Home / அரசியல் / வேளச்சேரியில் கொல்லப்பட்ட மூன்று உயிர்கள்

வேளச்சேரியில் கொல்லப்பட்ட மூன்று உயிர்கள்

 

 

வேளச்சேரியிலிருந்து, தரமணி செல்லும் சாலையில் உள்ள பாரதிநகர் பேருந்து நிறுத்தத்தின் நடைபாதையில் நேற்று (12.10.2014)  இரவு படுத்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஒரு டிராவல்ஸ் கார் ஏறியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி கேட்டு அங்கு செய்தி நிறுவனத்தின் சார்பாக சென்றிருந்தேன். பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே உள்ள அகலமான நடைபாதை. இரண்டு செருப்புகளும், இறந்தவர்களின் உடைமைகளும் அங்கேயே இருந்ததை பார்க்க முடிந்தது. அங்கு இருந்த சில செய்தியாளர்கள், காவல்துறையினர், அதிர்ச்சியில் அந்த இடத்தைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்த அந்த பகுதிவாசிகள் தவிர முந்தைய இரவு நடந்த விபத்துக்கு சான்றாக வேறெதுவும் அங்கில்லை. வேளச்சேரி தரமணிசாலையில் போக்குவரத்து வழக்கம் போலவே இருந்தது. கடந்து சென்றவர்களில் எத்தனை பேருக்கு முந்தைய இரவு மூன்று உயிர்கள் காவு வாங்கப்பட்டது தெரிந்திருக்கும் என தெரியவில்லை.

 

 

விபத்தில் இறந்த மூவரில் இருவர் பற்றிய விவரம் சேகரிக்க முடிந்தது. ஆறுமுகம்- ஐஸ்வர்யா தம்பதியினர் அவர்கள். இறந்த மூன்றாவது நபர் அதே பகுதியை சுற்றிவரும் புத்திசுவாதீனமில்லாத வயதான பெண்மணி. ஆறுமுகம்- ஐஸ்வர்யா தம்பதியினருக்கு ஒரு வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தை இருக்கிறான். அதோடு, கொல்லப்பட்ட ஐஸ்வர்யா 8 மாதகர்ப்பிணியும். இந்த தம்பதியினரின் குழந்தை வழக்கமாக இவர்களோடு தங்கும் ஹூசைன் என்பவரின் அருகில் படுத்து தூங்குவான் என்பதால் நேற்றிரவு நடந்த விபத்தில் அக்குழந்தை மட்டும் தப்பித்திருக்கிறான். நாங்கள் சென்ற போது குழந்தை காவல்துறையினரின் பாதுகாப்பில் இருந்தான். எங்களால் அவனை பார்க்க முடியவில்லை. நேற்றிரவு அவர்களோடு தங்கியிருந்த ஹூசைனை சந்தித்தோம். அவர் இறந்த தம்பதிகளைப் பற்றி பேசினார்.

 

இறந்த தம்பதியினர் அவர்களின் குழந்தையோடு இந்த பிளாட்பாரத்தில் கடந்த சில மாதங்களாக இருந்து வருகின்றனர். ஹூசைனும், இந்த தம்பதிகளும் குப்பை பொறுக்கி பிழைப்பு நடத்துபவர்கள். நேற்றிரவு வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த கார் இவர்கள் இருவர் மீது ஏறி, இன்னும் நிலை தடுமாறி பேருந்து நிறுத்ததினருகில் தூங்கிக் கொண்டிருந்த அந்த வயதான பெண்மணி மீதும் ஏறி சாலையில் இறங்கியிருக்கிறது. காரில் இருந்த மூவரில் இருவர் தப்பியோடிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கிகொண்டுள்ளார். அவர் குடிபோதையில் இருந்ததாகவும் ஹூசைன் கூறினார்.

1661582_304548309751932_3440259594570196999_n

விபத்து நடந்த பகுதியில் கூடி இருந்தவர்கள் பேசியபோது இறந்தவர்கள் மீது காரை ஏற்றியவர் அதற்கு சற்று தூரம் முன்புதான் ஒரு மாட்டின் மீது காரை ஏற்றியதாகவும், துரத்தி வந்த காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க வேகமாக வண்டி ஓட்டியதில் தான் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றியதாகவும் கூறினர்.

அவர்கள் கூறியதிலிருந்து விபத்து நடந்த அந்தக் குறிப்பிட்ட பகுதியிலும், அந்த சாலை முழுவதிலும் போக்குவரத்து மிக மோசமாக இருப்பதும், விபத்துகள் அன்றாடம் நடப்பதும் தெரியவருகிறது, பாரதிநகர் பகுதியில் 20,000 த்திற்கும் அதிகமான மக்கள் வசிப்பதாகவும், விபத்து நடந்த இடத்துக்கு அருகிலேயே பள்ளிக்கூடம் ஒன்று இருப்பதும், அதற்கு செல்லும் குழந்தைகள் சாலையை கடக்கவே பல நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் கூறுகிறார்கள். நாங்கள் அங்கு நின்றிருந்த நேரத்திற்குள்ளாகவே இரண்டு வெவ்வேறு நேரங்களில் வண்டிகள் இடித்து கொண்டு ஓட்டுனர்களிடையே பிரச்சனை நடந்து கொண்டிருந்தது.

