Home / அரசியல் / ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பும், விவாதங்களும் – பார்வை, பகுதி – 2.

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பும், விவாதங்களும் – பார்வை, பகுதி – 2.

* ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பில் மத்திய அரசின் தலையீடு இருக்கிறதா?

* மாநில கட்சிகளை ஒடுக்க மத்திய அரசின் திட்டம் தானா இந்த தீர்ப்பு?

* இந்த தீர்ப்பு நீதித்துறையை புனிதப்படுத்தும் நடவடிக்கையா?

* ஜெயலலிதாவிற்கு கிடைத்த தண்டனையால் இந்திய ஆளும்வர்க்கமான பெருமுதலாளிய வகுப்பாருக்கு என்ன நலன் இருக்கப்போகிறது?

* பா.ஜ.க தமிழகத்தில் வலுப்பெறுவதற்காக இப்படியான ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா?

* தமிழகத்தில் பா.ஜ.க வளராமல் தடுக்க ஜெயலலிதாவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லையா?

இப்படியான பல கேள்விகள் அரசியல் அரங்கில் உலவுகின்றன…

பா.ஜ.க மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது பார்ப்பன ஜெயலலிதாவையே சிறையில் அடைத்துவிட்டார்களே! என்பது எளிமையான ஆரியர் x திராவிடர் பகை என்று முடிவு செய்வதற்கு தடையாகிவிட்டது.

1996 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் மாநிலக் கட்சிகளின் தயவின்றி மத்தியில் ஆட்சி அமைக்க முடியாத நிலை இருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரசு கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்தது. காங்கிரசு தலைமையிலான அரசு உலகமயப் பொருளியல் கொள்கைகளை நடைமுறைபடுத்தியது. ஊழல் நிர்வாகம், சூறையாடும் முதலாளித்துவம்(Crony Capitalism), கூட்டணி கட்சிகளின் குடைச்சலால் மிதமான வேகத்தில் நடைமுறைபடுத்தப்பட்ட உலகமயக் கொள்கைகள், மன்மோகன்சிங்-சோனியா என இரு தலைமைகள் ஆகிய காரணங்களால் காங்கிரசு ஆட்சி மீது இந்திய ஆளும்வர்க்கம் அதிருப்தி கொண்டிருந்தது. இன்னொருபுறம் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், இலட்சம் கோடிகளில் நடந்த ஊழல்கள், மாநில அளவிலான குறித்த பிரச்சனைகள் ஆகிய காரணங்களால் காங்கிரசு ஆட்சி மீது மக்களும் அதிருப்தி கொண்டிருந்தனர்.

இந்திய ஆளும்வர்க்கத்திற்கு அதன் பொருளியல் கொள்கைகளை வேகமாக நடைமுறைப்படுத்த ஒரு வலிமையான மையப்படுத்தப்பட்ட ஒற்றை சாளரமுறை (Single Window System) கொண்ட மத்திய அரசு தேவைப்பட்டது. பத்து ஆண்டுகளாக குஜராத்தில் தொழில் வளர்ச்சிக்கு நண்பனாக(Business Friendly) மோடி இருந்ததால் அவர் இந்திய ஆளும்வர்க்கத்தால் முன்னுக்கு கொண்டுவரப்பட்டார். ஆளும்வர்க்கத்திற்காக சேவை செய்யும் இந்திய அளவிலான ஊடகங்களும் அவரின் ’இல்லாத அருமை பெருமைகளை’ ஊதிப் பெருக்கும் வேலையைச் செவ்வனேச் செய்தன.

