Home / சிறப்புக் கட்டுரைகள் / நோக்கியாவின் சதுரங்க வேட்டை

நோக்கியாவின் சதுரங்க வேட்டை

நோக்கியா ஆலை மூடல்..

ஆயிர‌க்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு …, இது தான் வளர்ச்சியா?

உங்கள் கையில் இருக்கும் அலைபேசியில் இந்தக் குரல்கள் கேட்கின்றதா? என்று பாருங்கள்.

“வெறும் கைப்பேசி பாகங்களை ஒன்று சேர்க்க மட்டும் தெரிந்த எனக்கு இத்தனை வயதுக்கு பிறகு வேறு வேலை கிடைக்குமா?”

“ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் திருமணம் நடக்குமா?”

”கட்டாயமாக்கப்படும் விருப்ப ஓய்வுத் திட்டத்தில் வரும் பணம் சில மாதங்களில் செலவாகி விடும் , நிரந்தரமான வேலை தான் வாழ்க்கைக்கு உதவும்”

திருப்பெரும்புதூர் நோக்கியா மின்னணு சிறப்பு பொருளாதார மண்டலத்தை தங்கள் உழைப்பெனும் மாபெரும் சக்தியினால் உயிர்ப்புடன் வைத்திருந்த ஆயிரம் ஆயிரம் நோக்கியா தொழிலாளர்களின் குமுறல்கள் தான் இவை.

நோக்கியா நிறுவனத்திடம் இருந்தோ அல்லது அரசிடம் இருந்தோ ‘த‌மது வேலைகள் பாதுகாக்கப்படும்’, என்ற சமிக்ஞைக்காக எதிர்ப்பார்த்திருந்தார்கள். ஆனால்,வேறொரு சமிக்ஞையே கிடைத்தது. நோக்கியா நிறுவனத்தின் கைப்பேசி உற்பத்தி வரும் அக்டோபர் 31 ஆம் தேதியோடு உற்பத்தி நிறுத்தம் என்ற அறிவிப்பு தான் வந்துள்ளது. எதிர்காலம் மீதான அச்சத்தோடு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

2005ஆம் ஆண்டு ஆராவாரத்துடன் தொடங்கிய நோக்கியா குறித்து சில நினைவுக் குறிப்புகள்!

• ”திருப்பெரும்புதூரில் 210 ஏக்கரில் ’நோக்கியா’ என்ற கைப்பேசி தயாரிக்கும் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்கிறது” என அன்றைய முதலமைச்சர் செ.செயலலிதா பெருமையுடன் அறிவித்தார்.

• 31,000 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற ஊடகங்களில் விளம்பரங்கள் வந்தன.

• தமிழ்நாட்டில் கால் வைத்த 6 மாதங்களில் “இந்தியாவுக்காக தயாரிப்போம்” என்ற ஆரவார முழக்கத்துடன் நோக்கியாவின் உற்பத்தி 2006 ல் ஆரம்பமானது.

• “பின்னர் ஏற்றுமதியை 50% ஆக உயர்த்த போகிறோம். இங்கிருந்து தென்கிழக்கு ஆசியா,மத்திய கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்போகிறோம், நிறைய கைப்பேசி வகைகளை (மாடல்களை) உருவாக்கப் போகிறோம்” , என்று சூளுரைத்தார் நோக்கியாவின் இந்தியப் பிரிவுக்கான அன்றைய இயக்குனர்,சுக்கா லேக்டேலா (மார்ச் 2007).

• மாதத்திற்கு சுமார் ஒன்றரை கோடி கைபேசிகள் உற்பத்தி செய்யப்பட்டன; ஐந்தே ஆண்டில் 15 கோடி கைப்பேசிகளை உற்பத்தி செய்து சாதனை படைத்தது நோக்கியா.

இச்சாதனைக்கு அடித்தளமிட்டது அங்கு இரவு பகல் பாராமல் உழைத்தத் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களே ! ஆம் நேரடியாகவும், மறைமுகமாகவும் நோக்கியா ஆலையிலும் உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் ஆலைகளிலும் உழைத்த 20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களே ஆவர். உண்மையில் குறைந்த விலைக்கு வாங்கி அதிக இலாபத்திற்கு ஏற்றுமதி செய்யப்ப‌ட்டது அவர்களின் உழைப்பே !

ஆயிரமாயிரம் தொழிலாளர்களின் கனவுப்பட்டறையாக, கிராமப்புற இளைஞர்களின் வாழ்க்கைக்கு நம்பிக்கை உரம் போட்டது, ஆயிரக்கணக்கான கிராமப்புறப் பெண்களை ஆண்களோடு சமமாக திறமை படைத்த தொழிலாளியாக மாற்றியது நோக்கியா போன்ற ஆலைகள் தான் !

ஆனால், இந்த மாற்றங்கள் ஏன் நீடிக்கவில்லை? நோக்கியா ஆலையை மூடுவது ஏன் ?

இந்திய அரசு 24000 கோடி ரூபாய் வரி பாக்கி செலுத்தக் கேட்டதினாலா? நீதிமன்றம் நோக்கியாவின் சொத்துக்களை முடக்கியதினாலா ? அதன் எதிரொலியாய் மைக்ரோசாப்ட் நிறுவனம் சென்னைத் தொழிற்சாலையை வாங்காததினாலா? நோக்கியா கைப்பேசிகள் சந்தையில் மதிப்பிழந்து உற்பத்தி குறைந்ததினாலா? நோக்கியா நட்டம் அடைந்து விட்டதா ? இல்லை , இல்லவே இல்லை ! ( பார்க்க அட்டவணை)

Nokia shut down_pamphlet

திறப்பதும், மூடுவதும், கண்டம் விட்டு கண்டம் தாவுவதும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாடிக்கை!

