Home / பொருளாதாரம் / இயற்கை வளம் / வாழ்வா? வளர்ச்சியா?

வாழ்வா? வளர்ச்சியா?

“தமிழக இயற்கை வளங்களும் நமது எதிர்காலமும்” என்ற தலைப்பில் இளந்தமிழகம் இயக்கத்தின் மதுரைத் தோழர்கள் அண்மையில்(ஆகத்து 31) நடந்த புத்தகத் திருவிழாவில் நடத்திய கருத்தரங்கில் இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். தோழர். செந்தில் அவர்களின்
உரை….இங்கே

எழுத்து வடிவில் இங்கே…

தமிழக இயற்கை வளங்களும் நமது எதிர்காலமும் என்ற தலைப்பில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் இந்த கருத்தரங்கத்திற்கு வந்திருக்கும் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் மாணவர்களுக்கும் எனது பணிவான வணக்கம். மிகப்பொருத்தமாக முதல் மூன்று வரிசையில் மாணவிகள் உட்கார்திருக்கிறார்கள். கடந்த பதினைந்தாண்டுகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக நடைபெற்ற போராட்டங்களில் அதிகமாக பங்குபெற்றவர்கள் பெண்கள் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக நமது தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டங்களிலும் பெண்கள்தான் அதிகம் பங்குபெற்று கொண்டிருக்கிறார்கள் இனி வரப்போகும் காலங்களிலும் பெண்கள் தான் அவற்றை முன்னின்று நடத்தப்போகிறார்கள். ஏனென்றால் ஒப்பீட்டளவில் ஆண்களைவிட பெண்களுக்குத்தான் எதிர்காலத்தைப் பற்றிய, தங்கள் வருங்கால சந்ததிகளைப் பாதுக்காக்க வேண்டுமென்ற கூடுதல் பொறுப்புணர்ச்சி இருக்கிறது.

ஒவ்வொரு துறையும் வளர்ச்சி அடைகின்றன. கலைத்துறை, அறிவியல் துறை பிறகு அரசியல் துறை என பல்வேறு துறைகளும் வளர்ச்சி அடைகின்றன. மனித குலம் தோன்றிய காலந்தொட்டு ஒவ்வொரு துறையும் ஒரு குறிப்பிட்ட காலகட்டங்களில் பாய்ச்சலில் வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றன. அரசியல் துறையை எடுத்தால் சாக்ரடிஸ் “எதையும் கேள்வி கேள்” என்று கூறியது வரலாற்றில் ஒரு முக்கியமான மைல் கல். நூற்றைம்பது வருடத்திற்கு முன்னால் அரசியல் துறையில் மார்க்ஸ் மெய்யியல் தொடர்பாகவும் மனித குலத்தைப் புரிந்துகொள்ளுதல் தொடர்பாகவும் முன்வைத்த கருத்துக்கள் அரசியல் துறையைப் பாய்ச்சலில் வளர்த்தெடுத்தது. மார்க்சுக்கு முன் பின் என அரசியல் வரலாற்றை சொல்வார்கள். கலைத்துறை இலக்கியத்துறையை எடுத்தால் கடந்த நூறு ஆண்டுகளில் வசன கவிதைகள் உரைநடை கவிதைகளின் வளர்ச்சி இருந்தது. தமிழ்ச் சமூகத்தில் பாரதியைப் போன்றவர்கள் நவீன இலக்கியத்தை பாய்ச்சலில் வளர்த்தெடுத்தார்கள்.

