Home / அரசியல் / மீனவர்கள் விடுதலை – வெட்கங்கெட்ட பா.ஜ.க-வுக்கு வெற்றிக் கூச்சலைப் பாரு பாப்பா
இரண்டு இனப்படுகொலையாளிகளின் சந்திப்பு

மீனவர்கள் விடுதலை – வெட்கங்கெட்ட பா.ஜ.க-வுக்கு வெற்றிக் கூச்சலைப் பாரு பாப்பா

இராமேசுவரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 பேரும் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போதை பொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற்படையினரால் ஒரு வழக்கு புனையப்பட்டது. ஆயிரம் நாட்களுக்கு மேல் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இந்த ஐந்து மீனவர்களுக்கும், இலங்கை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 30ம் தேதி தூக்குத் தண்டனை விதித்தது. பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இத்தீர்ப்பை எதிர்த்து இராமேசுவரம் மீனவர்கள் எழுச்சி மிக்க போராட்டங்களை நடத்தினர். தமிழகத்தின் மற்ற சனநாயக முற்போக்கு இயக்கங்களும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டதால், இந்திய அரசுக்கு கடும் நெருக்கடியாக அமைந்தது.தமிழக மக்களின் இடையறாத போராட்டங்களுக்கு மோடியும் இராசபக்சேவும் அடி பணிந்திருக்கின்றனர் என்பது தான் உண்மை. ஆனால் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் போராட்டங்களை புறந்தள்ளி விட்டு, மோடி இராசபக்சேவிடம் தொலைபேசியில் பேசி அதிரடியாக மீனவர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து விட்டதாக‌ ஒரு தோற்றம் பா.ஜ.கவினரால் தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.க வினரின் இந்த வெற்றுக் கூச்சலைக் கண்ணுறும் போது, ஒட்டு மொத்தமாக இம்மரண தண்டனைத் தீர்ப்பும் விடுதலையும் ஒரு நாடகமோ என்ற‌ ஐயமும் எழாமல் இல்லை.

தமிழக மீனவர்களின் போராட்டம்

தமிழக மீனவர்களின் போராட்டம்

ஐந்து மீனவர்களும் பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்ட இந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசிடம் எத்தனையோ கோரிக்கை மனுக்கள், உதவிகள் கேட்ட போதிலும் ஒரு துரும்பைக் கூட மத்திய அரசு கிள்ளிப் போடவில்லை. இன்று மீனவர்களின் உயிரைக் காப்பாற்றியது தாங்கள் தான் என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பா.ஜ.க, தேர்தலுக்கு முன் இராமேசுவரத்தில் நடத்திய கடல் தாமரை மாநாட்டில், மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்குவோம் என ஓட்டுப் பொறுக்குவதற்காக வாக்குறுதிகளை அள்ளி வீசியது. மறுபுறம் ஆட்சிக்கு வந்த பின்னர், படகுகளை நான் தான் பிடித்து வைக்கச் சொன்னேன் என பா.ஜ.கவின் சுப்பிரமணிய சாமி திமிர்வாதம் பேசிக் கொண்டிருக்கின்றார், அவர் சொல்வது போலவே இன்று வரை ஒரு படகு கூட விடுவிக்கப்படவில்லை. மீனவர்கள் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இவ்வழக்கை தமிழக அரசு தான் செலவு செய்து நடத்தி வருகிறது. இவ்வழக்கை கண்காணிக்க அருளானந்தம் என்பவரையும் தமிழக அரசு நியமித்தது. தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள சனநாயக இயக்கங்களும் மீனவர் சங்கங்களும் பல தளங்களில் போராடி வருகின்றனர்.

தமிழக மீனவர்களின் போராட்டம்

தமிழக மீனவர்களின் போராட்டம்

1983 இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக, சிங்கள இனவெறியர்களால் நடத்தப்பட்டமிகப்பெரிய வன் தாக்குதலின் போது, ஏராளமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அதற்கு முன்பிலிருந்து இன்று வரை இலங்கைகடற்படையால்அனுதினமும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும்,கைது செய்யப்படுவதும்,படகுகளையும் வலைகளையும் சேதப்படுத்துவதும்வாடிக்கையாக இருந்து வருகிறது. 1983ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தமிழக மீனவர்களுக்கு கடும் உயிர் சேதத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்தி வரும் இலங்கை அரசை ஒரு முறை கூட தண்டிக்கவில்லை. தண்டிக்கவில்லை என்பதை விட இன்னும் கண்டிக்கவும் இல்லை என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

banner-751601

எப்படி இராஜபக்சே மாறி வேறு யார் ஆட்சிக்கு வந்தாலும் சிங்கள பேரினவாதக் கொள்கை தான் இலங்கையில் ஆட்சி செய்யுமோ, அதே போல் இங்கு காங்கிரசு மாறி பா.ஜ.க வந்தாலும், பா.ஜ.க மாறி காங்கிரசு வந்தாலும் இந்திய விரிவாதிக்க கொள்கை தான் இங்கு ஆட்சி செய்கின்றது. இந்திய விரிவாதிக்க கொள்கையின் அடிப்படையில் இலங்கை என்றுமே இந்தியாவின் நட்பு நாடு தான். அதனால் இலங்கையை தனது வட்டத்திற்குள் வைத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்ய‌ இந்தியா விரும்பும்.

