Home / FITE சங்கம் / மரியாதைக்குரிய ஐ.டி. துறை நண்பனுக்கு…

மரியாதைக்குரிய ஐ.டி. துறை நண்பனுக்கு…

ஐ.டி. துறை நண்பனுக்கு வணக்கம்…உன்னுடைய சக ஊழியன் பேசுகிறேன்.

நம்மைப் போன்றவர்களை மிகவும் மரியாதையுடனும், பெருமையுடனும் பார்க்கின்றேன். என் ஊரிலேயே வேலை வேண்டும் என்றிருந்த சமூகத்தில் வேலைக்காக பெருநகரங்களை நோக்கியும், கடல் கடந்தும் சென்றவர்கள் என நம்மைப் பற்றி எனக்குள் ஒரு இனம் புரியாத கர்வமே உண்டு.

கடல் தாண்டினால் தீட்டு என்று சொல்லிக் கொண்டு பின்னர் வேலைக்காக கண்டம் தாண்டியவர்களை நான் இங்கு சொல்லவில்லை, முதல் தலைமுறையாக கல்வி கற்று நகரங்களின் நெருக்குதல் கண்டு அஞ்சாமல் இடம்பெயர்ந்தவர்களைப் பார்த்தே பெருமையடைகிறேன்.

முதல் தலைமுறை படிப்பாளியாக மட்டுமல்லாமல், நம் பெற்றோர்களின் வாழ்நாள் கனவான சொந்த வீட்டையும், சொகுசாக நினைக்கப்பட்ட காரையும் நனவாக்கியவர்கள் நம்மில் ஏராளம். இவ்வளவு ஏன், கண்டம்விட்டு கண்டம் தாண்டி பணிக்கு சென்ற நம்மில் சிலர் தங்களுடைய பெற்றோர்களையும் அழைத்துச் சென்று வானூர்திப் பயணத்தை மெய்யாக்குவதும் நம்மைச் சுற்றி நடக்கக் கூடிய ஒன்று.

நேற்று இருந்த நம்முடைய குடும்ப பொருளாதார, வாழ்வியல் நிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், நாம் உறுதியாகக் கூறலாம் நாம் வளர்ந்துவிட்டோம் என்று. அதே சமயம், 1990-களுக்குப் பிறகான சந்தைப் போக்கில் நாம் நம் தேவைக்கு அதிகமாக நுகர்வதும், உதிரிகளாக தனித்துப் போயிருப்பதும் உற்று நோக்கினால் மட்டுமே புலப்படும்.

நமது வேலை வாய்ப்புகளினால் நமக்குக் கிடைத்த பொருளாதார சுதந்திரம், நம்மை மற்றவர்களின் துணையின்றி தனித்து வாழக் கூடிய வர்க்கமாக மாற்றியதோடு, தனிநபர் சாதனைகளால் அனைத்தும் சாத்தியம் என்று ஏற்றுக்கொள்ள வைத்துள்ளது. இது நம்முடைய கூட்டு வாழ்வையும், கூட்டுச் சிந்தனையையும் உடைத்துவிட்டது.

நம்முடைய குடும்ப பொருளாதார, வாழ்வியல் நிலை மாறியிருக்கிறது, நாம் வளர்ந்திருக்கிறோம் என்று எண்ணும் அதே நேரத்தில், நாம் சந்தித்திருக்கும் இந்த வளர்ச்சிகளும், மாற்றங்களும் நீடித்த ஒன்றா? எனும் கேள்வி என்னுள் இருந்து கொண்டே இருக்கிறது.

நுகர்வையும், தனிக் குடும்ப வாழ்வியலையும் கைகொண்ட நாம், நம்முடைய உரிமைகளுக்காகக் கூட ஒன்றிணைய முடியாதவர்களாக இருக்கிறோம் என்கிற குறுகுறுப்பு எனக்கு இருந்துகொண்டே இருக்கிறது.

