Home / அரசியல் / தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு கோரி பினாங்கு உலகத் தமிழ் மாநாட்டில் தீர்மானம்!

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு கோரி பினாங்கு உலகத் தமிழ் மாநாட்டில் தீர்மானம்!

Penang1

பினாங்கு தமிழர் முன்னேற்ற இயக்கத்தின் சார்பாக, “அடையாளத்தைத் தேடி” என்ற கருப்பொருளோடு மலேசியாவின் பினாங்கு மாநிலம், , சார்ச்டவுனில், 2014 நவம்பர் 7,8,9 ஆகிய நாட்களில் ‘அனைத்துலக தமிழ் மாநாடு – 2014’ நடைபெற்றது.

வரலாறு தோறும் உலகத் தமிழ் மாநாடுகள் என்பது தமிழ் மொழியை, தமிழ் அறிஞர்களை போற்றவும் தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்து பேசவும் மட்டுமே நடந்து வந்துள்ளன. ஆனால் மே 2009, முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போருக்குப் பிறகு உலகின் பல்வேறு நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் பண்பாட்டு அடையாளங்களோடு,  தங்களின் அரசியல் உரிமைகள் குறித்தும் பேசுவதற்காக ஒரு இடத்தில் கூடி ‘பினாங்கு உலகத் தமிழ் மாநாடு’ போன்ற மாநாடுகளைத் தொடர்ச்சியாக நடத்தத் தொடங்கியிருப்பது தமிழகம், ஈழத்திற்கு வெளியில் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து எண்பதிற்கும் மேற்பட்ட தமிழ்ப் பேராளர்களும், மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து முந்நூற்றுக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களும் இம் மூன்று நாள் மாநாட்டில் கலந்து கொண்டனர். இளந்தமிழகம் இயக்கம் சார்பாக தோழர்கள் திரு. சரவணக்குமார், திரு. பட்டுராசன், திரு. பிரவீன்ராச், திரு. இளங்கோவன் ஆகியோர் இந்த மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

கடந்த நவம்பர் 7 வெள்ளிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் பினாங்கில் உள்ள தண்ணீர்மலை முருகன் கோவில் அடிவாரத்தில், தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற மாநாட்டுத் துவக்க விழாவில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு. வைகோ, பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி, பினாங்கு தமிழர் முன்னேற்ற இயக்கத்தைச் சேர்ந்த திரு. முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை முறைப்படித் தொடக்கி வைத்தனர்.

இரண்டாம் நாள் நிகழ்வை மலேசியாவின் சனநாயக செயல் கட்சியின் பொதுச் செயலாளரும், பினாங்கு மாநில முதலமைச்சருமான திரு. இலிம் குவான் எங் அவர்கள் தொடக்கிவைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில் மலேசியா, இந்தோனேசியா, மியான்மார், மொரிசியசு, ரீயூனியன் தீவு, தென்னாப்பிரிக்கா, இந்தியா, தமிழீழம், அமெரிக்கா, கனடா, பிரான்சு, ஆசுதிரேலியா, பர்மா, பிரித்தானியா, தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த பேராளர்கள் அவர்கள் வாழும் நாடுகளில் தமிழர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து கருத்துரை வழங்கினர்.

ஆனந்தி சசிதரன் உரையாற்றுகிறார்

ஆனந்தி சசிதரன் உரையாற்றுகிறார்

இலங்கையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான ஆனந்தி சசீதரன், சுரேசு பிரேமச்சந்திரன் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கையின் வடக்கு கிழக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பு, இராணுவத்தின் உதவியுடன் இலங்கை அரசு தமிழர் தாயகத்தில் நடத்தி வரும் நில ஆக்கிரமிப்புகள், காணி பறிப்புகள் குறித்தும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் பேசியது குறிப்பிடத்தக்கது.

திரு.அன்வர் இப்ராகிம் உரையாற்றுகிறார்

திரு.அன்வர் இப்ராகிம் உரையாற்றுகிறார்

மாநாட்டின் நிறைவு விழாவில் மலேசியாவின் எதிர்கட்சித் தலைவரும், பக்கதான் ராக்யத் எனப்படும் மக்கள் கூட்டணியின் தலைவருமான திரு. அன்வர் இப்ராகிம் அவர்கள் கலந்து கொண்டார். மாநாட்டில் உரையாற்றிய அவர், வெளிநாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மலேசியாவில் மக்கள் குரல் எழுப்பும் பொழுது அதனை அடக்கும் நடவடிக்கைளில் மலேசிய அரசாங்கம் ஈடுபடக்கூடாது என கூறினார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்த அவர், தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்கள் மீது ஐக்கிய நாடுகள் அவை தனது விசாரணையை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இலங்கையின் இனப்படுகொலையை ஆவணப்படுத்தும் நூல் எழுதிய பேரா.மணிவண்ணன்

இலங்கையின் இனப்படுகொலையை ஆவணப்படுத்தும் நூல் எழுதிய பேரா.மணிவண்ணன்

மலேசியாவில் இந்தியர்கள் அதிலும் தமிழர்கள் எதிர்கொள்ளும் முதன்மையான சிக்கல்களான ஏழ்மை, கல்வி மறுக்கப்படுதல் உள்ளிட்டவற்றில் ஒதுக்கப்படுதல் என்பது வெறும் இந்தியர்களுக்கான சிக்கல் அல்ல, அது ஒட்டுமொத்த தேசத்திற்கான சிக்கல். பாதிக்கப்பட்டுள்ள அனைத்து இன மக்களின் முன்னேற்றத்திற்கும் மலேசியர்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்றார்.

