Home / கலை / நஞ்சுண்ட காடு : விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே. பாலகுமாரன் எழுதிய முன்னுரை

நஞ்சுண்ட காடு : விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே. பாலகுமாரன் எழுதிய முன்னுரை

குறிப்பு – முதலில் “ஏணைப் பிறை” என்ற பெயரில் வெளிவந்த இந்நாவல் இரண்டாவது பதிப்பாக  “நஞ்சுண்ட காடு” என்ற  கதை நடக்கும் இடத்தின் பெயரிலேயே வெளிவந்துள்ளது.

கவியழகனின் நஞ்சுண்ட காடு நாவலுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த  உறுப்பினர் க.வே.பாலகுமாரன் எழுதிய முன்னுரை.4ம் கட்ட ஈழப்போர் காலத்தில் வன்னியில் போராளியாகவிருந்த கவியழகனால் இந்நாவல் எழுதப்பட்டது.

அறிய மனமுள்ள அனைவரிற்கும் ஏணைப்பிறையை அறிமுகம் செய்கின்றோம். இதில் பெரும் மனநிறைவும் அடைகின்றோம். புவி ஏதோவொரு அச்சில் சுழல்வதாகச் சொல்கின்றார்கள். இந்த மனிதகுலம் எந்த அச்சில் சுழல்கின்றது. ஏணைப்பிறையில் விடையுள்ளது. ஏணைப்பிறையை யாரும் வாசிக்க முடியாது. அதற்குள் வாழத்தான் முடியும்.வாழத்துடிக்கின்ற,ஆனால் வாழமுடியாத, ஆனாலும் வாழ முயல்கின்ற மக்கள் கதைதான் இது. ஒவ்வொரு காலகட்டத்தின் முடிவும் இன்னொன்றின் தொடக்கமும் ஏதோ ஒரு விடுதலையை நோக்கிய போராட்டத்தின் விளைவே. ஒவ்வொரு விடுதலைப் போராட்டமும் உலகிற்களித்த கொடை, என்றும் உயிர் வாழும் இலக்கியங்கள்தான். இவ்விலக்கியங்களுள் என்றும் உயிர்வாழும் மனிதர்களைத்தான். அவ்விலக்கியங்களுள் முற்றிலும் இருள் சூழ்ந்து பாதைகள் யாவும் மூடுண்ட நிலையிலும், வதைபட்டும், குருதி சிந்தியும், தாக்குப் பிடித்தும் நம்பிக்கை எனும் நாட்களில் மக்கள் வாழ்கின்றார்கள். சோவியத், சீன, வியட்நாமிய, லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க, பாலத்தீன மக்களின் இலக்கிய வரிசையில் இறுதியாகச் சேர்வது ஈழ விடுதலைப்போராட்ட இலக்கியங்கள். இதிலும் இப்போது இணைவது ஏணைப்பிறை.எதனையும எதனோடும் ஒப்பிடமுடியாது. ஏனென்றால் அதுவது அதற்குரிய சிறப்பியல்போடு இருக்கும். ஆனால் எம்மால் ஒப்பிடாமலும் அளவுகோல் இல்லாமலும் வாழமுடியாது. ஏணைப்பிறையில் பக்கம் 70வதில் வருவதுபோல “வாழ்க்கையில் அதுவொரு போலி ஆனால் வாழ்க்கைக்குத் தேவையான போலியாக அது இருக்கு”உலகில் உள்ள அனைத்து விடுதலைப் போராளிகளுக்கும், அவ்வாறு மாறமுடியாத போராளி உணர்வுள்ளவர்களுக்கும் நிச்சயமாக ஒரு பொதுத்தன்மை இருக்கும். அவர்கள் நிச்சயமாக மக்சிம்கோர்க்கியின் “தாயை” வாசித்திருப்பார்கள். வாசித்தவர் மனதிலே பாவெல்லும் அவனது தாயும் என்றும் இடம்பிடித்திருப்பார்கள்.

