Home / சமூகம் / இந்துத்துவம் / பாபர் மசூதி இடிப்பு – இந்தியாவில் நடந்த மிகப்பெரும் மதப் பயங்கரவாதச் செயல்
பாபர் மசூதியை இடித்து தள்ளிய களிப்பில் இருக்கும் இன்றைய மத்திய அமைச்சர்கள்

பாபர் மசூதி இடிப்பு – இந்தியாவில் நடந்த மிகப்பெரும் மதப் பயங்கரவாதச் செயல்

 1992 , திசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதுதான் இந்தியாவில் நடந்த மிகப் பெரும் மதப் பயங்கரவாதச் செயல். 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தாலும் இன்றும் சனநாயகத்தின் மீது பற்றுக் கொண்டவர்களின் இதயத்தில் ஆறாத காயமாக இருந்துகொண்டிருக்கிறது. இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ்- பா.ச.க.க் காரர்களால் அரங்கேற்றப்பட்டது அது. இன்று நாடாளுமன்ற அவையில் இருக்கும் அத்வானி, உமாபாரதி மற்றும் முன்னாள் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் முரளி மனோகர் ஜோசி ஆகியோர் பாபர் மசூதி இடிக்கப்படும் போது அங்கிருந்தவர்கள் அன்றைய மத்திய காங்கிரசு அரசின் ஆசியோடுதான் இது நடந்து முடிந்தது. பாபர் மசூதி இடிப்பின் நீண்ட நெடிய வரலாற்றுப் பின்புலத்தில் பிரித்தெடுக்க முடியாத பங்கு காங்கிரசுக்கு உண்டு. 1949 இல் இருந்த நேரு அரசுக்கும் பொறுப்புண்டு. 1986 இல் இருந்த நேருவின் பேரன் இராசீவ் காந்திக்கும் பங்குண்டு. நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியம் கொண்ட காங்கிரசு கட்சியும் இந்துத்துவ அரசியல் சார்பு கொண்டதுதான். உண்மையில் அதன் போலி மதச்சார்பின்மையும் வாக்கு வங்கி அரசியலும் சுயேட்சையான இசுலாமிய இயக்கங்கள், இசுலாமியத் தலைவர்கள் உருவாகி நிலைபெறுவதற்குத் தான் தடையாக இருந்தது என்றே விளக்கப்படுத்த முடியும்.

பாபர் மசூதியை இடித்து தள்ளிய களிப்பில் இருக்கும் இன்றைய மத்திய அமைச்சர்கள்

பாபர் மசூதியை இடித்து தள்ளிய களிப்பில் இருக்கும் இன்றைய மத்திய அமைச்சர்கள்

1980 களில் வலுப்பெற்ற சங் பரிவாரங்கள் ”ரத யாத்திரை” களின் மூலமாக இரத்த யாத்திரைகள் நடத்தி நாடு தழுவிய அளவிலான பரப்புரையின் முடிவில் பாபர் மசூதியைத் தரைமட்டமாக்கினர். அதையே அரசியல் மூலதனமாகக் கொண்டு இந்து முசுலிம் அரசியலைக் கூர்மைப்படுத்தி 90 களின் இறுதியில் நாடாளும் இடத்திற்கும் வந்தார்கள். ஆனால், அன்று 18 கட்சிகளோடு சேர்ந்து கூட்டணி ஆட்சித் தான் அவர்களால் அமைக்க முடிந்தது. ஆனால் இன்றோ  பெரும்பான்மை பலத்தோடு தனித்து ஆட்சி அமைத்துவிட்டார்கள். கடந்த ஆண்டின் பாபர் மசூதி இடிப்பு தினத்திற்கும் இன்றைக்குமான முக்கிய வேறுபாடு இதுதான்.

முன்பு பெயருக்காவது இடித்த இடத்தில் பாபர் மசூதியைக் கட்ட வேண்டும் என்று கோர முடிந்தது. ஆனால் இன்றோ, பாபர் மசூதியை இடித்தவர்கள்,  இராமர் கோயிலைக் கட்டியே தீருவோம் என்று சொல்பவர்கள், தங்களை இராமரின் வாரிசுகளாக பிரகடனப்படுத்திக் கொள்பவர்கள், இசுலாமியர்களைக் கொல்வதைப் பற்றிக் கவலைப்படாத ’சாதுக்கள்’, பிரம்மச்சாரிகள்தான் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். இராமர் பிறந்த பூமி, இராமர் பாலம், இராமர் பாதம், இராமர் வாரிசு என்று இன்னும் எத்தனை காலத்திற்கு இந்திய ஆளும்வர்க்கத்தின் ஒரு பகுதியினர் இப்படி அரசியல் செய்யப் போகின்றனர், அதை இந்தியாவின் மக்கள் அனுமதிக்கப் போகிறார்கள்?

