Home / அரசியல் / யார் இந்த தருண் விஜய்?

யார் இந்த தருண் விஜய்?

 “உங்களுக்கு அவர்கள் இந்தி படிக்க வேண்டும் என்றால், நீங்கள் அவர்களது தமிழைப் படிக்க வேண்டும்” என்ற கருத்தை தனது வலைப்பூவில் பதிவு செய்திருந்தார் தருண் விஜய்.

திருவள்ளுவரது பிறந்தநாளை இந்திய மொழிகளுக்கான நாளாக அறிவிக்க வேண்டும். இந்தியாவின் இரண்டாவது அலுவல் மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும். வட இந்தியாவில் தமிழ்மொழியைப் பயிற்றுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.

இத்தகைய கோரிக்கைகளைத் தருண் விஜய் மத்திய அரசுக்கு வைத்ததால் புளங்காங்கிதம் அடைந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க தலைவர் இராமதாஸ் போன்றோர் அவரது ‘தமிழுணர்வைப்’ பாராட்டித் தள்ளினர்.வைரமுத்து ஒருபடி மேலே போய் பாராட்டு விழாவே நடத்திவிட்டார்.

1961இல் பிறந்த தருண் விஜய், 1986இலிருந்து 2008 வரை ஆர்.எஸ்.எஸ்ஸின் செய்தி ஏடான “பஞ்சஜன்யம்” இதழில் ஆசிரியராக வேலை பார்த்தவர். 2008இல் பா.ஜ.கவின் மரு சியாம்பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்ட இவர் பின்னர் பா.ஜ.கவின் ராஜ்ய சபா உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தருண் விஜயின் பின்புலம் இதோ….

கொலைக் குற்றச்சாட்டு

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பும் கூட இவரது பெயர் ஊடகங்களில் அடிபட்டது. 2011 ஆம் ஆண்டு போபாலில் , தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரான ஷீலா மசூத், பட்டப்பகலில் கழுத்தில் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவர் அன்னா ஹசாரே தோற்றுவித்த ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’வின் மத்திய பிரதேச பிரிவில் இயங்கிக் கொண்டிருந்தார். அவர் கொலை செய்யப்படுவதற்கு முதல் நாள் மத்தியபிரதேச பா.ஜ.க அரசு பெரிய அளவில் செய்த ஊழலை வெளிக்கொண்டு வரப்போவதாகவும், பல முக்கிய ஆவணங்கள் தன் கைவசம் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கின் முதன்மை குற்றவாளிகளில் ஒருவரான சாஹிதா பர்வேஸ், பா.ஜ.க எம்.எல்.ஏ துருவ் நாராயண் சிங்கும், தருண் விஜய்யும் இந்த கொலையில் முக்கிய பங்காற்றினர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திடீர் தமிழ்ப்பாசம்

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ”இந்தி, இந்து, இந்தியா” கொள்கை பற்றி நாம் அறியாததல்ல.பதவிக்கு வந்த சில நாட்களுக்குள்ளாகவே, சமஸ்கிருத வாரம், குரு உத்சவ்(ஆசிரியர் தினம்) கொண்டாட்டம், சமூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பு,உலகின் பல்வேறு நாடுகளில் இந்தியைப் பரப்புவதற்கு பா.ஜ.க அரசு செய்துவரும் முயற்சிகள் என தொடர்ச்சியாக தனது திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பா.ஜ.க அரசின் இந்தி ஆதரவு மொழிக் கொள்கையினால் இந்தி பேசாத மாநிலங்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டிருக்கும் நிலையில், பா.ஜ.க எம்.பி ஒருவர் இவ்வாறு தமிழ் மொழிக்கு குரல் கொடுப்பது சந்தேகங்களைக் கிளப்புகிறது. இந்தி திணிப்பு எதிர்ப்பு வரலாறு கொண்ட தமிழகத்தில் தங்கள் ”இந்தி-இந்து-இந்தியா” கருத்தாக்கம் எடுபடாது என்பது, பா.ஜ.கவுக்கு நன்கு புலப்பட்ட விடயம்.

சமீபத்தில் நிகழ்ந்த ஜெயலலிதா கைதும், அதைத் தொடர்ந்து,பா.ஜ.கவின் தமிழகத் தலைவர்கள் அடைந்த உற்சாகத்தையும், 2016இல் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என்ற அவர்களது முழக்கத்தையும்,இப்போது, ”தமிழ் வாழ்க” என்ற அவர்களது முழக்கத்தையும் இணைத்தே பார்க்க வேண்டும்.

