Home / சமூகம் / சனநாயகம்னா இன்னாப்பா?

சனநாயகம்னா இன்னாப்பா?

 

கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை நடத்த இருந்த ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்ப்பாட்ட நாளன்று அனுமதி மறுத்துள்ளது, தமிழக அரசு (காவல்துறை). காரணம் கேட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமாம். பொதுவாகவே அரசியல் இயக்கங்கள், கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கும், கூட்டங்களுக்கும் சென்னையில் ஒரு சில இடங்களே வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் கூட ஆர்ப்பாட்டங்கள் நடத்தக்கூடாது, போராட்டங்கள் நடத்தக்கூடாது என்பது அடிப்படை சனநாயக மீறலேயன்றி வேறல்ல. இதே போலத்தான் “புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி” நடத்திய ஒரு பொதுக்கூட்டத்திற்கு அனுமது வழங்கிவிட்டு அடுத்த நாளே உளவுத்துறை சென்று அந்த திருமண மண்டப உரிமையாளரை பின்வருமாறு மிரட்டியுள்ளது ///இப்ப சொல்றேன் கேட்டுக்கோ நாங்க அனுமதி கொடுத்தாலும் புரட்சினு பேசுற இவங்கள மாதிரி அமைப்புக்கு இடம் கொடுக்கக் கூடாது, மீறி கொடுத்தா அதற்கான விளைவை நீ அனுபவிக்க வேண்டி வரும்” என்று நேரடியாக மிரட்டியுள்ளனர்///.

ஆனால் மதக்கலவரங்களையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் பிள்ளையார் ஊர்வலங்களோ தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் நடத்தப்படுகின்றது. இசுலாமியர்களுக்கு எதிரான முழக்கங்கள் மசூதிகள் முன் காவல்துறையின் முன்னிலையில் பிள்ளையார் ஊர்வலங்கள் மூலம் நடைபெறுகின்றன. அதே போல தர்மபுரியிலும், நுகும்பலிலும் வன்முறை நடத்திய சாதி ஆதிக்க கட்சி/அமைப்புகள் அதன் பின்னரும் அரசு அனுமதியுடன் கூட்டங்கள் நடத்தி சட்ட ஒழுங்கை குலைத்து வருகின்றன. தர்ம்புரியும், நுகும்பலிலும் நடைபெற்ற திட்டமிட்ட வன்முறைகளை தடுக்காத‌ அரசும், காவல்துறையும், அதற்கெதிராக நடைபெறும் போராட்டங்களை தடுப்பதில் தான் தீவிரம் காட்டுகின்றன… சனநாயகத்தை நசுக்கும் அரசின் இதுபோன்ற செயல்பாடுகளை இளந்தமிழகம் இயக்கம் கண்டிக்கின்றது. இவ்வேளையில் சம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை கொடுத்த பத்திரிகையாளர் செய்தியை இதனுடன் வெளியிடுகின்றோம்…

 

விசை ஆசிரியர் குழு

——————————

 

 

பத்திரிக்கையாளர் செய்தி

தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தலித்துகள்  மீதான தாக்குதலைக் கண்டித்தும், அத்தாக்குதல்களைத் தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உருப்படியாக நடைமுறைப்படுத்தக் கோரியும், 20-9-2014 அன்று காலை 11.00 மணியளவில், நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்னை மாவட்ட காவல் ஆணையரிடம் அனுமதி கோரி இருந்தோம்.

”சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து  மற்றும் பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டதாகக் கூறி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது காவல்துறை. மேலும், ‘தர்மபுரி இளவரசன் மரணத்தைத் தொடர்ந்து அரசு தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டதன் பேரில், தற்போது மாநிலம் முழுவதும் அமைதியான சூழ்நிலை நிலவுவதாகவும் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் காவல்துறை சொல்கின்றது.”

தர்மபுரியில் இளவரசன் கொல்லப்பட்டதற்குப் பின் தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுத்ததாகச் சொல்கிறது காவல் துறை. ஆனால் அதற்குப்பின்தான் திசம்பர் 2013 இல், விழுப்புரம் மாவட்டம் குன்னத்தூரில் தர்மபுரி பாணியிலான தாக்குதல் நடந்தது. ஏப்ரல் 2014 இல் கடலூர் மாவட்டம் வடக்குமாங்குடியில் தலித்துகள் இருவர் கொல்லப்பட்டனர். ஜூன் 2014, காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகா, நுகும்பலில் தலித் மக்களின் வீடுகள் சூறையாடி எரிக்கப்பட்டன. இப்படி அதிமுக  ஆட்சியில் தலித் மக்கள் மீதான வன்முறை என்பது தமிழ்நாட்டில் தொடர் நிகழ்ச்சிகளாக இருக்கிறது.