ஏணைப்பிறையை வாசித்த பின் சுகுமாரும் பெயர் அறியப்படாத அவனது அக்காவும் இடம்பிடித்துக்கொள்வார்கள். தாய் நாவலிலும் (தாயின் பெயர் சரிவரத் தெரியாது) பொறுப்பற்ற குடிகாரத் தந்தை ஏணைப்பிறையிலும் அவ்வாறே. ஆனால் இங்கு தாய்க்குப் பதில் அக்கா. ஏணைப்பிறையில் ஒரு கட்டத்தில் அம்மா செயலற்றுப் போகின்றார். அக்காவே எல்லாச் சுமையையும் சுமக்கின்றார். (அம்மாவிற்கு இரண்டு காலும் இழுத்திற்று நாரிக்குக் கீழே உணர்வில்லை்’ பக்கம் 100) தாயில் தாய்க்கும் மகனுக்குமான உறவே அடிநாதமாகப் பரவுகின்றது. இங்கு சுகுமாருக்கும் அக்காவிற்குமான உறவு.

வதைக்கப்படுவதானால் விடுதலைவேண்டிப் போராடும் அனைத்து மக்களும் போராட்டத்தின் பொழுதும் பெரிதும் வதைக்கப்படுகின்றார்கள். அக்கொடிய வதையும் அதிலிருந்து பிறக்கும் ஓர்மமும் மானிடத்தின் உயரிய பண்புகளாகக் கற்பனையே செய்யமுடியாத சாதனைகளாகின்றன. இதுவே முதல் விடுதலைப்போராட்டமாகக் கருதப்படும் ஸ்பாட்டகசின் அடிமைகள் எழுச்சியிலிருந்து பிரான்சியப் புரட்சிவழி தொடர்ந்து ருஸ்ய, சீன புரட்சிகள், வியட்நாமிய, கியூபா விடுதலைகள் வழி உலகறிந்தது. இதற்கு ஈழவிடுதலைப் போராட்டமும் விதிவிலக்கல்ல. ஆனாலும் இங்கே ஒரு பெருத்தவேறுபாடு உள்ளது. இதுவே பிறர் இன்று புரியவேண்டியது. இவ்விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவும் அதுவே. ஆயினும் அதுவே பலருக்கு வியப்பூட்டும் அதிர்ச்சிதரும் புரியமுடியாத மர்மம். இதைப் புரியவைப்பதே ஈழவிடுதலைப் போராட்ட இலக்கியங்கள் வழி இன்று பிறப்பெடுத்திருக்கும் போரிலக்கியங்களின் இலக்கு. இதனை உணர ஒரு பின்னோக்கிய வரலாற்றுப் பயணத்தினை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழினம் பட்ட அவமானத்திலும் கடைநிலை அவமானத்தின் தாக்கத்தினை எவராலும் புரியமுடியும்.

ஏனெனில் இன்றைய வீரம் செறிந்த ஈழத்தேசிய விடுதலைப்போராட்டம் இவ்வரலாற்றின் விளைபொருளே. சுயம்புவாகவே தோன்றி சுயம்புவாகவே நகரும் போராட்டம் இது.
ஆங்கிலேயர் ஆண்டபொழுது (1789 – 1948) 1833ல் தமிழ் தாயகத்தையே முற்றாக இழந்த ஈழத்தமிழினம் 1930ன் பின் படிப்படியாக தாய் நிலத்தையே இழக்கத் தொடங்கியது. 1948ல் சுதந்திரம் என்கின்ற பெயரில் சிங்களவர்கள் பெற்ற உரிமைகளை பெறாமலே இழக்கத்தொடங்கியது. 1956இன் முதன் இனக்கொலை நிகழ்வின் பின் உடமை, உறவு, உயிர் என எல்லாவற்றையும் இழக்கத்தொடங்கியது. எனவே இவற்றிற்கெதிராக (ஆங்கிலேயர் காலத்தில் காந்தி காட்டிய காங்கிரசு வழியில் சிங்களவர்களுக்கும் சேர்த்து சுயராச்சியம் வேண்டிய) தமிழினம் 1948இன் பின் இணைந்து வாழ இணைப்பாட்சி வேண்டியது.

