Home / கலை / The Gypsy Goddess – கீழ்வெண்மணியின் கதை

The Gypsy Goddess – கீழ்வெண்மணியின் கதை

 

”இந்தப் புதினத்தின் (நாவல்) மூலமாகத்தான் ‘கீழ்வெண்மணி’யில் நிகழ்ந்தக் கொடூரம் தெரிய வந்தது” என்று, தமிழ்நாட்டில் இருக்கிற இன்றைய தலைமுறையைச் சார்ந்த யாரேனும் கூறினால், அதுதான் இந்தச் ‘சாதீய’ச் சமூகத்தின் மிகப்பெரிய இழி நிலைக்கு எடுத்துக்காட்டு. ஒருவேளை, நீங்கள் இப் புதினத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னால், பெரும்பாலான இன்றைய தலைமுறையினர் மேற்படிதான் கூறுவார்கள். முயற்சி செய்து பாருங்கள். அல்லது குறைந்தபட்சம், “கீழ்வெண்மணிப் படுகொலையைப் பற்றித் தெரியுமா?” என்றாவது உங்கள் நண்பர்கள், அலுவலகத்தில் பணிபுரிகிறவர்களிடம் வினவிப் பாருங்கள். நமது நிலைமை தெரிந்துவிடும். 
 
 
******* 
This is a work of fiction and all characters, places and incidents described in this book are the product of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual persons, living or dead, is entirely coincidental.
(இந்நூலில் இடம்பெரும் கதைமாந்தர்கள், இடங்கள், நிகழ்வுகள் அனைத்தும் ஆசிரியரின் கற்பனையாகவோ, இட்டுக்கட்டியதாகவோ இருக்கும். உண்மையில் வாழும் மனிதரையோ, இறந்தவரையோ குறிப்படிடும்படியான சாயல் இருக்குமானால், அது முழுக்க முழுக்கத் தற்செயலானது, திட்டமிட்டதன்று. )
******** 
 
இப்படிக் கூறிக் கடந்துபோகத்தான் விருப்பம். ஆனால், உண்மைச் சுடும்; எரிக்கும்; எரிந்தும் போகும். கீழ்வெண்மணியில் எரிந்ததைப் போலவே! 

42 பேர் (அரசின் கணக்குப்படி) உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வரலாறு, பல்வேறு வகையில் ஆவணங்களாக்கப்பட்டிருக்கிறது. இப்போது, ஆங்கிலத்தில் ஒரு புதினமாக. இந்நூலாசிரியரின் பெயர் மீனா கந்தசாமி. தொடக்கத்தில் சில அத்தியாயங்களிலும் பின்னர்க் கடைசியிலும் வாசகருடன் ஓர் உரையாடலை ஏற்படுத்துகிறார். அந்த உரையாடலினூடாகவே, தனது புதினம் எழுதும் முயற்சியைப்பற்றியும், புதினத்துக்கான தலைப்பினைப் பற்றியும், நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். 
 
இதை ‘உண்மைச் சம்பவத்தின் பதிவு’ என்று சொல்வதா இல்லை ‘புதினம்’ என்றே அழைக்கலாமா?
புதினம்தான் – உண்மைச் சம்பவம்தான் – இரண்டும் கலந்ததுதான். பதிப்பாளரின் பார்வையில் இருக்கும் ‘புதினம்’ என்றே அணுகுவோம்.
 
எதப்பத்திங்க இந்தப் புதினம்?: 
இக்கட்டுரையின் முதற் சொற்றொடரிலேயே சொல்லப்பட்டுவிட்டது. 
 
இருப்பினும், நூலாசிரியரின் வரிகளில்: 
You will learn to relate without family trees. You will learn to make do without a village map. You will learn that criminal landlords can break civil laws to enforce caste codes. You will learn that handfuls of rice can consume half a village. You will later learn that in the eyes of the law, the rich are incapable of soiling their hands with either mud or blood.(குடும்ப உறவுகளைத் தாண்டியும், ஊரின் வரைபடங்கள் இல்லாமலும் உங்களால் இவற்றைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடியும். குற்றமிழைக்கும் நிலவுடைமையாளர்களால், சாதிய அடக்குமுறைகளை ஏவ, மிக எளிதில் குடிமைச் சட்டங்களை மீற முடியும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். ஒரு பிடிச் சோற்றுக்காகப் பாதி ஊரையே அழிப்பார்கள் என்பதை உணர்வீர்கள். இறுதியில், பணக்காரர்கள் குருதிக் கறைபடியாதவர்களாகச் சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்பதை அறிவீர்கள். )
The-Gypsy-Goddess-Meena-Kandasamy-hardback-front-cover

சாதியா-வர்க்கமா? கீழ்வெண்மணி மனிதப் படுகொலை, எதனால் நிகழ்ந்தது? 

சாதி-வர்க்கம் இரண்டும் பிரிக்கமுடியாதபடிக் கலந்திருப்பதுதான் இந்தியச் சாதிச் சமூகத்தின் ‘சிறப்பு’. அதனால்தான் பெரும்பாலான உயர்த்தப்பட்ட சாதியினர் பணம் படைத்தவர்களாகவும், பெரும்பாலானத் தாழ்த்தப்பட்ட மக்கள் ஏழைகளாகவும் இன்றைக்கும் இருக்கின்றனர். 

