Home / கலை / ஜீவா – கிரிக்கெட்டின் அரசியல்!

ஜீவா – கிரிக்கெட்டின் அரசியல்!

இந்திய நாட்டின் விடுதலைக்கு முன்பும்,பின்பும் நம்முடைய நாட்டின் அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், அதில் இருக்கும் மேலவை, கீழவை போன்ற கட்டுமானங்கள் அனைத்தும் மேற்கு உலகில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே. அதே வரிசையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இரவல் பெற்றுக் கொண்ட விளையாட்டு தான் கிரிக்கெட். தொடக்க காலங்களில் இருந்து இன்று வரை கிரிக்கெட் விளையாட்டின் அதிகார மட்டத்தில் உயர் சாதியினரும், சமஸ்தான மன்னர்களும், அமைச்சர்களுமே அமர்ந்து வந்தனர்.

இந்திய ஒன்றிய அரசு இயந்திரம் எவ்வாறு ஒற்றை மையத்தில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டதாக உள்ளதோ, அதே போன்று கிரிக்கெட், “இந்திய விளையாட்டு உலகின் சர்வாதிகாரியாகவே” உள்ளது. கிரிக்கெட்டிற்கு இருக்கும் வர்த்தகமும், விளம்பரமும் இந்தியத் துணைக்கண்டத்திலேயே வேறு எந்த ஒரு விளையாட்டுக்கும் கிடையாது என்பதே இதற்கான காரணம். இதற்கும் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ (Board of Control for Cricket in India) என்பது இந்திய அரசு நிர்வாகத்தின் கீழ்வராத, தனித்து இயங்கும் ஒரு அமைப்பே ஆகும்.

நம்முடைய ஊரில் கிரிக்கெட் விளையாடப்படாத தெருக்களையும், விளையாடாத சிறுவர்களையும் பார்ப்பது அரிதிலும் அரிதான ஒன்று. நம்முடைய சிறுவயதில் கிரிக்கெட் மட்டையைக் கையில் பிடித்த நம் ஒவ்வொருவருக்கும் கிரிக்கெட் வீரர் ஆகிவிடவேண்டும் என்னும் ஆசை எழாமல் இருந்திருக்காது.

இந்திய கிரிக்கெட் அணியில் என்றாவது ஒருநாள் விளையாட வேண்டும் என்கிற உந்துதலில் மட்டையைத் தூக்கும் ஜீவா, ரஞ்சித் என்னும் இரு சிறுவர்கள்,பின்னாளில் ரஞ்சி கோப்பை அணிக்கான தேர்வில் தங்களுடைய வாய்ப்பை எப்படி ஸ்ரீராம்களிடமும், சேஷாத்ரி கோபாலன்களிடமும் இழக்கிறார்கள் என்பதே நான் அண்மையில் பார்த்த “ஜீவா” படத்தின் மையம்.

இதுவரைக்கும் இந்திய சினிமாவில் வந்துள்ள விளையாட்டுத் துறை சம்பந்தமான படங்களில் இருந்து வேறுபட்டு ஒரு சினிமா. காதல், நட்பு, சென்டிமென்ட் என்று வர்த்தகச் சினிமாவாக இருந்தாலும், கிரிக்கெட்டையும், அதனைச் சுற்றி நடக்கும் அரசியலையும் பேசி இந்தப் படம் ஏனைய படங்களில் இருந்து வேறுபடுகிறது.

தங்களுடைய தகுதியையும், கிரிக்கெட் திறமையையும் பல்வேறு போட்டிகள், பயிற்சிகள் மூலம் வளர்த்துக் கொண்டு, பல அரசியல் தடைகளையும் கடந்து ரஞ்சிப் போட்டியில் தமிழக அணிக்காக விளையாட தேர்வாகிறார்கள் ரஞ்சித்தும், ஜீவாவும். இதுவரை கடந்தவை எல்லாம் தடைகள் அல்ல; கடக்க வேண்டிய அரசியல் சதிகள் இன்னும் ஏராளம் என்கிற நிலையே உள்ளது. ஜீவா, ரஞ்சித்தின் பயிற்சியாளர் பேசும் வசனம், ‘ இதுவரைக்கும் இந்திய அணிக்குத் தேர்வான 16 பேரில் 14 பேர் பார்த்தசாரதி கம்யூனிடியைச் சேர்ந்தவங்க’ தமிழகக் கிரிக்கெட் தேர்வுக் குழுவில் இருக்கும் பார்ப்பனீய அரசியலை அப்பட்டமாகக் காட்டுகிறது.

” ரூல்ஸ் படி தான் எல்லாம் நடக்குது-னு” சொல்லும் பார்த்தசாரதியிடம், ” திறமைய வெச்சுத்தான் டீம் செலக்ட் பண்றோம்-னு சொல்றீங்க..ஆனா தமிழ்நாடு அணி ரஞ்சி கப் ஜெயிச்சு 19 வருஷம் ஆச்சு”; “எங்கள்ல ஒருத்தன் கூடவா சார் இல்ல?” என்று ரஞ்சித்தாக வரும் கதாபாத்திரம் பேசும் வசனமும், அந்தக் காட்சியும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு தொடர்பாக எழுப்பப்படும் விவாதங்களுக்கான பதில்கள்.