நான் மட்டும்தான் தவறாக நினைக்கிறேன் என்றும், இதில் இருந்து விடுபட வேண்டும் என்று எண்ணி நுகர்வு போதைக்குள் என்னை நுழைத்துக் கொள்ள முயற்சி செய்கிறேன். ஆனால், நமக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் நீடித்தவை அல்ல என்று எனது காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம், நான் மட்டுமல்ல; நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் அவ்வாறே உள்ளது.

layoff-thumb

நம்முடைய வளர்ச்சி நீடித்த ஒன்று அல்ல என்று நான் நினைப்பதற்கு முக்கியக் காரணம், பணிப் பாதுகாப்பற்ற நம்முடைய ஐ.டி துறைதான். பொருட்களை வாங்கிக் குவிப்பதுதான் வளர்ச்சி என்கிற எண்ணம் கொண்ட நாம், வாங்கும் திறனுக்காக நம்முடைய உரிமைகளை அடகு வைத்துள்ளோம் என்று புரிந்து கொள்ளும் போது அதிர்ச்சியாக மட்டுமல்ல; நம்மைப் போன்றவர்களைப் பார்த்து பரிதாபமாகவும் உள்ளது.

* இந்த(2014) ஆண்டின் தொடக்கத்தில் ஐ.பி.எம் தன்னுடைய கணிப்பொறி பிரிவில் வேலைப் பார்த்த 40-க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பியது.

* பேலி டெக்னாலஜீஸ் (Bally Technologies) என்னும் நிறுவனம், தன்னுடைய மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 10 விழுக்காட்டைக் குறைப்பதாக அறிவித்து நடவடிக்கை மேற்கொண்டது.

* சிஸ்கோ(CISCO) என்னும் நிறுவனம் தன்னுடைய பெங்களூர் பிரிவில் ஆட்குறைப்பு செய்தது.

* தற்போது யாஹூ (YAHOO) என்னும் இணைய நிறுவனம் தன்னுடைய பெங்களூர் பிரிவில் மிகப்பெரிய ஆட்குறைப்பைச் செயல்படுத்தி கொண்டிருக்கிறது.

* ஹெச்பி (HP) நிறுவனம் தன்னுடைய நுகர்வு மின்னணு சாதனப் பிரிவை தனியாகப் பிரித்து மறுசீரமைப்பு செய்யும் போது 5000 மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழப்பர் என்று அறிவித்துள்ளது.

இத்தனை நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வது என்பது எனக்கு வெறும் தனிநபர் திறமை சார்ந்த சிக்கலாகத் தெரியவில்லை. சக ஊழியர்களான நீங்களும் இதை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அதே நேரத்தில், நிறுவன‌ங்கள் நட்டத்தில் இயங்கும் போது இது போன்ற ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நடப்பது வழமை என்று தட்டையாகப் பார்க்க என்னால் இயலவில்லை.

உதாரணமாக, சென்னையில் மூடப்படவிருக்கும் நோக்கியா ஆலையை எடுத்துக் கொள்வோம். அதை விலை கொடுத்து வாங்கியிருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் லாபம்தான், விற்பனை செய்த நோக்கியவிற்கும் லாபம்தான். ஆனால் தெருவில் நிற்பதோ நம்மைப் போன்ற தொழிலாளர்கள்தான்.

இந்த ஆண்டு நம்முடைய நிறுவனம் சிறப்பாக செயல்படவில்லை, லாபம் குறைவு என்று கொடுக்கப்படும் தகவல்கள் அனைத்தும் அறுதியிட்ட லாபத்தை அடைய முடியவில்லை என்பதையே குறிக்கின்றது என்று நமக்கு நினைவூட்டிக் கொள்ள விரும்புகிறேன்.

layoff-in-india

நமக்கான சிக்கல்கள் ஏராளம் இருந்தும், எனக்கு நாம் அனைவரும் பாதிக்கப்படக் கூடிய சிக்கலாக தெரிவது பணி பாதுகாப்பின்மையே. இதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் எனக்கும் விடை தெரியாமல்தான் உங்களை நாடுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை, நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது அடுத்தகட்டம். அதற்கு முன்னர், இப்படி ஒரு சிக்கல் இருப்பது பற்றி நாம் உணர்ந்திருக்கிறோமா? என்ற கேள்வியுடனேயே இந்த கடிதத்தை எழுதியுள்ளேன்.

இப்படிக்கு,
உங்கள் சக ஊழியன்

======================================

இவ்வரிசையில் மற்ற கடிதங்கள்

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 4

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 3

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 2

About விசை