Home / பொருளாதாரம் / இயற்கை வளம் / ஊர்க்குருவிகளின் முதல் கீச்சு – பகுதி 2

ஊர்க்குருவிகளின் முதல் கீச்சு – பகுதி 2

இரண்டாம் நாள் :

மறுநாள் இன்னொரு வேப்பங்குச்சி, சின்னதான சாப்பாடு, கடல் மீன் உண்டு விட்டு வந்து விட்டோம் திருவாரூர் அருகிலுள்ள வெள்ளக்குடி கிராமத்திற்கு.
ONGC….!!

ONGC என்பது– எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் நிறுவனம். அப்படித்தான் இந்தியா சொல்லிக்கொண்டிருக்கின்றது. தீபகற்ப இந்தியாவைக் கடல் சூழ்ந்திருப்பது போல் அந்த ஊரை ONGC மூன்று பக்கமும் சூழ்ந்திருந்தது. அதைக் குட்டி ”தீக்கக்கும் இந்தியா” என்று சொல்லலாம்.

Oorkuruvigal 5

ஆம் எடுத்துக்காட்டாக நீங்கள்இரவில் உஙகள் வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கிறீர்கள். நல்ல தூக்கத்தில் யாராவது வந்துவீட்டைத் தட்டித் திறந்து வீட்டை வீட்டு ஓடு, . நான் சொல்லும் போது திரும்பி வா என்று சொன்னால் எப்படி இருக்கும்.

“—————————————————————————————————————————–”

நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை இந்த இடத்தில் நிரப்பி விட்டு அடுத்து படியுங்கள். இதே மாதிரி ஒரு நிலைமைதான் இந்த ஊரில் உள்ள மக்களுக்கும். அதுவும் நேற்று இன்று அல்ல, 25 வருடங்களுக்கு மேலாக….! எப்படியிருக்கும்…!!

எதற்காக என்றால் ONGC எரிவாயுக் குழாய்கள் அடிக்கடி வெடிக்குமாம் . அப்படி வெடி விபத்துகள் ஏற்படும்போது தான் மேற்சொன்ன சம்பவங்கள் நடக்கும். ஒவ்வொரு நாளும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழும் அவல நிலையில் 26 ஏழை குடும்பங்கள் சிக்கித் தவிக்கின்றன. அவர்கள் வாழும் இடங்கள் அனைத்தும் பட்டா நிலங்கள். அவர்களை அங்கிருந்து துரத்திவிட ONGC நிறுவனம் நேரம் பார்த்துக் கொண்டேயிருக்கிறது. அவர்கள் வாழும் பகுதியில் நிலத்தடி நீர் உப்பாகிவிட்டது. குடிதண்ணீருக்காக பல மைல் தூரம் அலையும் அவலம் வெள்ளக்குடி மக்களையும் விட்டு வைக்கவில்லை. ONGC நிறுவன புகை போக்கியில் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் தீ, அந்தப் பகுதியின் உயர் வெப்பநிலையின் இரகசியத்தை நமக்கு உரக்கச் சொல்கின்றன. இரசாயனப் புகையால் நாய்கள் இறந்து போகின்றன. கோழி, ஆடு அதுவும் தான், மாடுகள் சரியாக பால்கறப்பதில்லை . விவசாயம் செய்ய வழியில்லை.வெளியூருக்கு ஆண்கள் வேலைக்கு சென்று விட்டார்கள். செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி அரசாங்கம் அப்படியே இருக்கிறது. காவேரி கரையோரம் குடிக்கத் தண்ணீர் இல்லை சாமி…!!

Oorkuruvigal 6

இத்தனை இன்னல்களுக்கு அப்புறமும் அங்கே இராட்சத இயந்திரம் பெரு ஒலியை எழுப்பிகொண்டே இருந்தது.அந்த ஒலியின் சந்(த்)தம் இப்படியாக இருந்தது.

சாஆவு… சாஆவு..சாசாஆவு..

கமலாபுரம் நோக்கி…

அடுத்து எங்கள் வண்டி கமலாபுரம் அருகிலிருந்த தற்காலிகமாக முடக்கு போட்ட ஒரு ONGC ஆழ்துளைக்கிணறு நோக்கி சென்றது. எரிவாயு என்று சொல்லி மீதேனையும் உறிஞ்சி விட்டு மூடிக் கிடந்தது அது. அந்த சுற்று வட்டாரப்பகுதி நல்ல நெல் விவசாயம் . எல்லாம் போச்சு.!!

