Home / FITE சங்கம் / போலி நேர்முகத் தேர்வுகளும், பணி நியமனங்களும் – ஓர் சதுரங்க வேட்டை!

போலி நேர்முகத் தேர்வுகளும், பணி நியமனங்களும் – ஓர் சதுரங்க வேட்டை!

அண்மையில் வெளியான சதுரங்க வேட்டை திரைப்படத்தைப் பற்றி நண்பர்கள் பலரும் பாராட்டிப் பேசினர். அத்தோடு, அப்படத்தில் வரும் நிகழ்வுகள் அனைத்தும் திருப்பூரைச் சுற்றி நடந்தவற்றைக் கொண்டே கதை  பின்னப்பட்டுள்ளது எனக் கூறியபோது, ஊர்ப்பாசத்தில் படத்தைப் பார்க்கும் ஆவல் அதிகரித்தது. திரைப்படமும் நன்றாகத்தான் இருந்தது.

எம்.எல்.எம் மேடையில் காந்தி பாபு பேசும் வசனங்கள், என்னுடைய கல்லூரி இறுதியாண்டில் வளாகத் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி? என்று நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேசிய ஒருவரை நினைவூட்டியது. ஆம்! உங்கள் தோல்விகளுக்கு நீங்கள் மட்டுமே காரணம், உங்களையே பழித்துக் கொள்ளுங்கள் (BLAME YOURSELF) என்று அவர் செய்த பிரசங்கத்திற்கும், காந்தி பாபுவின் வசனமான நீங்கள் நினைத்தால் முடியும்; நம்பிக்கையற்று இருந்த என்னை பணக்கரானக்கியது தன்னம்பிக்கைதான் என்பதற்கும் பெரிய வேறுபாடில்லை. இரண்டுமே ஒரு தோல்வியின் புறக்காரணிகளைத் தவிர்த்துவிட்டு தனிநபரைக் குற்ற உணர்வு கொள்ளச் செய்து, அதை காசாக்கும் வேலையே.

சதுரங்க வேட்டை படத்தில் வருவது போன்ற நிகழ்வுகளுக்கு நாம் எப்போதாவது பலி ஆகியிருக்கிறோமா? என்றால், இல்லை என்கிற பதிலே பெரும்பாலான நண்பர்களிடம் இருந்து வந்தது. ஆனால், கல்லூரி வளாகத் தேர்வில் வெற்றி பெறாமல், கல்லூரியைவிட்டு வெளியில் வந்து வேலை தேடிய அனைவரும் ஒரு விடயத்தை கடந்திருப்போம்.

அப்படியாக நடக்கும் ஒரு மோசடி வேலையைப் பற்றித்தான் இந்த கட்டுரை பேசப்போகிறது.

இந்திய விடுதலைக்கு முன் ஆங்கிலேய அரசில் நிர்வாகப் பணிக்கு தேவைப்பட்டவர்களை உருவாக்கும் பொருட்டு,அறிமுகப்படுத்தப்பட்ட மெக்கலே கல்வி போன்றே இன்று கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவையை நிறைவு செய்யும் விதமாக நம்முடைய கல்வி முறை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

கோழிப் பண்ணை பள்ளிகள், புற்றீசல் போல பெருகி வரும் தனியார் பொறியியல் கல்லூரிகளால் உற்பத்தி செய்யப்பட்டு எந்திரமாக வெளிவந்தவர்கள் நாம்.

பள்ளிக்குச் சென்று நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும், பொறியியல் அல்லது மருத்துவம் படிக்க வேண்டும், படித்து முடித்தவுடன் வேலைக்குப் போயாக வேண்டும் என்று உயரழுத்தத்தில் இருக்கும் நம்முடைய சமூக ஒழுங்கில், வேலை கிடைக்காமல் வேலை தேடுவது என்பது ஒரு குற்றச் செயலாகப் பார்க்கப்படுகிறது.

எப்படியாவது இந்த ஆண்டு வேலை ஒன்றில் அமர்ந்து விட வேண்டும் என ஆண்டுக் கணக்கில் சென்னையிலோ, பெங்களூரிலோ நண்பர்களுடன் தங்கி வேலை தேடும் நண்பர்களை நாம் அறிவோம்.

வேலை கிடைக்கும் வரை ஊருக்குப் போக முடியாது, ஊரில் உள்ள உறவினர்கள் முதல் கல்லூரி இறுதியாண்டிலேயே வேலை கிடைத்துவிட்ட பக்கத்து வீட்டுப் பையன் என நம்மை அழுத்தும் காரணிகள் ஏராளம்.

கல்லூரியை முடித்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை தேடிக் கொண்டிருந்த என் நண்பர் ஒருவருக்கு BOSCH என்னும்  பொறியியல் நிறுவனத்திடம் இருந்து மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சலில், பெங்களூரில் நேர்காணல் நடைபெறுவதாகவும்,  நேர்காணலில் கலந்து கொள்ள முன்பணமாக 8200/- ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு பற்றிய தகவலும் பகிரப்பட்டிருந்தது. வங்கிக் கணக்கில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும், காசோலையோ அல்லது வரைவோலையாகவோ கட்டாயம் செலுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.போலி நேர்முகத்தேர்வு மின்னஞ்சல்

போலி நேர்முகத்தேர்வு மின்னஞ்சல்

நேர்காணல் நடத்த பெரிய நிறுவனங்கள் எதுவும் பணம் பெறுவதில்லை என்று அறிந்த போதிலும், அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரிடம் விசாரித்த போது, இது ஒரு மோசடி வேலை என்பதை அவரும் உறுதி செய்தார்.

