Home / சமூகம் / இந்துத்துவம் / முத்தம் காமத்தில் (மட்டுமே) சேர்ந்தது இல்லை !

முத்தம் காமத்தில் (மட்டுமே) சேர்ந்தது இல்லை !

அன்பின் முத்தப்போராட்டத்தை ஒரு சில மேல்தட்டு இளவயதினர் பொது இடத்தில் வாய்வழி முத்தம் பரிமாறிக்கொள்வதற்கான உரிமைக்கலகமாக பார்ப்பது குறுகிய கண்ணோட்டமாக படுகிறது. மேல்தட்டு மக்கள் தொடங்கியதாலேயே ஆராயாமல் புறக்கணிப்பதில் அபாயம் உள்ளது. நன்றோ தீதோ ஒரு சமூக நிகழ்வின் நிழல் அனைத்து வர்க்கத்தினரின் மீதும் படிப்படியாக படிந்தே தீரும். கலாசார ஏற்றத்தாழ்வுகள் வர்க்கப்படிமானங்களுக்குள் அடங்குவதா ? நிச்சயமாக இல்லை. அனைத்து படிநிலைகளில் உள்ளவர் மீதும் பண்பாட்டு மாற்றம் விரவியுள்ளது. ஆகவே எதன் பொருட்டு இத்தகைய போராட்டம் தொடங்கியது என்பதை நாம் உற்றுநோக்க வேண்டும்.

அது கடவுளின் சொந்த ஊரென்று அழைக்கப்படும் சேரளம் (கேரளம்). ஜூன் 2011 – தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் இளவயது பெண்ணொருவர் ஒரு ஆணுடன் இருசக்கரவாகனித்தில் செல்வதைப் பார்த்த குடிகார கும்பல் தகராறு செய்கிறது, தரமற்ற வாக்குவாதங்களுக்குப் பின் அந்த பெண் கும்பலால் தாக்கப்படுகிறார். ஏப்ரல் 2013- ஒரு பெண் கலைஞர் தன் ஆண் நண்பருடன் ‘கடலோர நடைபாதையில்’ (Marine Drive) நடந்து சென்றதற்காக காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார். அக்டோபர் 2014 – கொச்சியில் ‘வுன்டவுன் கஃபே’ (Downtown Cafe) வாகன நிறுத்துமிடத்தில் சமூக சீர்கேடு நிகழ்வதாக இளவயது இணையர்கள் நெருக்கமாக அமர்ந்து முத்தம் கொடுப்பதாக ‘ஜெய்ஹிந்த்’ டிவியில் சிறப்பு கண்ணோட்டம் ஒளிபரப்புகிறார்கள். அதைத் தொடர்ந்து ‘பாரதிய சனதா யுவ மோர்ச்சா’ அமைப்பின் காவி காடையர்கள் அந்த உணவகத்தை அடித்து நொறுக்குகிறார்கள். நவம்பர் 2, 2014 – திரைத்துறையில் முயற்சி செய்துகொண்டிருக்கும் ராகுல் பசுபாலன் என்ற இளைஞரால் ‘Kiss of Love’ முகப்புத்தக பக்கம் தொடங்கப்பட்டு பல்வேறு அமைப்புகளின் ஆதரவு பெருகிறது. தொடர்ச்சியாக கலாசார கண்காணிப்பு என்ற பெயரில் நிகழ்த்தப்படும் வன்முறைகளால் கொதிப்படைந்தவர்கள் கூடி கொச்சி ‘கடலோர நடைபாதையில் ‘அன்பின் முத்தப்போராட்டம்’ நடத்துகிறார்கள். இதுதான் தொடக்கம். பின் கொல்கத்தாவில், புது தில்லியில் , சென்னை ஐ.ஐ.டி. கல்லூரியில் பிற இடங்களில் என்று முத்தங்கள் பரவிக்கொண்டிருக்கின்றன.

