Home / அரசியல் / ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பும், விவாதங்களும் – பார்வை, பகுதி 1

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பும், விவாதங்களும் – பார்வை, பகுதி 1

 

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் 18 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வந்துள்ளது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராத‌மும் விதித்துள்ளது கர்நாடக சிறப்பு நீதிமன்றம். செப்27 முதல் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு அக் 7ல் கர்நாடக உயர்நீதி மன்றத்தால் பிணை மறுக்கப்பட்டுள்ளது.

அரிதிலும் அரிதாகவே ஊழல் குற்றங்களுக்குத் தண்டனைகள் தீர்ப்பாக வருகின்றன. கருணாநிதி செய்தது அறிவியல்பூர்வ ஊழல்(Scientific Corruption) என்று சக்காரியா கமிசன் 70களில் சொன்னது,இன்று பரிணாம வளர்ச்சிபெற்று கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் இதில் கைதேர்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள், நாட்டிற்கு இலட்சம் கோடிகளில் இழப்பை ஏற்படுத்தும் ஊழல்கள் தான் இன்று நடக்கின்றன. அதில் கூட குற்றம் செய்த அரசியல்வாதிகள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பெரும்பாலும் தப்பிவிடுகின்றனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு தவறானது என்று ஜெயலலிதாவுக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழ்நாட்டில் ஒலிப்பதை பார்த்தால் ஏதோ உண்மையிலேயே அவர் நாட்டிற்காக போராடி சிறை சென்றாரோ என எண்ணத் தோன்றும்.ஆனால் யதார்த்தம் வேறாக அல்லவா உள்ளது…

2011 ஆட்சிக்கு வந்ததிலிருந்து பரமக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, கூடன்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள், தருமபுரி நத்தம் காலனி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பாய்ந்த தேசத்துரோக வழக்கு, அரசு பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட ஆங்கிலவழிக்கல்வி, மக்கள் நலப் பணியாளர்களை பணியை விட்டு நீக்கியது என்று ஜெயலலிதா அரசின் கருப்பு பக்கங்களை வசதியாக பலர் மறந்துவிட்டனர்.

தீர்ப்பைக் கண்டித்தும், ஜெயலலிதாவை ஆதரிக்கச் சொல்லியும் அவர்களால் எழுப்பப்படும் வாதங்கள் பல. அவற்றுள் சில,

1) கருணாநிதி செய்த ஊழலை விடவா பெரிய ஊழலை ஜெயலலிதா செய்துவிட்டார், இதற்கு போய் 4 ஆண்டுகள் சிறை தண்டனையா?

2) கர்நாடகா தமிழகத்திற்கான காவிரி நீர் உரிமையைத் தர மறுப்பதற்கு எதிராக ஜெயலலிதா உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் என தொடர்ந்து போராடுவதால் அதைவைத்து கர்நாடகா பழிவாங்கிவிட்டது.

3) தீர்ப்பை வழங்கிய நீதிபதி சிறுபான்மை பிரிவு என்பதால் திட்டமிட்டு ஜெயலலிதாவிற்கு இந்த தண்டனையைக் கொடுத்துவிட்டார்.

போதாக்குறைக்கு சு.சுவாமியின் நகைச்சுவை வேறு.சங்கராச்சாரியாரைக் கைது செய்து சிறையிலடைத்ததால் கடவுளின் சாபம் தான் ஜெ. வுக்கு இத்தண்டனை என்று சொல்லி அக மகிழ்ந்துள்ளார். இப்படி அவரவர் தங்கள் நலனில் இருந்து இந்த தீர்ப்புக்கான அரசியல் பொருளாதாரக் காரணிகளை விளக்க முற்படுவதும் அதன்படி தீர்ப்பைக் கண்டிப்பதும் நடந்தேறி வருகிறது.இது ஒரு முக்கிய அரசியல் நிகழ்வென்பதால் இதன்மூலம் தாம் ஏதாவது ஆதாயம் அடைய முடியுமா? என்று கருதுகின்றனர் போலும்.

jayalalitha-convicted-300x168

ஊழல் சிறிதா, பெரிதா என பார்ப்பதா? அல்லது சரியா, தவறா என பார்ப்பதா?

ஜெ. வைவிட அதிகம் ஊழல் செய்த கருணாநிதி குடும்பத்தார் வெளியில் தானே இருக்கின்றனர். 2 ஜி ஊழலுக்கு முன்பு இதெல்லாம் ஒரு ஊழலா? – இது அ.தி.மு.க. தரப்பில் இருந்து ஆதங்கத்தோடு வரும் ‘நீதியின் குரல்’

தமிழக மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் குடும்ப அரசியலாலும், ஊழலாலும் தனது மதிப்பை இழந்துள்ளார் கருணாநிதி. அதனால் கருணாநிதியின் குடும்ப ஊழலோடு ஒப்பிட்டு ஜெயலலிதா ஊழலால் சேர்த்த சொத்து மதிப்பு வெறும் 66 கோடி,மிகவும் சிறிய ஊழல் தான் என்று பார்க்கப்படுகிறது. தட்டையாக ஊழலால் சேர்த்த சொத்தின் மதிப்பு 1996 கணக்குப்படி வெறும் 66கோடி என்று பார்த்தாலும் கூட இன்று அதன் மதிப்பு பல்லாயிரம் கோடிகள்.

