Home / சமூகம் / காவேரிபாக்கம் காவல்நிலையமா? சாதி ஆதிக்க நிலையமா?

காவேரிபாக்கம் காவல்நிலையமா? சாதி ஆதிக்க நிலையமா?

மணல் கொள்ளைக்கும், சாதி ஆதிக்க வெறியாட்டத்திற்கும் துணை போகும் காவேரிபாக்கம் ஆய்வாளர், துணை ஆய்வாளரைப் பணி நீக்கம் செய்!

மணல் கொள்ளைக்கும், சாதி ஆதிக்க வெறியாட்டத்திற்கும் துணை போகும் மனித உரிமைகளை கொஞ்சமும் மதிக்காத காவேரிபாக்கம் காவலர்களைக் கண்டித்து 6 அக்டோபர் திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் வேலூர் இராணிப்பேட்டை சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இவ்வார்ப்பாட்டத்தை காஞ்சி மக்கள் மன்றம் ஒழுங்கமைத்திருந்தனர். இவ்வார்ப்பாட்டத்திற்கு மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தமிழ்நாட்டுப் பிரிவின் தலைவர் தோழர் சரசுவதி தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் டிங்கர் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை கருத்தியல் பரப்பு செயலாளர் தோழர் பார் வேந்தன், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் தோழர் மைக்கேல் தாஸ், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், ஊடகவியலாளர் தோழர் டி.எஸ்.எஸ். மணி உள்ளிட்ட பல்வேறு இயக்கத் தோழர்களும், செயற்பாட்டாளர்களும் கண்டன உரை ஆற்றினர்.

 மக்கள் மன்றத்தின் தலைவர் தோழர் மகேஷ் அவர்கள் நிறைவுரை ஆற்றினார். மக்கள் மன்றத் தோழர்களின் எழுச்சிமிக்க முழக்கங்கள், பாடல்கள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியை பன்மடங்காக்கியது. சுமார் 300 பேர் இவ்வார்ப்பாட்டத்தில் பங்குபெற்றனர். காலை 10 மணி முதல் இரண்டு மணி வரை இவ்வார்ப்பாட்டம் நடந்தது. இடையில் 11:45 மணி அளவில் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு காவல் துறை பூச்சாண்டிக் காட்டியது. பின்னர் தோழர்களின் எழுச்சியைக் கண்டு அந்த இட்த்தில் இருந்தே நகர்ந்து சென்றுவிட்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்தபின் தான் காவல் துறையினர் அந்த பகுதிக்கு வந்தனர். அது வரை தொலை தூரத்தில் சென்று நின்று கொண்டிருந்தனர்.

2014-10-06 13.51.58

ஆர்ப்பாட்டத்தில் பின் வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழக அரசே,

  • காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ள பெரும்பாலான காவலர்கள் ஆதிக்க (அ) மேல் சாதியினரைச் சேர்ந்தவர்களே. இவர்களில் சாதித் திமிரோடு அராஜகம் செய்யும் துணை ஆய்வாளர் மோகன், உளவுப் பிரிவு காவலர் சுந்தர் ஆக்யோரைப் பணி நீக்கம் செய்!
  • இச்சாதி வெறியர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்!
  • அத்திப்பட்டு கிராம தலித் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கு
  • வருமானத்திற்கு மீறி இவர்கள் குவித்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்!

இந்தப் போராட்டத்தின் பின்னணி சாதி ஆதிக்க வெறியும் மணற் கொள்ளையும் ஆகும். வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகாவில் காவேரிப்பாக்கம் உள்ளது. காவேரிப்பாக்கம் சாதி இந்துக்கள் வாழும் ‘ஊர்’ பகுதியாகும். அத்திப்பட்டு தலித் மக்கள் வாழும் ’காலணி’ பகுதியாகும். தமிழகத்தில் கடந்த இரண்டு கட்டவிழ்த்துவிடப்படும் சாதி ஆதிக்க , தலித் எதிர்ப்பு அரசியலின் விளைவுகளை இந்த கிராமமும் சந்தித்து வருகிறது. சத்திரிய குலம் என்றும் ஆண்ட பரம்பரை என்று வன்னிய மக்களிடையே சாதி ஆதிக்க உணர்வைத் தூண்டிவிடும் தலித் மக்களை எதிரியாக சித்தரித்தும் பா.ம.க. மேற்கொண்டுள்ள சாதி வெறி அரசியல் இந்த கிராமத்தையும் பாழாக்கியுள்ளது. இதன் நிமித்தமாக அம்பேத்கர் படத்தை ஒட்டிக் கொண்டு மோட்டார் சைக்களில் வரும் அத்திப்பட்டு தலித் இளைஞர்கள் வம்புக்கு இழுக்கப் படுவதும் இதை தலித் இளைஞர்கள் எதிர்த்தாலோ தட்டிக் கேட்டாலோ அங்கு சாதி மோதலாக அது உருவெடுக்கிறது.

