இளவரசன் நினைவு நாளை மையமாக வைத்து தலித் இளைஞர்கள் ஒருங்கிணையமாட்டார்கள் என்பதற்காக தமிழக அரசும் காவல்துறையும் மேற்கொண்டுள்ள சதியாகவே தெரிகிறது.

மெரினாவிலிருந்து ஆறு கி.மீ. தொலைவில் கடற்கரையில் ஒரு ஆயுதப் போராட்டக் குழு ஆயுதப் பயிற்சி எடுக்க முடியுமா? சென்னை மாநகரக் காவல்துறை மற்றும் இதர கண்காணிப்புத் துறைகள் இது குறித்து ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? (ஏற்கனவே சென்னை காவல்துறை ஆணையர் இப்படி ஒரு சம்பவம் மெரினா கடற்கரையில் நடக்கவே இல்லை, தருமபுரி காவல்துறை தேவையில்லாமல் இப்படி சொல்வதாக அறிக்கைவிடுத்துள்ளார் என்பது குறிப்பிட்த்தக்கது.)

துடி அமைப்பு வெளியிட்டுள்ளதாக் ஒரு துண்டறிக்கையை காவல்துறையினர் காட்டுகின்றனர். தேதி, முகவரி இல்லா இந்தத் துண்டறிக்கை ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசுவதோடு நூறு பேர் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கிறது. மக்கள் மத்தியில் வினியோகிக்கப்படும் ஒரு துண்டறிக்கையில் யாராவது தம் அமைப்பில் எத்தனை பேர் ஆயுதப் பயிற்சி எடுத்தனர் என்றெல்லாம் அச்சிடுவார்களா? என்று சாதாரண பொதுமக்களும் நம்பமுடியாமல் திகைத்துபோய் உள்ளனர்.

தாங்கள் காவல்துறை அனுமதி மறுப்பை மீறி நீதிமன்றத்தில் அனுமதி ஆணை பெறுவதற்கு முயற்சித்தது பிடிக்காமல்தான் எஸ்.பி அஸ்ரா கார்க் தம்மிடம் இப்படி மிக மோசமான முறையில் நடந்து கொண்டுள்ளார் என நாங்கள் சந்தித்த மக்கள் அனைவரும் கூறினர். அஸ்ரா கார்க் மீது தலித் மக்கள் வைத்திருந்த நம்பிக்கைகளை முற்றாக இழந்துள்ளார் (மதுரை வில்லூர் போன்ற இடங்களில் அவர் சாதிக் கலவரங்களைக் கையாண்டதற்கு பரவலாக பாராட்டப்பட்டுள்ளார்). சமூக ஆர்வலர்களிடம், உண்மை அறியும் குழுக்களிடம் விரிவாக பேசக்கூடிய அவர் இந்தக் குழுவைத் தவிர்த்ததும் பேச மறுத்ததும் அவரின் அணுகுமுறை மாற்றத்தைத் தெளிவாக காட்டுகிறது. எனினும் இந்தக் கைதுகள் மற்றும் தீவிரவாதம் என்ற பொய்ப் பிரச்சாரங்களை அஸ்ராகார்க் என்கிற ஒரு அதிகாரியின் தன்முனைப்பு(ego) பிரச்சினையாக மட்டும் கருதமுடியாது. இதற்குப் பின் தமிழக அரசு மற்றும் காவல்துறை மேல்மட்ட அதிகாரம் ஆகியன உள்ளன.

கடுமையான சாதிப் பிளவு (polarization) நடந்துள்ள ஒரு பகுதியில், இந்த அடிப்படையிலேயே பா.ம.க. ஒரு தேர்தல் வெற்றியைச் சாதித்து, வெற்றிப் பெருமிதத்துடன் திரியும் சூழலில் இப்படி தலித் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுத்து முக்கிய சாதி ஆதிக்கத் தலைவர்களையும், பா.ம.கவினரையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், கொலை செய்யப் பயங்கர ஆயுதங்களுடன் வந்தபோது தாங்கள் கைது செய்ததாகவும் அப்பட்டமான ஒரு பொய்யை ஊடகங்களின் துணையோடு தருமபுரி மாவட்டக் காவல்துறை பிரச்சாரம் செய்வது கவலை அளிக்கும் செய்தி. குறிப்பாக முன்னதாகவே போலீசாரால் கைது செய்யப்பட்டுக் காவலில் இருந்தவர்கள் துப்பாக்கி, வெடிகுண்டுகள், வீச்சரிவாள்கள் சகிதம் ஒரு பா.ம.க தலைவரைக் கொல்லப் போனார்கள் என்பது நூறு சதவீதம் பொய். இத்தகையப் பொய்ப்பிரச்சாரங்கள் சாதிப் பகையை மேலும் வளர்க்கும்.