800 ஏக்கரில் அமைந்துள்ள கோடநாடு எஸ்டேட் விலை 400 கோடி. இதை இவர்கள் 1992ல் வாங்கிய விலை 17 கோடி. ஆனால் 1991ல் இவர் சமர்ப்பித்த சொத்து கணக்கு வெறும் 2 கோடி. இது மட்டுமல்ல அந்த 66 கோடி சொத்துக்களின் மதிப்பு 3,600 கோடி என்று அரசு வழக்கறிஞரே சுட்டிக்காட்டுகிறார். (1)
http://m.timesofindia.com/city/chennai/jayalalithaa-sasikalaa-assets-worth-hundreds-of-crores-now/articleshow/43760960.cms

1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா நடத்திய சர்வாதிகார ஆட்சிக்கும்,ஆடம்பர சுகபோகங்களுக்கும் தமிழக மக்கள் 96ல் நடந்த சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல்களிலேயே படுதோல்வியைத் தண்டனையாக கொடுத்துவிட்டார்கள். 18 ஆண்டுகளாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்பட்டதும், கடந்த 10-15 ஆண்டுகளில் நடந்த இமாலய ஊழல்களும் (நிலக்கரி, 2ஜி, ஆதர்ஸ், காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி…) “அரசியலில் ஊழல் இயல்பு” என்று மக்களை கருத வைத்திருக்கிறது.

ஊழல் இரண்டு வழிகளில் நடக்கின்றன, ஒன்று சட்டப்படி கடமை செய்வதற்கே கொடுக்கப்படும் பணம். இன்னொன்று சட்டத்தை மீறுவதற்கு கொடுக்கப்படும் பணம். இவை அரசு அலுவலகங்களில் நடப்பவையாகும். இது போக சட்டப்படியான ஊழலும் உண்டு,அதாவது அரசின் பொருளியல் கொள்கைகள் மூலம் அரசாங்கத்திற்கு வர வேண்டிய பணத்தைக் குறிப்பிட்ட தனியாருக்கு இலாபமாக திருப்புவதன் மூலம் செய்யப்படும் ஊழல், இதுதான் மிகப்பெரிய ஊழலாக அரசியல் அதிகாரத்தை பெற்றுள்ள கட்சித் தலைவர்களால் நடத்தப்படுகிறது.

இந்த ஊழல் பணம் எல்லாம் ஸ்விஸ் போன்ற வெளிநாட்டு வங்கிகளிலும், பினாமி பெயர்களில் சொத்துக்களாகவும் சேர்த்துவைக்கப்படுகின்றன. இந்தப் பணம் தான் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு 100, 200 என கொடுக்கப்படுகின்றன.

அண்மையில் ஊழலுக்கு எதிரான இந்திய அளவிலான இயக்கம் ஒன்று நடுத்தட்டு மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எழுந்தது. அதில் அரசின் உலகமய பொருளியல் கொள்கைகளுக்கும் ஊழலுக்குமான இடைத்தொடர்பும், ஊழலால் பெரும் இலாபம் அடையும் பன்னாட்டு நிறுவனங்களும் விவாதப் பொருளாக மாறவில்லை. மாறாக அரசாங்க அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் கையூட்டின் மீதும், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தின் மீதுமே அதிக கவனம் குவிந்திருந்தது.

ஒருபக்கம் ஊழலை சாதாரணமாக கடந்துபோவதும், மறுபக்கம்”ஊழலற்ற அரசியல், வலிமையான பாரதம்” என்றெல்லாம் சொல்லப்படுவதை ஆமோதிக்கவும் செய்கின்றனர். இது எப்படி சரியாகும்? ஊழலின் ஊற்றுக்கண்ணாய் விளங்கும் இந்த அரசின் கொள்கைதான் இந்நாட்டின் பெரும்பகுதி மக்களை மிக மோசமான வாழ்நிலைக்கும், இந்த மண்ணை மையமாக் கொண்ட சுயசார்பு வேலை வாய்ப்புகள் உருவாகாமல் இருப்பதற்கும் காரணம்.

