Home / சமூகம் / இந்துத்துவம் / ஐ.ஐ.டி.களில் அசைவமா?? ஆர்.எஸ்.எஸ் தொண்டரின் அலறல்!

ஐ.ஐ.டி.களில் அசைவமா?? ஆர்.எஸ்.எஸ் தொண்டரின் அலறல்!

கடந்த செப்.9 அன்று மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயின் என்னும் தானிய வியாபாரி ஐ.ஐ.டி.களில் சைவ உணவுக்கான தனி உணவகங்கள் கோரி ஒரு கடிதத்தை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் அனுப்புகிறார். அந்தக் கடிதத்தின் சாரம் இதுதான் :

1) அசைவ உணவுகள் உண்ணும் பழக்கம் இந்தியக் கலாச்சாரத்தில் இல்லை

2) அசைவம் உண்பது நமது மாண்புகளை பாதிக்கிறது. மூர்க்கத்தனத்தை வளர்க்கிறது.

3) குற்றச் செயல்கள் அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது.

4) வன்முறைகளும், சாதி மறுப்பு, மதம் மறுப்பு திருமணங்கள் போன்ற சமூக விரோத நடவடிக்கைகள் அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது.

5) ஐ.ஐ.டி உணவகங்களில் அசைவ உணவுகள் பரிமாறப்படுவது சைவ மாணவர்களை ஈர்க்கிற்து. சைவ உணவு உண்பவர்களை இது கெடுக்கிறது. நம் சாப்பாடு பரிசுத்தமாக இருந்தால் தான், நம்மால் பரிசுத்தமாக சிந்திக்க முடியும்.

6) அசைவ உணவு பரிமாறப்படுவதன் மூலம் மேற்கத்திய உலகின் தீய பழக்கவழக்கங்கள் புகுத்தப்படுகின்றன. வெங்காயம், பூண்டு, மாமிசம் போன்ற டாஸ்மிக் (tasmic) உணவுகளை விடுத்து, இந்து தர்மத்தின்படி சாத்வீக உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.

7) எனவே, ஐ.ஐ.டி.கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் சைவ உணவிற்கு தனி உணவகங்கள் அமைக்க வேண்டும் என்பது இந்தியாவில் உள்ள பெற்றோர்கள் அனைவரது கோரிக்கையாகும்.

இந்த அபத்தமான கடிதத்தை அனுப்பியவர் தான் ஒரு சுயம்சேவக் என்றும் (ஆர்.எஸ்.எஸ். தொண்ட்ர்), பா.ஜ.க.வின் ஆதரவாளர் என்றும், அதனால் இன்றைய மோடி அரசு தனது கருத்துகளைப் புரிந்து கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப, இந்தக் கடிதத்தை அனைத்து ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். இந்தக் கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கைகளை தெரிவிக்குமாறு பொறுப்புடன் கேட்டுக் கொண்டுள்ளது அமைச்சகம்!

10808185_795370863852283_2010188523_n

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள சில மாணவர்கள், சைவ உணவு உண்பவர்கள் சைவம் சாப்பிடுகிறார்கள். அசைவம் உண்பவர்கள் அசைவம் சாப்பிடுகிறார்கள். மாணவர்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை. எங்களுக்குள் தேவையில்லாத பிரிவினையை உண்டாக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்கள்.

ஐ.ஐ.டி சென்னையில் சைவ உணவிற்கு தனி மெஸ் செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 400 மாணவர்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள். மொத்தம் உள்ள 8000 மாணவர்களுள் இது வெறும் 5% மட்டுமே. டெல்லி ஐ.ஐ.டி.யில் சைவ உணவுகளுக்கும் அசைவ உணவுகளுக்கும் ஒரே விலை நிர்ணயிக்கப்பட்டதற்கு மாணவர்களிடம் எழுந்த எதிர்ப்பு காரணமாக அசைவ உணவை நிறுத்திவைத்திருக்கிறார்கள்.

10805024_795370860518950_2033397840_n

சைவம், அசைவம் என்பது ஒவ்வொருவரின் உடல்நலன் சார்ந்த தேர்வாக வெளிநாடுகளில் இருப்பதுபோல்தான் இந்தியாவிலும் இருக்கிறதா என்றால், கண்டிப்பாக இல்லை. அசைவ உணவை வாழ்நாளில் சுவைத்துப் பார்த்திராத நம் நண்பர்கள் கூட நாம் அசைவம் சாப்பிடும்போது மூக்கை பொத்திக் கொள்வது, அய்யே, உவ்வே போன்று முக பாவனை செய்வதை நாம் பார்த்திருப்போம்.

நம் நாட்டில் சைவம் என்பது வெறும் உணவுப் பழக்கமாக மட்டும் இல்லை. சில விதிவிலக்குகளைத் தவிர, இங்கு சைவ உணவுப் பழக்கம் என்பது,

1) சாதியின் வெளிப்பாடு

2) புனிதத்தின் குறியீடு

3) சக மனிதனை அந்நியப்படுத்திப் பார்க்கக் கற்றுக்கொடுக்கும் பண்பாடு

4) ஆதிக்கத்தின் உள்ளார்ந்த பெருமிதம்

5) சமூகத்தின் மேல்மட்ட கௌரவம்

இந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டரின் கடிதத்தை மீண்டுமொருமுறை படித்துப் பாருங்கள். இவை அனைத்தும் அதில் வெளிப்படும். 95 சதவிகித மக்கள் இங்கு அசைவம் உண்கிறார்கள். அவர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர் எழுதியிருக்கும் ஆதிக்கத் திமிர் பிடித்த ஒரு கடிதத்தை அங்கீகரித்திருக்கும் மோடி அரசின் செயல் ஏதோ தவறுதலாக நடந்த விசயம் அல்ல. ஒரு மறு பரிசீலனை கூட இல்லாமல், இக்கடிதத்தை கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

ஆர்.எஸ்.எஸ். என்னும் பயங்கரவாத அமைப்பு, இந்தியாவில் பல குண்டுவெடிப்புகளுக்குக் காரணமாக இருந்த இந்த அமைப்பு தான், பா.ஜ.க அரசின் அரசியல் தலைமைக் குழு என்பது ஊர் அறிந்த ரகசியம். ஆர்.எஸ்.எஸ்-இன் அரசியல் தான் இந்தக் கடிதத்திலும் வெளிப்படுகிறது. உற்று நோக்கினால், மோடி அரசின் அனைத்து நடவடிக்கைகளிலும் இந்த உள்ளடக்கம் வெளிப்படுவதை நாம் உணர முடியும்.

இது வெளிப்படையாகத் தெரியாமல் இருப்பதற்காக, வளர்ச்சி, வல்லரசு, சுதேசி போன்ற இனிப்பு தடவிய மயக்க பிஸ்கட்டுகளை ஊடகங்கள் மக்களிடம் விநியோகிக்கின்றன. நமது மயக்கம் தெளியும் வரை விடிவு வரப்போவது இல்லை.

அறிவு அறம் காக்கும் கருவி என்றார் திருவள்ளுவர். நம்மை ஆபத்திலிருந்து காக்கக் கூடியது அறிவு என்பது இதன் பொருள். நமது அறிவைக் கூர்மையாக்குவோம். மயக்கத்தில் இருந்து விடுபடுவோம். ஆர்.எஸ்.எஸ்-பாஜக காவி ஆபத்திலிருந்து நம்மைக் காப்போம்!

தமிழ் நாசர்
இளந்தமிழகம் இயக்கம்

About தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*