 அப்போது காவேரிபாக்கம் காவலர்கள் தலித் இளைஞர்கள் மீது வழக்குகளைப் போட்டு அவர்களை அடக்குவதும் வன்னிய இளைஞர்களை விட்டுவிடுவதும் அங்கு தொடர் கதையாகியுள்ளது. காவேரி பாக்கம் காவல் நிலையத்தில் இருக்கும் பல துணை ஆய்வாளர்கள் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக துணை ஆய்வாளர் மோகன் சாதி ஆதிக்க உணர்வுடன் தலித் இளைஞர்களை அச்சுறுத்துவதும் வழக்குப் போடுவதும் சாதிப் பெயரைச் சொல்லி திட்டுவதும் நடந்து வந்துள்ளது. குறிப்பாக துணிவு மிக்க அரசியல் விழிப்புணர்வு கொண்ட தலித் இளைஞர்கள் விவேகானந்தனும் பூவரசனும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பல வழக்குகள் போடப்பட்டும் இவர்களின் குடும்பத்தார்களை மிரட்டியும் அச்சுறுத்தியுள்ளார் துணை ஆய்வாளர் மோகன். இது வரை இரண்டு முறை இக்கிராமத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

2014-10-06 13.52.06

மூன்று மாதங்களுக்கு முன் ஒரு உணவுக் கடையில் வன்னிய இளைஞர்களுக்கும் தலித் இளைஞர்களுக்கும் இடையே ஒரு மோதல் வந்துள்ளது. அதில் தலித் இளைஞர்கள் விவேகானந்தன், பூவரசன் உள்ளிட்ட அறுவர் மீது காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழமைப் போலவே சண்டையிட்ட வன்னிய இளைஞர்களில் ஒருவர் மீது கூட வழக்கு பதியப்படவில்லை. இரவு நேரத்தில் அத்திப்பட்டு கிராமத்தில் காவேரிபாக்கம் காவலர்கள் நுழைந்து   தெரு விளக்கை அணைத்து, கதவுகளைத் தட்டியும் பெண்களை கன்னத்தில் அறைந்தும்  மக்களை மிரட்டியும் வழக்கு பதியப்பட்ட தலித் இளைஞர்களை ஒப்படைக்குமாறு அச்சுறுத்தியுள்ளனர். இதற்கிடையில் விவேகானந்தன், பூவரசனும் மக்கள் மன்றத்தின் முயற்சியால் முன் ஜாமீன் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தோழர் கொளத்தூர் மணி, மக்கள் மன்றத் தலைவர்கள் மகேஷ், ஜெஸ்ஸி உள்ளிட்ட தோழர்கள் செப் 1 ஆம் நாள் அத்திப்பட்டு கிராமத்தைப் பார்வையிட்டு மக்களோடு உரையாடியுள்ளனர். பின்னர் செப் 2 ஆம் நாள் வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து இதில் உடனடியாகத் தலையிட்டு காவேரிபாக்கம் காவல் நிலைய அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுத்து அத்திப்பட்டு கிராம தலித் இளைஞர்களைப் பாதுகாக்குமாறு கோரியுள்ளனர். மாவட்டக் கண்காணிப்பாளரும் இதற்கு உறுதியளித்துள்ளார்.

 இன்னொரு திசையில் மணற் கொள்ளைக்கெதிராக விவோகானந்தனும், பூவரசனும் துணிந்து நின்றது காவேரிபாக்க காவலர்களை ஆத்திரம் ஊட்டியது. அத்திப்பட்டு கிராமம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. சட்டத்துக்குப் புறம்பாக மணல் அள்ளுவோருக்கு அத்திப்பட்டு வழியாக சென்று ஆற்று மணலைக் கொள்ளையிடுவதற்கு குறுக்குப் பாதையாகும். இதற்கு இசைவு தரும் வேளையைச் செய்துவருவது காவேரிபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் காண்டீபன். இரவும் பகலும் அத்திப்பட்டு கிராமம்  வழியாகச் செல்லும் மணல் லாரிகள் தலித் மக்கள் அன்றாட வாழ்வுக்கு பெரும் இடைஞ்சலாக இருந்துவந்தது. அவ்வழியாகச் செல்லும் மணல் லாரிகளை அத்திப்பட்டு மக்கள் மடக்கிப் பிடிக்கலாயினர். விவேகானந்தனும் பூவரசனும் முன்னணியாளர்களாக விளங்கினர். லாரிகளைத் தடுக்கும் பொழுது எஸ்.பி., டி.எஸ்.பி, வருவாய் கோட்டாட்சியர் என்று உயர் அதிகாரிகளைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் செய்தனர். 17 லாரிகள் இவ்வழியாகச் சென்று மணல் அள்ளலாம் என்று ஆய்வாளர் காண்டீபன் ஒப்புதல் அளித்துள்ளார். தனக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் இல்லை என்று தெரியாதவர் அல்ல அவர். சட்டத்துக்கு புறம்பாக மணல் அள்ளுவோரிடம் ஆய்வாளர் காண்டீபனும், துணை ஆய்வாளர் மோகனும் கை நிறைய பணம் வாங்கி பையை நிரப்பினார்கள். இதற்கு இடையூறாக வந்த விவேகானந்தனையும், பூவரசனையும் ஒரு வழி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர்.