 

வேளச்சேரியிலிருந்து தரமணி செல்லும் அந்த பிரதான சாலையில் வேளச்சேரியில் தேங்கும் தண்ணீரை பக்கிங்காம் கால்வாயில் கொண்டு சேர்பதற்கான பணிகளும், நடைமேம்பாலங்கள் கட்டும் வேலைகளும் நடந்து வருவதாக தெரிகிறது. இந்தப் பணிகளின் காரணமாக பல்வேறு இடங்களில் சாலையின் ஒரு புறத்தை மட்டுமே வாகனங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அதுவே இந்த பகுதியின் போக்குவரத்தை இத்தனை மோசமாக்கியிருக்கிறது.

 

ஹூசைனிடம் ஏன் சாலையோரத்தில் தூங்குகிறீர்கள் என்று கேட்டதற்கு “எங்க வாடகைக்கு வீடு எடுக்கனுமுன்னாலும் என்ன வேலை பாக்குறன்னு கேக்குறாங்க. நான் குப்பை பொறுக்கிறேன். உனக்கு வாடகை கொடுக்க காசு இருக்குன்னு சொன்னாலும், வீடு கிடையாதுன்னு சொல்றாங்க. அதுனால தான் இங்க தூங்குறோம். எங்களுக்கு வீடு கொடுத்தா நாங்க ஏன் இங்க தூங்குறோம்” என்றார்.

10435002_304538689752894_7897314427001404690_n

ஆறுமுகம்- ஐஸ்வர்யா தம்பதியினர் ஐஸ்ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர்களாம். இந்த தம்பதியினர் பாரதி நகர் பகுதி மக்களுக்கு அறிமுகமானவர்களாக இருக்கிறார்கள். நாங்கள் அங்கு நின்றிருந்த போதே சிலர் வந்து என்ன நடந்தது என்று கேட்டு இறந்தவர்கள் இவர்கள் தான் என்று தெரிந்த போது அதிர்ந்து போனார்கள். இந்த தம்பதியினர் வேளச்சேரியில் பாய் ஒருவர் கடையினருகே இருந்ததாகவும், அந்தப் பகுதியிலிருந்து விரட்டப்பட்டு இங்கு தங்கியிருந்தார்கள் என்றும் சொல்லப்பட்டது. நாங்கள் அங்கு நின்றபோது 6 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் வந்து “சாமுவேல் எங்க?” என்று கேட்டான். யார் சாமுவேல் என்று கேட்டதற்கு “செத்து போனவங்களோட  பாப்பா” என்றான். சாமுவேல் இப்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டில். இறந்த அவனது பெற்றோரின் உறவினர்களை தேடி அவனை ஐஸ்ஹவுஸ் பகுதிக்கு காவல்துறையினர் தூக்கிச் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. யாரும் கிடைக்காத பட்சத்தில் குழந்தைகள் காப்பகமொன்றில் அவன் அனுமதிக்கப்படுவான் என்று தெரிகிறது. இப்போது சாமுவேல் அங்கு இருந்ததற்கான அடையாளமாய் அவன் வைத்து விளையாடிய சின்னஞ்சிறு பொம்மைகளும், பாதி சாப்பிட்ட நிலையில் கிடக்கும் பிஸ்கட் பாக்கெட்டும் தான் இருக்கின்றன.

 

ஒரே இரவில் தலைகீழாக மாற்றப்பட்ட சாமுவேலின் வாழ்க்கை நம்முள் பல கேள்விகளை எழுப்புகிறது.

 

1.குடிபோதையில் வாகனத்தை ஓட்டியவர்கள் பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை. என்றாலும், இது போன்ற விபத்துகள் நடப்பது இது முதல்முறை அல்ல. 2013 ஆம் ஆண்டு மே 23 ஆம் நாள் எம்.பி.டிஸ்டிலரீஸ் தலைவர் புருஷோத்தமனின் மகன் ஷாஜி புருஷோத்தமன் எக்மோர் குழந்தைகள் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்தவர்கள் மீது கார் ஏற்றி ஒரு குழந்தை இறந்தும், இன்னும் இரண்டு குழந்தைகளுக்கு கடுமையான காயமும் ஏற்பட்டது. இழப்பீடு வழங்க சம்மதித்து புருஷோத்தமன் கொடுத்துமிருக்கிறார். ஆனால் ஷாஜியைக் காப்பாற்ற எத்தனை முயற்சிகள் எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியும். இந்த பாகுபாட்டை மனதில் வைத்துக் கொண்டே நம் கோரிக்கையையும் முன் வைக்க வேண்டும். சட்டங்கள் ஏன் அனைவருக்கும் சமமானதாக இருப்பதில்லை?

10672119_304544986418931_954543301495767442_n

2. 2013 ஆம் ஆண்டில் மட்டும் 718 பேர் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டளவில் 1993 ஆம் ஆண்டு 7349 ஆக இருந்த விபத்து மரணங்கள் 2013 ஆம்ஆண்டு 15,503 ஆக உயர்ந்திருக்கிறது. அதிகரித்து வரும் சாலை விபத்துகளுக்கான காரணங்கள் என்ன? சாலை விபத்துகளில் அன்றாடம் இத்தனை பேரை இழக்க நேரிடும்போது அதற்கான சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு தரப்பில் எடுக்கப்படுகின்றனவா? http://www.tn.gov.in/sta/ra1.pdf

 

3. ஆறுமுகம்- ஐஸ்வர்யா தம்பதிகள் போல சாலைகளில் வாழும் பல்லாயிரம் மக்கள் விபத்துகளினால் மட்டுமல்ல, தாங்கள்  வாழுமிடம் தொடர்பான பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். “எங்களுக்கு தங்க இடம் ஏன் தரப்படவில்லை?” என்ற ஹூசைனின் கேள்விக்கு என்ன நியாயமான பதில் நம்மிடமிருக்கிறது?

 
ஜெனி

 

About ஜெனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*