Home / அரசியல் / வெடிகுண்டு, துப்பாக்கிகளின் மீதான வழிபாட‌ல்ல – புரட்சி

வெடிகுண்டு, துப்பாக்கிகளின் மீதான வழிபாட‌ல்ல – புரட்சி

கேளாத செவிகள் கேட்கட்டும் எனும் தலைப்பில் இளந்தமிழகம் இயக்கத்தின் பெங்களூர் பிரிவு நடத்திய பகத்சிங் பிறந்த நாள் நினைவு கருத்தரங்கில் இளந்தமிழகம் இயக்கத் தோழர்.கதிரவனின் உரை வீச்சு..

தோழர்களுக்கு வணக்கம். பகத்சிங் என்னும் பெயரை நாம் கேட்கும் போதெல்லாம் நம்முடைய நினைவுக்கு வருவது அவர் ஒரு புரட்சியாளர்; விடுதலை போராட்ட வீரர் என்பது போன்ற அவருடைய தியாகம்தான். ஆனால், தன்னுடைய வாழ்நாளில் பகத்சிங் எதைப் பற்றி சிந்தித்தார், யாரை நோக்கி பேசினார் என்று நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

கார்ல் மார்க்ஸ் பற்றிய புகழ்மொழி ஒன்று உண்டு, ‘ மார்க்சுக்கு முந்தைய வரலாறு அனைத்தும் மார்க்ஸில் முடிந்து, மார்க்சுக்கு பிந்தைய வரலாறு அனைத்தும் மார்க்சிலேயே தொடங்குகிறது’. அதேபோல, இந்திய விடுதலை வரலாற்றில் புரட்சி என்பதன் தொடக்கம் பகத்சிங் என்கிற 23 வயதில் தூக்குக்குச் சென்ற இளைஞனிடம் இருந்துதான் தொடங்குகிறது.

காங்கிரசில் இருந்த தலைவர்கள் வெள்ளை அரசோடு பேச்சு வார்த்தை நடத்தி சீர்திருத்தங்களை பெற்றுக் கொண்டு இருந்த காலகட்டத்தில், அவர்கள் செய்துகொள்வது சமரசமல்ல; சரணாகதி என்று விமர்சித்தார் பகத்சிங். அதேபோன்று, இன்றைய இளைஞர்கள் நரேந்திர மோடியைத் தவிர வேறு யாரு இருக்கிறார் என்று கேள்வி எழுப்புவது சரணாகதிப் போக்கே. சமரசம் என்பது போராட்டக் காலங்களில் ஓரடி முன்னேறிவிட்டு சிறிது ஓய்வு என்கிற பொருளில் அமைய வேண்டுமே ஒழிய கொண்ட குறிக்கோளில் இருந்து விலகி முற்றிலும் சரணடைவதாக இருக்கக்கூடாது என்னும் தெளிவு அவரிடம் இருந்தது.

அப்போது வெள்ளை அரசால் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களை, இளைஞர்கள் பகுத்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு பின்வரும் வழிகளைக் கூறினார்,

முதலாவது, மக்களுக்கு சென்று சேரும் பங்கின் அளவு, அதாவது எத்தனை விழுக்காடு மக்கள் இந்தத் சீர்திருத்தங்களினால் பயனடைகிறார்கள். இந்திய ஒன்றிய அரசு தற்போது ” மேக் இன் இந்தியா” என்னும் திட்டத்தை கொண்டு வருகிறது. இதன் பயன் மக்களுக்கானதா அல்லது பெருமுதலாளிகளுக்கானதா ? என்று நாம் சிந்திக்க வேண்டும்.

இரண்டாவதாக, செயல்படுத்தும் நிறுவனங்களின் அமைப்பு வடிவம் என்பது எவ்வாறு இருக்க வேண்டும். இந்த நிறுவனத்தில் செயல்படக்கூடியவர்கள் மக்களுக்கு எவ்வளவு அருகில் இருந்து சிக்கலை உணர்ந்தவர்கள். உதாரணமாக, தமிழநாட்டில் மின்கட்டண உயர்வு வரும் போதெல்லாம், மக்கள் கருத்துகேட்புக் கூட்டங்கள் நடத்தி முடிவு எடுத்ததாக அறிக்கைகள் வரும் ஆனால், அப்படியான கூட்டங்கள் நடத்தப்பட்டதாக நான் இதுவரை கண்டதில்லை.