ஆனால் சிங்களமோ பிரிந்துபோவென அரசியல், பொருண்மிய இராணுவ அடக்குமுறைகளை வேண்டியபொழுது பொறுக்கமுடியாத நிலையில் 1970 வரை மென்முறை வழியிலே போராடிய தமிழினம் தனக்கெதிராக நீட்டப்பட்ட ஆயுதங்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப்போராட பாரிய முடிவினை எவரையும் வேண்டிநிற்காமல் தானே எடுத்தது.

எனவே இயல்பாகவே ஈழத்தமிழிலக்கியப் போக்கும் பாரிய மாற்றம் கண்டது. இம்மாற்றம் ஏற்பட்ட முறைமை கூர்ந்து நோக்கப்படவேண்டியது. ஏற்கனவே 1950களில் புதிய பாய்ச்சலை நிகழ்த்த முற்பட்ட முற்போக்கு இலக்கிய இயக்கம் (மாக்சியச் சித்தாந்த அடிப்படையிலான புதிய சமூக முறைமையினை இலங்கை முழுவதும் உருவாக்க விரும்பியோரின் இலக்கிய இயக்கம்) பெரும் பின்னடைவு காண நேரிட்டது. வரலாற்றில் தவிர்க்கமுடியாத மாற்றம் இது.இலங்கைத் தேசியத்தின் வீழ்ச்சி – தமிழ்தேசியத்தின் எழுச்சி, சிங்கள முற்போக்காளர்களின் அதி பிற்போக்குவாத நிலை என்கின்ற இரு காரணங்கள் இலக்கியப் பாங்கினை முற்றாக மாற்றியமைத்தன. எனினும் இக்காலகட்ட முற்போக்கு எழுத்தாளர்களை ஈழத்தமிழிலக்கியம் தனது முன்னோடிகளாக பதிவுசெய்தே வைத்துள்ளது.

அதேவேளை 1960களிலேயே இந்நிலைமைகளைத் தம் பட்டறிவால் உணர்ந்து இலக்கியப் போக்கிலே இம்மாற்றத்தினை நிகழ்த்திய முன்னோடிப் படைப்பாளிகள் இன்றைய ஈழத்துப்போராட்ட – போரிலக்கியத்தின் முன்னோடிகள் ஆவர்.

1950களின் பிற்பகுதிகளிலே புதிய நிலைப்பாடொன்றை முன்வைத்த மு.தளயசிங்கம் எழுதிய நாவலான ஒரு தனிவீடு, தமிழன் கனவினை எழுதிய காசி ஆனந்தன், ‘வெளியார் வருகை’ என 1968ல் நெடுங்கவிதை எழுதிய சண்முகம் சிவலிங்கம், சிறுகதை ஆசிரியர்களான பிரான்சிஸ் சேவியர், அண்மையில் காலமான வரதர், அ.செ.முருகானந்தன், வ.அ.இராசரத்தினம் போன்றோரோடு முருகையன், வில்வரத்தினம், சேரன், ஜெயபாலன், கே.ஆர்.டேவிட், சாந்தன், சோ.பத்மநாதன், புதுவை இரத்தினதுரை, அ.யேசுராசா, எம்.ஏ.நுஃமான் எனத் தொடரும் இவ்வரிசை ஆரோக்கியமான தடத்தில் கவிதை, புனைகதைத்துறையில் இப்பொழுது பயணிக்கின்றது. (பட்டியல்கள் பூரணமானவையல்ல, வெறும் குறியீட்டுக்காகவே. பட்டியல்கள் ஒருபோதும் எப்போதும் எவராலும் பூரணப்படுத்த முடியாதவை) எனவே இவ்வாறாக 1970களின் பின்னான இம்மாற்றம் 1983யூலை இனவழிப்பின் பின் மிகத்தெளிவான பிரிகோட்டை உருவாக்கியது. தாமும் தமது சந்ததியும், சந்ததி சந்ததியாகப் பட்ட கொடும் வடு சுமந்த அவமானப் பழு அனைத்தையும் நீக்க இளைய தலைமுறை தீர்க்கமான முடிவெடுத்தது. இம் முடிவின் பின்னான வரலாற்றின் இலக்கியத் தொகுப்பே இன்றைய ஈழப்போராட்ட – போரிலக்கியம். எனவே இப்போது போராளிகளே படைப்பாளிகள் ஆகினர். தமது கதையைத் தாமே எழுதினர். இது இவ்வாறுதான் தொடங்கியது. இப்போது ஏணைப்பிறையிலும் அது நிகழ்கின்றது.வழிகாட்ட, துணைநிற்க, எவருமற்றும் எதுவித ஆயத்தமற்றும் கையில் எதுவுமற்ற நிலையிலும் தமிழீழத்தாயின் புதல்வர்கள் போருக்குக் கிளம்பினர். எவருமற்ற வெளிகளிலே அலைந்தனர். அருகில் அணைந்து படுத்துக்கிடந்த பிள்ளைகளைக் காணாமல் தாய்மார்கள் ஓவென அலறினர். வயிற்றிலே நெருப்பைக் கட்டியது போல் பதறினர். இவ்வாறாகத்தான் ஈழவிடுதலைப்போராட்டம் ஆரம்பித்தது.