 

இதத் தெரிஞ்சி நான் என்ன செய்யப் போறேன்?
2014 ஆம் ஆண்டில் ‘நுகும்பல்’ வரையிலும் இதுதான் கதை, திரைக்கதை. இடங்களும் கதைமாந்தர்களும் வெவ்வேறு. அதேமாதிரியான தாக்குதல் முறைகள். இதைப் புரிந்துகொள்ள, நூலாசிரியர் ஒரு “வார்ப்புரு” (டெம்ப்ளேட்) தந்திருக்கிறார் (பக். 72, 73). அதில் தாக்குதல் தொடுப்பவர்/நடத்துபவர், என்ன வகையான தாக்குதல், பாதிப்பின் தீவிரம், தாக்குதல் உக்தி என்று சில தகவல்களைத் தேர்ந்தெடுத்து இடம், நேரத்தையும் நிரப்பிக்கொண்டால், ஒரு சாதியத் தாக்குதல் பற்றிய தகவல் அறிக்கையை எழுதிவிடலாம். 

 

தலைவர்கள் என்ன செய்தார்கள்?
இப்போது நாம் புத்தகங்களில் படிக்கும் பெரும்பாலான தலைவர்கள் அப்போது உயிருடன் இருந்தவர்கள். தனது கண்டனத்தைத் தெரிவித்த முதலமைச்சர் அண்ணாதுரை இதுபற்றி மேலும் கேட்டபோது, ‘இந்தச் சம்பவத்தை ஒரு கெட்ட கனவாக நினைத்து, (பாதிக்கப்பட்ட) அந்த மக்கள் மறந்துவிட வேண்டும்’ என்றார் – இன்றைக்கும் இந்த வார்த்தைகளை இக்காலத் தலைவர்களிடமும், இதுபோன்ற நிகழ்வுகளின்போது நாம் கேட்க முடியும். பெரியார், ‘அரசியல்வாதிகள் இந்தக் குற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். 90 விழுக்காடு நீதிபதிகள் பழிதீர்ப்பவர்களாகவும், சாதிப்பற்றுள்ளவர்களாகவும், சுயநலமிக்கவர்களாகவும் இருக்கும் நாட்டில், இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்குமென்று எதிர்பார்க்கமுடியாது‘ என்று கோபத்துடன் கூறியிருக்கிறார். பெரியார் இந்தச் சம்பவத்தில் வலுவான எதிர்ப்பு காட்டவில்லையென்ற விமர்சனம் இன்றளவிலும் இருக்கின்றது. ஆனால் புதினத்தின் வரிகளில்,
//He was angry and he showed it. There was little else that could be done when the government was actually run by his protege. In his hopelessness, he foresaw our fate//

 

தி.மு.க.வில் இருந்த கம்யூனிச எதிர்ப்பு
காங்கிரஸில் இருந்த கம்யூனிச எதிர்ப்பு
காங்கிரஸ், தி.மு.க. இரண்டிலும் இருந்த பண்ணையார்கள்
கம்யூனிச கட்சியில் மட்டுமே இருந்த தாழ்த்தப்பட்ட கூலித் தொழிலாளிகள்.

 

இப்போது புரிந்துகொள்ள முடியும், அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுத்திருக்கும் என்று!

 

//Soon, the government appointed a commission. It was called the Commission of Inquiry on Agrarian Labour Problems of East Tanjore District. Everyone called it the One Man Commission. Everyone said the commission was a paper tiger. Someone said it was a joke. Someone else said it was eyewash//

 

அந்தக் காலத்துலயே இப்படி ‘குழு’ அமைத்து மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள். இதுமாதிரி குழுக்கள் வழங்கிய பரிந்துரைகளை, எத்தனை அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்தியிருக்கின்றார்கள்?

 

படிக்கலாமா? 
ஆங்கிலத்தில், புதின வடிவத்தில் ஒரு தரமான படைப்பு. எல்லோரும் படிக்கலாம். சாதிப் பெருமைப் பேசும் சாதித் தமிழர்கள் கட்டாயம் படிக்க வேண்டியது. தமிழ் மொழியைப் படிக்கத் தெரியாத தமிழர்களுக்கு ஆங்கிலத்திலேயே படிக்க நல்ல வாய்ப்பு. மற்ற மாநிலத்துக்காரர்களுக்கும் இந்த 45 ஆண்டுகள் பழமையான கொடூரக் கதையை அறிமுகப்படுத்தலாம்! 
 
நூல்: The Gypsy Goddess 
ஆசிரியர்: மீனா கந்தசாமி
பதிப்பகம்: HarperCollins Publications
விலை: 499 (FlipKart & Amazon ஆகியவற்றில் 354 உருபாய்க்குக் கிடைக்கிறது) 
— ஊர்சுற்றி ஜோன்சன்

 

About ஊர்சுற்றி ஜோன்சன்

மென்பொருள் துறையில் பணிபுரிபவர். தற்போது வசிக்கும் ஊர்: சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*