Home / FITE சங்கம் / மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 2

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 2

ஐ.டி துறை நண்பனுக்கு வணக்கம்!.. மீண்டும் நான் தான், உன்னுடைய சக ஊழியன்.

 நான் உனக்கு எழுதிய முந்தைய கடிதத்தை (மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு) படித்துவிட்டு நிறைய நண்பர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். “நாம் என்ன செய்ய முடியும்?”, “ஏன் தீர்வுகளை முன்வைக்கவில்லை?”, ” பணிப் பாதுகாப்பு தவிர்த்து ஏராளமான சிக்கல்கள் நமக்கு உள்ளதே? “, இவ்வாறு பல கேள்விகள் பல நண்பர்கள் இடமிருந்து வந்தது.

இவ்வாறு வந்த பல கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வேன் என்று ஐயத்தில் இருந்த நேரம், பெங்களூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை பெண் ஊழியர் ஒருவர், நம்முடைய சிக்கலுக்கு தீர்வுகளை நோக்கிய  முதல் கதவைத் திறந்துள்ளார்.

 நம் அனைவருக்கும் தீர்வுகளில் ஒரு பகுதியைச் சுட்டிக் காட்டும் வழியாகவும், இருக்கும் வாய்ப்புகள் பற்றிய தெளிவூட்டும் விதமாகவும் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

செய்தி ஊடகங்களில் எத்தனை இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்தது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நம்மைப் போன்ற ஐ.டி ஊழியர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

 பெங்களூர், சிவி ராமன் நகரில் இயங்கி வரும் அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஷீலா (ஊடகங்கள் இட்ட பெயர்)  என்னும் நம்முடைய சக தோழி 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சரியான காரணங்கள் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 இதற்கும் 2013 மே மாதம்தான் அந்த பெண் ஊழியருக்கு, 8 விழுக்காடு ஊதிய உயர்வும், அவரின் செயல்பாடுகளைப் பாராட்டி சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்ற ஆண்டு அக்டோபர் மாதமே பணிநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு தனிநபர் திறமை மட்டும் காரணமல்ல என்று நாம் முந்தைய கடிதத்தில் பேசியது இவை போன்று நிகழ்வுகளை வைத்துதான்.

 வழமையாக, மேலாளரின் அறைக்கு அழைத்து பணிநீக்கம் செய்யப்படும் தகவல் தெரிவிக்கப்படும். அப்போது நாம் விருப்பப்பட்டு பணியைவிட்டு விலகுவதாக கையொப்பம் பெறுவர். அந்த அறையில் கையொப்பமிட மறுத்து காரணம் கேட்ட நம்முடைய சக தோழியை, நிறுவனக் காவலர்களை வைத்து வெளியே இழுத்து வந்து விட்டுள்ளனர்.

images

அங்கிருந்து தொடங்கியது நிறுவனத்துடனான நம் தோழியின் போராட்டம். நிறுவனத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர் அருகிலிருந்த காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தார். காவல் நிலையத்தில் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்தோடு நின்றுவிடாமல் பணிநீக்கத்திற்கு விளக்கம் கேட்டு நிறுவனத்திற்கு சட்டரீதியாக நோட்டிஸ் அனுப்பியுள்ளார். எதற்கும் பதில் அளிக்காமல் இறுமாப்புடன் இருந்துள்ளனர் நிறுவன அதிகாரிகள்.

நிறுவனத்தில் இருந்து எந்த பதிலும் வராததால், மகளிர் ஆணையத்தை அணுகுவது என முடிவு செய்து, கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தின் கதவுகளைத் தட்டியுள்ளார். ஷீலாவின் புகாரை விசாரித்த மகளிர் ஆணையம் இந்த புகாரை தொழிலாளர் நலவாரியத்திற்கு மாற்றியது.

கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை, மொத்தம் 15 அமர்வுகளாக வழக்கை விசாரித்தது தொழிலாளர் நலவாரியம். முதலில் இழப்பீடு வழங்க மறுத்த அமெரிக்க  நிறுவனம் பின்னர் 10.55 லட்சம் இந்திய ரூபாய்க்கான காசோலையை வாரியத்திடம் அளித்துள்ளது.