ஆனால் 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் தனிப் பெரும்பான்மையோடு ஒரு கட்சி வர வாய்ப்பில்லை, மாநில கட்சிகளின் துணையோடு கூட்டணி ஆட்சிதான் அமைய வாய்ப்பு இருக்கிறது என அனைத்து அரசியல் வல்லுநர்களும் கணித்திருந்தார்கள். அதுவே இனி இந்திய அரசியலின் எதார்த்தம் என்பது பொதுவான மதிப்பீடு.
http://www.nytimes.com/2012/09/27/world/asia/rise-of-regional-bosses-raises-questions-on-indias-economy.html

modi3_112213062509

ஜெயலலிதாவும் இவ்வாறே கணித்து, நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவதன் மூலம் மத்திய ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்க நினைத்தார்; இந்திய பிரதம அமைச்சர் கனவும் அவருக்கு இருந்தது, அதற்கு பிற மாநில கட்சித் தலைவர்களும் கூட ஆதரவு தெரிவித்தனர். ஒருவேளை அதிமுக நாடாளுமன்றத்தில் குறிப்பிடத்தக்க உறுப்பினர்களைப் பெற்று, மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு எந்த ஒரு கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில் பிரதமர் ஆவதற்கு தனக்கு வாய்ப்பு இருப்பதாகவே நம்பினார். தமிழக அளவில் அவர் எதிர்ப்பார்த்தது போல அதிமுக 39 சீட்டுகளில் 37 சீட்டுகள் வெற்றிபெற்றது. ஆனால் மத்தியில் தனிப்பெரும்பான்மையோடு பா.ஜ.க‌ ஆட்சிக்கு வந்தது அவரும் எதிர்பாராததே.

இந்தி பேசும் மாநிலங்கள், காங்கிரசு கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் கணிசமான சமூக அடித்தளத்தை கொண்டுள்ளது பா.ஜ.க‌. 1998 மற்றும் 99 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் முறையே 15 மற்றும் 19 மாநிலக் கட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டதன் மூலம் பல்வேறு மாநிலங்களுக்குள் பா.ஜ.க‌ அடியெடுத்து வைத்தது. மோடியை ’வளர்ச்சி’ என்ற பெயரில் முன் நிறுத்தியதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள நடுத்தட்டு இளைஞர்கள் பலரிடம் பா.ஜ.க‌ செல்வாக்கு பெற்றுள்ளது.

ஜெயலலிதாவை பொருத்தவரை பா.ஜ.க‌-வின் இந்துத்துவ கொள்கைக்கு பெரிதாக மாறுபட்டவர் அல்ல. அதே நேரத்தில் தமிழகத்தில் மீத்தேன், கெயிலுக்கு எதிர்ப்பு, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு, ஈழத்தமிழருக்கு ஆதரவாக தீர்மானங்கள், நலத்திட்டங்கள் பல அறிவித்து செயல்படுத்துவது என தமிழ்நாட்டு மக்களின் பரவலான ஆதரவைத் தன் பக்கம் வைத்திருக்கிறார். இதனால்தான் ”மோடி அலை” என்று இந்தியா முழுவதும் ஊடகங்களால் ஊதிப் பெருக்க வைக்கப்பட்டது தமிழ்நாட்டில் எடுபடவில்லை.

தமிழகத்தைப் போன்று மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரசு கட்சி (மம்தா பானர்ஜி), ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி (நவீன் பட்நாயக்) வெற்றிபெற்றன. மாநில கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக சீட்டுகளைப் பெற்று மத்திய அரசோடு பேரம் பேசும் அளவிற்கு வளர்வது இந்திய ஆளும்வர்க்கத்திற்கு சிக்கலாக உள்ளது (மாநில அளவில் சட்டசபையில் இவர்கள் செல்வாக்கு செலுத்துவது ஒரு சிக்கலாக இருப்பதில்லை). கடந்த சில தேர்தல்களாக மொத்தமாக அனைத்து மாநில கட்சிகளும் சேர்த்து 50%க்கும் அதிகமான வாக்குகள் பெறும் அளவிற்கு மாநில கட்சிகளின் செல்வாக்கு நாடாளுமன்றத்தில் கூடி இருக்கிறது என்று ”மாநில கட்சிகளும் இந்திய சனநாயகமும்” என்ற ஆய்வில் சுகாஸ் பல்ஷிகர் குறிப்பிடுகிறார்.
http://democracy-asia.org/Suhas_Palshikar_democracy_regional_parties.pdf