எவர் செய்யும் ஊழல் ஆனாலும் அதில் சுரண்டப்படுவது மக்களின் உழைப்பும், சொத்தும் தான். வழிப்பறி செய்யும் சாதாரணனையே திருடன் என்று சொல்லும்போது, “மக்கள் தொண்டே மகேசன் தொண்டு”, “பதவி எனக்கு முள்கிரீடம்”, “மக்கள் பணிக்கு 1ரூபாய் தான் மாதச் சமபளம் வாங்குவேன்” என்று மக்களுக்கு தொண்டு செய்யவருவதாகச் சொல்லி அரசியலில் முக்கிய பதவிக்கு வந்தபின் ஊழல் செய்பவர்கள் உத்தமர்களா என்ன? அதில் சிறிய, பெரிய ஊழல் என்று கடந்துபோவது சரியா? வேலியே பயிரை மேய்வது மன்னிப்புக்கு உரியதா? இந்தக் கொள்ளையர்கள் எவ்விதமான உணர்ச்சியுமின்றி விதவிதமான பட்டங்களோடும்,அடைமொழிகளோடும் அரச மரியாதையோடு மக்கள் மத்தியில் உலா வருகின்றனர். உண்மையில் மக்களை நம்பவைத்து முதுகில் குத்திய இவர்களுக்கு நீதிமன்றம் கொடுக்கும் தண்டனை என்பது மிகவும் குறைவே.

unnamed

கர்நாடகா மறுத்துவரும் காவிரி நீர் உரிமைக்கும் இதற்கும் தொடர்பு உண்டா?

முதலாவதாக, கர்நாடகாவில் இப்பொழுது காங்கிரசு கட்சி ஆட்சியில் இருக்கிறது. இதுபோன்ற மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளை நீடிக்கச் செய்து அதில் குளிர் காய்வதுதான் காங்கிரசு, பாசக போன்ற இந்திய அளவிலான கட்சிகளின் பழக்கம். இரண்டாவது, காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பு அரசிதழில் வந்ததேயொழிய காவிரி நீர் ஒன்றும் உரிய காலத்தில் வந்துவிடவில்லை, கர்நாடகாவில் அணை நிரம்பியபின்தான் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வந்தது.

மூன்றாவதாக அந்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் கூட இன்னமும் அமைக்கப்படவில்லை. பிறகு ஏன் கர்நாடகா அரசு ஜெயலலிதா மீது கோபப்பட்டு அவருக்கு எதிரான தீர்ப்புக்கு காரணமாகப் போகிறது? எனவே, காவிரி நீர் பிரச்சனையை முன்னிட்டு இப்படியான ஒரு தீர்ப்புக்கு கர்நாடக காங்கிரசு அரசு காரணம் இல்லை என்று உறுதியாக கூற முடியும்.

unnamed (1)

தண்டனையை சிறுபான்மைப் பிரிவு நீதிபதி திட்டமிட்டு வழங்கினாரா?

நாராயணா! இந்த கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை என்பது போல் சில இந்துத்துவ இயக்கங்கள் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த நீதிபதி டி குன்ஹா பெரும்பான்மை இந்துக்களின் பிரதிநிதியை வஞ்சம் தீர்த்துவிட்டார் என்று சொல்லி மதச் சிறுபான்மையினர் மீது வெறுப்பை வளர்க்க முடியுமா? என்று பார்க்கின்றன. பாசிச பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சிக்கு வந்தபின் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்துத்துவ பாசிசச் சக்திகள் தமிழ்நாடு முழுவதும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மதச்சிறுபான்மையினரை எதிரிகளாகச் சித்தரித்து இந்துத்துவ வெறியை தூண்டிவருகிறார்கள்.

தீர்ப்பை வழங்கிய நீதிபதி டி குன்ஹா சிறுபான்மை பிரிவு என்பதால் திட்டமிட்டு ஜெயலலிதாவிற்கு இந்த “கொடிய”தண்டனையைக் கொடுத்துவிட்டார் – இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத்.

ஜெயலலிதா எப்போது தமிழ்நாட்டின் இந்துகளுக்கு மட்டுமான தலைவர் ஆனார்? எதை வைத்து நீதிபதி சிறுபான்மை பிரிவு என்பதால்தான் இந்தத் தண்டனையை வழங்கினார் என்று சொல்கிறார்கள்? ஊழல் தீர்ப்புக்குள்ளும் சிறுபான்மையினரை எதிரிகளாக ஏன் காட்ட வேண்டும்?

“பெரும்பான்மை வாதம்” எவ்வளவு கீழ்த்தரமான நோய் என்பதற்கு இப்படியான மதத்தால் பிரிவினையைத் தூண்டும் அர்ஜீன் சம்பத்தின் இவ்வசனம் நல்ல எடுத்துக்காட்டு.

ஜெயலலிதாவின் வழக்கில் மத்திய அரசின் தலையீடு இருக்கிறதா?

மாநில கட்சிகளை ஒடுக்க மத்திய அரசின் திட்டமா இது?

இந்த தீர்ப்பு நீதித்துறையை புனிதப்படுத்தும் நடவடிக்கையா?

ஜெயலலிதாவிற்கு கிடைத்த தண்டனையால் இந்திய ஆளும்வர்க்கத்திற்கு என்ன நலன் இருக்கப்போகிறது?

பாசக தமிழகத்தில் வலுப்பெறுவதற்காக இப்படியான ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா?

தமிழகத்தில் பாசக வளராமல் தடுக்க ஜெயலலிதாவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லையா?

இப்படியான பல கேள்விகள் அரசியல் அரங்கில் உலவுகின்றன…

அடுத்த பகுதியில் விவாதங்களைத் தொடர்வோம்…

வினோத் – இளந்தமிழகம் இயக்கம்

About வினோத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*