இவ் வரலாறு மிக அற்புதமாகப் பதியப்பட்ட கதைதான் ரஞ்சகுமாரின் கோசலை. உலக இலக்கியங்களுள் சேர்த்துவைத்துப் பார்க்கப்படவேண்டிய சிறுகதை இது. தமிழ் தாயினதும் அவளது புதல்வர்களினதும் விசும்பல், அலைதல், படுகாயமுற்று அவயம் இழந்து குற்றுயிராதல், மண்டையோடுகள் சிதறிக்கிடத்தல், பயிற்சிக்காக கண்காணாத தேசம் போதல், பிரிவுத்துயர், அலைந்துழழல், போராட்ட ஓர்மம் கோசலையின் வரிகளின் வழி காணலாம். சிறுவயதில் இருளைக் கண்டு பயந்து அம்மாக்கள் பக்கத்திலே ஒட்டியபடி படுத்திருந்த புதல்வர்கள் யாருமற்ற வயல்வெளிகளிலே பிசாசுகளும் உலாவத் தயங்கும் நடுநிசி வேளைகளிலே இவ்வாறு திரிய எவ்வாறு பழகினர்? இந்தப் பயங்கரச் சத்தங்களை எவ்வாறு தாங்குகின்றனர். இந்த ஆபத்துக்களை எவ்வாறு விருப்புடன் ஏற்றுக்கொள்கின்றனர். இவ்வளவு வேகத்தையும் பெரும் சினத்தையும் இவர்களில் விதைத்தது யார்?

kaviazhagan-book

1970, 1980களின் பின்னே கோசலையில் தாயின் குரல் ஒலித்ததுபோல ‘என்ர பிள்ளைகள் எங்கே’ என்ற குரல் தமிழ்த் தேசம் முழுவதும் ஒலித்தது. கோசலைக்குப் பிறகு ரஞ்சகுமாரால் எழுதவே முடியவில்லை என்றே நினைக்கத்தோன்றுகின்றது. 1983களிற்குப் பின்னான மாற்றங்களை அவர் பதிவாக்கினார். 1989ல் கோசலை அடங்கிய மோகவாசல் தொகுப்பு வெளிவந்தது.

இவ்வாறாக அன்னை மடியின் இதமான சூட்டில் இருந்து விலகியவர்கள் என்னவானார்கள்? எங்கு போனார்கள்? என்ன செய்தார்கள்? என்ன எண்ணினார்கள்? எவ்வாறு கொடிய தனிமை நிரம்பிய எவ்வித முற்பட்டறிவுமற்ற வாழ்விற்கு முகங்கொடுத்தார்கள். இவ்விலக்கியப் பதிவுகளே தமிழ்கூறும் நல்லுலகிற்குப் புத்தம் புதிய வரவாக போரிலக்கியமாக விரிகின்றது.