இக்கட்சிகள் யாவும் இந்திய அரசின் உலகமயப் பொருளியல் கொள்கைகளுக்கு எதிரானவை அல்ல. ஆனால் இந்திய ஆளும்வர்க்கம் எதிர்பார்ப்பதுபோல் மோடியின் ”குஜராத் மாடலை” இந்தியாவின் மாடலாக தங்கு தடையில்லாமல் பாய்ச்சலில் நடைமுறைபடுத்த வேகத்தடையாக உள்ள செல்வாக்கான மாநிலக் கட்சிகளிடம் பேரம் பேசுவது, தற்காலிக சமரசம் செய்வது போன்ற நெருக்கடிக்கு மத்திய அரசு ஆளாகிறது. இந்த வேகத்தடையை தவிர்ப்பதற்கு பா.ஜ.க‌ ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் பா.ஜ.க‌-விற்கு சமூக அடித்தளம் அமைக்க வேண்டியத் தேவை இந்திய ஆளும்வர்க்கத்திற்கும் இருக்கிறது..

images

இந்த வேளையில் தான் 18 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா விதைத்தது அறுவடைக்கு வந்தது. என்னதான் தனிப்பட்ட முறையில் மோடியும், ஜெயலலிதாவும் நண்பர்கள் என்றாலும் அரசியல் பொருளாதார முடிவுகளைப் பொறுத்தவரை ஆளும்வர்க்க நலனே முதன்மையானது. அதன்படி ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த தீர்ப்பு இந்திய ஆளும்வர்க்க நலனுக்கு ஏற்றது. எனவே ஆளும்வர்க்க நலனுக்கு ஏற்றாற் போன்றதொரு தீர்ப்பை நீதித்துறையும் வழங்கிள்ளது. ஒரு வேளை ஆளும்வர்க்கத்திற்கு இதனால் நன்மையில்லை என்றால் இந்த தீர்ப்பை வராமல் தடுத்திருக்கும். அரசின் அத்தனை இயந்திரமும் ஆளும்வர்க்கத் தேவையை நிறைவு செய்யும் வகையில் செயல்படும் என்ற பொதுவான விதிக்குள் இதை பொருத்திப் பார்க்க முடியும். இந்த வகையில் நீதித்துறையில் நடந்தேறிய அதிசயம் அல்ல இது என்பதும் புலப்படும்.

இந்தியாவில் ”மொழிகள் பலவானாலும் உணர்வு ஒன்று தான்” என்று தேர்தலுக்கு முன் ”ஒற்றுமையின் செய்தியாக”(message of unity) பேசிய மோடி இப்போது மாராட்டிய மாநில சட்டசபைத் தேர்தல் பரப்புரையில் பேசும்போது மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் தான் “வளர்ச்சிக்” கொள்கைகளை விரைவாக நடைமுறைபடுத்த முடியும் என்று பேசியுள்ளார். ஜெயலலிதாவுக்கு கிடைத்த தண்டனையின் பின்னணியின் விளக்கமாக இதனை எடுக்க முடியும். இந்தியா முழுவதும் ஒரே உணர்வு இருக்கிறது என்றவர், இப்போது ஒரே கட்சிதான் இருக்க வேண்டும் என்று கருதுகிறார் போலும்.

ஜெயலலிதாவுக்குக் கிடைத்த தண்டனையால் மதவாத அரசியல் தமிழ்நாட்டில் வேறூன்றிவிடும் அபாயம் உள்ளது. எனவே ஜெயலலிதாவை ஆதரிப்பதை தவிர‌ நமக்கு வேறு வழியில்லையா?

