Home / சமூகம் / இந்துத்துவம் / விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களும் சில கொழுக்கட்டைகளும்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களும் சில கொழுக்கட்டைகளும்

விநாயகர் சதுர்த்தி என்றதும்  கொழுக்கட்டைகளும், வண்ண வண்ணக் காகிதக் குடைகளும், களிமண் பிள்ளையாரும் அரச மர இலைகளும் நினைவுக்கு வருகிறதென்றால், நாம் எண்பதுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள்.  ஊர்வலம், வன்முறை, கணபதி பப்பா மோர்யா என்றால் நீங்கள் தொன்னூறுகளைக் கடந்து வந்து வீட்டீர்கள்.  தெருவுக்கு ஒரு பிரம்மாண்ட சிலை, பத்து அடிக்கு ஒரு பெரிய சிலை,  சிலைக்கு இரண்டு காவிக் கொடிகள்,   ஒரு LED தொலைக்காட்சியில் ஆன்மிக சொற்பொழிவுகள்,   மேடைகளில் ஹெச்.ராஜாவின் ஆபாசக் கூச்சல்கள்,  நள்ளிரவு வரை அருகே  தூங்கி வழியும் நான்கைந்து சிறுவர்கள், ஊர்வலங்களில் பாரத் மாதாக்கீஜே முழக்கங்கள் என்றால்   நாம் வாழ்ந்து கொண்டிருப்பது  2014  பாரதிய ஜனதா ஆட்சியின் கீழ்.  அதாவது எப்பாடுபட்டேனும்,  எவ்வளவு கீழ்த்தரமாக இறங்கியேனும்,  தமிழக மண்ணில் கிளை பரப்பத் துடிக்கும் சங்க பரிவாரங்களின்,  இந்துத்துவ சக்திகளின்,  பாரதிய ஜனதா கட்சியின் முயற்சிகளுக்கு,  அரிய வாய்ப்புகளை வழங்கக் கூடிய விநாயகர் சதுர்த்தி விழா நிகழ்வுகள் பா.ஜ.க ஆட்சியின்  கீழ் ஒரு  புதிய பரிமாணத்தை அடைந்திருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு,  சென்னை திருவல்லிக்கேணி பள்ளிவாசலின் அருகே, விநாயகர் ஊர்வலத்தின் போது, ஒரு செருப்பு, தொழுகை நேரத்தின் போது  பள்ளிவாசலுக்குள் வீசப்பட்டது. இதை எதிர்த்த இசுலாமியர்கள் தாக்குதலுக்கு உள்ளாயினர்.  அவர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன;  சூறையாடப்பட்டன. தொடர்ந்து பள்ளிவாசலுக்குள் சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. அன்றிலிருந்து இன்று வரை திட்டமிட்டு பதற்றத்தை விதைப்பதற்கும், வன்முறைகளை உண்டாக்குவதற்கும் அதன் மூலம் அரசியல் அறுவடை செய்து கொள்வதற்கும் வசதியாக சங்கப் பரிவாரங்கள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களைப் பயன்படுத்தி கொள்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது,  விநாயகர் சிலைகளும் அதனூடான அரசியலும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.   நகருக்கொன்றாக இருந்த சிலைகள், தெருக்களுக்கொன்றாக அதிகரித்தன.  தெருக்களுக்கொன்றாக இருந்தவை,   தெருக்களுக்கு நான்கு என்று அதிகரித்தது . நகரங்களில் மட்டுமே வைக்கப்பட்டு வந்த விநாயகர் சிலைகள், இப்போது சிற்றூர்களுக்கும் பரவி,  கிராமங்கள் வரை சென்று விட்டது.  எழில் நகர் என்றழைக்கப்படும் வடசென்னை கொருக்குப்பேட்டை குப்பை மேட்டுச் சேரியின் அருகே,  சிவசேனா கூட ஒரு சிலை வைத்திருக்கிறது.  பெரும் அரசியல் கட்சிகள் தொடங்கி, முதலாளிகளும் வியாபாரிகளுமாக புரவலர்களின் பட்டியல் பதாகைகளில் (ஃபிளக்ஸ்களில்) மின்னிக் கொண்டிருக்கின்றன.   ஏறத்தாழ அனைத்து இடங்களிலும் இந்து முன்னணி இராம கோபாலனின் படமும்,  குறைந்த பட்சம் ஒரு மார்வாரியின் பெயரும் இல்லாமல் பதாகைகள் இல்லை. பேனர்களில் இருபது பெயர்கள் இருந்தாலும்,  பெரும்பாலான சிலைகள்  சீந்துவாரில்லாமல்,  ஈயடிக்கிறது.  பெண்கள் அதிகம் வழிபட வருவதில்லை.  நான்கைந்து சிறுவர்கள்,  மாலைகளில் வந்து பாரத் மாதாக்கீஜே என்று பூசைகளின் போது கூவுகின்றனர்.  உண்டியல் இல்லாமல் எந்த விநாயகர் சிலையும் இல்லை என்பதோடு, வலுக்கட்டாயமாக அருகிலுள்ள பொதுமக்களிடம் பணத்தையும் வசூலிக்கின்றனர். பெரும்பாலும் மந்தமாக இருக்கும் சிலை முகாம்கள்,  புத்தாடை சரசரக்க, புரவலர்களின் இல்லத்தினர் வரும் போது மட்டும் சுண்டல், சர்க்கரை   பொங்கல் என ஓரளவு களை கட்டுகிறது.