MP-Tarun-Vijay
மொழி தொடர்பாக

சென்ற ஆண்டு, டைம்ஸ் ஆப் இந்தியாவில் அவர் எழுதிய கட்டுரையில் இருந்து

”சமஸ்கிருதம் தான் நாம்.
சமஸ்கிருதம் தான் இந்தியா

சமஸ்கிருதம் தான் பகவத் கீதை, இராமாயணம் மற்றும் வேதங்கள். தெற்கில் இருந்து வடக்கிற்கு, மேற்கில் இருந்து கிழக்கிற்கு இந்தியாவை ஒன்றாய் இணைக்கும் அபாரமான சக்தி. சமஸ்கிருதம் தான் நமது திதிகள், பஞ்சாங்கங்கள் மற்றும் நமது பிரபஞ்சத்தின் தோற்றுவாய். ”

“சமஸ்கிருதம் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் சென்று சேர வேண்டும். பூரண சக்தி பெற்றதாக, எங்கும் நிறைந்திருப்பதாக சமஸ்கிருதம் மாற வேண்டும். உயர் பதவிகளுக்கும் உயர்ந்த சமூக அந்தஸ்து பெறுவதற்கும் ஒரு வழிமுறையாக சமஸ்கிருத அறிவு இருக்க வேண்டும்”

சி..பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்றுத்தருவதில் மெத்தனம் இருக்கிறது. என்றும் உயர்நிலை வகுப்புகள் மற்றும் மேல்நிலை வகுப்புகளில் பிராந்திய மொழிகளும் ஆங்கிலமும் மட்டுமே கற்றுத்தரப்படுகிறது என்றும் அந்த கட்டுரையில் குற்றம்சாட்டுகிறார்.

அதாவது, ஆங்கில அறிவு எவ்வாறு ஒருவருக்கு அவருடைய வேலைவாய்ப்பை அதிகமாக்குகிறதோ, அதற்கு பதிலாக சமஸ்கிருத அறிவு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தாய்மொழிக் கல்வியில் கற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய பேச்சையே காணோம்.

கலாச்சாரம்

2008இல் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் எழுதிய மற்றொரு கட்டுரையில்

“ராம்ஜன்மபூமி இயக்கத்தில் நான் பங்குபெற்ற போது, தேசத்தின் இலட்சிய உதாரணமான சிறீராமரை மீட்டெடுக்கும் பரந்துபட்ட உயரிய நோக்கத்தில், பிராந்திய, சாதிய மொழி அடையாளங்கள் கரைந்து போனதைக் கண்டேன்” என்று எழுதுகிறார்.

தமிழின் பாரம்பரியத்தை வட இந்திய மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அக்கறை காட்டும் இவர்தான்,

”சமஸ்கிருதம் தான் இந்திய- ஐரோப்பிய மொழிகளனைத்துக்கும் தாய்” என்று ட்விட்டரில் புளங்காகிதம் அடைகிறார்.
அனைத்து மொழிகளையும், பண்பாடுகளையும், வரலாறுகளையும் இந்துத்துவப்படுத்தி அயோத்தி இராமனின் அடையாளத்தில் பல்வேறுபட்ட தேசிய இனங்களையும் கரைப்பது தான் கலாசாரம் பற்றிய இவரின் பார்வை.
இராஜேந்திர சோழனின் பிறந்தநாளைக் கொண்டாட ஆர்.எஸ்.எஸ். விரும்பியதற்கும், தருண் விஜயின் தமிழ் பாசத்திற்கும் தொடர்பில்லாமலில்லை. இதுமட்டுமல்லாமல், தருண் விஜய் பேசியபொழுது, கவிஞன் பாரதியை இந்திய ஒருமைப்பாட்டின் சின்னமாக அறிவிக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார். எவ்வகையிலும், வட இந்தியாவைச் சாராத தனித்த மக்களையும், அவர்தம் வரலாற்றையும் அபகரிப்பதே இதன் நோக்கமாகும்.

இது இப்படி இருக்க, ”தமிழுக்கு யார் நன்மை செய்தால் என்ன? அது ஆர்.எஸ்.எஸ் ஆக இருந்தாலும் கொண்டாடுவோம் என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

சரி தான் ஆனால் ஆர்.எஸ்.எஸ் உண்மையிலேயே தமிழுக்கு நன்மைதான் செய்கிறதா? யாரிந்த தருண் விஜய்? தமிழ் மொழியைக் காக்க வந்த இவ்வடநாட்டு வித்தகர் இத்தனைக் காலம் எங்கிருந்தார்? ஏன் இந்த திடீர் தமிழ் பற்று என்பதைப் பார்க்க வேண்டும்.”

— முத்துவேல்

தரவுகள்

http://blogs.timesofindia.indiatimes.com/indus-calling/de-indianisation-begins-with-elimination-of-sanskrit/

http://timesofindia.indiatimes.com/tarun-vijay/the-right-view/The-blessed-path/articleshow/2823307.cms?

http://archive.tehelka.com/story_main50.asp?filename=Ws010911investigation.asp

http://indiatoday.intoday.in/story/shehla-masood-murder-case-tarun-vijay-dhruv-narayan-singh/1/184181.html

http://archive.tehelka.com/story_main50.asp?filename=Ne030911Death.asp

About முத்துவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*