இரண்டு இனப்படுகொலையாளிகளின் சந்திப்பு

இரண்டு இனப்படுகொலையாளிகளின் சந்திப்பு

பூட்டிய கண்ணாடி வீட்டுக்குள் நுழைய, பெருச்சாளி எடுக்கும் பிரயத்தனங்கள் போன்று தான் இன்று தமிழகத்தில் பா.ஜ.க நிலைமையும் இருக்கிறது. தமிழகத்தில் காலூன்ற எத்தகைய மலிவான உத்தியையும் கடை பிடிக்க பா.ஜ.க அரசு முனைந்து விட்டது. அந்த உத்திகளில் ஒன்று தான் இந்த மீனவர்களுக்கு தூக்கு தண்டனையும், விடுதலையும். தமிழ்த்திரைப்பட கதாநாயகன்களைப் போல, நீ அடிக்கிற மாதிரி அடி…நான் காப்பாத்துற மாதிரி காப்பாத்துறேன் என்பது தான் இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் உத்தி. அறுபது ஆண்டுகளில் ஒருமுறை கூட மரண தண்டனைத் தீர்ப்பு வழங்காத இலங்கை நீதி மன்றம், இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது இந்த ஐந்து மீனவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கக் காரணமென்ன ? அவர்கள் மரண தண்டனை விதித்தால் தானே, அகில உலக மீட்பர் மோடி வந்து மீனவ மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும். அதன் மூலம் ஆறு கோடி தமிழக உள்ளங்களின் விருப்பங்களை வென்றெடுக்க முடியும் ? அது மட்டுமின்றி தமிழக மனங்களில் எதிரியாக நிலை பெற்றிருக்கும் சிங்களப் பேரினவாத அரசின் தலைவர் இனக்கொலையாளி இராசபக்சேவின் பிம்பத்தை, புனிதராக கருணை உள்ளம் கொண்டவராக மாற்றும் ஒரு முயற்சியை இங்கு நடத்த‌முடியும்.

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள்

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள்

 

ஐந்து மீனவர்களின் விடுதலையைக் கொண்டாடும் பா.ஜ.கவின் இரசிக சிகாமணிகளிடம் கேட்க எம்மிடம் சில கேள்விகளும் உள்ளன, ஏன் அந்த ஐந்து மீனவர்கள் முதலில் கைது செய்யப்பட்டார்கள்? இந்தியக் கடற்படை என்ன செய்து கொண்டிருக்கின்றது?  ஐந்து மீனவர்களை மட்டுமே விடுதலை செய்திருக்கும் இலங்கை அரசு, ஏன் இதுவரை பிடித்துச் சென்ற 82 படகுகளையும் இலங்கை சிறையில் வாடும் 70 க்கும் மேற்பட்ட ஏனைய மீனவர்களை விடுவிக்கவில்லை. இதுவரை கொல்லப்பட்ட 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் உயிரிழப்புகளுக்கான நீதி என்ன ? என்ற கேள்விகளுக்கு இதுவரை விடையில்லை. மீனவர்களின் உயிரை பணயம் வைத்து நாடகம் நடத்தி மீட்பர் வேடம் இட்டுள்ள மோடி தமிழக மக்களின் வாக்குகளை வெல்லலாம் என கனவு காண்கின்றார்.  நிராதிபாதிகளுக்கு தண்டனைப் பெற்றுப் பின் பொது மன்னிப்பு வாங்கிக் கொடுத்தது இவர்களுக்கு வெற்றியாம். மோடியின் முகமூடியை கிழிக்க வேண்டியது தமிழக மக்களாகிய நமது பொறுப்பு. அதே நேரத்தில் இந்திய அரசின் இலங்கை மீதான வெளியுறவு கொள்கையை மாற்றப்போராடுவதே மீனவர்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொண்டுவரும், அது வெறும் ஆட்சி மாற்றத்தால் நிகழாது, அரசின் கொள்கை மாற்றத்தால் மட்டுமே நிகழும், அதை நோக்கியே நமது பயணம் என்றும் இருக்க வேண்டும்.

அ.மு.செய்யது
இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*