இதுவரை எழுதியவர்களைவிட எழுதப்பட்டதைவிட இவை வேறுபட்டவை. போராட்டத்தின் ‘மறுபக்கம்’ ‘ இன்னொரு முகம்’ ‘முழுமையொன்றின் இன்னொரு பகுதி இவை. ஏனென்றால் இவை போருக்குள் இருந்து போர் செய்தவர்களால் போர் செய்யப்படும்பொழுது எழுதப்பட்டவை. எழுதப்படுகின்றவை.

கோசலை பற்றிக் குறிப்பிடும்பொழுது பேராசிரியர் சிவத்தம்பி ‘தமிழ் புனைகதை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் பிறந்தது’ என்றார். இப்பொழுது கவியழகனின் ஏணைப்பிறையும் இன்னொரு புதிய அத்தியாயம்தான். ஆயினும் ரஞ்சகுமாருக்கும் கவியழகனுக்கும் இடையில் நடந்தவை, மிகமுக்கியமானவை (ஏணைப்பிறை இரண்டு வருடங்களுக்கு முன் எழுதப்பட்டு எழுத்துப்படியாக சிலகாலம் தவம் இருந்தது.)

பொதுவில் இப்போர்க் காண்டத்தின் தொடக்க நிலையாக சுபாஸ் (முன்னாள் போராளி தா.பாலகணேசன்) எழுதிய கொக்குளாய் படைமுகாம் தாக்குதல் பற்றிய கதையான ‘விடிவிற்கு முந்திய மரணங்கள்’ என்கிற குறுநாவல் கருதப்படுகின்றது. எனினும் அதிகம் வாசிக்கப்பட்ட நூலாக கப்டன் மலரவன்

(23.11.1992ல் இன்னொரு தாக்குதலில் இவர் வீரச்சாவடைந்தார்) எழுதிய நெடுங்கதையான (100 பக்கங்களுக்கு மேல்) போருலா உள்ளது.வனத்தின் வனப்பும் வனத்திடை வாழ்வுமாக ஒரு பயணக்குறிப்பாக மணலாறு எனும் இடத்திலிருந்து மாங்குளம் சென்று அங்கிருந்த படைமுகாமைத் தாக்கியழித்த கதை அற்புதமாகப் பதியப்பட்டு ஒரு புதிய போரிலக்கிய வரவின் குறிகாட்டியானது. இதனைத் தொடர்ந்து பலவாக இல்லாவிட்டாலும் சிலவாக இலக்கியங்கள் வெளிவரத்தொடங்கின. இதேவேளை 1985ல் கோவிந்தன் (இவரும் ஓர் இயக்கத்தின் போராளியே) எழுதிய ‘புதியதோர் உலகம்’ விடுதலைப் போரின் மற்ற முகத்தினை தமிழகம் பயிற்சிபெறச் சென்று பரிதவித்தோர் துயரக்கதையை (இயக்கம் ஒன்றின் உள் முரண்பாடுகளை) பதிவுசெய்கின்றது. ஈழத்தமிழ் போராட்ட இலக்கியத்தில் இவ்வாறாக எதிர் மறையில் முரண்பாடுகளின் உள்முகத்தைப் போரின் மறுபக்கமாக வேறு கோணத்தில் தமது மனநிலைக்கேற்ப விபரிக்கும் இலக்கியத் தரமுள்ள சிறுகதைகளும் நெடுங்கதைகளும் தோன்றி பரவலான வாசிப்புத் தளத்தினைப் பெற்றன.

மலரவனின் பின் பல கதைசொல்லும் போராளிகள் தோன்றினர். தூயவன், மலைமகள், தமிழ்கவி, என சிலரைக் குறிப்பிடலாம். தூயவன் ஒரு மருத்துவப் போராளி. இதனால் இவரது ஆக்கங்கள் போரின் மருத்துவப் பக்கத்தையும் இராணுவ நுட்பங்களையும் கதையாகச் சுவைபட விபரிக்கும் விதமாக அமைந்தன.