‘எங்க ஆளுங்ககிட்ட திறமையில்ல-னு சொல்றியா’ என்று சீரும் பார்த்தசாரதியிடம், நாங்க ஒன்னும் உங்க ஆளுங்களுக்குத் திறமையில்லை-னு சொல்லல ஆனா, அதுக்காக நாங்க யாரும் சொம்பைங்க இல்ல” என்று ரஞ்சித் பேசும் இடம், இடஒதுக்கீட்டினால் கிடைத்த வாய்ப்புகளில் படித்துவிட்டுத் திறமைதான் முக்கியம் என்று பேசும் புதிய நடுத்தர வர்க்கத்திற்கான பதிலடி.

டிவிசன்-1 போட்டிகளில் ஆட்டநாயகனாகத் தேர்வு பெறும் ஜீவாவின், முதுகில் சாதி அடையாளம் (பூணூல்) தேடும் கிளப் முதலாளி பார்த்தசாரதி; மூன்று போட்டிகளில் விளையாடிய வீரரையும்(வாய்ப்புகள் குறைவாக பெற்றவர்), ஏழு போட்டிகளில் விளையாடியவரின் சராசரியையும் ஒப்பிட்டு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழு எனப் பார்ப்பனீய பாம்பின் பல்லைப் பிடுங்கும் காட்சிகள் உண்மையை உரைக்கின்றன.

இப்படி சாதி அடையாளம் தேடி வாய்ப்புகள் கொடுக்கும் வேலைகள் கிரிக்கெட்டில் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் உள்ளது. பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில், முதுகைத் தடவிப் பார்த்துவிட்டு
வெளிநாட்டு பணி நியமனம் வழங்கப்பட்டதெல்லாம் நம் கண்முன் வந்து போகின்றது.

jeeva-movie-music-launch-soon-poster

தேர்வுக் குழுத் தலைவர் பார்த்தசாரதியைக் கேள்வி கேட்கும் ரஞ்சித், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்து போனதாக தற்கொலை செய்து கொள்கிறார். திறமை இருந்தும் வாய்ப்புக் கிடைக்காமலே தோற்றுப்போன, அதிகாரத்தை நோக்கிக்  கேள்வி எழுப்பினால் வாழ்க்கை சூன்யமாகிவிடும் எனும் இக்கட்டில் இருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களின் பிரதிநிதியே ரஞ்சித்.

ரஞ்சி கோப்பை மூலம் இந்திய அணிக்கு தேர்வாக முடியாத ஜீவா, சிபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணியில் விளையாடுவதன் மூலம், இந்திய அணியில் இடம்பிடிக்கிறார். தனியார் முதலாளிகளால் நடத்தப்படும் சிபிஎல் போட்டிகளில் விளையாடி இந்திய அணியில் இடம்பிடிப்பது என்பது தீர்வல்ல; அது இந்தப் படத்தில் காட்டப்படும் வழி மட்டுமே.

மக்களுக்கு அரசு நிர்வாகம் வழங்க வேண்டிய அடிப்படை தேவைகளைக் கூட தனியாரிடம் ஒப்படைக்கும் இன்றைய அரசியல் நிலையில், தனி ஒரு அமைப்பால் நிர்வகிக்கப்படும் கிரிக்கெட் விளையாட்டுக்கான தேர்வுக் குழுவில் இவையெல்லாம் நிகழக் கூடியவையே. இந்திய கிரிக்கெட் அணியை தனி ஒரு அமைப்பு தேர்வு செய்தாலும், அது இந்திய கிரிக்கெட் அணியாகத்தான் விளையாடுகிறது, அதுபோலத்தான் தமிழ்நாடும்.
அப்படி இருக்கையில், அனைத்து பிரிவினருக்கும் சமவாய்ப்பு வழங்குவதற்கான பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஆனால் கிர்க்கெட் மட்டுமின்றி, அரசு நிர்வாகம், அதிகாரத் துறைகள் என அனைத்திலும் இருக்கும் பார்ப்பனீய சாதி முறை ஆதிக்கம் இதைத் திட்டமிட்டே தடுத்து வருகிறது.

மக்களுக்குச் சமவாய்ப்புகளை வழங்க அதிகாரவர்க்கம் மறுக்கும் போது, அதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பெருமுதலாளி நிறுவனங்கள் தங்களது வேர்களைப் பரப்பி வளர்கின்றன என்பதே நிதர்சனம். அது கிரிக்கெட்டிற்கு மட்டுமின்றி அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது அனைவருக்குமான பிரதிநிதித்துவ வாய்ப்பே அன்றி வேறல்ல. அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு தங்களுக்கு ஏற்றபடி விதிகளை உருவாக்கி, தங்கள் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு மற்றவர்களின் வாய்ப்புகளைப் பறித்துக் கொடுக்கும் பார்ப்பனீய அரசியல் பற்றிய கதைக்காகவே ஜீவா படக்குழுவினரை வாழ்த்தலாம்.

சாதிய ஒடுக்குமுறைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் களைய கொண்டு வரப்பட்ட சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு அல்லது வகுப்புவாரி பிரதிநிதித்துவச் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகள் எவ்வாறு செயல்பட்டிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள இன்றிருக்கும் “தமிழகக் கிரிக்கெட் தேர்வுக் குழுவைப்” பார்த்தால் போதும் என்ற தகவலை உண்மையாகப் பதிவு செய்கிறது “ஜீவா”.

கதிரவன்

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*