மூன்றாவதாக, இந்த சீர்திருத்தங்கள் மூலம் உருவாகக் கூடிய வருங்கால வாய்ப்புகள், தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பற்றிய தெளிவு வேண்டும். ஆனால் இன்றைய புதிய நடுத்தர இளைஞர்களின் நிலையோ தங்களுடையோ பணிப்பாதுகாப்புக்குக் கூட ஒருங்கிணைய வேண்டும் என்னும் எண்ணம் இல்லாமல்தான் உள்ளனர்.

10632828_587463184710344_5833702973925375723_n-620x330
யானைக்கு சோற்று கவளத்தை உருட்டி கொடுக்கும் பொது சிந்தும் சில பருக்கைகளை எறும்புகள் எடுத்துக் கொள்ளும், நமக்கு உருவாக்கி இருக்கும் வேலைவாய்ப்புகள் அதுபோன்றதுதான், அதற்கான பணிப்பாதுகாப்பு என்பதோ கேள்விக்குரிய ஒன்றாக உள்ளது. பெரிய ஆலைகளை உருவாக்கும் போது அதனை ஒட்டிய பாதுகாப்பு விடயங்களை பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. கூடங்குளம், மிதிவிர்டி போன்ற இடங்களில் கட்டப்பட்டுள்ள அணு உலைகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நாம் அறிந்து கொள்வது அவசியம். ஆனால், இன்றைய புதிய நடுத்தர இளைஞர்களின் நிலை என்பது தங்களுடைய உரிமைகளுக்காகக் கூட குரல் கொடுக்காத, அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்கிற கூட்டுச் சிந்தனையே இல்லாத நிலையாகத்தான் உள்ளது.

தோழர் நிதின் ” நான் ஏன் நாத்திகன்” என்னும் பகத்சிங்கின் விளக்கம் குறித்து பேசினார், அதில் வறுமை குறித்து பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கும்,” வறுமை என்பது பாவமல்ல; அது ஒரு சமூகக் கொடுமை”. ஆனால் வறுமை என்பது பாவம் என்றே எண்ணும் இன்றைய இளைஞர்கள்தான் தங்களால் முடிந்த நல்லது எனும் எண்ணத்தில் அநாதை இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் சென்று உணவு வழங்குகின்றனர்.

புரட்சி பற்றி தெளிவான விளக்கம் ஒன்றைத் தருகிறார் பகத்சிங், அதை இங்கு அப்படியே படித்திட விரும்புகிறேன்.

“புரட்சி என்பது ரத்தவெறி கொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்ள அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடும் அல்ல. புரட்சி என்பதன் மூலம் வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக அமைப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதே.” அதாவது சமூக மாற்றத்திற்க்கானதே புரட்சி என்று கூறும் தோழர் பகத்சிங் தனிமனிதர்களால் மாற்றம் சாத்தியமில்லை என்று சொன்னார்.

இன்றைய புதிய நடுத்தர வர்க்க இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டியதும் அதுவே. சர்வாதிகாரம்தான் இந்த நாட்டிற்கு சரிவரும் என்று பேசும் இளைஞர்கள் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளனர். அவர்களேதான் மோடியால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பேசியவர்கள்.

இப்படியாகப்பட்ட இளைஞர்களின் மத்தியில் வேலை செய்து அடித்தட்டு மக்களின் வாழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்களது அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவைக்க வேண்டியதை நோக்கி நாம் செயல்பட வேண்டியுள்ளது.

பகத்சிங்கின் சிறைகுறிப்பில் உள்ள ஒரு வாசகத்தோடு என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன். ” நான் ஒரு மனிதன்,சமூகத்தை பாதிக்கும் எல்லாவற்றையும் குறித்து எனக்கு அக்கறை உண்டு” என்பதை மனதில் இருத்திச் செயல்படுவோம்.

நன்றி! வணக்கம் !!

About கதிரவன்

One comment

  1. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*