maxresdefault

நிற்க,  விநாயகர் சதுர்த்தி முழுமையாக களை கட்டுவது ஞாயிற்றுக்கிழமை ஊர்வலங்களின் போது தான். சாமியைப் பார்த்தாலே தீட்டு, தொட்டால் தீட்டு, அண்டினால் தீட்டு என அக்ரஹாரத்து ஆர்வலர்களாலும் ஆதிக்க சாதியினராலும் இன்று வரை ஒடுக்கப்படும் தலித் மக்களே, ஊர்வலங்களில் விழா நாயகர்களாக்கப்படுகின்றனர். காவி துணியை நெற்றியில் கட்டியவாறு, ஊர்வல ஊர்திகளில் டாஸ்மாக் போதையோடு குத்தாட்டம் போடுபவர்களாகவும், சொல்லிக்கொடுக்கப்பட்ட மோர்யாவையும், பாரத் மாதாக்கீஜேவையும் விற்க முயல்பவர்களாகவும் இறுதியில், கடலில் விநாயகர் சிலைகளை அடித்து உதைத்து மிதித்து கரைப்பவர்களாகவும் இந்துத்துவ சக்திகளின்  சூழ்ச்சிகளின் எளிய இலக்காக, அத்தாழ்த்தப்பட்ட மக்களே பயன்படுத்தப்படுகின்றனர். பெரும்பாலும் பதின்ம வயதைச் சேர்ந்த இளைஞர்கள். சதுர்த்தி ஊர்வல நாட்களைத் தவிர, ஆண்டின் வேறெந்த நாட்களிலும் இவர்களை இப்படி காவித் துணியோடு பார்க்க முடியாது.  புரவலர்களும் இந்துத்துவ பரிவாரங்களும்  பார்ப்பனர்களும்  ஊர்வலங்களின் போது, ஓரமாக நகர்ந்து நின்று வேடிக்கை பார்க்க, மற்ற வைபவங்கள் இவ்வெளிய மக்களின் மூலமே அரங்கேறுகின்றன.  குத்தாட்டங்களில் ஆபாச நடன அசைவுகளும் உண்டு என்பது உபரி தகவல். சங்க பரிவாரங்கள் தாம் முன் வைக்கும் இந்து மத புனிதங்கள்  பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல்,  தங்கள் மதவெறி அரசியலை முன்னெடுக்க, எப்படியும்  இறங்குவார்கள் என்பதற்கு விநாயகர் சதுர்த்தி விழாவே சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில், ஆண்டு தோறும் தவறாமல் இந்துத்துவ சக்திகள், விநாயகர் ஊர்வலங்களை முன் வைத்து, திட்டமிட்டு வன்முறைகளை நிகழ்த்தினாலும், இப்பகுதிகளில் காவல் துறை அனுமதி அளிக்கத் தவறுவதில்லை.

