Home / அரசியல் / “விக்ரமன் பட நாயகர்களும் – இந்திய பிரதமர் மோடியும்… ….

“விக்ரமன் பட நாயகர்களும் – இந்திய பிரதமர் மோடியும்… ….

 

மோடி பிரதமராவதற்கு முன் நடத்திய பிரச்சார கூட்டங்களில் நான் பிரதமரானால் நீங்கள் விரும்பும் அனைத்தையும் செய்வேன் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார், அந்த வாக்குறுதிகள் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையாக வெளியாகின. மோடியின் கதாநாயக வாக்குறுதிகள் இன்னமும் மன்னரைப் போற்றும், திரைக் கதாநாயகர்களை(இதில் சச்சின், தோனியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்) தெய்வமாக நினைத்து வழிபடும் நம் இளைஞர்களை கவர்ந்ததில் ஆச்சர்யமேதுமில்லை. இதோ மோடி பிரதமராகி 100 நாட்களுக்கும் மேலாகிவிட்டது, சரி அவர் வாக்கு கொடுத்தபடி எல்லாவற்றையும் நிறைவேற்றியிருக்கின்றாரா என இனிபார்ப்போம்…

 

05-modi-15

 

மோடி பதவி ஏற்றபின் பல நாட்கள் வெளிநாட்டு பயணங்களிலேயே கழிந்து விட்டதால், மீதமுள்ள நாட்களை மட்டும் பார்ப்போம்… அதற்கு முன்னர் தேர்தல் காலத்தில் அவர் கொடுத்த வாக்குறுதிகள் என்ன என்பதை இங்கே சற்று பார்த்து விடுவோம்…

* விலைவாசி உயர்வை கட்டுபடுத்துவோம்

* வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவோம், தொழில் முனைவை ஊக்குவிப்போம்

*ஊழலை ஒழிப்போம், கருப்பு பணத்தை மீட்டெடுப்போம்

*மாநிலங்களுக்கு அதிகாரம்

இப்படி பல வாக்குறுதிகள் பா.ஜ.க-வின் (அதாவது மோடியின்) தேர்தல் அறிக்கையில் தரப்பட்டிருந்தன. இந்த வாக்குறுதிகள் எதையும் அவர்கள் நிறைவேற்ற மாட்டார்கள், ஏன்? என விரிவாக  “பா.ஜ.க தேர்தல் அறிக்கை- ஒரு பருந்துப் பார்வை”   என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை தேர்தலுக்கு முன்னரே நான் எழுதியிருந்தேன், எனது எதிர்பார்ப்பை பொய்பிக்காமல் மோடி அரசாங்கம் தான் அள்ளிவீசிய வாக்குறுதிகளுக்கு எதிராகவே நடந்து வருகின்றது. இருந்தாலும் மற்றுமொரு பருந்துப்பார்வை பார்த்து விடுவோம்…

விலைவாசி இன்னும் குறைந்த பாடில்லை, மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறைந்திருக்கின்றது என்கிறார்கள் மோடி ஆதர‌வாளர்கள்(அதற்கு காரணம் சர்வதேச சந்தை பெட்ரோல் விலை குறைந்ததே), அதே நேரத்தில் டீசல் விலைஉயர்ந்து கொண்டே வருவதை அவர்கள் காணத்தவறுகின்றார்கள். லாரி, பேருந்து போன்ற உணவுப் பொருட்களின் வாகனப் போக்குவரத்திற்கு பெரும்பான்மையாக பயன்படும் வாகனங்கள் டீசலிலேயே இயங்குகின்றன. இந்த டீசல் விலையை(62.92 ரூபய்) பெட்ரோலின் விலை(70.87ரூபாய்) அளவிற்கு கொண்டு வந்து இரண்டையும் சமப்படுத்துவதே மோடி அரசின் இலட்சியம். ஆனால் சர்வதேச சந்தையில் டீசல் விலை மோடி ஆட்சிக்கு வந்த சூன் மாதத்திற்கு பின் ஒவ்வொரு மாதமும் குறைந்து கொண்டே வருகின்றது. அப்படியானால் டீசல் விலையேற்றம் யாருக்காக? உணவுப் பொருட்களின் விலையில் முக்கிய பங்காற்றும் வாகனப்போக்குவரத்தின் மூலாதாரமான டீசல் விலையை மாத, மாதம் ஏற்றினால் இவர்களால் எப்பொழுதும் விலை வாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர இயலாது என்பது தானே யதார்த்தம்.

வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவோம் – கடந்த காங்கிரசு ஆட்சியில் வளர்ச்சி இரட்டை விகிதத்தில் இருந்த போதிலும் வேலைவாய்ப்பு வளரவே இல்லை, ஊடகங்கள் அனைத்தும் இதை வேலையில்லா வளர்ச்சி என சுட்டின, இதற்கு காரணம், இவ்வளர்ச்சி சேவைத்துறையின் மூலம் வந்த வளர்ச்சி, அரசின் திட்டங்களனைத்தும் இது போன்ற சேவைத்துறைகளை வளர்ப்பதிலேயே தான் இருந்தன, மோடி அரசும் இதே போன்ற சேவைத்துறைகளை குறி வைத்து தான் தங்களது திட்டங்களைத் தீட்டி வருகின்றதேயொழிய இந்திய வேலைவாய்ப்பில் பெரும்பான்மை பங்கு கொண்ட விவசாயத்தையோ, அதற்கடுத்து வேலைவாய்ப்பு தரும் உற்பத்தி சார் தொழிற்துறைகளையோ வளர்ப்பதில் கவனம் செலுத்தவில்லை, அப்படியானால் வேலைவாய்ப்பு எப்படி அதிகமாகும்?

நாங்கள் ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் கருப்பு பணத்தை மீட்டெடுப்போம் என்று சூளுரைத்த மோடியும், அவரது சகாக்களும், இன்று காங்கிரசு அரசு பாடிய அதே இலாவணியைத் தான் பாடி வருகின்றது (நீங்கள்(பொது மக்கள், ஊடகங்கள்) நினைப்பது போல இதெல்லாம் சில மாதங்களில் நடக்காது, அந்தந்த நாட்டு சட்ட திட்டங்கள், அவர்களுடனான நமது ஒப்பந்தங்கள் படிதான் இது நடக்கும், இதற்கு அதிக காலம் எடுக்கும்).  பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் நிதின் கத்காரி முதல் எடியூரப்பா வரை பலர் ஊழல் வழக்குகில் சிக்கியவர்கள், தற்போதைய தலைவர் அமித் சா-மீதான வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிக்கு இன்று கேரளா மாநில கவர்னர் பதவி, என அதே ஊழல்மயமான ஆட்சி தான் இன்றும் நடக்கின்றது.எந்த மாற்றமும் இல்லை

 

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்று சொல்லி வாக்கு கேட்ட‌ மோடி, இன்று மாநிலங்களிடம் உள்ள குறைந்தபட்ச அதிகாரங்களையும் பறிப்பதிலேயே தான் குறியாக உள்ளார் என்பது, சமஸ்கிருத வாரம், இந்தி மொழி திணிப்பு, கல்லூரிகளில் இந்தி படிப்பது கட்டாயம் என கொண்டு வருவதையும், அதை எல்லா மாநிலங்களின் மீது திணிப்பதையும் பார்த்து வருபவர்களுக்கு நன்றாகத் தெரியும். இது போன்ற திட்டங்களை அறிவிப்பதற்கு முன் மாநிலங்களிடம் கருத்து கேட்கும் குறைந்த பட்ச சனநாயகம் கூட இன்றி சர்வாதிகாரத்தனமாக செயல்பட்டு வருகின்றது மோடி அரசு….

 

10636013_10203946534158244_4276702531023785940_n

எல்லோருக்கும் வங்கி கணக்கு என்ற ஒரு திட்டத்தை மோடி அரசு அண்மையில் துவங்கியது, துவங்கிய அன்றே பல இலட்சக்கணக்கான மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டது என புளங்காகிதம் அடைந்தன மோடிக்கு மொத்தமாக விலை போன ஊடகங்கள்… எல்லோருக்கும் வேலை வாய்ப்பு என்று இருந்த தேர்தல் வாக்குறுதி இன்று மருவி எல்லோருக்கும் வங்கி கணக்கு என்று நிற்கின்றது. வேலை கிடைத்தால் தனி நபரே வங்கி கணக்கு தொடங்கி விடுவார், அதற்கு இங்கு வழியில்லை…. ஆனால் வங்கி கணக்கு தொடங்குவதை ஏதோ ஒரு பெரிய திட்டம் போல அரசு செய்வதும், அதை ஒரு இமாலய சாதனை போல ஊடகங்கள் புகழ்வதும் இருவரது கையாலாகாதத் தனத்தைத் தான் காட்டுகின்றது. அதுமட்டுமின்றி நேரடி பண பரிமாற்றம், ஆதார் அட்டை போன்ற காங்கிரசு அரசு செய்த திட்டங்களின் தொடர்ச்சி தான் இந்த திட்டமும் கூட….. (நேரடி பண பரிமாற்றச் சட்டமும், யதார்த்தமும்)