 செப் 23 ஆம் நாள் இரவு 11.30 மணி அளவில் பூவரசனை வீட்டில் சென்று காவேரிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வார்த்தையில் விவரிக்க முடியாத அடித்து சித்தரவதை செய்துள்ளனர் காவேரிப்பாக்கம் காவலர்கள். சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியும் மணல் அள்ளுவதைத் தடுக்க கூடிய அளவுக்கு பெரிய ஆள் என்று உனக்கு நினைப்பா? என்று சொல்லிச் சொல்லி அடித்துள்ளனர். நிர்வாணப் படுத்துதல், தலை கீழாய் தொங்க விடுதல், சங்கிலியால் நாற்காலியில் கட்டி வைத்தல் என்று எல்லா வகையிலும் கொடுமைப் படுத்தியுள்ளனர். இரவு 2 மணி  முதல் காலை 6 மணி இது தொடர்ந்துள்ளது. 7 மணி அளவில் பூவரசனின் தந்தை வழக்கறிஞர் ஒருவருடன் காவல் நிலையம் சென்றுள்ளார். 11 மணி வரை பூவரசனைக் காவல் நிலையத்தில் வைத்திருந்துவிட்டு அங்கிருந்து 11.30 மணி அளவில் நீதிமன்றத்தில் ஒப்படைக்க அழைத்துச் சென்றுள்ளனர். பூவரசன் மீது எவரும் புகார் தரவில்லை. இந்நிலையில் காவல் ஆய்வாளரை தன்னை இழிச் சொல்லில் திட்டியதாகவும் பிரிவு 294(A), கொலை மிரட்டல் விடுத்தாகவும் 506(I) பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாஜிஸ்திரேட் காயத்ரி தேவியிடம் காவல் துறையின் அச்சுறுத்தலையும் மீறி நடந்த உண்மைகளைக் கூறியுள்ளார் பூவரசன். மாஜிஸ்திரேட் உடனடியாக மருத்துவனை கூட்டிச் செல்லுமாறு பணித்துவிட்டார். வாலாஜாபாத் மருத்துவமனைக்கு பூவரசன் அழைத்துச் செல்லப்பட்டார்.

2014-10-06 14.01.17

அங்கு மக்கள் மன்றத் தோழர்களின் போராட்டத்திற்குப் பின் Accident Register இல் பதிவு செய்யப்பட்டு மருத்துவரின் கருத்தை வாங்கிக் கொண்டு மீண்டும் மாஜிஸ்திரேட்டிடம் அழைத்து வரப்பட்டார் பூவரசன். மருத்துவர் பூவரசனை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துவிட்டார். இப்போது 108 ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்டார். இதற்கிடையில் ஆம்புலன்சில் ஏறிய ஆய்வாளர் காண்டீபன் நீதிமன்றத்திற்கு வெளியே செல்லும் ஒட்டுநரை மிரட்டி பூவரசனைக் கடத்திச் சென்றார். பூவரசனையும் அவர் தந்தையையும் மிரட்டி, தங்கள் புகாரைத் திரும்பப் பெறவில்லையென்றால் பூவரசன் குடும்பத்தையே சிதைத்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். பூவரசனின் தந்தை நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞரைத் தொலைபேசியில் அழைத்து நிலைமை விளக்க முற்பட , அந்நேரம் பூவரசனும் ”காண்டீபன் மிரட்டுகிறார்” என்று அலறியுள்ளார். மாஜிஸ்திரேட்டின் உதவியாளர் அருகில் நின்று கொண்டிருந்த வழக்கறிஞர் தொலைபேசியில் உள்ள ஒலிப் பெருக்கியைத் தட்டியுட்டு பூவரசன், அவரது தந்தையின் பேச்சைக் கேட்க வைத்தார். இதை அறிந்த மாஜிஸ்திரேட் கடுங்கோபம் கொண்டு மாவட்டக் கண்காணிப்பாளரை தொலைபேசியில் அழைத்து புகார் செய்தார். இந்நிலையில் வேறு வழியின்றி ஆய்வாளர் காண்டீபன் பூவரசனை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தார். காண்டீபனைக் கண்டித்த மாஜிஸ்திரேட் பூவரசனுக்கு சொந்த பிணைத் தந்து மருத்துவமனையில் சேர்க்குமாறு பணித்தார்.

