Home / அரசியல் / ஐ.நா. பொது அவையில் மோடியும் – இராசபக்சேவும்

ஐ.நா. பொது அவையில் மோடியும் – இராசபக்சேவும்

2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள், ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில், வெனிசுவேலாவின் முன்னாள் அதிபர் விக்டர் யூகோ சாவேசு பேசினார்.

“நான் பேசிக் கொண்டிருக்கும் இதே அவையில் ஒரு இரத்தக்காட்டேரி (devil), நேற்று பேசி விட்டுச் சென்றிருக்கிறது. இதோ இந்த இடத்தில் தான். இதே மேசையின் முன்பு தான். இங்கு தான்…இன்னும் அந்தப் பேயின் கந்தக நெடி கூட மறையவில்லை” என கடுமையான சொற்களை எறிந்தார் சாவேசு. அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷைத் தான் அப்படி குறிப்பிட்டார். பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற பெயரில் ஈராக்கிலும் ஆப்கனிலும் லட்சகணக்கான பொதுமக்களையும், பெண்களையும் குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து, வாயில் வழிந்த குருதித் துளிகளைத் துடைத்தவாறு வீர உரை பேசிச் சென்றிருந்தார் புஷ்.

எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன. உலக அரசியல் ஒரு சுற்றை முடித்து, பல்வேறு ஆட்சி மாற்றங்களையும், இனக்கொலைகளையும் நடத்தி முடித்திருக்கிறது. ஏகாதிபத்தியங்களின் தலைமை மாறியிருக்கின்றது. ஆனால் ஏகாதிபத்தியம் மாறவில்லை. இந்த ஆண்டு 2014 செப்டம்பர் திங்களில் கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் ஒன்றரை இலட்சம் பொது மக்களைத் தமது அரசின் முப்படைக் கொண்டு கொன்றழித்த பேரினவாத அரசியல் தலைமை ஒன்று சென்ற வாரம் பேசிச் சென்றிருக்கிறது. சொந்த மண்ணில், இரண்டாயிரம் அப்பாவி பொது மக்களை கொன்று குவித்த மதப் பெரும்பான்மைவாத அரசியல் தலைமை ஒன்றும் வளர்ச்சி என்ற முகமூடியோடு ஐ.நா அவையில் நேற்றைக்கு முந்தினம் (செப் 27) அன்று பேசியது. உலக முதலாளி, புவியின் பாதுகாவலன் என தன்னை பறைசாற்றிக் கொண்ட ஜார்ஜ் புஷ்ஷையே, இரத்தக்காட்டேரி என அடையாளம் காணுவதற்கு ஒரு சாவேசு அப்போது இருந்தார். இப்போது இவ்விரு அரசியல் தலைமைகளை இரத்தக்காட்டேரிகள் என அடையாளம் காண ஒரு சாவேசு கூட இல்லை.

1601152_585857678204228_6127986106890324754_n
இருப்பினும் அவ்விருவரையும் நாம் அடையாளம் காண்போம். ஒருவர் ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை இனக்கொலை செய்த இலங்கையின் அதிபர் மகிந்த இராசபக்சே. இன்னொருவர் இரண்டாயிரம் இசுலாமிய குசராத்தியர்களை, குசராத்தில் வேட்டையாடிய அன்றைய குசராத் முதல்வரும், இன்றைய இந்தியாவின் பிரதமரும் ஆன நரேந்திர மோடி.

இது வெற்றி பெற்றவர்களின் உலகமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட தேசங்களின், மக்களின் நியாயங்கள் பேசு பொருளாக்கப்படுவதில்லை.

இலங்கையின் வளர்ச்சி, அமைதி , பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில், இராசபக்சேவின் இனப்படுகொலைக் குற்றம் மறைக்கப்படுகிறது. ஐ.நா பொதுச்சபையின் 69 ஆவது அமர்வில், எவ்வித தங்கு தடையுமின்றி, இராசபக்சே வந்து பேசி விட்டு செல்லுமளவுக்கு, புவி அரசியலின் ஒழுங்கு வடிவமைக்கப்பட்டு விட்டது. ”பலவானே பேறுபெற்றவன்” என்ற அடிப்படையில் அமைந்த நீட்சேவின் கோட்பாட்டிற்கு வலு சேர்ந்திருக்கிறது. இன்னொரு புறம், இந்தியா எனும் மதச்சார்பின்மை பேசும் ஒரு நாட்டில், 2002 குசராத் கலவரங்களில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசுலாமியர்களை சூலத்தால் ஏற்றியும், நெருப்பால் சிதைத்தும் கொன்ற இந்துத்துவ சங்க பரிவாரங்களின் அதிகாரத் தலைமையாக இருந்த நரேந்திர மோடி, ”கலவரத்தில் கொல்லப்பட்ட இசுலாமியர்களை, என் காரில் அடிபட்டு இறந்து போகும் ஒரு நாய்க்குட்டியைப் போலத் தான் பாவிக்கிறேன்” என திமிர்வாதத்தோடு கருத்து சொன்ன நரேந்திர மோடியும், இதே ஐ.நா பொது அவையில் உரையாற்றுகிறார். இவ்விருவரும் இன்று வெற்றி பெற்றவர்களாக இருக்கின்றனர். தெற்காசிய மண்டலத்தின் இரு முக்கிய நாடுகளின், உயர் பதவியில் அமர்ந்திருக்கின்றனர்.