நோக்கியா கைப்பேசிகள் மதிப்பிழந்து உற்பத்தி குறைந்துவிட்டதால் தான் வெளியேறுகிறதா என்றால் இல்லை. ஏனெனில் , 2008 ஆம் ஆண்டு இதே திருப்பெரும்புதூர் ஆலையில் மாதந்தோறும் கோடிக்கணக்கில் கைப்பேசிகள் உற்பத்தி செய்து கொண்டிருந்த வேளையில் , செர்மனியில் இலாபகரமாக இயங்கி வந்த, போகம் (Bochum) எனும் ஆலையை மூடி ரோமானியாவிற்கு தாவியது. இதில் 4300 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். சில நாட்களில் , கடந்த ஆண்டை விட 67% இலாபம் ஈட்டி சாதனை படைத்ததாக நோக்கியா நிறுவனம் அறிவித்தது. பிறகு , 2012ஆம் ஆண்டு ரோமானிய நாட்டின் ஆலையையும் மூடியது. ஐரோப்பாவிலே கைப்பேசி தயாரிப்பது இலாபகரமாக இல்லை , இனி ஆசியாவிலே தான் தயாரிப்பு என்று காரணம் தெரிவித்தது. இந்த காலக்கட்டத்தில் தான் திருப்பெரும்புதூர் ஆலையில் உற்பத்தி உச்சத்தில் இருந்தது என்பது என்று நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

notice ilanthamizhagam

இதற்குக் காரணம் என்ன ?

இதைத் தடுக்க நம்மிடையே வலுவான சட்டங்கள் இல்லாதிருப்பது ஏன் ? உழைத்த தொழிலாளர்கள் ஒன்று திரண்டுப் போராட முடியவில்லையே ஏன் ?

1991 ஆண்டிற்கு பிறகு அமல்படுத்தப்பட்ட தாராளமயம்- தனியார்மயம்-உலகமயம் (LPG) எனும் புதிய பொருளாதாரக் கொள்கைகளும் அதற்கென்றேவளைக்கப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்களும் பல்வேறு வரிச் சட்டங்களும் வரிச்சலுகைச் சட்டங்களும் ,2005 இல் இயற்றப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டல சட்டங்களுமே இதற்கு காரணம் !

நோக்கியாவைப் பற்றி கேட்டால், ’இனி அப்படி நடக்காது’ என்று லேசாக பதில் சொல்கிறார் வர்த்தக துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆனால்,

வளர்ச்சி எனும் முகமூடியுடன் அரியணை ஏறிருக்கும் மோடியோ, “Make in India” “இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்” என்று உலகெங்குமுள்ள முதலீட்டாளர்களைக் கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருக்கிறார். நோக்கியா போன்று தொழிலாளர்களை வீதியில் விட்டு விட்டு செல்லாமல் இருக்க தொழிலாளர் நலச் சட்டங்களைக் கடுமையாக்காமல் இன்று மேலும் நீர்த்து போக செய்யும் மோடி உண்மையில் யார் பக்கம்? அவர் பாடுபடுவதும் யார் வளர்ச்சிக்காக? நோக்கி போன்ற பெரு நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவா, இல்லை நமக்கான வளர்ச்சிக்காகவா? இது போன்ற நமது கேள்விகளின் போது மோடியும் மன்மோகன் சிங் போல் மௌனம் ஆகிவிடுவதேன்?

என்ன செய்ய வேண்டும் ?

வளர்ச்சி வேண்டும் தான். ஆனால் அது இப்படி நீர்க்குமிழி போல் இருக்கக் கூடாது. நீடித்த வளர்ச்சியாக இருக்க வேண்டும். நமது சூழலையும் இயற்கையையும் சீரழிக்கக்காததாக இருக்க வேண்டும். வெளிநாட்டு மூலதனத்தை நம்பி இராமல் தற்சார்புள்ளதாக தொழிற்துறை வளர்ச்சி வேண்டும். இதுதான் அனைத்துத் தரப்பு மக்களுக்கான வளர்ச்சியியை உறுதி செய்ய முடியும். இதற்கான பொருளாதார கொள்கைகளே நமக்கு வேண்டும்.

இந்திய அரசே ! தமிழக அரசே !

• வேலையிழந்த நோக்கியா தொழிலாளர்களுக்கு வேலையை உறுதி செய்ய வேண்டும்!

• நோக்கியாவின் சொத்துக்களைப் பறிமுதல் செய் !

• தொழிலாளர் நலச் சட்டங்கள் வலுவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் !

இன்று நோக்கியா தொழிலாளர்கள்! நாளை பாக்ஸ்கான் தொழிலாளர்கள்..நாளை மறுநாள் நாம்?….

இன்றே விழித்துக் கொண்டால், நாளை நம் கையில்! ஒன்றுபட்டால் தான் நமக்கு இனி உண்டு வாழ்வு!

—-இளந்தமிழகம் இயக்கம்

About விசை

One comment

  1. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*