எதிர்பார்த்தது போலவே இதைப் பயன்படுத்தி பா.ம.க தலைவர்கள் இராமதாஸ், அன்புமணி ஆகியோர் உடனடியாக அறிக்கைகள் விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அரசும் காவல்துறையும் உணர்ந்துதான் செய்கின்றனவா? அல்லது அவர்களின் நோக்கமே இப்படிச் சாதிப் பகையை மூட்டுவதுதானா? இடை நிலை சாதித் தலைவர்களின்நினைவு நாட்களை அரசே கொண்டாடும் நிலையில் தலித் மக்களின் இத்தகைய முயற்சிகளை ஏன் இத்தனை கடுமையாக ஒடுக்க வேண்டும்?

உடனடித் தேவை ஒரு நீதி விசாரணையும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான சமூக நீதி அரசியல் பணியும்

தலித் மக்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டும் ‘துடி’ போன்ற ஒரு இயக்கத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாகச் சித்திரிப்பதன் பின்னணியில் உள்ள மனநிலை கவனத்திற்குரியது. தலித் மக்கள் படிப்பது என்பதையே ஆயுதம் தூக்குவதாக அதிகார மனமும் சாதீயத் திமிரும் அணுகுவதைத்தான் இது காட்டுகிறது. இது ஒரு அப்பட்டமான தலித் விரோதப் போக்கு.

சென்ற ஜூலை 14ந் தேதிய சென்னை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் ஒரு மேற்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் தனது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக மேலதிகாரிகளுக்குப் புகார் செய்துள்ளதாகவும், அது தொடர்பாக உளவுத் துறையினர், தாங்கள் அவரது தொலை பேசியை ஒட்டுக் கேட்கவில்லை, அவரது டிரைவரின் தொலைபேசியைத்தான் ஒட்டுக் கேட்டதாகக் கூறுவதாகவும் ஒரு செய்தி வந்தது. இந்த டிரைவர் அடிக்கடி காவல்துறை வாகனத்தை சேலத்திற்கு ஓட்டிச் சென்றது குறித்துப் புகார் வந்ததாகவும், அப்படி ஓட்டிச் சென்றது சுங்கச் சாவடி சி.சி.டி.வியில் பதிவாகி உள்ளதாக உளவுத் துறையினர் சொல்வதாகவும் அச்செய்தி கூறுகிறது.

இது தொடர்பாக ‘சவுக்கு’ எனும் ஒரு சமூக ஊடக வலைத்தளம் காவல்துறையில் உள்ள குழு மோதல்கள் இதற்குப் பின்னணியாக உள்ளதெனவும், புகார் செய்த அந்தக் காவல்துறைக் கண்காணிப்பாளர் தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்தான் எனவும் அது கூறுகிறது. தவிரவும் காவல்துறை வாகனம் தினந்தோறும் அஸ்ரா கார்க்கின் மைத்துனி கீர்த்திஶ்ரீ என்பவரை தருமபுரியிலிருந்து அவர் எம்.டி. படிக்கும் சேலம் வினாயகா மிஷன் மருத்துவமனைக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த ஊடகம் குறிப்பிடுகிறது. இந்த மருத்துவமனையின் சிறுநீரக ஊழலை விசாரித்த ஒரு அதிகாரி எவ்வாறு அதே மருத்துவமனைக் கல்லூரியில் தன் மைத்துனியை அதிகத் தொகை கொடுத்துப் பெறக்கூடிய ஒரு மேற்படிப்பில் சேர்த்தார் என்கிற ஐயத்தையும் அது முன் வைக்கிறது.

இவை  உண்மையா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்வது நமது நோக்கமல்ல. ஆனால் தன் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாகப் புகார் கொடுத்த அதிகாரி அஸ்ரா கார்க்தான் எனில் அவருக்கும் காவல்துறை மேல்மட்டத்திற்கும் இடையே உள்ள பிளவுக்கும் இந்தக் கைதுகளுக்கும் ஒரு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. இன்று இந்தக் கைது நடவடிக்கைகளை பெரிய அளவில் மேற்கொண்டு மீண்டும் நக்சல்பாரி இடதுசாரி இயக்கம் இப்பகுதியில் உயிரூட்டப் படுவதாகப் பீதியைக் கிளப்புவது அவருக்குப் பயன்படலாம். தான் தேசியப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவித்தவர்களைக் கைது செய்யும் முக்கிய பணியில் உள்ளபோதுஇப்படி மேலதிகாரிகளால் பழி வாங்கப்படுவதாக ஒரு கருத்தை உருவாக்க இந்த உற்சாகம் காட்டப்படுகிறதா? என்கிற கேள்வியும் எழுகிறது.