திருவாரூர் மாவட்டத்தில், இசுலாமியர்கள் அடர்த்தியாக வாழும் முத்துப்பேட்டையில் இந்த ஆண்டும் திட்டமிட்டு, இந்துத்துவ சக்திகள் வன்முறையை(கலவரத்தை) நடத்தியிருக்கின்றனர். மதியம் 3 மணிக்கு தொடங்க அனுமதிக்கப்பட்ட ஊர்வலத்தை வேண்டுமென்றே, இழுத்தடித்து, மாலை  4.30 மணி பள்ளிவாசல் அசர் தொழுகைக்கு, பாங்கு சொல்லும் வரை காத்திருக்கின்றனர். சரியாக பாங்கு சொல்லும் போது,  ஊர்வலம் பள்ளிவாசலை நெருங்கியதால் காவல்துறை, பாங்கு முடியும் வரை தடுத்து நிறுத்தியிருக்கின்றது.உடனே இசுலாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வோடு முழக்கங்களை எழுப்பியிருக்கின்றனர்.   ஊர்வலம் செல்லும் வழியில் இருக்கும் இசுலாமியருடைய வீடுகளில் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். 15க்கும் மேற்பட்ட வீடுகளைச்சேதப்படுத்தியதோடு, ஒரு கடைக்கும் தீ வைத்திருக்கின்றனர்.   இத்தாக்குதலின் பின்னணியில் இருந்த முக்கிய பா.ஜ.க, இந்து முன்னணி உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஊர்வலத்தில் உரையாற்றிய இல.கணேசன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களின் போது கற்கள் வீசி தாக்குதல் நடத்துவது அப்பகுதியில் புதிதல்ல என்றாலும் தொடர்ந்து இது போன்ற செய்கைகளுக்கு அனுமதி வழங்கப் படுகிறது. அல்லது காவல்துறையினரின் பாதுகாப்புடனே, இப்படிப்பட்ட காலித் தனங்கள் நடக்கின்றன.

இந்து மதத்தில் இருக்கும் சாதிய ஒடுக்குமுறைகளை, கொடுமைகளைத் தாங்கிக் கொள்ள இயலாத தலித் மக்கள்,  கூட்டங்கூட்டமாக கிறித்துவ, இசுலாமிய, பெளத்த மதங்களை நோக்கிச் செல்கின்றனர். இந்த மத மாற்றத்தை தடுக்கும் முயற்சியாகத் தான்,  தமிழக இந்துத்துவ அமைப்புகள்,  தலித்துகள் குடியிருக்கும் சேரிகளில் விநாயகர் சிலைகளை அதிகம் அமைக்கின்றனர். அம்மத மாற்றத்தை நோக்கி,  தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லாமலிருக்க,  அவர்களை வைத்தே இசுலாமிய குடியிருப்புகளில் பதற்றத்தை உருவாக்கவும் முயல்கின்றனர்.  பள்ளிவாசல்களுக்கருகில் ஊர்வலங்கள் தாமதித்து சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்படுவதும் இந்நோக்கத்தின் அடிப்படையில் தான். ” பத்து பைசா முறுக்கு, பள்ளிவாசலை நொறுக்கு, இந்தியா இந்து நாடு” போன்ற முழக்கங்கள் அதுவரை இல்லாத உற்சாகத்தோடு, பள்ளிவாசல்களை அடைந்த கணம் மட்டும் வேறு வடிவில் பரிமாணமெடுக்கின்றன. போகிற வழியெல்லாம்   சிறுபான்மையினரைக் குறி வைத்தே சீண்டப்படுகின்றன.  பர்தா அணிந்து இரு சக்கர வாகனங்களில் செல்லும் பெண்களை நோக்கி ஒரு கூட்டம் ஊளையிடுகிறது.  ஊர்வலங்கள் போகும் தெருக்களில்,  இசுலாமியர் கடைகள் உட்பட எல்லா கடைகளும் மூடப்பட வேண்டும் என்று வியாபாரிகள் சங்கங்களிலிருந்தே சுற்றறிக்கை வருமளவுக்கு, வன்முறைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.  தாம்பரத்தில் இசுலாமியர் ஒருவருக்கு சொந்தமான,  பிரபல  துணிக்கடையொன்றை முன்புறம் மறைத்தவாறு,  மிகப்பெரிய விநாயகர் சிலை ஒன்று வைக்கப்பட்டதும்  இதில் அடங்கும். பதற்றத்தையும் அதன் மூலம் வன்முறையையும் உருவாக்க வேண்டும் என்பதை முற்றிலுமாக கருத்தில் கொண்டே இவ்வளவு காட்சிகளும் திட்டமிட்டு அரங்கேறுகின்றன.