மாநாட்டின் இரண்டாம் நாளில் அமைக்கப்பட்ட ‘மாநாட்டுத் தீர்மானக் குழு’ முன்மொழிந்த தீர்மானங்கள் மூன்றாம் நாள் (நவம்பர் 9, 2014) மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து பேராளர்கள் முன்னிலையில் படிக்கப்பட்டு அனைவரது ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. “பினாங்கு பிரகடனம்” எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள எட்டுத் தீர்மானங்களின் முழு வடிவம் பின்வருமாறு :

பினாங்கு பிரகடனம்

உலகெங்கும் பல நாடுகளில் தமிழர்கள் சந்திக்கும் அநீதிகள், சவால்கள் நமது கவனத்துக்குரியவையாகும். ஆசியா, ஆசுதிரேலியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களைச் சேர்ந்த பேராளர்கள் ‘அடையாளத்தைத் தேடி’ பினாங்கில் ஒன்று கூடினோம்

கலை நிகழ்ச்சி

கலை நிகழ்ச்சி

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

•  உலகெங்கும் தமிழ் மக்களின் மொழி, கலாச்சாரம், அடையாளம், உரிமைகள் தற்காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென அனைத்துலக நாடுகளுக்கு வலியுறுத்துகின்றோம்.

•  தமிழக மீனவர்களின் உயிர், உரிமை, வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்படுவதை இந்திய அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

• மலேசியாவில் தமிழர்கள் சந்திக்கும் ஏழ்மை, வேலை வாய்ப்பின்மை, காவலில் மரணங்கள், குடியுரிமையின்மை போன்ற சிக்கல்களுக்கு மூலக்காரணம் மலேசிய அரசின் பாரபட்சமிக்க அரசாங்கக் கொள்கைகளேயாகும். அவ்வாறான அநீதிமிக்க கொள்கைகளைக் கைவிட வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். குறிப்பாக கல்வி, வேலை, வியாபார வாய்ப்புகள் போன்ற உரிமைகள் எக்காரணத்தைக் கொண்டும் மறுக்கப்படக்கூடாது. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்குரிய அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுவதோடு சமவுரிமை மிக்க சமூகமாக தமிழர்கள் இந்நாட்டில் வாழ வேண்டும்.

•  இலங்கைக்கு எதிராக தற்பொழுது முன்னெடுக்கப்படும் தற்சார்புடைய அனைத்துலக விசாரணைகள், தமிழர்களுக்கெதிராக இழைக்கப்படும் இனப்படுகொலையையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

•  தற்சார்புடைய அனைத்துலக விசாரணைகளைத் தடுக்க முற்படும் இலங்கை அரசுக்கெதிராக பொருளாதார, பயணத் தடைகள் ஆகியவை உட்பட அனைத்து விதமான அழுத்தங்களையும் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தை தற்சார்புடைய அனைத்துலக விசாரணைகளுக்குக் கட்டுப்பட வைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையையும் அனைத்துலக அரசாங்கங்களையும் வலியுறுத்துகின்றோம்.

•  1948 ஆம் ஆண்டு முதற்கொண்டு வட-கிழக்கு இலங்கையில் அரச ஆதரவோடு கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலப் பறிப்புகள் நிறுத்தப்படுவதோடு, வட-கிழக்கு இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகள் மீட்டுக்கொள்ளப்படுவதை ஐக்கிய நாடுகள் அவையும், உலக நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

•  இலங்கையின் வட-கிழக்கு பகுதிகள் தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக்கொண்டு அங்கு வாழும் தமிழர்களின் சுயநிர்ணய (தன்தீர்வுரிமை) உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதி செய்யும் வண்ணம் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும். அப் பொதுவாக்கெடுப்பில் இலங்கையின் வடக்கு -கிழக்கு பகுதியில் வாழும் தமிழர்களையும், போரினால் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களையும், இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் ஏதிலிகளாக வாழும் தமிழர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

•  உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் உறவுப்பாலமாக அமையும் அனைத்துலக தமிழர் செயலகத்தை பினாங்கில் அமைக்கவும், அதன்வழி உலகத் தமிழர்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யவும் தீர்மானித்துள்ளோம்.

மாநாட்டு பாடல் –  https://www.youtube.com/watch?v=xs9X9pqOrMM

– இளங்கோவன் சந்தானம்
இளந்தமிழகம் இயக்கம்

About இளங்கோவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*