கொலை ஆயுதங்களுடன் சென்றதாகப் பொய் வழக்கு பதிவு செய்தது, சித்திரவதை செய்தது, இவற்றின் மூலம் சாதிப் பகை வளர்வதற்குக் காரணமாக இருந்தது முதலியன மாவட்ட காவல்துறையின் கடுங்குற்றங்கள். சூன்27ம் தேதிய போலீஸ் அதிகாரிகளின் அலைப்பேசி உரையாடல்கள் இதில் முக்கிய தடயம். அதேபோல ‘துடி’அமைப்பு வெளியிட்டதாகச் சொல்லப்படும் துண்டறிக்கை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.கைது நடவடிக்கைகள் இளவரசன் நினைவு நாளை ஒட்டி நடந்ததன் பின்னணியும் விசாரிக்கப்பட வேண்டும்.  இப்படியான பயங்கரவாத பீதி கிளப்பிவிடப்பட்டதன் நோக்கம் உட்பட எல்லாவற்றையும் உரிய முறையில் விசாரணை செய்ய பதவியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றைத் தமிழக அரசு நியமிக்க வேண்டும். குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதில்இந்த தொலைபேசி ஒட்டுக் கேட்டல் புகாரும் உள்ளடக்கப்பட்டு விசாரிக்க வேண்டும்.

தருமபுரி மாவட்டஅரசு நிர்வாகமும், காவல் துறையும் தலித் மக்களின் நம்பிக்கையை முற்றாக இழந்து நிற்கிறது. மாவட்டக் காவல்துறையில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அங்கிருந்து இட மாற்றம் செய்யப்பட வேண்டும்.இளவரசன் நினைவு நாள் நிகழ்விற்கு மாவட்டக் காவல்துறை அனுமதி மறுத்ததும், மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு போட்டதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு சிறிய இடைவெளி தவிர, தொடர்ந்து 144 தடை ஆணை இருப்பது ஏற்கத் தக்க ஒன்றல்ல. இதனால் தலித் மக்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இளவரசன் நினைவு நாளான சூலை 7 அன்று வரலாறு காணாத அளவில் போலீசார் நிறுத்தப்பட்டும் அன்று இரவு 9 மணிவாக்கில் சாதி வெறியர்கள் பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பாளர் வழக்குரைஞர் ரஜினிகாந்தின் வாகனத்தைக் கொலைவெறியுடன் தாக்கியுள்ளனர். வாகன ஓட்டி அன்று வண்டியை வேகமாகச் செலுத்தித் தப்பித்து வந்திராவிட்டால் உள்ளே இருந்த வழக்குரைஞர் செங்கொடிக்கு உயிராபத்து ஏற்பட்டிருக்கும். இந்த தாக்குதலை செய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.

இப்பகுதியில் சாதி ஒற்றுமையையும் அமைதியையும் நிலைநாட்ட அப்பகுதியைச் சேர்ந்த மத/சாதிச் சார்பற்ற அரசியல்வாதிகள், தொழிற் சங்கத்தினர், வணிகர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள்,கலைஞர்கள் அடங்கிய ஒரு அமைதிக் குழுவை அரசு அமைக்க வேண்டும். சீரான அனைவருக்கும் சமமான ஒருங்கிணைந்த வளர்ச்சியும், இணக்கமான சமூக உறவு ஏற்பட அங்கு தொழிற்கூடங்களை, தொழில் சார்ந்த கல்விக் கூடங்களை அரசு நிறுவ வேண்டும்.

நம்முன் இருக்கும் சவால்:

இந்த கைது நிகழ்விற்கு பின்னால் தமிழக அரசு மற்றும் அதன் காவல் துறையின் சாதிய முகமும், ஏற்கனவே பா.ம.க போன்ற சாதிவெறி அமைப்புகளின் தூண்டுதலால் பாதிப்படைந்த தலித் மக்களை மேலும் சாதி ஆதிக்க வெறியோடு ஒடுக்கும் அரசின் நோக்கமும், சாதி ஆதிக்கத் தலைவர்களின் நினைவு நாள் என்றால் அங்கே படையெடுத்து முன்னிற்கும் அரசு இளவரசன் நினைவு நாளில் தலித் இளைஞர்கள், மக்கள் ஒன்றுகூடல் நடந்துவிடக்கூடாது என்பதற்காக தலித் மக்களை அச்சுறுத்தும் நோக்கில் புனைந்துள்ள தேசத் துரோக வழக்குகளும், தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்த மக்களும் எப்போதும் சாதிய பகைமையோடே இருக்க வேண்டும் என்ற அரசின் அரசியல் பிண்ணனியும் தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.

சாதி ஏற்றத்தாழ்வை அகற்றுதல், சாதி ஒடுக்குமுறையாளர்களைத் தண்டித்தல், அனைத்து மக்களுக்கும் அரசில் பங்கெடுக்கும் சனநாயகம், ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பது இந்த அரசின் நோக்கமல்ல என்பதை காண்கிறோம். ஆகவே சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சாதி ஒடுக்குமுறையாளர்களைக் காக்கும் சாதிய அரசிற்கு எதிராகவும் அனைத்து மக்களைத் திரட்டி போராடுவதும், சாதி ஏற்றத்தாழ்வுக்குகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான தமிழ்த்தேசிய ஓர்மையை வளர்தெடுப்பதுமே நம்முன் இருக்கும் திசை வழி.

ஸ்நாபக் வினோத்

இளந்தமிழகம் இயக்கம்.

About வினோத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*