பெரும் விமானப்படைத் தளமொன்றில் எவ்விதம் தற்கொடைப் போராளிகளால் வேவுப் புலிகள் உதவியோடு தாக்குதல் நடத்தப்பட்டது என்கிற உண்மைக் கதை ‘இன்னொரு போர் முகம்’ ஆனது.இவ்விதமாக மலைமகள், தமிழ்கவி போன்றோர் பெண்புலிகள் போரின் நடுவே நின்று போர் செய்த கதை, சமூகத்திரையைக் கிழித்துக்கொண்டு வெளிவந்த விதம், எல்லாவற்றையும் உயிரோட்டமாக எழுதுகின்றனர். மலைமகளின் சொற்செட்டும் அது சிக்கனமாகக் கட்டமைக்கப்படும் விதமும் அவரை ஒரு தரமான சிறுகதை ஆக்கியாக்கி உள்ளது. முன்னர் போராளியாக இருந்து எழுதத்தொடங்கிய யோ.கர்ணனின் வளர்ச்சி வியக்கத்தக்கது. இவ்வாறாக இக்கதை நீளும்.

இப்பின்னணியில்தான் இப்போது கவியழகன் வருகை தருகின்றார். ‘ஏணைப்பிறை’ இவரது முதல் ஆக்கம் என்றால் எவரும் நம்பார். பலகாலமாக எழுதியவர் போல வெகு இயல்பாக தங்குதடையின்றி தனது தனித்த அடையாளங்களை கதையெங்கும் தூவி ஏணைப்பிறையை ஆக்கியுள்ளார். ஏணைப்பிறை என்கிற தலைப்பே மிக வித்தியாசமானது.

பயிற்சி முகாம் இருந்த காட்டின் நடுவே ஒரு பக்கமாக இருந்து வரிச்சுத் தடியில் (மரத்தடிகளால் செய்யப்பட்ட இருக்கை) இருந்து சுகுமாரும் எழுத்தரும் கதைப்பன மிக ஆளமான மன விசாரங்களைக் கொண்டவை. ‘இங்கிருந்து பார்க்கும்பொழுது வானத்தில் நிலா குழந்தையின் ஏணையைப் போல தெரிகின்றது. எல்லோரையும் தாலாட்ட வானம் ஏணைகட்டி வைத்திருக்கின்றது. வானத்தில் நிலவு ஏணைபோலத் தெரியுது. இதில் ஏறிப் படுத்துத் தூங்க எத்தனை பேருக்குத் தெரியும்.’ என வினா எழுப்புகின்றார்.

மிக இளைய வயதிலேயே முதிர்ச்சியான மனமொன்றை கவியழகன் பெற்றிருக்கின்றார். பிறர் அனுபவங்களை, அவர்களின் குணவில்புகளை, நடையுடை பாவனைகளை ஒரு பகுத்தாய்வு செய்யும் ஒரு பகுப்பாளனாக பயிற்சி முகாமில் இருந்த போராளிகளை, அதன் பொறுப்பாளர்களை வருணிக்கும், மெல்லிய நகைப்புடன் அவர் விபரிக்கும் பாங்கு மிக நேர்த்தியாக உள்ளது. அதேவேளை எத்தகைய பல்வேறுபட்ட பின்புலங்களிலிருந்து போராளிகள் வருகின்றனர் என்கின்ற கதையையும் வெளிவரச் செய்துவிடுகின்றார்.

வனத்தின் வனப்பையும் அதன் தனிமையையும் – கத்தியால் வெட்டி எடுக்கக்கூடிய இருள் – என்றும் – காட்டின் மௌனமும் அந்த மௌனத்தின் ஒலியும், காட்டின் இருளும் அந்த இருளின் ஒளியும் – என்றும் அவர் சொற்களில் இட்டுக்கட்டும் விதம் இதுவரை காடுகள் பற்றி எழுதிய எழுத்தாளர் வரிசையிலேயே அவரையும் சேர்த்துவிடத் தூண்டுகின்றது. ஏணைப் பிறை முழுவதும் ஒரு வலி பரவிக்கிடக்கின்றது. வாழ்வின் இருண்ட பக்கங்கள், வறுமை, இல்லாமை என்கின்ற பெரும் துயர், இதற்குள் வாழத்துடிக்கும் மனிதர்கள் என வெகு யதார்த்தமான பதிவுகளின் தொகுப்பாகின்றது. மனிதத் தேடலின் ஒரு பகுதிதான் ஏணைப்பிறை. ஏணைப்பிறை முழுவதும் இழையோடும் தத்துவ விசாரங்கள் வாசிப்பாளனை பலவித கேள்விகளுக்கும், நெருக்கடிகளுக்கும், அந்தரத்திற்கும் உட்படுத்தி விடுகின்றன. ஏதோவொரு வகையான குற்றவுணர்வு பரவுகின்றது.