ஒரு ஆண்டு வேலையிழப்பு, மன உளைச்சல் காரணமாக ஏற்பட்ட மருத்துவச் செலவுகள், வழக்கு நடத்த ஆன செலவுகள் என அனைத்தும் சேர்த்து 12.5 லட்சம் ரூபாய் ஷீலாவின் தரப்பில் இருந்து கேட்கப்பட்டது. இப்போது 10.55 லட்சம் ரூபாய் தருவதற்கு அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. காசோலையை வாங்க மறுத்து நம் தோழி ஷீலாவின் போராட்டம் தொடர்கிறது.

பணிப் பாதுகாப்பின்மை என்னும் நம்முடைய முதன்மைச் சிக்கலுக்குத் தீர்வு காணும் பாதையில் முதல் படியாகவே இந்த வழக்கை நாம் பார்க்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்பத் துறை போன்ற சேவைத் துறைகளில் பணிபுரியும் நம்மைப் போன்ற ஊழியர்களை சட்டை செய்யாமல் தூங்கிக் கொண்டிருந்த சட்டத்தை தட்டி எழுப்பிய தோழியைப் எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும்.

crop_294247_10150312922432989_652917988_8097376_1105876490_n

அதே வேளை, ஒரு பெண் ஊழியரை குண்டுகட்டாக வெளியேற்றும் போது சக ஊழியர்கள் யாருமே அங்கு இல்லையா? அல்லது இருந்தும் அதைக் கவனிக்கவில்லையா? என்கிற கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

முந்தைய கடிதத்தில் நாம் உதிரிகளாகப் பிரிந்து கிடக்கின்றோம் என்று நம்மைப் பற்றி சொன்னது இதைத்தான் நண்பர்களே!..இதுநாள் வரை நம்முடன் வேலை பார்த்து வந்த ஒரு சக ஊழியரை, நம்மில் ஒருவரை, அதுவும் ஒரு பெண்ணை தர தரவென்று வெளியில் இழுத்து அனுப்ப முடிகிறது என்றால் நம்முடைய பலவீனங்களில் பிழைக்கின்றன நிறுவனங்கள் என்றே என் சிந்தை சொல்கிறது.

நம்முடைய சிக்கல்களுக்கான தீர்வுகளை நோக்கிய பயணத்தில் நாம் முதலில் செய்ய வேண்டியது தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க, நிறுவனங்களுக்கு எதிராகப் போராட முனையும் சக ஊழியர்களின்  தோளோடு தோள் நின்று ஆதரவு அளிப்பதே!


மீண்டும் சந்திப்போம்!


இப்படிக்கு,

உங்கள் சக ஊழியன்.

======================================

இவ்வரிசையில் மற்ற கடிதங்கள்

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 4

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 3

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 2

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 1

About விசை

7 comments

  1. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

  2. நானும் பாதிக்கப்பட்டேன் என்கிற முறையில் எனக்கு இந்த கட்டுரையையும் அதில் குறுப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளையும் படித்ததில் கிடைக்கின்ற முதல் சந்தோஷம் – எனக்கு வராத தைரியம் என் சக தோழி ஒருவருக்கு வந்து முதல் படியை தைரியமாக எடுத்து வைத்துள்ளார் என்பதுவே. வாழ்த்துக்கள்! ஒரு பத்து நிமிடத்தில் ஒரு அறைக்குள் நடந்த நிகழ்ந்த நிகழ்வுகள் என் வாழ்க்கையை புரட்டி போட்டதை என்னால் என்றும் மறக்க முடியாது. அந்த வலியினின்று எனக்குப்பின் யாராவது ஒருவரையாவது காப்பாற்ற முடியுமேயானால் என்னால் இயன்ற உதவிகளை என் தெம்புள்ளவரை செய்ய தயார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விளக்கம் கேட்டால் பிரச்சனை முடியுமா? வழக்கை தொடர்ந்து வலுவாக நடத்த உதவிகள் செய்யலாம் – ஒரு வழக்காவது நடுநிலையில் முடியுமேயானால் அது ஒரு அதிர்வலையை கொண்டு செல்லும். இன்னொருவர் இன்னொரு வழக்கை தைரியமாக ஆரம்பிப்பாரா என்ற கேள்விக்கே இடமில்லை. ஆகையால் இதை விட்டுவிடாமல் வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு ஆவன செய்ய உதவ தயார்! ஒன்று கூடுவோம் நண்பர்களே!!

    • தோழர் தங்களுடைய கருத்துகளை வரவேற்கின்றோம் !
      வாருங்கள் இணைந்து செயல்படுவோம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*