அப்படி தொழில்நுட்பத்தை எடுத்துக்கொள்வோம். மனித குலத்தின் வரலாற்றில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் என்று பார்த்தோமானால் மனிதன் நெருப்பை பயன்படுத்த தொடங்கியது ஒரு முக்கியமான கட்டம். பிறகு நெருப்பை அவனே உருவாக்க தொடங்கியது இரண்டாவது முக்கியமான கண்டுபிடிப்பு. மூன்றாவதாக சக்கரத்தை கண்டுபிடித்தார்கள். அது தொடங்கி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக செல்ல முடிந்தது. மனிதகுலத்தின் நாகரிக வளர்ச்சிக்கு சக்கரம் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாக இருந்தது. அதன் பிறகு வில் அம்பு என்ற ஆயுத தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார்கள். அதைப்பயன்படுத்தி தொலை தூரத்தில் இருக்கும் ஒரு விலங்கை மறைந்திருந்து வேட்டையாட முடிந்தது. வில்,அம்பு கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு மனிதன் கூட்டமாக ஆயதங்களுடன் விலங்கிற்கு நெருக்கமாக சென்று வேட்டையாட வேண்டியிருந்தது அதில் உயிர் இழப்புகள் ஏற்பட்டன. இப்போது அந்த உயிர் இழப்புகள் தவிர்க்கப்பட்டு வில், அம்பு கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைத்தது. அதற்கு பிறகு மிக முக்கியமான, மனிதனின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட ஒரு கண்டுபிடிப்பு மின்சாரம். மின்சாரம் உலகத்தை சுருக்கி மனித வாழ்க்கையை விரிவாக்கியது. அதற்குப் பிறகு, நம்மை ஒரு பாய்ச்சலில் முன்னேற்றி கொண்டிருப்பது தொலைபேசி. இவையெல்லாம் மனித வரலாற்றில் ஒரு பாய்ச்சலை கொண்டுவந்த கண்டுபிடிப்புகள்.

Wheel_invention

இங்கு பேசியவர்களெல்லாம் மின்சாரத்தை எப்படி மேம்பட்ட வழிகளில் பயன்படுத்துவது? மின்சாரத்தை எப்படி உற்பத்தி செய்வது? என்பதைப் பற்றிதான் அதிகமாக பேசிக்கொண்டிருந்தோம். இந்த மின்சாரம் கண்டுபிடிக்கப்படும்வரை மனிதனுக்கு கட்டுப்பட்டதாக இருந்த தொழில்நுட்பம் அதற்குப்பின் மனிதனை அதன் கட்டுப்பாட்டில் வைத்து இயற்கையை அழிக்கக்கூடிய நிலைதான் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக உள்ளது.

நீர் பயன்பாடு பற்றியும் விவசாயம் பற்றியும் இங்கு பேசபட்டது. நமது தமிழ் சமூகத்துடைய கடந்த கால அறிவு தொகுப்பை எடுத்து பார்த்தோமானால் உழவுத்தொழில் பற்றிய ஒரு மேம்பட்ட புரிதலும் அதற்கான முக்கியத்துவத்தையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் அறிந்து வைத்திருந்தோம். அப்பொழுதே ”நீரின்றி அமையாது உலகு” என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். ஆனால் இன்று நாம் விவசாயம் ஏன் அழிந்து வருகின்றது? அதை எப்படி பாதுகாப்பது? நிலத்தடி நீர் எப்படி நமக்கு சொந்தமில்லாமல் போனது? என்று பேசிக்கொண்டிருக்கிறோம். நம்மிடம் ஏற்கனவே இருந்த வளங்களைப் பாதுகாக்க முடியாமல் பின்தங்கி இருக்கிறோம். இன்று நாட்டின் எல்லா தேர்தல் காலங்களிலும் ’வளர்ச்சி’ என்ற சொல் முன்வைக்கப்படுகிறது. ’வளர்ச்சி’ என்பதை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் வளர்ச்சி என்றால் வேகம். அதாவது ஒரு ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் தனது ஐம்பது ஆண்டு கால வாழ்கையில் வாழ முடிந்ததைவிட இன்றைக்கு நாம் ஐம்பது ஆண்டு காலத்தில் வாழும் வாழ்க்கையில் உள்ள அனைத்து விடயங்களும் வேகப்படுதப்படுள்ளது. இவைதான் வளர்ச்சியின் மூலம் சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சி என்பது இது தான். வேகமாக உற்பத்தி செய்யவேண்டும், வேகமாக விற்கவேண்டும், வேகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் இது எல்லாம் வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தப்பட்டு உள்ளது.

