Home / அரசியல் / மீனவர்கள் மீண்டும் கைது – பூப்பறிக்கும் இந்தியக் கப்பற்படை

மீனவர்கள் மீண்டும் கைது – பூப்பறிக்கும் இந்தியக் கப்பற்படை

நேற்றைய முன் தினம் தமிழக மீனவர்கள், சிங்கள கடற்படையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த இரு விசைப்படகுகளின் எந்திரம் நடுக்கடலில் பழுதானதால், அப் பழுதைச் சீர் செய்து கொண்டிருந்த பத்து மீனவர்களையும், ராமேசுவரம் விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற நம்பு சேகரனின் படகில் டீசல் எரிபொருள் தீர்ந்து விட்டதால், அவரையும் அவர் படகில் இருந்த மற்ற மூவர் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்தது சிங்களக் கடற்படை. ஆக 14 பேர் கைது செய்யப்பட்டு, பல்வேறு சோதனைகளுக்குப் பின் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் விசைப்படகுகளும் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றன.

இந்த 14 பேரும் கைது செய்யப்பட்டது ”இந்திய கடல் எல்லைக்குள்” என்பதை இங்கே நாம் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டும். பொதுவாக “தமிழக மீனவர்கள் கைது” அதுவும் “மீண்டும் கைது” என பல்லாயிரம் முறை செய்திகளில் படித்து கடந்து போய்க் கொண்டிருக்கும் நமக்கு இச்செய்தி புதிதல்ல என்றாலும், தமிழகத்தில் தற்போதிருக்கும் அரசியல் சூழலில் இச்செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.

14 பேர் கைதோடு சேர்த்து இதுவரை மொத்தம் 38 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். 80க்கும் மேற்பட்ட படகுகளும் தற்போது சிங்கள அரசிடமே இருக்கின்றன. இதுவரை ப‌ல நூறு கோடிகளுக்கு மேல் பொருட்சேதத்தை இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக மீனவர்கள் கடந்த இருபது ஆண்டுகளாக அனுபவித்து வரும் சொல்லொணாத் துயரங்களுக்கு, ஐந்து மீனவர்கள் விடுதலை மட்டும் நிரந்தரத் தீர்வாகி விட முடியாது என்பதை இக்கைது சம்பவம் முகத்தில் அறைந்து அறிவிக்கின்றது. மீனவர்களின் வேதனை துளி கூட தீராமல், பா.ஜ.கவின் சுயசொரிதல் பாராட்டு விழாவானது, ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல் உள்ளது. என்ன இருந்தாலும் நமது பிரதமர் மோடி நவீன நீரோ தானே.

அது மட்டுமின்றி, இந்திய அரசின் தோல்வியடைந்த அயலுறவுக் கொள்கைள், நட்பு நாடு கோட்பாடுகள் உள்ளிட்ட அகக்காரணங்களோடு, சில புறக்காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் இந்தியக் கடற்படையும் கடலோரக் காவல் படையும் மறந்தும் கூட, இந்த அப்பாவி மீனவர்களைக் காப்பாற்ற வருவதில்லை. மீனவர்கள் தாக்கப்படும் போதும் கைது செய்யப்படும் போதும் அந்தப்பகுதிக்கே இவர்கள் வருவதில்லை என்பது தான் குறிப்பிடத்தக்க செய்தி.

STRIKE_666030f

மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போதெல்லாம், கடலோரக் காவல் படையிடம் அனுமதிச் சீட்டு ( டோக்கன் ) பெற்றுக் கொண்டு தான் செல்கிறார்கள். பல விதமான சோதனைகளுக்குப் பிறகு தான் கடலோரக் காவல் படை மீனவர்களை மீன் பிடிக்கச் செல்ல அனுமதிக்கிறது. இவ்வாறான சோதனைகளுக்குப் பிறகு, கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் ஒவ்வொரு மீனவனையும் பாதுகாக்க வேண்டியது, கடலோரக் காவல் படையின் பொறுப்பாகாதா ? ஒவ்வொரு மனித உயிரின் பாதுகாப்புக்கும் உறுதி அளிக்க வேண்டியது இந்திய பாதுகாப்புத் துறையின் கடமை அல்லவா?

இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறுகிறது, பாகிஸ்தான் பந்துவிளையாடுகிறது என அலறும் ஊடகங்கள், இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து இந்திய மீனவர்களைக் கைது செய்யும், சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படைப்பற்றி ஏன் மூச்சு கூட விடுவதில்லை?. உலகின் மிகப்பெரிய கப்பற்படைகளுள் ஒன்று என பெருமை பேசும் இந்திய கடற்படையால், ஒரு சில விசைப்படகுகளைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், இந்திய பாதுகாப்புத் துறையின் முகமூடியையும் , பாராட்டு விழாவுக்குத் தயாராகும் 56 இஞ்ச் மார்பளவு கொண்ட அசகாய சூரரான மோடியின் முகமூடியையும் தோலுரிக்க வேண்டியது தமிழர்களாக நமது கடமையல்லவா ?

அ.மு.செய்யது.

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*