மத்தியில் பா.ஜ.க‌ ஆட்சிக்கு வந்தபின் தொடர்ச்சியாகக் கல்வியிலும், பண்பாட்டிலும், அரசாங்க அலுவல்களிலும் சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிக்கும் வேலையைச் செய்துவருகிறது, இவ்வாறு பார்ப்பனிய பண்பாட்டை தமிழ்நாட்டில் முற்றிலும் நிறுவ முயல்கிறது. இந்த சூழலில் கருணாநிதி குடும்பத்தின் 2ஜி வழக்கையும், ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பையும் பயன்படுத்தி, திமுக – அதிமுக கட்சிகளை வலுவிழக்கச் செய்து அதன் மூலம் பா.ஜ.க‌ தமிழ்நாட்டில் கால்பரப்ப விரும்புகிறது என்பது உண்மையே. சாதிய சமூக அமைப்பைத் தக்கவைக்க, தாழ்த்தப்பட்டவர் – ஏழை எளிய பிற்படுத்தப்பட்டோர் மீது மேல்சாதி ஆதிக்கம் தொடரும் வண்ணம் சிறுபான்மையினர்(இசுலாமியர்) மீது பகையை மூட்‌டி மக்களை பிரிக்கும் இந்துத்துவ பயங்கரவாதத்தையும், பன்னாட்‌டு பெருநிறுவனங்கள் கொள்ளையிட்டுச் செல்ல பாய்விரிக்கும் காங்கிரசின் அதே உலகமயப் பொருளியல் கொள்கையை “இந்தியாவில் உற்பத்தி”(Make in India) என்று வேறு பெயரில் செயல்படுத்துவதும் தவிர வேறென்ன மக்களுக்கான திட்டம் இவர்களிடம் உண்டு. இதில் பெரிதாக எதிலும் மாறுபாட்டதா திமுகவும் – அதிமுகவும்?

”திராவிட நாடு” கோரிக்கையிலிருந்து கீழிறங்கி, இந்திய தேசிய நிரோட்டத்தில் கலந்து, மாநில சுயாட்சி என பேசிவந்த திமுக அதையும் கைவிட்டதுடன், எப்போதும் திமுக – அதிமுக என இரண்டு கட்சிகளுமே மத்திய அரசின் உலகமயப் பொருளியல் கொள்கைகளை அப்படியே நடைமுறைபடுத்துவதை முதல் கடமையாகச் செய்துவந்துள்ளன. தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல் நடக்கும்போதெல்லாம் சாதி ஆதிக்க சக்திகளை காக்கும் வேலையைத் தானே இவர்கள் எப்போதும் செய்துள்ளார்கள். இது சாதிய சமூக அமைப்பை காக்கும் செயலன்றி வேறென்ன? இந்துத்துவத்திற்கு துணை போகும் செயல்தானே அது? தமிழ்நாட்டில் இன்று இவ்வளவு சாதி கட்சிகள் பெருக திமுக – அதிமுக கட்சிகளுக்கு பெரும்பங்கு உண்டுதானே… இவர்கள் வளர்த்துவிட்ட பாமக போன்ற சாதி கட்சிகள் இன்று பல்லக்கில் வைத்து தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க‌-வைத் தூக்கி கொண்டு செல்வது ஏதோ தற்செயலானாதா? இவர்களுக்கு முன் திமுகவும், அதிமுகவும் இதே வேலையைத் செய்தவர்கள்தானே…

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலிருந்து நிலக்கரி, கடற்கரை தாதுமணல், கிரானைட், அலைக்கற்றை, மீத்தேன் எரிவாயு போன்ற இயற்கை வளங்களை மத்திய அரசின் உலகமயப் பொருளியல் கொள்கையின் வழி சூறையாட வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்தும், கூட்டு சேர்ந்தும், அரசின் சலுகைகளை வாரிவழங்கியும் அதிமுக – திமுக போன்ற மாநிலக் கட்சிகள் மிகக்குறுகிய காலத்தில் பல இலட்சம் கோடிகளைக் கொள்ளையடித்து சூறையாடும் முதலாளித்துவ வர்க்கமாக உருவாகியுள்ளனர்.