 

மீத்தேன் திட்டத்தால் விவசாயத்திற்கு வரப்போகும் ஆபத்தைப்பற்றி ஐயா திருநாவுக்கரசு அவர்கள் பேசினார். அணு மின்சாரம் மற்றும் அனல் மின்சாரம் போன்ற மின் உற்பத்தி நிலையங்கள் எவ்வாறு நமது கடல் வளங்களையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கின்றன? அதற்கெதிரான போராட்டங்கள் மற்றும் மின்சாரத்தை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது? என்பன பற்றி பேரா. பிரகாஷ் அவர்கள் பேசினார். நிலத்தடி நீரைப் பாதுகாப்பது பற்றி ஐயா நக்கீரன் பேசினார். இயற்கை வேளாண்மை விவசாயம் பற்றி ஐயா தினகரன் பேசினார்.

இவை எல்லாம் துண்டு துண்டாக இருப்பது போல நமக்கு ஒரு தோற்றம் அளிக்கும். ஏனென்றால், இப்பொழுது நாம் அணு உலை வேண்டாம் என்று போராடினால், ”அணுஉலை கல்பாக்கத்திலும் கூடங்குளத்திலும் தானே உள்ளது, அதற்கும் மதுரையில் உள்ள எங்களுக்கும் என்ன சம்பந்தம்? நாங்கள் எதற்கு அதை எதிர்க்க வேண்டும்? என்று நீங்கள் கேட்கக் கூடும். மீத்தேன் திட்டத்தைப் பற்றி பேசினால், ”மீத்தேன் திட்டத்தால் காவிரிப் படுகையில் உள்ள விவசாயிகள் தானே பாதிக்கப்படுவார்கள். அதற்கும் சென்னையில் உள்ள எனக்கும் என்ன தொடர்பு?” என்பார்கள். நாகை மாவட்டக் கடற்கரையில் பதின்மூன்று அனல்மின் நிலையங்கள் அமைக்க உள்ளார்கள் அதை எதிர்த்து அங்குள்ள மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கும் ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள தொழிலாளிக்கும் என்ன தொடர்பு? இப்படி ஆங்காங்கே துண்டு துண்டாக மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

 

இதைப் போன்றே இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதற்கு எதிரானப் போராட்டங்கள் அண்டை மாநிலங்களிலும் பல்வேறு மூன்றாம் உலக நாடுகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன தொடர்பு இருக்கிறது? சென்னையில் உள்ள ஒருவர் மீத்தேன் திட்டத்தை பற்றி கவலைப்பட வேண்டுமா? வேண்டாமா? அவரும் அத்திட்டத்தால் பாதிக்கப்படுகிறாரா? இல்லையா? என்கிற கேள்விகள் எழக்கூடும்.

 

இப்போது தமிழ்நாட்டுக்கு மொத்தம் 12,000 மெகாவாட் மின்சாரம் தேவையாய் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான மின்வெட்டு இருந்த நாட்களில் உற்பத்தி 8000 மெகாவாட் தான். 4000 மெகாவாட் மின்தட்டுப்பாடு இருந்தது. இவ்வளவு மோசமான மின்தட்டுப்பாடு இருந்தபோதும் சென்னையில் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருந்தது ஆனால் மற்ற நகரங்களில் வீடுகளுக்கும், விவசாயத்திற்கும், சிறு குறு தொழில்களுக்கும் எட்டு முதல் பன்னிரண்டு மணிநேரம் வரை மின்வெட்டு அமலில் இருந்தது. ஏனென்றால் சென்னை நகரம்தான் அரசைப் பொறுத்தவரை அதிகமாக வளர்ந்து கொண்டிருக்கிறதாம். அங்குதான் புதிய புதிய வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குகின்றன. அவர்களுக்கு தங்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. உண்மையில் நாளுக்கு நாள் நமது மின் தேவை அதிகரிப்பது இந்த நிறுவனங்களுக்கு மின்சாரம் கொடுக்கத்தான். சென்னையில் போடப்படும் மேம்பாலங்கள் யாருக்காக? இந்த நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மிக வேகமாக ஏற்றுமதி செய்வதற்காகத்தான் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைத்து மின்சாரம் தயாரிப்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கத் தான். ஆபத்தான அணு தொழில்நுட்பம் கொண்டு மின்சாரம் தயாரிப்பதால் அப்பகுதிவாழ் மக்களுக்கு புற்றுநோய் வந்தாலும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலும் இந்த அரசுக்கு கவலை இல்லை. இந்த பன்னாட்டு நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதை உறுதி செய்வதே அரசின் முதன்மையான நோக்கமாக இருக்கிறது.