நான் மேற்கூறியது ஒருவகையான மோசடி வேலை, இதன் மூலம் ஒருவரிடமிருந்து பறிக்கப்படும் பணம் 8200 ரூபாய். இந்த உத்தியை பல இளைஞர்களிடம் பயன்படுத்தினால் மட்டுமே பெரிய அளவிலான பணத்தை பறிக்க முடியும்.

அதனால், இதன் நீட்சியாக பெரிய நிறுவனங்களின் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு வேலை தேடும் இளைஞர்களிடம் ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம் என்று தொலைபேசியில் பேசுவார்கள். பின்னர்,நேர்முகத் தேர்வுக்கு பதிலாக,  தொலைபேசி வாயிலாகவே தேர்வை வைத்துக் கொள்வோம் என்று மின்னஞ்சல் அனுப்பப்படும். அந்த பெரிய நிறுவனத்தின் பெயரிலேயே இருக்கும் மின்னஞ்சல் முகவரி இருக்கும், அதுவும் மனிதவளத் துறையில் இருந்து வந்திருக்கிறது என்று நம்பும்படியாக பார்த்துக் கொள்வர். இப்படியாக போலியாக மின்னஞ்சல் அனுப்புவதற்கு Mail Spoofing  என்று பெயர்.

நமக்கு முதலில் தொலைபேசியில் அழைத்த எண்ணுக்கு திரும்ப அழைப்போமானால் அதுவும் நமக்கு வேலை தருவதாகக் கூறியுள்ள நிறுவனத்தின் பெயரிலேயே பதில் வரும்.

அதன் பிறகு, தொலைபேசி மூலம் தேர்வை நடத்தி, சில எளிமையான, வழமையான கேள்விகளைக் கேட்டுவிட்டு தேர்வில் வெற்றி பெற்றதாக சொல்லப்படும். நடைமுறையில் எந்த பெரிய நிறுவனமும் கல்லூரியை முடித்துவிட்டு வெளியில் வரும் பட்டதாரிகளை தொலைபேசி வாயிலாக தேர்வு செய்வதில்லை என்பதே நிதர்சனம்.

தேர்வில் வெற்றி பெற்றுவிட்டீர்கள் நீங்கள் இன்னும் 15 நாட்களில் பணிக்கு சேர வேண்டும், அதற்கு முன் தோராயமாக ஒரு லட்ச ரூபாயை அவர்கள் கொடுக்கும் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்படும். அதுவும் முதலில் 50 விழுக்காடு பணத்தைச் செலுத்துங்கள், நீங்கள் பணியில் அமர்ந்த பிறகு மீதியைச் செலுத்தினால் போதும் என்றும் நம்பிக்கையைப் பெரும் விதத்தில் சொல்லப்படும்.

FakeJob-Headerimg-2

முதல் தவணையைப் பெற்ற கையோடு கம்பி நீட்டும் மோசடி பேர்வழிகளும் உண்டு அதேசமயம், பணம் கொடுக்கும் இளைஞர் அவரது குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ சந்தேகம் வராத வரை பணத்தைக் கறக்க முயல்பவர்களும் உண்டு.

 

இவ்வாறு, இறுதி வரை பணத்தைக் கறக்க நினைப்பவர்கள், இரண்டாம் தவணையை பணி நியமன ஆணையை அனுப்பியவுடன் செலுத்த வேண்டும் என்று பேசுவர். நாம் வேலைக்கு சேரவேண்டிய முகவரியும், தேதியும் நமக்கு தெரிவிக்கப்படும் ஆனால் அங்கு சென்று பார்த்தால், அது அந்த பெரிய நிறுவனத்தின் ஏதேனும் ஒரு பிரிவாக இருக்கும்.

 

பெரும்பாலும் பல்வேறு இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ள பெரிய நிறுவனங்கள், தங்களுடைய ஏதேனும் ஒரு கிளையில் மட்டுமே புதிதாக பணிக்கு சேர்பவர்களுக்கான நடைமுறைகளை செய்யும். இந்த நடைமுறைகள் செய்யப்படாத ஒரு கிளையின் முகவரியை நமக்கு அனுப்பி, நாம் அங்கு சென்று சேரும் போதுதான் நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதே புரியும்.

 

இத்தகைய மோசடிகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள நாம் செய்ய வேண்டியவை,

  • போலி தொலைபேசி அழைப்புகளைப் பெறும் நண்பர்கள், பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் தங்களுடைய சகோதரர்களிடமோ, நண்பர்களிடமோ கேட்டு உறுதிப்படுத்த வேண்டும்.

  • எந்த பெரிய நிறுவனமும் நேர்முகத் தேர்வுக்கோ, பணி நியமனத்திற்கோ  பணம் கேட்பதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  • குறிப்பிட்ட முகவரியில் அந்த நிறுவனம் இயங்குகிறதா?, அவர்களிடம் இருந்துதான் அழைப்புகளும், மின்னஞ்சலும் வருகிறதா? என்று நேரில் சென்று விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும்.

    மன அழுத்தத்தில் வேலை தேடி கொண்டிருக்கும் நம்முடைய சகோதரர்களை, நம்மைப் போன்றவர்களை மோசடிப் பேர்வழிகளிடம் இருந்து காக்கும் பொறுப்பு சமூகத்திற்கும், நமக்கும் மிகப்பெரிய அளவில் உள்ளது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

கதிரவன்
இளந்தமிழகம் இயக்கம்

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*