unnamed

முத்தப்போராட்டம் இந்திய பண்பாட்டிற்கு எதிரான செயல் என்று காவி பயங்கரவாதிகள் முதல்கொண்டு இளங்காவி மிதவாதிகள் வரை ஏன் சில முற்போக்காளர்களும் கூட எண்ணுகிறார்கள். அதே இந்திய பண்பாட்டை தான் நானும் தேடிக்கொண்டிருக்கிறேன். நம் ஊரில் தொடங்குவோம் என்று தமிழ்நாட்டில் தேடினேன் கிடைக்கவில்லை அங்கே தமிழர் பண்பாடு என்கிறார்கள். சரி தெற்கில் தமிழ்நாட்டுக்கு அடுத்து கடல் மட்டுமே உள்ளதால் இந்திய வரைபடத்தில் வட எல்லையாக காட்டப்படும் காசுமீரில் தேடலாம் என்று போனால் ‘இந்திய’ என்று தொடங்குவதற்குள் நாங்கள் காசுமீரிகள் என்று கடுப்போடு சொல்கிறார்கள். பிற மாநிலங்களிலும் அந்தந்த மொழி, இனவாரியான பழக்கங்கள் தான் வழக்கத்தில் உள்ளன. அப்படி இருக்க இந்த கூட்டாஞ்சோற்றுக் கலாசாரத்துக்குள் ‘இந்திய’ பண்டம் இல்லை. அதனால் அனைவருக்கும் பொதுவாக முத்தமிடாதவர்கள் முதல் கல்லை எறியட்டும் என்றால் ஆளையும் காணோம் கல்லையும் காணோம். இந்திய பண்பாட்டை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் கட்சியை சார்ந்த அரசியல்வாதிகள் சட்டமன்றத்திலேயே அலைபேசியில் கிளர்ச்சியூட்டும் காணொளிகளைக் கண்ட போது யாரும் சட்டமன்றத்தை அடித்து நொறுக்கவில்லை, இந்துக்கோவிலின் கருவறைக்குள்ளே பூசாரி உடலுறவு கொண்ட போது எந்த தொலைகாட்சியும் அதுபற்றிய செய்தியை பரப்பவில்லை. அப்போதெல்லாம் கெட்டுப்போகாத இந்திய கலாசாரம் ஒரு உணவகத்தின் வாகன நிறுத்தத்தில் கெட்டுப்போவது தான் இந்த ஆண்ட்ராய்ட் காலத்திலும் புரியாத விந்தை.

பூமத்திய ரேகையின் மேற்பகுதியில் இருக்கும் குளிர் அதிகமான மேற்கு நாடுகளில் பொது இடங்களில் அன்புக்குரியவரை கட்டிக்கொள்வதும் முத்தமிட்டுக்கொள்வதும் வெப்பத்தை பரிமாறிக்கொள்ளும் செய்கை. அதனால் அங்கு அச்செயல்களுக்கு சமூக இசைவு இருக்கிறது. நம் நாட்டைப்பொறுத்தவரை பெரும்பான்மைக் கருத்து என்னவெனில் பொது இடத்தில் இப்படி நடந்து கொள்வது தவறு தான். நம்மூரிலும் எல்லாரும் முத்தம் கொடுத்துக்கொள்கிறார்கள் என்றாலும் கண்ணியமாக பரிமாறிக்கொள்கிறார்கள் என்பது ஒரு வாதம். கண்ணியம் என்பதற்கு ஒளிந்துகொண்டு, மறைவாக, நான்கு சுவற்றுக்குள் என்று ஒரு சாராரும் மனைவிக்கு மட்டும் என்று சிலரும் பொருள் கூறுகிறார்கள். ‘மனைவிக்கு மட்டும் அதுவும் மறைவாக முத்தம்’ என்றும் வெகு சிலர் விளக்கினார்கள். இங்கு தான் சிக்கல். முத்தத்தை நாம் எப்போதும் பாலுணர்வூட்டலின் ஒரு பகுதியாக மட்டுமே நினைவுபடுத்திக்கொள்கிறோம். நம் நிலவியல்தன்மையைபடி ஆராய்கையில் அது உண்மையாகவே இருந்தாலும் கூட முத்தத்தில் காமத்தையும் தாண்டி மற்றவையும் உண்டு என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். அன்பின், நட்பின், நம்பிக்கையின், வெற்றியின், இயலாமையின், பிரிவின், ஆற்றாமையின் வெளிப்பாடாகவும் முத்தம் இருக்கலாம். எல்லா காலகட்டங்களிலும் அன்பின் உச்சபட்ச வெளிப்பாடாக முத்தங்கள் பரிமாறப்பட்டு வந்திருக்கின்றன இடம் பொருள் ஏவல் எதுவும் பார்க்காமல்.

unnamed (1)