Modi

imrsimrsஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற அணியில் ஒன்று திரளும் மூன்றாம் உலக நாடுகளான ஆல்பா நாடுகளும், கியூபா, வடகொரியா உள்ளிட்ட கம்யூனிச நாடுகளும், அமெரிக்க மேற்குலக நாடுகளின் ஆக்கிரமிப்புப் போர்களையும் இனக்கொலைகளையும் கண்டிக்கின்றன. ஆனால் இந்தியா,இலங்கை ஆகிய நாடுகள் தன் சொந்த மக்களை பெரும்பான்மைவாத , பேரினவாத வெறியோடு , கொன்று குவிக்கும் அரசியலை கண்டிப்பதில்லை. ஈராக்கிய ஆக்கிரமிப்புக்காக அமெரிக்காவை எதிர்க்கும் அதே வேளையில், தன் ஈராக்கிய மக்களையே இனக்கொலை செய்த சதாம் ஹூசைனை கண்டிக்காமல் விடுவது எவ்வளவு அபத்தமோ, அதற்கு இணையானது குசராத்தில் இசுலாமியர் இனக்கொலையையும், இலங்கையில் தமிழர் இனக்கொலையையும் கண்டிக்காமல் கடந்து செல்வது.

India_Modi_Mania-0d77aஅது மட்டுமின்றி, ஐ.நாவில் இராசபக்சே பேசுவதை எதிர்த்து தமிழ்நாட்டிலிருந்து போராடும் தமிழீழ ஆதரவு அமைப்புகள், குசராத் சிறுபான்மையினரைக் கொன்று குவித்த நரேந்திர மோடி, ஐ.நா.வில் உரையாற்றுவதையும் எதிர்த்து போராட வேண்டியதன் அவசியமும் இங்கு தொக்கி நிற்கிறது.

மக்களாட்சி, இறையாண்மை என்ற பெயரில் இந்தக் கொடுங்கோலர்கள் ஈட்டிய வெற்றிகளும், உயர் பதவிகளும் அவர்கள் பன்னாட்டு சமூகத்தின் மதிப்பை பெற உதவின. 2005 ஆம் ஆண்டிலிருந்து, கடந்த மே திங்கள், இந்தியாவின் பிரதமராகும் வரை, மோடிக்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி இல்லை. ஆனால் இன்று , இந்தியாவின் வளர்ச்சியில் அமெரிக்கப் பங்களிப்பு இருப்பதாக கூச்சமின்றி சொல்லிக் கொண்டு, நியூயார்க் நகர் செல்ல விமானம் ஏறுகிறார். ஐ.நா அவை கட்டிடத்தின் பின் வாயில் வழியாகக் கூட இன்றளவும் ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணையை நிராகரிக்கும் இராசபக்சேவால் நுழைய முடிகிறது.

இவ்விருவரையும் எதிர்த்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் மக்கள் போராட்டங்கள் வீரியமடைந்திருக்கின்றன. இதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாத ”மக்கள் விரோத” ஊடகங்கள், மேடிசன் சதுக்கத்தில் மோடியின் உரையைக் கேட்க, மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாக கதையளக்கின்றன. இனக்கொலைக்காரனும், மதக்கொலைகாரனும் ”உலகப் பயங்கரவாதி” அமெரிக்க அரசின் தயவில் நியூயார்க்கில் சந்திக்கப்போவதாக தம்பட்டம் அடிக்கின்றன. மக்கள் போராட்டங்களின் ஊடாக, உலக நாடுகளின் கவனம், ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை. அவர்களின் நியாயங்களைப் பேச, ஒரு சாவேசு இல்லையே என வருந்தித் தேங்கி நிற்கத் தேவையில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் நீதியை வென்றெடுக்க, பெருந்திரளான நமது போராட்டங்களே இன்றளவில் தேவையாக இருக்கிறது. அதுதான் ஒடுக்குமுறைக்கு காரணமான அரசுகளையும், அதன் பிரதிநிதிகளையும் தனிமைப்படுத்தி ஒடுக்குமுறையிலிருந்து மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தர உதவும் பாதையாக இருக்கிறது.

விசை ஆசிரியர் குழு

மோடி எதிர்ப்பு போராட்ட புகைப்படம் – நன்றி Washington Post

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*