தூய்மையான பாரதம்(ஸ்வச்சா பாரத்- இந்தியா என்பது தானே அரசமைப்பின் படி நமது நாட்டின் பெயர் எங்கிருந்து வந்தது பாரத் என கேள்வியெழுப்பக்கூடாது) என்ற திட்டத்தை அக்டோபர் 2-காந்தி பிறந்த நாளன்று தொடங்கியுள்ளது மோடி அரசு, சரி இதை இவர்கள் எப்படி செய்வார்கள் எனக் கேட்டால் கையில் விளக்குமாறு எடுத்துக்கொண்டு கூட்டுவதும், குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுவதும் போன்ற பணிகளின் மூலம், இதற்கான விளம்பரச் செலவுகள் பல கோடிகள். உண்மையில் தூய்மையான இந்தியா உருவாக வேண்டும் என்றால் அது மாநில அரசுகளின் மூலம் தான் முடியும், மத்திய அரசினால் தில்லியில் உள்ள பாராளுமன்றம், மத்திய அரசு அலுவலகங்களில் மட்டும் தான் தூய்மை செய்ய இயலும்.

மாநிலங்களுடன் கலந்தாலோசித்து, அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கும் பணியைத் தான் மத்திய அரசு செய்ய வேண்டுமே தவிர, விளக்குமாறு எடுத்துக்கொண்டு பெருக்குவது அல்ல, மேலும் சுற்றுச்சூழலை சீரழிய வைக்கும் அணு உலை உள்ளிட்ட முதலாம் உலகில் காலவதியான‌ தொழிற்சாலைகளை (இதற்கு தான் Make in India என்று பெயர்) இங்கு கொண்டு வருவதிலும், சுற்றுச்சூழல் அமைச்சகம் என்ற ஒன்றை செயல்படாமல் செய்து, மரபணு மாற்ற பயிர்களுக்கு நீதிமன்றம் தடை விதித்த போதிலும், கள பரிசோதனைகள் செய்து வரும் மோடி அரசு, தூய்மையான பாரதம் என்று சொல்வதெல்லாம் வெறும் Public Stunt (பொதுமக்களை கவரும் நடிப்பு) அன்றி வேறல்ல… இதையே தான் அமெரிக்க ஒன்றியம் சென்றிருந்த பொழுது Madison Square என்ற பகுதியிலும் செய்தார், அதே சமயம் மோடிக்கு எதிரான போராட்டங்களும் அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தன. மோடி அமெரிக்காவில் கால் பதித்ததில் இருந்து கிளம்பியது வரை ஒளிபரப்பிய இந்திய ஊடகங்கள் எதிலும் மோடி எதிர்ப்பு போராட்டங்கள் காட்டப்படவேயில்லை, ஆனாலும் ஊடகங்களுக்கு இவ்வளவு நேர்மை கூடாது…

Infosys நிறுவனத்தில் நாராயண மூர்த்தி இரண்டாம் முறை தலைமை நிர்வாகியாக பதவியேற்ற பின்னர் தனது அலுவலகம் அமைந்துள்ள Electronic City பகுதியில் விமான நிலையம் வேண்டும் என்று கேட்டு நகைச்சுவை செய்தாரே, அதே போலத் தான் மோடி செய்து வரும் செயல்களும் இருக்கின்றன. சில மாதங்களிலேயே சரியாக செயல்படாதததால் தலைமை பொறுப்பில் இருந்து நாராயண மூர்த்தி விரட்டப்பட்டார், என்ன மோடியை அப்படி விரட்டி விட முடியாது. விக்ரமன் பட நாயகர்கள் ஒரே பாட்டில் பணக்காரனாவதை ரசித்த நடுத்தர வர்க்கம் தான் இன்று அதே போல மோடி செய்யும் செயல்களையும் இரசித்து கைதட்டி ஆர்ப்பரித்து வருகின்றார்கள். மோடி எதையும் செய்பவர் அல்ல, செய்வது போல பாவனை காட்டுபவர்.  மோடி சொன்னது போல “வளமான வாழ்வு வந்துவிட்டது”(அச்சே தீன் ஆகயா) ஆம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு, எண்ணெய் நிறுவனங்களுக்கு, முதலாளிகளுக்கு, இடைத்தரகர்களுக்கு “வளமான வாழ்வு வந்துவிட்டது”. பொது மக்களுக்கு ???

நற்றமிழன்.ப‌
கேலிச்சித்திரங்கள் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது. கேலிச்சித்திரம் வரைந்தவருக்கு நன்றிகள்.

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

One comment

  1. ஓரு திருத்தம்: அரசமைப்பு படியும் இந்தியாவிற்கு பாரத் என்ற பெயர் அங்கீகரிக்கபட்டுள்ளது.

    The first article of the Constitution of India states that “India, that is Bharat, shall be a union of states,” implicitly codifying India and Bharat as equally official short names for the Republic of India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*