Oorkuruvigal 7

வாழ்ந்து கெட்ட குடும்பம் மாதிரி .அது எவ்வளவு செழிப்பாக இருந்திருக்குமென்பது நன்றாகவே தெரிந்தது.

அடுத்தததாக அருகில் சாருவன் என்ற இடத்தில் ஒரு நிமிடம் .இந்த ஊர்களின் பெயர்களையெல்லாம் கவனித்தீர்களா ? எல்லாம் எதோ நம் முன்னோர்களின் வரலாறுகளையும் வாழ்க்கைகளையும் சுமந்து நிற்பது போல் தெரிகிறதல்லவா. ஆம் நாங்கள் பார்த்த நிறைய ஊரின் பெயர்கள் ஏதோ சொல்ல வருவது போல் இருக்கிறது . சிங்களாஞ்சேரி என்ற ஊர் கூட பார்த்து திகைத்தோம். உண்மையில் காவிரிப்படுகை நிலங்கள் நம் பழமையின் எ(மி)ச்சம்.

சரி சாருவனுக்கு வருவோம். இங்கே ஒரு ஆண்டுக்கு முன்பு விவசாய நில‌த்திற்கடியில் சென்ற கச்சா எண்ணெய் குழாய் கசிந்து நிலமெல்லாம் நாசமாகிப்போனது . இன்னொரு தடவை இதே வார்த்தையை பயன்படுத்துவது மிகச்சரியாக இருக்கும். நாசமாகிப்போன நிலத்தை பார்த்தோம். வழுக்கைத்தலையில் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ முடி இருக்கும். ஆனால் இங்கு ஒரு களை கூட முளைக்கவில்லை.

ஒருஆண்டிற்குபிறகும் நாற்றம் வந்து நாசியைத் துளைத்துக் கொண்டிருந்தது. கேவலம் பிடித்த அரசு. விளைநிலத்தை வீணாக்கிவிட்டு . விமானம் ஓட்டினால் வளர்ந்து விடுமோ. பக்கத்து நாட்டுக்கு நிகராக எடைக்கு எடை அணு குண்டுகளை தயாரித்தால் வளர்ந்துவிடுமோ .

அந்த எண்ணெய் எங்கெல்லாம் பரவுகிறதோ அந்த நிலமெல்லாம் கெட்டு விடும். எந்த மண்ணை அதில் நிரப்பினாலும் சரி. இது பல முயற்சிகள் செய்து தோற்ற விவசாயிகள் சொன்னது. இந்த ஜென்மத்துக்கு அந்த இடத்தில் ஒரு ப(ம)யிரையும் விளைவிக்க முடியாது. ONGC-க்குத் தேவையென்றால் எந்த நிலத்திலும் எதுவேண்டுமானாலும் பண்ணலாம்.

Oorkuruvigal 8

எதிர்த்து கேட்டால் மக்கள் வதைக்கப்படுகிறார்கள். வாருங்கள் நாடும் நாமும் பெருமை கொள்வோம். ”காவிரி விவசாயிகளின் பூமி என்று…!!”
கொரடாச்சேரி அவலம் :

அடுத்து கொரடாச்சேரிக்குச் சென்றோம். அங்கே விவசாய நிலங்களின் அடியில் பதித்த குழாய்கள் கசிந்ததில் எங்களுக்குக்கு தெரிந்து ஐந்து குடும்பங்களின் வாழ்க்கையும் வயலும் கருகிவிட்டது. இதற்கு முன்னர் நடந்தது ஓராண்டு முன்பு இது ஒரு வாரம் முன்பு. சுடச்சுட! ஆம்.

Oorkuruvigal 9
நாங்கள் போய் அந்த கச்சா(கசிந்த) எண்ணெயில் கால்வைக்கும் பொழுது எண்ணெயின் வெப்பத்தையும் அந்த விவசாயிகளின் வயிற்றில் எரியும் வெப்பதையும் சேர்த்து உணர்ந்தோம். இதை இந்த உவமைக்கு மேல் சரியாக சொல்லமுடியாது என்று நினைக்கின்றேன். முகமெல்லாம் அமிலம் வீசி பாதிக்கப்பட்ட ஒரு ஆடவனின் முகத்தில் தாடி எப்படி வளராதோ அதே போல் அந்த நிலத்தில் பயிர்கள் வளராது.வளரவே வளராது.