 இதுவே இவ்வார்ப்பாட்டத்தின் பின்னணியாகும். கால் பாதத்தில் முறிவுக்குள்ளாகி இருந்த பூவரசன் கால்கட்டோடு கம்பீரமாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். பேராசிரியர் சரசுவதி மனித உரிமைக் கண்ணோட்டத்தில் காவலர்களின் காட்டுமிராண்டித்தனத்தை வெகுவாகக் கண்டித்தார். அவர் உரையில் கோபம் கொப்பளித்தது. தோழர் கொளத்தூர் மணி, “ஒரு பகுதியில் இருக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் உயர் பதவியில் இருக்கக் கூடாது என்றும் தலித் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் உயர் அதிகார்களாக தலித் மக்கள் இருக்க வேண்டும். இதுவே, தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதை வலியுறுத்திப் பேசினார்.  இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களின் தொடர்ச்சிதான் இந்த தாக்குதலும் ஆகும். தர்மபுரியில் நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணாநகர் தலித் கிராமங்கள் தாக்கப் பட்டது,  கடலூர் வடக்கு மாங்குடியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட  தாக்குதல், காஞ்சிபுரம் மாவாட்டம் நுகும்பலில் நடத்தப்பட்ட தாக்குதல் என்ற வரிசையில் வேலூர் மாவட்டம் அத்திப்பட்டு கிராம தலித் இளைஞர்கள் அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளனர். பள்ளி, கல்லூரி, காவல் நிலையம், வருவாய் துறை, ஆட்சியர் அலுவலகம் என்று அரசின் பல்வேறு இயந்திரங்களிலும் சாதி ஆதிக்கம் ஊடுருவி உள்ளது. மனித உரிமைகளை கிஞ்சித்தும் மதிக்காத காவல் துறை.

 எதற்கெடுத்தாலும் நம்மிடம் சட்டம் பேசும் காவல் துறை கடந்த 5 நாட்களாக நினைத்த இடங்களில் எல்லாம் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராடிவரும் அ.தி.மு.க. காரர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதேன்? அப்படி என்றால், காவல்துறையின் சட்டம், ஒழுங்கு எல்லாம் சாதாரண மக்கள் மீது திணிக்கத்தானா? சமூக விரோத சக்திகளாக காவல் துறை மாறி வருகின்றது.  இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1922 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்ப்பூர் மாவட்டத்தில் இருந்த செளரி செளரா என்ற இடத்தில்  ஒரு காவல் நிலையம். அந்த காவல் நிலையமும் காவேரிபாக்கம் காவல் நிலையத்தைப் போல அப்பகுதி மக்களைச் சித்தரவதை செய்தும் இன்னும் ஒரு படி மேலே போய் மக்களைச் சுட்டு கொன்று அத்துமீறல்களைச் செய்து வந்தது. அப்போது இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் மாபெரும் எழுச்சிக் கொண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அங்கிருந்து தப்பியோட முனைந்த 21 காவலர்களையும் காவல் நிலையத்தில் வைத்து உயிரோடு கொளுத்தினார்கள். இந்த வரலாற்றை காவேரிபாக்கம் காவல் நிலையத்தார்களுக்கு நினைவு படுத்த விரும்புவதாகச் சொல்லி தன் உரையை முடித்தார். இன்னும் ஐந்து நாட்களுக்குள் காவேரிபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் காண்டீபனும், துணை ஆய்வாளர் மோகனும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அவர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளைக் காவல் துறை நிறைவேற்றத் தவறினால் ஆயிரக்கணக்கான மக்களுடன் காவேரிபாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார் மக்கள் மன்றத்தின் தலைவர் மகேஷ். எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்த்து.

 –செந்தில்

ஒருங்கிணைப்பாளர் – இளந்தமிழகம் இயக்கம்

புகைப்படங்கள் – தோழர். பரிமளா – இளந்தமிழகம் இயக்கம்

About செந்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*