Home / ஈழம் / இலங்கை புறக்கணிப்பு / மலையகத் தமிழர் – பறிக்கப்பட்ட உரிமைகளும் – பேசப்படாத வரலாறும்

மலையகத் தமிழர் – பறிக்கப்பட்ட உரிமைகளும் – பேசப்படாத வரலாறும்

 

கடந்த அக்டோபர் மாதம் 29, 2014ல் இலங்கையின் உவா மாகாணத்தில் உள்ள பதுளை மாவட்டத்தில் மிறீயபெத்த பகுதியில் கடும்மழை காரணாமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மலையகத் தமிழர்கள் ஏறக்குறைய 200 பேர் வரை மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர். தொடக்கத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்தினர் பின்னர் புதையுண்டிருக்கும் மக்களை முழுமையாக மீட்க வேகம் காட்டாமல் மீட்புப் பணிகளை கைவிட்டனர்.

நிலச்சரிவில் புதைந்ததில் தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பலர் இழந்துள்ளனர், மேலும் பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்துள்ளனர், பாதிப்புக்குள்ளான அனைவரும் இப்பொழுது இடைக்கால முகாம்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஏறக்குறைய 180 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களால் தேயிலைத் தோட்டக் கூலித் தொழிலாளர்களாக அழைத்துச்செல்லப்பட்ட இலட்சக்கணக்கான தமிழக மக்கள் வரலாறு முழுவதும் தங்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

hatton_01

இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வரும் தேயிலை ஏற்றுமதி தொழிலுக்கு இரண்டு நூற்றாண்டுகளாக தங்கள் இரத்தம் சிந்தி, வளம் சேர்த்து வரும் மலையகத் தமிழர்கள் இலங்கை அரசால் குடியுரிமை பறிப்பு, வாக்குரிமை பறிப்பு, நாடுகடத்தல் என இலங்கை அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் உரிமைகள் முழுவதும் பறிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

“இந்திய வம்சாவழித் தமிழர்கள்” என்றழைக்கப்படும் இவர்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தாது 1964 ஆம் ஆண்டு சிறீமாவோ – சாசுதிரி ஒப்பந்ததில் கையெழுத்திட்டது இந்திய அரசு. இந்தியாவும் இலங்கையும் ஆடு மாடுகளைப் பிரிப்பது போல் மலையகத் தமிழர்களைப் பிரித்துக் கொண்டது.

அன்று முதல் பல காலகட்டங்களில் மலையகத் தமிழர்கள் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் மாறி மாறி நாடு கடத்தப்படும் கொடுமைக்கு உள்ளானார்கள். இந்த ஒப்பந்தம் போடப்பட்டு 50 ஆண்டு காலம் கடந்து விட்ட பிறகு இன்றும் மலையகத்தில் இருந்து தமிழகத்திற்கு திரும்பிய மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முழுமையான மாற்று தொழில் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமல் தங்கள் வாழ்நிலையை மேம்படுத்த போராடி வருகின்றனர்.

இலங்கையிலும் இந்தியாவிலும் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் மலையகத் தமிழர்கள் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு காலந்தோறும் துணை நின்று வருகின்றனர். 1961 ஆம் ஆண்டு சிங்கள பெளத்த இனவெறி இலங்கை அரசிற்கு எதிராக தந்தை செல்வா தலைமையில் ஈழத் தமிழர்கள் முன்னெடுத்த சத்தியாகிகப் போராட்டத்திற்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் மலையகத் தமிழர்களும் ஈடுபட்டனர். பிற்காலத்தில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்திலும் மலையகத் தமிழர்கள் கணிசமாக எண்ணிக்கையில் தங்களை இணைத்துக் கொண்டனர். இன்றும் மாவீரர் குடும்பங்களாக பல மலையகத் தமிழர்கள் குடும்பங்கள் வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

hatton4

இவர்களின் போராட்டம் தமிழ்நாட்டு மக்களின் உரிய கவனத்தைப் பெறாமல் போனதற்கான காரணங்கள்கூட விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் சமூக நிலையில் தலித்துகளாகவும் வர்க்க நிலையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகவும் இருப்பதுதான் காரணமா? தேசியம் , சுயநிர்ணய உரிமை ஆகியக் கோட்பாடுகளைக் புதைக்குழியில் போட்டுப் புதைக்கும் தெற்காசியாவின் அரசியல் கலாச்சாரத்தின் முன்பு, சுமார் 180 ஆண்டுகள் அம்மண்ணில் இருந்து பாடுபடுபவர்களுக்கு தமிழ்த் தேசிய சிறுபான்மையினர் என்று அங்கீகரிக்க மறுப்பதொன்றும் வியப்புக்குரியதல்ல. ஒடுக்கப்பட்டுள்ள தேசிய இனங்களிடம்கூட இந்த மனப்பாங்கு இல்லாமல்தான் இருக்கிறது.

சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் அடக்குமுறைக்குள் வாழும் மலையகத் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாற்றை தெரிந்து கொள்வதும், மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் அவர்களுக்கு துணை நிற்பதும் நமது கடமையாகும்.

 

மலையகத் தமிழர் – பறிக்கப்பட்ட உரிமைகளும் – பேசப்படாத வரலாறும் – அரங்கக் கூட்டம்

உரை :

தோழர். சி. மகேந்திரன், மாநில துணைப் பொதுச் செயலாளர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தோழர். தவமுதல்வன், ஆவணப்பட‌ இயக்குநர்
தோழர். கந்தையா, அமைப்பாளர் மலையக மக்களுக்கான ஜனநாயக இயக்கம்
தோழர். செந்தில், ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழகம் இயக்கம்

நாள்: 23 நவம்பர் 2014 ஞாயிறு

நேரம்: மாலை 4.30 மணி

இடம்: இக்சா அரங்கம், எழும்பூர், சென்னை

—-ஒருங்கிணைப்பு – இளந்தமிழகம் இயக்கம்

 

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*