காதல் திருமணங்களுக்கு எதிராகப் பேசி அதை சாக்கிட்டு தலித்துகள் மீது வன்முறையைத் தூண்டிவிட்டது. தலித் மக்களுக்கு எதிராக தலித் அல்லாத பிற சமூக மக்களை ஒன்று திரட்டும் முயற்சியை மேற்கொண்டார் பா.ம.க நிறுவனர் இராமதாசு. தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான வன்முறையின் ஊடாக அரசியல் செல்வாக்கை உயர்த்திக்கொண்டு தேர்தலில் வாக்கு அறுவடை செய்ய வேண்டும் என்று செயல்பட்டது பா.ம.க.. அதன்படியே பா.ம.க. நிறுவனர் இராமதாசின் மகன் அன்புமணி தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக ஆகியுள்ளார்.

1912422_285989604940011_7566157604878696736_n

தலித்  மக்கள் மீது வன்முறையைத் தூண்டிவிடும் பா.ம.க. வின் சமூக விரோத போக்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்ககாமல்,  ’அனுமதி அளிக்கப்பட்ட நேரத்திற்கு மேலாக பேசினார்’ என்ற காரணத்தைச் சொல்லி பா.ம.க நிறுவனர் இராமதாசு ,காடு வெட்டி குரு போன்றவர்களைக் கைது செய்து அவர்களைப் பாதுகாத்தது தமிழக அரசு. மாறாக, பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது தான் மென்மேலும் அடக்குமுறைகளைச் செய்து வருகின்றது தமிழக அரசு. பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் வீரவணக்க நாளில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆறு பேரை துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்து விட்டு அடுத்த ஆண்டே பசும்பொன்னில்

தேவர் சிலைக்கு தங்கக் கவசம் கொடுத்து தனது சாதிச் சார்பைக் வெளிப்படுத்திக் கொண்டது தமிழக அரசு.

தலித் மக்கள் மீது சாதி வெறித் தாக்குதலை நடத்துபவர்கள் மீதும் சாதி வெறியைத் தூண்டிவிடுபவர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க மறுக்கிறது தமிழக அரசு. மேலும் வீடுகளையும் உடைமைகளையும் இழந்த தலித் மக்களுக்கு உரிய நிவாரணத்தையும் உரிய நேரத்தில் கொடுப்பதையும் செய்வதில்லை.

அது மட்டுமின்றி, தலித் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அமைப்புகள், கட்சிகள் மீது தன்னுடைய அடக்குமுறையை ஏவுகிறது.  மக்கள் நலனில் அக்கறை கொண்ட அமைப்புகள்  அனுமதி கேட்கும் நிகழ்ச்சிகளுக்கு தொடர்ச்சியாக அனுமதி மறுக்கிறது தமிழக அரசு. அதி.மு.க ஆதரவு கட்சிகள் மட்டும்தான்  ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் போன்றவை நடத்த அனுமதி என்ற நிலையே தமிழ்நாட்டில் இருக்கிறது. மத்திய அரசைக் கண்டிப்பதென்றால் சரி, ஆனால் தமிழக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து எதுவும் நடந்துவிடக் கூடாதென்று ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு கருதுகிறது. ஈழத் தமிழர் மீதும் தமிழக மீனவர்கள்மீதும் அக்கறை இருப்பது போல் அன்றாடம் கடிதம் எழுதிக் கொண்டும் நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டும் ’நலத்திட்டங்கள், சாதனைப் பட்டியல்’ என்ற இரைச்சலில் தலித்  மக்களின் வீடுகள் எரிக்கப்படும் போது எழும் ஓலத்தை அடக்கிவிடலாம் என்று தமிழக அரசு கருதுகிறது.

கத்திரிக்காய் முத்தினால் வீதிக்கு வந்தே தீரும். தமிழக அரசின் தலித் விரோத போக்கு அம்பலப்பட்டு வருகிறது என்பதையே இந்த அனுமதி மறுப்பு காட்டுகிறது. சாதி ஆதிக்க சக்திகளின் பக்கம் நின்று தலித் மக்களுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசையும் அதன் காவல் துறை, சட்ட நடைமுறையையும்அம்பலப்படுத்துவோம்.  தமிழக அரசின் தலித் விரோத போக்கை எதிர்த்து  சி.பி.எம்.எல் (மக்கள் விடுதலை) கட்சி தொடர் இயக்கத்தைக் கொண்டு செல்லும்.

நன்றி

பாலன்

பொது செயலாளர்

கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*