Home / FITE சங்கம் / மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 3

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 3

வணக்கம் நண்பனே! நாம் மீண்டும், மீண்டும் சந்திக்கும் வாய்ப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. நாம் ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் ஏதேனும் ஒரு சிக்கலைப் பற்றியே பேச வேண்டி இருக்கிறது. ஆனாலும், இந்த சிக்கல்கள் அனைத்தும் நாம் புரிந்து கொள்ள வேண்டியவையாகவே உள்ளன.

டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் பெங்களூர் பிரிவில் வேலை பார்த்து வந்த பிரஜீத் ஆனந்த்(30) என்னும் ஊழியர் சென்ற புதன் இரவு கொலை செய்யப்பட்டுள்ளார் என்கிற செய்தியைப் படித்து கொண்டிருந்தேன். அப்போது நீங்கள் படிக்க வேண்டிய அடுத்த செய்தி என்று இணையதளம் பரிந்துரை செய்த தகவலானது, இந்திய அளவில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ” இன்போசிஸ் ” பற்றியது.

வர்த்தகம் என்பதே நெறிமுறைகள் அற்றதாக இருக்கும் போது, மிகப்பெரிய நிறுவனம் என்று பெயரெடுக்க மிகப்பெரிய லாபமீட்டினால் மட்டுமே போதுமல்லவா???

இன்போசிஸ் நிறுவனத்தில் நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் செயல் அதிகாரி மீது பாலியல் புகார் தெரிவிக்கும் மின்னஞ்சல் ஒன்று அங்குள்ள பெண் ஊழியர்களால் அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது.

domestic-violence-against-women

நீண்ட நாட்களாக பணிபுரியும் செயல் அதிகாரி (பெயர் வெளியிடப்படவில்லை) மீது எழுப்பப்பட்ட இந்த புகாரின் பேரில் அவரைக் வெறுமனே கண்டித்துள்ளதாக இன்போசிஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒப்புக் கொண்டுள்ளது. மின்னஞ்சலில் பாலியல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுகளின் மீது நிறுவனம் அதிக கவனம் செலுத்துவதாகவும், விசாகா வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை பின்பற்றுவதாகவும் தெரிவித்துள்ளது.

நான் மேற்சொன்னதுதான் இன்போசிஸ் பற்றிய செய்தியின் சாரம் நண்பனே…

இந்தச் சிக்கலை அலசுவதற்கு முன் விசாகா வழக்கு பற்றி ஒரு சில வார்த்தைகளில் பேசிவிடுவோம்.

1992 ஆம் ஆண்டு, ராஜஸ்தானில் பன்வாரி தேவி என்னும் சமூக ஆர்வலர் – குழந்தைகள் திருமணத்திற்கு எதிராகப் போராடியவர் – மேட்டுக்குடி ஆண்களால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். இதற்கு நீதி கேட்டு, பன்வாரி தேவி நீதிமன்றத்தை நாடினார். ஆனால், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து பன்வாரி தேவிக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள், பெண்ணியப் போராளிகள், மகளிர் அமைப்புகளைக் கொண்ட விசாகா என்னும் கூட்டமைப்பு பெயரில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பில், பணியிடங்களில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு பின்பற்ற வேண்டிய பரிந்துரைகளை உச்ச நீதிமன்றம் வழங்கியது. இந்தத் தீர்ப்பு வெளியான 1997 ஆம் ஆண்டு வரை இப்படியான நடைமுறைகள் எதுவும் பணியிடங்களில் கிடையாது.

விசாகா வழக்கின் பரிந்துரைகளை பின்பற்றுவதாக சொல்லும் இன்போசிஸ், அந்த பரிந்துரைகளில் ஒன்றான 10 ஊழியர்களை கொண்ட புகார் கமிட்டியின் மூலம் இந்த புகாரை விசாரித்ததா என்ற தகவல்கள் எங்குமே இல்லை.

* 10 ஊழியர்கள் கொண்ட அந்தப் புகார் குழு நம்முடைய நிறுவனங்களில் இருக்கிறதா?

* புகார் கமிட்டியின் செயல்பாடுகள் என்ன?

* புகார் கமிட்டியில் யார் இடம்பெறுவர்?

* புகார் கமிட்டியைப் பற்றி நமக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதா?

