Home / அரசியல் / பித்தலாட்டத்தால் பிழைக்கிறதா மோடி மந்திரம்?

பித்தலாட்டத்தால் பிழைக்கிறதா மோடி மந்திரம்?

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வெற்றி பெற்று, நரேந்திர மோடி ஆட்சி அமைத்தது எல்லாம் பழைய செய்தி என்று நாம் சொல்லும் அளவிற்கு ஏராளமான செய்திகள் மோடியைப் பற்றி வந்து கொண்டே இருக்கின்றன.

ஊடகவியலாளர் சாய்நாத் ஒரு கருத்தரங்கில் பேசும் போது , “மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பெரும்பாலான ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு மோடியின் புகழ் பாடுகின்றன. மோடிக்கு இனி அப்கோ (APCO) போன்ற விளம்பர நிறுவனங்கள் தேவையில்லை. அந்த பணியை இந்திய ஊடகங்களே திறம்படச் செய்கின்றன ” என்று கூறியிருந்தார்.

இப்படி மோடியைப் பற்றிய ஒரு சிறு செய்தியைக் கூட தவறவிடாமல், நித்தமும் விதந்தோதி வந்த ஊடகங்கள், ஒரு செய்தியை மட்டும் சத்தம் இல்லாமல் விட்டுவிட்டன.

2014 தேர்தலில், வாரணாசி தொகுதியில் நடந்த வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளில், 3,11,057 வாக்குகள் போலியானவை என்று தேர்தல் ஆணையம் கண்டுபிடித்துள்ளது.

18 வயது நிரம்பியவர்களை வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள், வீடு வீடாகச் சென்று நடத்திய ஆய்வின் போதுதான் போலி வாக்காளர்கள் இருப்பதும், கடந்த தேர்தலில் வாக்குப் பதிவு செய்ததும் தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியைப் பற்றி தெரிந்த மோடியின்  ஆசி பெற்ற ஊடகங்கள் அனைத்தும் தங்களது புலன்களை இறுக மூடிக் கொண்டு மோடியின் தேர்தல் பரப்புரையை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.

நவபாரத் டைம்ஸ் என்னும் ஊடகம் 25 நவம்பர்,2014 அன்றே இந்த செய்தியை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, ஆஜ் தக் என்னும் இந்தி ஊடகமும் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

சுபான்ஷு ஷர்மா என்னும் ஊடகவியலாளர், மாவட்ட நிர்வாகங்களின் கணக்கின் அடிப்படையில் இன்னும் அதிகமான போலி வாக்காளர்கள் கண்டுபிடிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

 

அதன் விபரம் பின் வருமாறு;

 

மாவட்டம்

போலி வாக்காளர்களின் எண்ணிக்கை

பிந்த்ரா

1,12,160 வாக்காளர்கள்

அஜ்கரா

1,01,456 வாக்காளர்கள்

சிவ்பூர்

87,140 வாக்காளர்கள்

ரோஹானியா

84,757 வாக்காளர்கள்

கண்ட்ட்

65.989 வாக்காளர்கள்

சேவாபுரி பகுதிகள்

90,942 வாக்காளர்கள்

மொத்தம்

5,42,438 வாக்காளர்கள்


மாவட்டவாரியாக கொடுக்கப்பட்ட கணக்கில் அடிப்படையில், மொத்தம் 5,42,438 பேர், போலி வாக்காளர்களாக இருக்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.

இதுவரை,  3,11,057 பேர்  போலி வாக்காளர்களாக உள்ளதாக அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், ஆய்வு முடியும் போது இந்த எண்ணிக்கை  6,47,085 வரை தொடக் கூடும் என்று தெரிவித்துள்ளது.

வாரணாசி தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 10,30,685.

Shocking-More-than-6-lakhs-bogus-voters-found-in-Varanasi

இப்படியிருக்கையில், நமது பிரதமர், வளர்ச்சிக்கான வழிகாட்டி திரு.நரேந்திர மோடி வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசம் 3,71,784 வாக்குகள்தான்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது, வாரணாசி தொகுதியைத் தேர்ந்தெடுத்தது, அதற்கு தேர்தல் பொறுப்பாளராக அமித் ஷா-வை அனுப்பியது என அனைத்தும் எதற்கு என்று இந்தச் செய்தியினால் வெட்ட வெளிச்சமாகிறது.

மோடி அலை என்று ஆர்ப்பரித்த ஊடகங்களோ, மோடி ரசிகர்களோ இது பற்றி இன்னும் வாய் திறக்கவில்லை. ஆட்சியில் இல்லாத போதே பா.ச.க-வால் இதை செய்திருக்க முடியும் எனில், தற்போது ஆட்சியில் இருந்து பெற்ற அரியானா, மகாராஷ்டிரா மாநிலத் தேர்தல் வெற்றிகளை என்னவென்று சொல்வது?

ஒருவேளை, மோடி அலையில், மோடியே மூழ்கிவிடக் கூடாது என்று செய்திருப்பார்களோ என்று தெரியவில்லை.

இத்தகவல்களைப் பற்றிய விபரங்களைக் கொண்டு, தேர்தல் ஆணையமோ, நீதிமன்றமோ வாரணாசி தொகுதியில் நடைபெற்ற வாக்குப் பதிவில் செய்யப்பட்ட மோடி வித்தையைக் அறிவித்து, தேர்தலை ரத்து செய்து அறிவிக்க வேண்டும் என்பதே சரி.

“திருடன் கையில் கொத்துச் சாவியாக” – ஆட்சியும், அதிகாரமும் வைத்திருப்பவர்கள் இவ்வாறு நடக்கவிடுவர்களா ? இல்லை, என்பது நம்மைப் போன்றவர்களின் எண்ணம் மட்டுமல்ல; உண்மையும்கூட.

அதற்கேற்றாற் போல, உத்தர பிரதேச மாநில தேர்தல் அதிகாரி ஒருவர், இந்தச் செய்தியை வெளியிட்ட ஊடகவியலாளர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ” கண்டுபிடிக்கப்பட்டது போலி வாக்காளர்கள் எண்ணிக்கை அல்ல; அது ஒரு முறைக்கு மேலாக, அதாவது இரட்டிப்பாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை ” என்று மோடி மந்திரத்தை கட்டிக் காக்க முந்தியடிக்கிறது அதிகார வர்க்கம்.

ஒரே வாக்காளர் இருமுறை வாக்களிப்பதுதான் கள்ள ஓட்டு; வாக்காளர் பட்டியலிலும் பெயர் இருமுறை இருந்துவிட்டால் அது இன்னும் எளிதாக நிறைவேறக் கூடியது என்று அந்த தேர்தல் அதிகாரிக்கு யாரேனும் நினைவூட்டினால் நலம்.

இவ்வாறாக, பித்தலாட்ட அரசியலும், அதிகாரமும் இணையும் புள்ளியில் பிழைத்திருக்கிறது மோடி மந்திரம்!

கதிரவன்
இளந்தமிழகம் இயக்கம்

தரவுகள்:

http://kohram.in/ec-finds-over-3-lakh-bogus-voters-in-narendra-modis-varanasi-seat-counting-continues/

http://shiningindianews.com/shocking-more-than-6-lakhs-bogus-voters-found-in-varanasi/#.VHw8qtKUf9t

 

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*