முத்தமிட்டு பிரியும் இணையர்கள் / காதலர்கள் அடுத்து அங்கேயே உடலுறவு கொள்வார்கள் என்று நினைப்பது தான் கலாசாரக்காவலர்களின் இழிவான பார்வை. முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது அன்பின் முத்தப்போராட்டம் இன்றைய காலகட்டத்தில் கலாசாரம் என்ற பெயரில் பிற்போக்குத்தனமாக நடந்து கொள்ளும் சில அமைப்புகளுக்கு எதிரான ஒரு கலகம் அதுவே நம்முடைய நிகழ்கால, எதிர்காலக் கலாச்சாரம் அல்ல. அதனால் தான் அது ஒரு பொது இடத்தில் நடத்தப்பட்டது. அதே நேரம் இது பொது இடங்களில் முத்தமிட்டுக்கொள்ள உரிமை கோரும் போராட்டம் என்ற கற்பிதத்தை உடைக்க வேண்டியிருக்கிறது. பண்பாடு என்ற பெயரில் பயங்கரவாதத்தை கையிலெடுக்கும் பிற்போக்காளர்களுக்கு எதிரான நடவடிக்கையாக இதை மாற்ற வேண்டும். இங்கு 2004ஆம் ஆண்டு அசாமில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் “Armed Forces Special Powers Act (AFSPA)”க்கு எதிராக நடந்த ‘நிர்வாண போராட்டத்தை’ நாம் நினைவில் கொள்ள வேண்டும். (போராட்டத்திற்கான காரணங்களில் மலையளவு மாறுபாடு இருந்தாலும் போராட்ட முறையின் ஒப்பீட்டுக்காக குறிப்பிடுகிறேன்).

இறுதியாக, சமூகத்தில் பசியால் சாகிறார்கள், சூழல் மாசுபடுகிறது, விவசாயம் பொய்க்கிறது, வளங்கள் அழிகிறது என்று எத்தனையோ அவலங்கள் இருக்க இதற்காக இப்படி ஒரு போராட்டாமா என்று விசனப்படுபவர்களுக்கு இனிவரும் நாட்களில், பின்னிரவில் அலுவலக வாகனத்தை தவறவிட்ட காரணத்தால் பாதுகாப்புக்காக இருசக்கர வாகனத்தில் ஒன்றாக பயணிக்கும் அலுவலகத் தோழியும் தோழனும் பண்பாட்டு சீர்கேட்டுப் பார்வையில் தாக்கப்படலாம். ஜீன்ஸ் அணிந்து கடைவீதிக்குச் சென்றதற்காக கூட யாரோ ஒருவருடைய தங்கை கலாசாரக்காவலின் பெயரால் துன்புறுத்தப்படலாம். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சாதியின் பெயராலும் கலாசார, பண்பாடுகளின் பெயராலும் தொடந்து கொண்டுதான் இருக்கின்றன. அன்பின் முத்தப்போராட்டம் நடத்தும் இதே குழுக்கள்/ஆதரவு இயக்கங்கள் இதன் அடுத்த கட்டமாக என்ன செய்வார்கள் என்பதில் குழப்பம் இருக்கிறது. அவர்கள் உண்மையில் முற்போக்காளராகவோ இந்துத்துவத்திற்கு எதிரான கொள்கை உடையவராகவோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் தன்னெழுச்சியாக கலகம் பரவும் இச்சூழ்நிலையில் மெய்யான முற்போக்கு, சனநாயக‌ இயக்கங்கள் சாதி /மத மறுப்புத் திருமணங்களை பெருமளவில் ஒன்று கூடி  நடத்தினால் இந்த முத்த கலகம் சமூக மாற்றத்திற்கு வித்திடும் என நம்புகிறேன்.  

ஒற்றுமையே பலம். எதிரியைத் தனிமைப்படுத்தி நாம் இணைந்தால் இயலாதது இல்லை. அதனால் அமைப்பாவது நன்று.

– அவனி அரவிந்தன்

About அவனி அரவிந்தன்

One comment

  1. மிக அருமையான – காலத்திற்கு தேவையான கட்டுரை.

    மேக் இன் இந்தியா என்று உலகமய தனியார்மயத்தை நோக்கி நடுத்தர வர்க்க இளைஞர்களை இந்துத்துவா அரசியல் சூழ்ச்சியாக இழுக்கிற சூழலில் இது முக்கியமான – முற்போக்கு அம்சம் கொண்ட போராட்டம், இதை மேலும் வளர்த்தெடுப்பது ஒரு அரசியல் இயக்கத்தின் வேலை. அருமையாக செய்துள்ளீர்கள். ஒன்றுபட்டு உழைப்போம். வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*