Oorkuruvigal 10

ஒன்னறறை மீட்டர் ஆழத்தில் அந்த குழாய்களைப் பதிக்கவேண்டும். ஆனால் மூன்று அடியிலும், சில இடங்களில் தரைக்கு மேலேயும் குழாய்கள் செல்கின்றன. ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை அந்தப் பழைய குழாய்களை மாற்றவேண்டும் . ஆனால் அவர்களின் தாத்தா பாட்டி காலத்திலிருந்தே அது மாற்றப்படாமலே இருக்கிறது. விவசாயிகளின் தற்போதைய குறைந்தபட்ச கோரிக்கை “குழாய்களை மாற்று”. ஆனால் விரிவான கோரிக்கைகளோடு சென்றோம்.அதில் இந்த குறைந்த பட்ச கோரிக்கையும் சேர்த்துக்கொண்டோம். ONGC மற்றும் இதர நிறுவனங்கள். நமக்கு உணவு தரும் இந்த காவிரி படுகையில் மீத்தேன் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதை நிறத்தமுடியுமா என்றால் . முடியும் .அதற்கு மக்கள் நாம் ஒன்று சேரவேண்டும். சுயநலம் புழுவாய் இருந்தால் அதை பூனைகள் தின்றுவிடும். நாம் பொது நலயானைகளாக இருப்போம்.

வாருங்கள்.!!

மீத்தேன் மற்றும் இயற்கை எரிவாயு முறை பற்றி இணையத்தில் அல்லது புத்தகங்களில் படியுங்கள். எங்களிடம் கேட்கவே வேண்டாம் உணர்விருந்தால் நீங்களே களத்தில் இறங்கிவிடுவீர்கள்.

இறுதியாக…

அடுத்து நாகப்பட்டினம் நோக்கி சென்றோம்.செல்லும் வழியில் ஈழப்பாடல்களையும் சில தமிழ் பாடல்களையும் ஊர்க்குருவிகளில் உள்ள குயில்கள் பாடிகொண்டே வந்தது.இந்த பயணம் முழுக்க அரசியல், தத்துவம், உளவியல், இலக்கியம் என அனைத்துவிதமான விவாதங்களையும் சுவையான தகவல்களையும் ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டே வந்தார்கள். நாகபட்டினம் செல்லும் வழியில் சிக்கல் என்னுமிடத்தில் உள்ள பூம்பூம் மாட்டுக்கார இனத்தவர்களின் பிள்ளைகளுக்காக தோழர்கள் நட்ராஜ், ரேவதி தொடங்கியுள்ள பள்ளிக்கு வந்தடைந்தோம்.அது பள்ளியல்ல புது அனுபவம். கல்வி முறையே மாற்றப்பட்டிருக்கிறது. அங்குள்ள குழந்தைகள் மாணவர்களாக இல்லாமல் அவர்களின் குழந்தைகளாக வளர்க்கப்படுகிறார்கள்.

அவர்களோடு கொஞ்ச காலம் தங்கிவிடலாம் போலிருந்தது. நிறைவாக அவர்களிடமிருந்து பிரியாவிடைபெற்று ஊர்க்குருவிகள் சென்னையை நோக்கி தங்கள் சிறகை சுழற்றத்தொடங்கியபோது ஒரு சிறகின் ஓரத்தில் பெரும் மகிழ்ச்சி ஒழிந்துகொண்டிருந்தது. மற்றொரு சிறகில் கண்ணீரின் ஈரமும்.சில காய்ந்த ரத்தத்தின் சுவடும் ஒட்டிக்கொண்டிருந்தது. பெரும்பாலும் மனிதர்களின் பயணங்கள் மகிழ்ச்சியை நோக்கியதாகவே இருக்கிறது. உண்மையில் பயணங்கள் பிறர் பயன்படுவதற்கும்,நாம் பண்படுவதற்க்கும்.

 நல்ல கனல் உள்ள வெற்றுப்பாத்திரத்தில் சிறு தண்ணீர் ஊற்றினால் தண்ணீரும் பற்றி எரியும். அது போல போராட்டங்களின் முக்கியத்துவத்தில் உள்ளது சாதாரண மனிதனை சரித்திர வீரனாக மாற்றும் உ(ச)க்தி.
சேகுவராவை ஒரு மாபெரும் போராளியாக ஆக்கியது அவரின் நீண்ட பயணம் தான் என்பதை இந்த பயணத்தில் உணர்கிறோம்.

ஊர்க்குருவிகள் அடுத்தும் பறக்கும்.

கூடுகளை உடைக்க அல்ல ..கூண்டுகளை உடைக்க…

இரா சங்கர் – இளந்தமிழகம் இயக்கம்

புகைப்படங்கள் – தோழர்.ஜெனி

About இரா.சங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*