stock-photo-profit-conceptual-meter-isolated-on-white-background-143542657

சென்னையில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து துறைமுகம் வரை ஒரு மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் முதலில் பூந்தமல்லி சாலை வழியாக செயல்படுத்தப்படுவதாக இருந்தது. ஆனால் பூந்தமல்லி சாலையில் பல அரசியல்வாதிகளின் தியேட்டர்கள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த வழியாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றால் இவற்றையெல்லாம் இடிக்க வேண்டிவரும். இதனால் இந்தப்பாலம் கூவம் கரையோரமாக கொண்டு செல்லப்பட்டால் பணக்காரர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது என்று முடிவு செய்தது அரசு. கூவம் கரையோரம் வாழும் மக்கள் யார்? ஏழை எளிய அடித்தட்டு மக்கள்தான் வாழ்கிறார்கள். அவர்கள், குப்பை அகற்றப்படுவது போல நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு கண்ணகி நகர், செம்மஞ்சேரி போன்ற புறநகர் பகுதிகளில் குடியேற்றப்பட்டார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் சென்னையில் கட்டப்பட்ட மேம்பாலங்களைக் கவனித்தால் அவை எல்லாவற்றிலும் இதேபோல் மக்கள் பந்தாடப்பட்டிருப்பதை அறிய இயலும். சேரிகள் ’திடீரென்று’ எரியும்; மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். இப்போது கண்ணகி நகரிலும் செம்மஞ்சேரியிலும் சேரிகளில் வாழ்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

வளர்ச்சி என்ற போர்வையில் இந்த நிறுவனங்களை அழைத்துவருகிறார்கள். அவர்களுக்கு மானியம் கொடுத்து நாம் புற்று நோயை வாங்கிக்கொண்டு, நமது கடல்வளத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து, அவர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கி, நமது விவசாய நிலங்களை பாழாக்கிவிட்டு கையேந்தி நிற்பதுதான் வளர்ச்சியா? அவர்களை அழைப்பதுதான் நமது பிரதம மந்திரியின் சுதந்திர தின உரையின் சாரம். “MAKE IN INDIA” என்று பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு அழைப்பு விடுத்திருக்கிறார். இங்கு நமது அய்யா கூறியது போல, ”ஒரு முட்டை தயாரிப்பதற்கு இருநூறு லிட்டர் நீர் தேவைப்படுகிறது. நீ எங்களது நீரை பயன்படுத்தி முட்டை தயாரித்து உனது நாட்டிற்கு எடுத்துசெல். ஒரு கார் தயாரிக்க இலட்சக்கனக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படும். எங்கள் பாலாறு அழிந்தாலும் பரவாயில்லை. நீ கார் தயாரித்து உனது நாட்டிற்கு ஏற்றுமதி செய்துகொள். எதற்ககெல்லாம் மற்ற நாடுகளில் தடை இருக்கிறதோ அந்த தொழில்களை எல்லாம் இங்கு வந்து தொடங்கி எங்கள் வாழ்வாதரங்களை பாழாக்குங்கள்” என்பதுதான் நமது பிரதம மந்திரியின் அறைகூவல்.

இவற்றைத்தான் நமது அரசாங்கம் ’வளர்ச்சி’ என்று கூறுகிறது. இந்த தொழிற்சாலைகள் வந்தால்தான் இங்கிருக்கும் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அந்த பன்னாட்டு நிறுவன முதலாளி, ”எங்களுக்கு ஆங்கிலம் தெரிந்த வேலையாட்கள்தான் வேண்டும்” என்று கேட்கிறான். அவனுக்காக இப்போது அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை அறிமுகப்படுத்துகிறது நமது அரசு. இவ்வாறு இங்கு நடக்கும் ஒவ்வொரு விடயத்தையும் நாம் தொடர்புபடுத்திப்பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்.

images

 

