Home / பொருளாதாரம் / இயற்கை வளம் / ஊர்குருவிகளின் முதல் கீச்சு – பகுதி 1

ஊர்குருவிகளின் முதல் கீச்சு – பகுதி 1

நாள் : 2014 செப்டம்பர் 27,28

பயணம் போன இடம் – மயிலாடுதுறை, திருவாரூரைச் சுற்றியுள்ள மீத்தேன் திட்டத்தால் பாதிக்கப்போகும் பகுதிகள், ஓ.என்.ஜி.சி-யால் பாதிக்கப்பட்ட பகுதிகள்.

பயணக் குறிப்பு இனி…

முதல் நாள் :

காலைைச் சூரியன் கண்ணைத் திறந்ததுமே கண்டுகொண்டோம்.
கனத்த பசுமைப்பரப்பின் முன்பு நின்றோம்.
காவிரிப் படுகைத் தென்றல்
தென்றலுக்கெல்லாம் அக்காதென்றல் போல… ஆம்
தோலைத்துளைத்து மனதை செல்லக் கிள்ளு கிள்ளி விட்டது.;)
அசைந்து வரும் காவிரி நதிக்கிளையும்
அதில் வரும் இலையும்.
அடித்து உருட்டி அசரவைக்கும் அழகு.
ஒரு சாண் வண்டல் வளர
ஒரு இலட்சம் ஆண்டுகளாகுமாம்.
காவிரித் தரணியில் மூன்று கிலோமீட்டர்
ஆழம் வரை வண்டல் உள்ளதாம் .
அட காவிரி மண்ணே.
அந்த கங்கைக்கும் அண்ணே..
**********************
Oorkuruvigal 1
பல் படிக்கட்டுக்கு வேப்பங்குச்சி விளக்குமாறு.
பச்சரிசி நெய்யோடு
புதிதான சாம்பாரு.
பெருநிலத்தை ரசித்தாட
பெரிதான ஒரு காரு
அருகில்தான் சென்றடைந்தோம்…
அழகான ஒரு ஊரு..
அங்கே..
பூமியில் முளைத்த மாபெரும் காளான் தோட்டம் போல
குடிசைகள் குவிந்திருந்தது..
ஒரு வீட்டில் ஆட்டோடு சேர்த்து ஆறுபேர்.
அடுத்தவீட்டில் வறுமையோடு சேர்த்து எட்டு பேர்.
அவர்கள் கண்களில் வஞ்சம் இல்லை..
வண்டி வண்டியாய்ப் பஞ்சம் இருந்தது.

Oorkuruvigal 2

ஊருக்கு வலப்பக்கம் வயல்காடு
இடப்பக்கம் கிளையாறு..
மயிலாடுதுறையின் தலைமாட்டில் ஒடுது
நைனார் வாய்க்கால் என்னும் அந்த ஆழமில்லா கிளையாறு.
கிளையாற்றைக் கிளறி ஒரு சிறு பங்கு நீரை
வயல் காடுகளுக்கு விட..
பத்தாண்டுகளாக..
மனுப்போட்டு மனுபோட்டு
பார்த்தார்களாம்…

குணமுள்ள குருட்டு அதிகாரிகளும் பார்க்கவில்லை
சிறப்பான செவிட்டு அதிகாரிகளுக்கும் கேட்கவில்லை.
ஆதலால் விவசாய சிற்றெறும்புகள்…
தான் சேர்த்த செல்வங்களைப் போட்டு..
ஊரே மண்ணை ஒதுக்கி நீரைத் திருப்பும்
வேலையில் இறங்கிவிட்டார்கள்.
அகரமேட்டிலிருந்து வாஞ்சாத்து
வரை 4கிமீ கிளையாறை தூர்வார 4 லட்சம்
செலவாகியிருக்கிறது.
அது செலவல்ல முதலீடு ஆம்
அதனால் 800 ஏக்கர் விளைநிலங்கள்
நீர்குடிக்கப்போகின்றது.எத்தனையோ
குடும்பங்கள் தற்கொலையிலிருந்து தப்பிக்கப்போகின்றது.
ரோஜாக்களின் மெல்லிய சிரிப்புக்கு முக்கியத்துவம் தருகிற கூட்டம்.ஏனோ
துளசிப்பூக்களின் தூக்கமில்லா கதறல்களை கண்டுகொள்வதேயில்லை.
அந்த வாய்க்காலுக்கு வாயிருந்தால் அரசை
வாய்க்கு வந்தபடி திட்டிவிடும்.
அரசாம் அரசு… அடத்தூ..
ஆளும் முதலாளி வர்க்கத்துக்கு
முட்டி பதித்து கும்பிடுபோட
தொழிலாளிகளின் தோல்களை
உ(வி)ரித்துக்கொள்கிறது.
அரசாம் அரசு… அடத்தூ..
நெல்மணி நெல்மணி என்கிறோம்
இந்த நூற்றாண்டின் அந்திப்பொழுதுகளில்
நெல் நிஜமாக மணி,பவளம்,முத்துக்கு
இணையாக வைக்கப்படும்….
இல்லை
அணைக்கரை தாலுகாவில்
அகழ்வைப்பகம் கட்டி
அதில் பார்வைக்கு வைக்கப்படும்.
.
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை நோக்கி…