images (1)

வரலாறு காணாத அளவு,  இந்த ஆண்டு காவல்துறையில் அதிகமானோர் முறையான விடுப்பின்றி பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.  நியாயமான சனநாயக கோரிக்கைகளுக்காக வீதிகளில் மக்கள் இறங்கிப் போராடினால்,    மிரட்டுவதும் கெடுபிடிகள் செய்து நெருக்குவதுமாக இருக்கும் காவல்துறை, இந்துத்துவ பரிவாரங்களின் ஆட்டங்களுக்கு மட்டும் மவுனமாக அடி பணிந்து நிற்கிறது.  பா.ஜ.க தலைவர்கள், காவல்துறையினரின் வாகனங்களையே பயன்படுத்துவதும், அவர்களை ஏளனமாக பேசுவதும்,குறிப்பாக பெண்களைக்  கேலி கிண்டல் செய்வதும் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில்  நடக்கிறது.  சிலைகளை ஏரிகளிலும் கடலிலும் கரைப்பதால் இயற்கை மாசுபடுகிறது  என்று வெறும் சூழலியல் பிரச்சினையாக மட்டுமே பதிவு செய்யும் ஊடகங்கள்,  சிலைகள் அகற்றப்பட்டும்,  அகற்றப்படாமலே இருக்கும் காவிக் கொடிகளின் அரசியலைப் பற்றி பேசுவதே இல்லை.  ஒவ்வொரு ஆண்டும் ஊர்வலங்களின்  போது, சிறுபான்மையினரின் மனங்களில் படரும் அச்ச உணர்வை எந்த நாளேடுகளும் வெளிக் கொணர்வதில்லை.

இந்திய அளவில் மராட்டிய மன்னர் சிவாஜியால் தொடங்கப்பட்ட இந்த விநாயகர் சதுர்த்தி விழாவானது,  1892 வரை பேஷ்வாக்களின் குடும்ப நிகழ்வாக மட்டுமே இருந்து வந்தது. 1893க்கு பிறகு திலகரால், அது ஒரு பொது நிகழ்வாக மாற்றப்பட்டு,  பத்து நாட்கள் தொடர்ந்து நடக்கும் பொது கலாச்சார விழாவாக,  நடக்க ஆரம்பித்தது. விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதை அறிமுகப்படுத்தியவரும் திலகர் தான்.  மகாராட்டிர மாநிலத்தில் “கணேஷ் சதுர்த்தி” என்ற பெயரில் நடக்கும் இவ்விழாவானது, மெல்ல மெல்ல கோவா, கர்நாடகம், ஆந்திரா என்று பரவி, இன்று தமிழகத்திலும் கடந்த 30 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.  மும்பையில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஒன்றரை லட்சம் சிலைகள் கடலில் கரைக்கப்படுகின்றன. தமிழகத்தில் அமைக்கப்படும் சிலைகளின் எண்ணிக்கையும், மேற்சொன்னவாறு ஆண்டு தோறும் கூடிக் கொண்டே தான் வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் சிலைகளை அமைப்பதில் சில பொருளாதார நலன்களும் பிணைந்தே இருக்கின்றன.  ஒரு குறிப்பிட்ட பகுதியில்,  ஒரு பெரும்புள்ளி சில ஆயிரங்கள் செலவு செய்து ஒரு சிலை அமைப்பாரேயானால், அங்கு நடத்தப்படும் வழிபாடுகளுக்காக அப்பகுதி மக்களிடம் பண வசூல் செய்ய முடிகிறது.  அப்பணம், போட்ட முதலீட்டை விட,  கணிசமான அளவுக்கு வரும் போது, அவர் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் சிலை அமைக்க போட்டி போடுகிறார்.  அது மட்டுமின்றி,  சிலைகள் அமைத்தலில் ஒரு ஆதிக்கப்போட்டியும் இருப்பதையும் கண் கூடாகப் பார்க்க முடியும்.