‘புற மெய்மைகளை படிமங்களாக்கி நிஜஉலகின் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களை வன்மையுடனும் இரத்தத்துடனும் சதையுடனும் உண்மைசொட்ட யதார்த்தமாகத் தரும்போதே ஒரு படைப்பாளியின் படைப்பாளுமை, ஆக்க ஆளுமை தெரியவரும்.’ (பேராசிரியர் சிவத்தம்பி) என்பதற்கு கவியழகன் ஏணைப்பிறையில் சான்றாகின்றார்.

130 பக்கங்கள் கொண்ட ஏணைப்பிறையில் இரண்டாம் பகுதி (கதையில் அவ்வாறில்லை) 104லில் இருந்தே தொடங்குகின்றது. அதுவே கதையின் முதன்மைப் பகுதி. முதன்மைக் கரு. ஏணைப்பிறையின் உயிரோட்டமான அக்கா எமக்கு நேரடியாக 17ஆம்ப க்கத்திலேயே அறிமுகமாக்கப்படுகின்றார். அதிலிருந்து நூல் முடியும்வரை அக்காவின் கதை வளர்த்தெடுக்கப்படும் விதம் கவியழகனின் கதை சொல்லும் திறனை வெளிப்படுத்துகின்றது. குறுந்துயரக் காவியமாக இருள் படர்ந்து, தூசு மண்டி மங்கலாகத் தெரியும் அக்காவின் மெலிந்த உயரமும் அதனுள் படர்ந்து இருக்கும் துயரமும் நிழற்படமாக மனதில் படிகின்றது. கதை முடிந்தவுடன் கனத்த இதயமே எமக்கு மிஞ்சுகின்றது. பெரும் துயர் கலந்த மௌனமே நீடிக்கின்றது. இம்மௌனத்தைச் சுரம்பிரிக்குமாறு அன்பு வாசகர்களை வேண்டுவதே எம் பணி. ஈழப்போராட்ட இலக்கியங்களுள் உறையும் சோகம், ஓர்மம், ஈகம் இவையே அறியவேண்டியவை.

கொழுந்துவிட்டெரியும் துயரக்கொந்தளிப்புக்கள், அவமதிப்புக்களிலிருந்து பிறக்கும் கடும் சீற்றம், உயரிய ஈகங்களை உயிரைத் தற்கொடையாக்கி நிகழ்த்தும் அற்புத மனநிலைகள், விடுதலைப் போரின் உயிர்ப் பக்கங்கள், துணிகரப் போரின் அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இவற்றின் பிழிவாக ஈழத்தமிழிலக்கியம் இன்று தமிழ் கூறும் நல்லுகம் முன் விரிகின்றது. இன்னமும் எழுதப்படாத பல ‘உண்மை மனிதர்கள்’ கதைகள் உள்ளன. இவற்றினை அறியவும் ஆயத்தமாகுமாறு உங்களை வேண்டுகின்றோம்.ஏணைப்பிறையின் ஒரு வரியோடு இத்தொடர்புரையை நிறைவாக்குகின்றோம். மானிட விடுதலைக்காகப் போராடும் ஆதரவளிக்கும் அனைவரையும் இக்கணத்திலே நினைவில் கொள்கின்றோம்.

*நேசம் உறவுறுவதால் வருவதில்லை
அது நினைவுறுவதால் வருவது*

க.வே.பாலகுமாரன்

நூல் கிடைக்குமிடம்-
அகல் பதிப்பகம்,
348-அ, டி.டி.கே.சாலை,
இராயப்பேட்டை, சென்னை-14.

தொடர்புக்கு- 09884322398

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*