அடுத்து மகிழுந்து தரங்கம்பாடி நோக்கி நடந்தது. மலர் குவிந்த சாலை ஓரங்களில் மண்ணே தெரியாத படி மறைத்திருந்த புல்லும் நெல்லும் கணினிகளையே பார்த்து திரை விழுந்த கண்ணைக்கழட்டிவிட்டு இந்தா வைத்துக்கொள்ளென்று இன்னொரு கண்ணைக்கொடுத்தது. இதை ரசிக்கவா அதை ரசிக்கவா என்று கொஞ்சம் கொஞ்சம் ரசித்துக்கொண்டிருந்த போதேகொண்டு வரப்பட்டோம் .17ம் நூற்றாண்டின் எச்சம் டேனிஷ் கோட்டைக்கு,

Oorkuruvigal 3

டேனீஷ் காரர்கள் வெளிப்படையாக உறவாடியதும்,மறைமுகமாகக் களவாடியதும் அங்கே தான். நாம் ஏன் வீழ்ந்துகிடந்தோம் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். நாம் கத்தி வீச கற்றுவைத்திருந்தபோது அவன் கந்தகம் வீச கற்றுவைத்திருந்திருக்கின்றான். கோட்டையைச் சுற்றி பீரங்கிகளுக்குத் தனித்தனி துளைகள் இடப்பட்டிருக்கின்றன. கடல் வந்து முட்டும் கோட்டையில் உள்ள அகழ்வைப்பகம்(Museum!) நிறைய வரலாறு வரலாறு தான். வரலாறுக்குள் வளைந்து வளைந்து சென்றுவரவேண்டுமானால் ஒரு நாள் முழுக்க வேண்டும் .ஆனால் கிடைத்தது ஒரு மணி நேரம் தான்.

பூம்புகார் நோக்கி…

அடுத்து வேகம் கூட்டிய மகிழுந்து பூம்புகார் தலைநகருக்கு வந்தடைந்தது. பூம்புகார் தற்போது தலையில் வைத்துக்கொண்டாடப்படுவதில்லை என்றாலும். கண்ணகியெனும் கருத்தசிலை உள்ளது. வரலாறுகளின் வால்கள் இருக்கையில். எனக்கு தெரிந்து அதுவே வீரவரலாறுகளின் தலையாக இருக்கிறது. தற்போதைய பெண்புரட்சிக்கெல்லாம் பாட்டி அவள் தான். தவறிய நீதிக்கு தர்மத்தால் பெரிய சூடு வைத்துவிட்டு போயிருக்கிறாள்.
அந்த நெய்தல் நில‌த்தில் கடலும் கடலைச்சுற்றி கல்லும் நிறைந்திருந்தது. கல்லைத்தாண்டி போனால் கடலோடு பேசலாம். ஆனால் கல்லைத்தாண்டுவதற்கு தான் எல்லோருக்கும் பயம்.

ஆனால் பயமே அறியாத பூம்புகாரின் புத்திரர்கள் மீனவ நண்பர்கள் அப்படியல்லவே.
அவர்களைச் சந்திக்க சென்றோம். புளங்காத வீட்டுக்குள் சாம்பிராணி புகை எப்படி நுழையுமோ அப்படியாக அவர்களின் துன்பக் குகைக்குள் நுழைந்தோம். ஒரு வாரம் முன்னர் தான் மீன்பிடிக்க சென்ற தன் சக நண்பர்களையும்,அண்ணன் தம்பிகளையும்,படகுகளையும் இலங்கை அரசு சிறைபிடித்து கொண்டுபோய்விட்டதாம்.

Oorkuruvigal 4

அவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்று போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அவர்களின் கண்ணீர்க் கடல் மணலை உப்பாக்கி கொண்டிருக்க. தூரத்தில் படகு ஒன்றில் பறந்துகொண்டிருந்த ஒரு சிவப்புத்துண்டு ஐயய்யோ..ஐயய்யோ..என்று நெஞ்சில் அடித்து அழுதுகொண்டிருந்தது. வறண்ட நாவுடனும் கனத்த மனதுடனும் திரும்பி வந்தோம்.

அருகிலுள்ள திருநகரிக்கு செல்லலாம் என்று கிளம்பியபோது, ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க.வினர் சாலையை மறிக்கத் தொடங்கியிருந்தனர். ஓ.என்.ஜி.சி-க்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வரும் திருநகரி பகுதி மக்களை சந்திக்காத வருத்தத்துடன் தங்குமிடம் நோக்கி வருகையில் முக்கிய சாலையைத் தவிர்த்து, குறுக்கு வழியில் சென்றோம்.வரும் வழியில் உணர்ந்துகொண்டோம் காவிரிப்பிரதேசத்தின் உயிர் அந்த சிறு குறு ஊர்களில் உள்ளதென்று.அவர்களின் வயலும் வயல் சார்ந்த வாழ்வும் வாடிவிடக்கூடாது என்ற வாசகம் மட்டும் இளையராஜா பாடலையும் தாண்டி காதுகளில் கதறிக்கொண்டே வந்தது.

தொடரும்…

இரா. சங்கர் – இளந்தமிழகம் இயக்கம்

புகைப்படங்கள் – தோழர்.ஜெனி

About இரா.சங்கர்

2 comments

  1. படங்களும் பாவரிகளும் நன்று
    தொடருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*