இப்போது மீத்தேன் திட்டத்தை எடுத்துக்கொண்டால், எதற்காக தமிழ்நாட்டிலும் மேற்கு வங்கத்திலும் மட்டும் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறார்கள்? ஏனென்றால் தமிழ்நாட்டில் GAIL நிறுவனம் எரிவாயுவை கொண்டு செல்லக்கூடிய குழாய்களை அமைத்து வருகிறது இந்த குழாய் மூலம் மீத்தேன் வாயுவை எளிதாக கொண்டு செல்ல முடியும். மீத்தேன் திட்டத்தில் ஈடுபட்டிருக்கும் “ Great Eastern Energy Corporation Ltd” என்கிற நிறுவனம் அவர்களுடைய இணையதளத்தில் கொடுத்திருக்கும் செய்தி இது. கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு எரிவாயுவை எடுத்துச்செல்லும் திட்டத்தை எதற்காக தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்கள் வழியாக செயல்படுத்துகிறார்கள்? என்று கேள்விக் கேட்டுத்தான் அத்திட்டத்தை மேற்கு மாவட்டங்களை சேர்ந்த விவசாய மக்கள் எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் மேற்க்கில் GAIL நிறுவனத்தை எதிர்த்தும், கிழக்கில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்தும், கூடங்குளத்தில் அணுஉலையை எதிர்த்தும், நாகப்பட்டினத்தில் அனல்மின் நிலையங்களை எதிர்த்தும், அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வியை எதிர்த்தும் தனித்தனியாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் அரசின் ஒவ்வொரு திட்டமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தப்பட்டுள்ளது நமது நிலத்தையும் வளங்களையும் பன்னாட்டு நிறுவனகளுக்கு கூறு போட்டு விற்கிறது. மக்கள் இதை புரிந்துகொண்டு ஒன்றுபட்டுவிடக் கூடாதென்று அவர்களை பிளவுபடுத்துகிறது.

சரி. இவ்வளவு சலுகைகளைக் கொடுத்து அரசு அழைத்துவரும் அந்நிறுவனங்கள் அரசு கூறுவதுபோல் வேலை வாய்ப்பையாவது வழங்குகின்றனவா? என்று பார்த்தால் அதுவும் இல்லை. இதற்கு அண்மைய எடுத்துக்காட்டு நோக்கியா தொழிற்சாலை. 2006 ஆம் ஆண்டு சென்னை அருகில் திருப்பெரும்புதூரில் தொடங்கப்பட்ட நோக்கியா நிறுவனம் 2014 ஆம் ஆண்டு வரை இயங்கி வந்தது. இப்போது அதில் வேலை செய்து வந்த எட்டாயிரம் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியிருக்கிறார்கள். எட்டு ஆண்டுகளாக செயல்பட்டுவந்த அந்நிறுவனம் இருபத்தி நான்காயிரம் கோடி அரசுக்கு வரி செலுத்தவில்லை. அரசாங்கம் கொடுத்த மானியங்களை வாங்கிக்கொண்டு இங்கு வந்து நமது இயற்க்கை வளத்தையும் மனித வளத்தையும் தின்று கொழுத்துவிட்டு இன்று சென்றுவிட்டது. இன்று எட்டாயிரம் தொழிலாளர்கள் வீதியில் நிற்கிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் நோக்கியாவில் வேலைக்கு சேர்ந்து எட்டு வருடம் வேலை செய்துவிட்டு இன்று வீதியில் நிறுத்தப்பட்டிருக்கும் அவர்கள் இனி எங்கு செல்வார்கள்?

இந்த வேலைவாய்ப்பு, ’வளர்ச்சி’ என்ற போர்வையில்தான் அரசாங்கம் நமது வளங்களை சூறையாடிக் கொண்டிருக்கிறது. கோவில்களில் யானைக்கு கவளம் கவளமாக சோற்று உருண்டைகளை ஊட்டுவார்கள் அப்போது தவறி கீழே விழும் பருக்கைகளில் சில நூறு எறும்புகள் பசியாறும். அது போல்தான் பன்னாட்டு நிறுவனங்களால் கிடைக்கும் வேலைவாய்ப்பு என்பது. இதனால் சில நூறு பேர்தான் பயன்பெறுகிறார்கள். ஆனால் கவளம், கவளமாக நமது வளங்கள் விழுங்கப்படுகின்றன. இதைத்தான் ’வளர்ச்சி’ என்று நமது அரசாங்கம் திரும்ப திரும்ப கூறுகிறது.