narendra-modi-jayalalithaa-karunanidhi-52b46333e247e_exlst

அலைப்பேசி தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனமான நோக்கியாவை ‘வளர்ச்சி’, ‘வேலை வாய்ப்பு’ என்று சொல்லி நிலம், மின்சாரம், நீர், வரியில் மானியம் என பல கோடிகள் சலுகையாக வழங்கி கொண்டுவந்தார்கள், இன்று சில இலட்சம் கோடிகள் வருமானம் ஈட்டிய பின், 24,000 கோடி வரி ஏய்ப்பு செய்துவிட்டு, 6500 நிரந்தரத் தொழிலாளர்கள், சில ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள், இதற்கு உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவன்ங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் என மொத்தமாக 40,000 தொழிலாளர்களை தெருவில் விட்டுவிட்டு, விளைநிலத்தையும் – நீர் ஆதராத்தையும் கெடுத்துவிட்டு இப்போது தொழிற்சாலையை மூடிவிட்டு நாட்டைவிட்டே செல்லயிருக்கிறது நோக்கியா… இதற்கு காரணம், உள்நாட்டு தேவையை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தையும், பொருள் உற்பத்தியும் கைவிட்டுவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வால் பிடிக்கும் இவர்களின் கொள்ளை, ஊழல் வழிப்பட்ட ஆட்சிதான். எவ்வகையிலும் கொள்ளை, ஊழல், மக்கள் விரோத அரசியலைக் கொள்கையாகக் கொண்ட இவர்களை ஆதரிப்பதால் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாத்திட முடியாது. ஜெயலலிதாவை ஆதரிப்பது ஒரு செயலுத்தி(Tactics) என்று விளக்கப்படுத்த முயல்பவர்கள் அது மூல உத்தி(Strategy)க்கு துணை செய்யக் கூடிய செயலுத்தியா என்பதை விளக்க வேண்டும்.

மக்களின் கூட்டுணர்விலும் அவ்வப்போது கோபம் கொப்பளித்தே உள்ளது. 1991-96 காலக்காட்ட ஜெயலலிதாவின் சர்வாதிகார ஆட்சிக்கும், ஊழலுக்கும் பதிலடியாகத்தான் மக்கள் 96ல் சட்டசபைத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் படுமோசமான தோல்வியைக் கொடுத்தனர். ஆனால் அதற்கு அடுத்த சட்டசபைத் தேர்தலில்(2001) மீண்டும் அதிமுகவையே தேர்ந்தெடுக்க நேர்ந்தது. இவர்களை அரசியல் அரங்கில் அப்புறப்படுத்தவல்ல மாற்று சக்தி வளராததாலேயே நமது மக்கள் மாறி மாறி திருடர்களையே தேர்வு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வெற்றிடம் உருவானால் காற்று நிரப்பும். அதில் நச்சுக் காற்று நிரப்பிவிடக் கூடாதென்ற அச்சத்தில் குற்றமில்லை. இதுவரை ஆட்டத்தில், திமுக-வும் அதிமுக-வும் இரு முனையில் நின்று சண்டையிடுவது போல் தோற்றம் தந்து வருகின்றனர். இருவரும் இல்லாமல் போனால் பா.ஜ.க‌ வந்துவிடுமே என்று கவலை கொள்கிறார்கள். அப்படி ஒரு முனையில் பா.ஜ.க‌ வந்தாலும் மறுமுனை வெற்றிடமாகத் தான் இருக்கும். அதை நிரப்ப வேண்டியவர்கள் நாம் தான்! அதுதான் உண்மையான அரசியல் விளையாட்டாக இருக்கப் போகிறது. யாரையாவது வால்பிடித்து வாழ்ந்துவிடலாம் என்றெண்ணாமல் ஒரு முனையில் நமது அணி இருக்க வேண்டும் என்றே ஒரு கொள்கை வழிபட்ட இயக்கம் வாஞ்சை கொள்ளும். பரந்துப்பட்ட அனைத்து மக்களுக்குமான மாற்றுக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு மாற்று அணியை உருவாக்குவது நமது இன்றைய உடனடிக் கடமையாகும்.

முற்றும்

வினோத் – இளந்தமிழகம் இயக்கம்

About வினோத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*