* வெவ்வேறு தொழில்நுட்பப் பூங்காக்களில் இயங்கும் ஒரு நிறுவனம், எவ்வாறு கமிட்டியை நியமிக்கிறது?

என்று நம்மில் பலபேருக்கு தெரியாது.

இன்போசிஸ் நிறுவனத்தில் இப்படியொரு புகார் கமிட்டி இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. இப்படியொரு கமிட்டி செயல்படும் போது ஊழியர்கள் தங்கள் சிக்கலைத் தெரிவிப்பதற்கான இடம் இருந்திருக்கும்.

அப்படியானதொரு குழு சரியான செயல்பாட்டில் இருந்திருந்தால் யார் அனுப்பினார்கள் என்றே தெரியாத மின்னஞ்சல்களுக்கு தேவையே இருந்திருக்காது என்றே நான் எண்ணுகிறேன்.

நீயும் என்னுடன் உடன்படுவாய் என்று நம்புகிறேன், விரும்புகிறேன்.

பெண்கள் மீதான வன்முறைகள் பெருகி வரும் புறச்சூழலில், ஒரு அதிகாரி நீண்ட நாள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்ததும், பெரிய பதவியில் இருப்பதும் அவரை வெற்று கண்டனங்களுடன் காப்பாற்றும் என்பது எத்தகைய நியாயம். இவ்வாறான நிகழ்வை அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒப்புக் கொள்வதும், குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றுவதும், நம்மை கேள்வி கேட்க யாரும் இல்லை எனும் வெளிப்பாடின்றி வேறென்ன நண்பனே?!!…இதற்கு நம்மில் யாரிடமாவது பதில் இருக்கிறதா?

நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் போது, என்னுடைய அலுவலக வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளும் என் கண்முன் தோன்றி மறைகின்றன.

images (1)

என்னுடைய சக தோழி ஒருவரிடம் மேலாளர் ஒருவர் கேட்டது நினைவுக்கு வருகிறது, ” ஒருமுறை என்னுடன் மது அருந்த வா!..உன்னுடைய அலுவலக வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்று நான் சொல்லித் தருகிறேன் !”( Let us go for a drink! I will help you to grow in your career ).

தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில், வாடிக்கையாளர் வருகையின் போது, “கிளைன்ட்-க்கு மட்டும் இவ்ளோ செலவு பண்றாங்க?…நமக்கு என்ன தர்றாங்க ” என்று கேட்ட என் தோழிக்கு, ” கிளைன்ட் கேட்டா நம்மளையே அனுப்பிடுவாங்க” என்று அவருடைய தோழி சொன்ன பதில், பணிடங்களில் பெண்கள் எத்தனை பயத்துடன் தமது அலுவல்களைப் பார்க்கிறார்கள் என்பதை முகத்தில் அறைந்து கூறியது

நம்முடைய துறையில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் தங்களுடைய தோழிகளிடமிருந்து, சகோதரிகளிடமிருந்து, மனைவியிடமிருந்து அறிந்து கொள்ளக் கூடிய இந்த நிகழ்வுகள், பெண் ஊழியர்களின் அலுவலக வாழ்வில் அன்றாட நிகழ்வாகிப் போனவை.

இவ்வாறான நிகழ்வுகளைப் பார்த்தாலும், கேட்டாலும் இதற்கு இருக்கும் ஒரே தீர்வாக நாம் நினைப்பது பணியைவிட்டு விலகி வேறொரு நிறுவனத்தில் இணைவது மட்டுமே. ஆனால், இது சிக்கலைத் தட்டிக் கழிக்கும் போக்கே அன்றி தீர்வல்ல.

பணிடங்களில் பெண் ஊழியர்கள் சந்திக்கும் இத்தகைய சிக்கல்கள் ஏராளம். அவற்றை உற்று நோக்கி, புரிந்து கொண்டு, தீர்வு நோக்கி நகர வேண்டிய பொறுப்பும் நம்முன் இருக்கிறது நண்பர்களே!

மீண்டும் சந்திப்போம்!
இப்படிக்கு,
உங்கள் சக ஊழியன்.

======================================

இவ்வரிசையில் மற்ற கடிதங்கள்

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 4

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 3

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 2

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 1

About விசை

3 comments

  1. சிறந்த பதிவு

    தொடருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*