GAIL-crater_1971233g
நமது மேற்கு மாவட்டங்களில் போட்டுக்கொண்டிருக்கும் எரிவாயு குழாய் போலவே ஆந்திராவில் சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அங்குள்ள நகரி என்ற கிராமத்தில் குழாயிலிருந்து எரிவாயு கசிவதாக அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. மூன்று நாட்களாகியும் ஒரு நடவடிக்கையும் இல்லை. நான்காவது நாள் காலை ஒரு டீ கடையில் இருந்து பரவிய தீ பதினெட்டு உயிரை பலி வாங்கியுள்ளது. இன்று அந்த கிராமமே வாழத்தகுதியற்ற நிலமாக மாறியுள்ளது. இதே எரிவாயுக் குழாய்ப்பதிப்புத் திட்டத்தைதான் தமிழகத்தின் ஏழு மாவட்டங்கள் வழியாக நமது அரசு செயல்படுத்தத் துடிக்கிறது.

 

நக்கீரன் அய்யா கூறியது போல நமது பவானி ஆற்றில் இருந்து திருப்பபூருக்கு தண்ணீர் வழங்கும் பணியை அரசாங்கம் பெக்டெல் (BECHTEL) என்ற நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது ஏனென்றால், தண்ணீர் தனியார்மயம் ஆக்கப்பட்டால்தான் கடன் கொடுக்க முடியும் என்று உலக வங்கி நமது அரசை நிர்பந்திக்கிறது. இது உலக வங்கியின் துணையுடன் உள்நுழைந்து தண்ணீர் விற்று கொள்ளையடித்துக் கொண்டிருந்த இந்நிறுவனத்தை பொலிவிய மக்கள் அங்கிருந்து விரட்டியடித்தார்கள். இப்போது அங்கு மக்களே தண்ணீர் விநியோகத்தை நிர்வகிக்கக் கூடிய அமைப்பை ஏற்படுத்தி செயல்படுத்தி உள்ளனர்.

நான் இந்தக் கருத்தைச் சொல்லி என் உரையை முடிக்க விரும்புகிறேன். இந்த இயற்கை வளங்களான நீர், நிலம், ஆற்றுமணல் போன்றவற்றையெல்லாம் நாம் நினைத்தாலும் உருவாக்க முடியாது. இவையெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையின் சேமிப்பால் நமக்கு கிடைத்த கொடை. நமது கடமை அவற்றை அடுத்த தலைமுறைக்கு மாசடையாமல் விட்டுச்செல்வதுதான். ”தனது தகப்பனை கொன்றவனைக்கூட ஒருவன் மன்னித்துவிடுவான். ஆனால் தனது பாட்டனின் சொத்தை அழித்தவனை மன்னிக்கவே மாட்டான்” என்று சாணக்கியர் சொன்னார். எனவே, நாம் வாழும் இந்தக் காலத்தில், ”இத்தனை இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நாம் இருந்தோம்” என நம் எதிர்கால சந்ததியினர் நம்மை தூற்றுவதற்கு நாம் வகைசெய்துவிடக் கூடாது. நம்மால் புதிய வசந்தத்தை உருவாக்க முடியாவிட்டாலும் இருக்கும் வசந்தங்களை நம் வருங்கால தலைமுறைக்காக கொஞ்சம் சிதையாமல் விட்டுச்செல்ல முயற்சி செய்வோம். மூன்றாம் உலக நாடுகளான இந்திய, ஆபிரிக்க மற்றும் லத்தின் அமெரிக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒரே பிரச்சனையால் தான் பாதிக்கப்பட்டு வருகிறோம். நாம் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை. வளர்ச்சி என்பது கட்டுப்படுத்தப்பட்ட நீடித்த வளர்ச்சியாக இருக்கவேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. நமது முன்னால் இருக்கும் கேள்வி ”வளர்ச்சி வேண்டுமா? வேண்டாமா? என்பது அல்ல, வாழ்வா? வளர்ச்சியா? என்பதுதான்.

நன்றி வணக்கம்.

உரை தட்டச்சு – தோழர்.கமலகண்ணன் – இளந்தமிழகம் இயக்கம்

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*