தொன்னூறுகளுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் ஒரு சமூக ஆதிக்கத்தைப் பறை சாற்றும் நிகழ்வாக உருமாறி விட்டன.  தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்குபதற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பு, இந்துத்துவ சக்திகளின் ஒவ்வொரு அசைவிலும் குடி கொண்டிருக்கிறது. விநாயகர் சிலைகள் அகற்றப்பட்ட பல இடங்களில்,  தற்போது இந்து முன்னணியினரின் கொடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.  இது எதைக் காட்டுகிறது?   சதுர்த்தி விழாக்களின் பலனாக தனது இந்துத்துவ‌ கட்டமைப்பை பெரியார்  மண்ணில் பலப்படுத்திக் கொள்ளவே சங்க பரிவாரங்கள் முயலுகின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில்,  மோடி அலை தமிழகத்தில் மண்ணைக் கவ்வினாலும், குறிப்பிடத்தக்க  அளவு வாக்கு வங்கியை பா.ஜ.க அதிகப்படுத்தியிருக்கிறது.  இது மறைமுகமாக நமக்கொரு அறை கூவலை விடுக்கிறது.  எங்கெல்லாம் இந்துத்துவ பரிவாரங்கள் பதற்றத்தையும், வன்முறை (கலவரங்)களையும் விளைவிக்கின்றனரோ, அங்கெல்லாம் அவர்கள் வேர் விட்டு முளைத்திருக்கின்றனர்.  இந்தியாவில் குஜராத் தொடங்கி,  தமிழகத்தில் கோவையும், மண்டைக்காடும் இன்று நம் கண் முன் நிற்கும் சாட்சிகள்.   ஆக சங்க பரிவாரங்களின் முதல் நோக்கம்,  தமிழகத்தில் அமைதி நீடிக்கக் கூடாது.. மத நல்லிணக்கம் சீர் குலைய வேண்டும். அதற்கு  ஒரு அரிய வாய்ப்பாகத் தான், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர்.   தமிழக மண்ணில்,  ஒரு மத வழிபாட்டு நிகழ்வில் காவி அரசியல் புகுவதை,  ஜனநாயக சக்திகளான நாம் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.  தொடர்ந்து வெகுமக்களிடையே,  கடவுள் என்ற பெயரில் அரங்கேறும் காலித் தனங்களை அம்பலப்படுத்தி, காவி அரசியலுக்கெதிரான நமது எதிர்வினைகளைக் கட்டாயம் பதிந்தே ஆக வேண்டும்.

காவி அரசியலை வேரறுப்போம்….சனநாயகம் காப்போம்!.

அ.மு.செய்யது – இளந்தமிழகம் இயக்கம்

இக்கட்டுரை மக்கள் விடுதலை இதழில் வெளிவந்துள்ளது. மக்கள் விடுதலை இதழாசிரியருக்கு எம் நன்றிகள்.

About அ.மு.செய்யது

One comment

  1. சிறந்த பக்திப் பதிவு
    தொடருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*