பாபர் மசூதியை இடித்து தள்ளிய களிப்பில் இருக்கும் இன்றைய மத்திய அமைச்சர்கள்

இந்துத்துவப் புராணங்கள், இதிகாசங்கள், இந்து மன்னர்களின் வீரக் கதைகளின் பெருமிதங்களையும், தோல்வியின் வன்மங்களையும் கலந்துத் தான் இந்தியத் தேசியம் வடித்தெடுக்கப்பட்டது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரானப் போராட்டத்தின் பின்புலத்திலும் அன்றைய தலைவர்களின் மேற்கத்திய கல்விப்  பின்புலத்திலும் இந்தியப் புராண நூல்களின் அறக் கருத்துகளின் பின்புலத்திலும் சமூகநீதிக்காக முன்னெடுக்கபட்ட போராட்டங்களின் பின்புலத்திலும் தான் இந்திய தேசியத்தில் சனநாயகக் கூறுகள் பெறப்பட்டன. ”இந்திய தேசியம் = இந்து தேசியம்” என்று எளிதில் சமன்படுத்திவிடக் கூடிய காரணங்கள் இல்லாமல் இல்லை.

1947 இல் இந்தியா , பாகிசுதான் என இரு நாடுகளாக உருவான வரலாறு கூட   அதை ஒட்ட நடந்த வன்முறைகளும், படுகொலைகளும் ஏற்படுத்திய ஆறாத இரத்தத் தழும்புகளுடன்தான் இன்றும் காட்சியளிக்கின்றது. அன்றைய வன்முறைகளைக் கூட தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவர இந்துத்துவப் பலி பீடத்தில் ’இந்தியாவின் தந்தை’ என்று புகழாரம் சூட்டப்பட்ட காந்தி இரத்தம் சிந்த வேண்டியிருந்தது என்பதை நினைவுப்படுத்த வேண்டியுள்ளது. இத்தனைக்கு அப்பாலும் இந்தியாவில் இருந்த இசுலாமியர்கள் இசுலாத்தின் மீதும் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மதத்தவர்கள் என்று சொல்லப்படும் இந்துக்களின் மீதும் நம்பிக்கை வைத்திருந்தனர். உண்மையில் இடிக்கப்பட்டது பாபர் மசூதி அல்ல. இசுலாமியர்கள் இந்துக்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையைத் தான். எந்த நீதிமன்ற தீர்ப்பும் சலுகைகளும் அந்த நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியாதென்றே சொல்ல வேண்டும்.

babri-and-RSS

பாபர் மசூதியை இடித்ததென்பது இந்தியாவில் உள்ள இசுலாமியர்களின் ஆன்மாவைச் சிதைத்ததென்றே சொல்ல வேண்டும். ஒரு கடவுள் மறுப்பாளரோ, மத மறுப்பாளரோ அந்த வலியை முழுமையாக உணர்ந்திருக்க முடியாது. ஆப்கனில் பாமியான் புத்தர் சிலை தாலிபன்களால் தகர்க்கப்பட்டதும், இலங்கையில் இந்துக் கோவில்கள் சிங்களப் பேரினவாதிகளால் இடிக்கப்பட்டதும், இந்தியாவில் பாபர் மசூதி இந்துத்துவ வெறியர்களால் இடிக்கப்பட்டதும் மதப் பயங்கரவாதத்தின் வகைப்பட்டது என்று சொல்லும் பொழுது மத நம்பிக்கை கொண்டவர்கள் ஒரளவுக்கு இந்த வலியைப் புரிந்து கொள்ள முடியும்.

2014 இல் பாபர் மசூதி இடிப்பு நாள் உணர்த்துவது :

1998 இல் எவர் கடும்போக்காளர்(அத்வானி) என்று அறியப்பட்டாரோ அவர் இன்று மிதவாதியென்று ஓரங்கட்டப்பட்டுள்ளார். அன்று ஒரு மிதவாதியை(வாஜ்பாய்) முன்னிறுத்த வேண்டிய தேவை ஆர்.எஸ்.எஸுக்கு இருந்தது. இன்று ஒரு இனப்படுகொலைகாரன்(மோடி) கூடப் பிரச்சனையில்லை என்பதுதான் உருவாகியுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடி விட்டுவைத்துள்ள யதார்த்தம். இந்தியாவின் சமூக அரசியல் வரலாற்றில், காந்தியின் படுகொலைக்கும், பாபர் மசூதி இடிப்புக்கு இடம் இருப்பதைப் போல் ‘வளர்ச்சியின்’ பெயரால் மோடி என்ற இனப்படுகொலையாளி ஆட்சிக்கு வரமுடியும் என்பதுதான் நமக்கு விடப்படும் அறைகூவல்.  இந்த யதார்த்தத்தின் ஊடாக நாம் முன்னேறிச் செல்ல வேண்டியுள்ளது. இந்தியாவும் சரி இந்தியாவைச் சூழ்ந்துள்ள நாடுகளும் சரி மேற்காசிய நாடுகளும் சரி மதத்தின் பெயரால் அரசியல் பொருளாதார தேவைகளைத் தீர்த்துக் கொள்ளும் வரலாற்றுக் கட்டத்தில்தான் இருந்து வருகின்றன. இலங்கையும் பாகிஸ்தானும் பகிரங்கமாக தங்களை மதச் சார்பு கொண்ட அரசு என்று அறிவித்துக் கொண்டுள்ளன. ஆனால் இந்தியா அப்படி அறிவிக்க வில்லை, அவ்வளவே!

அத்வானியின் முதல் ரத்த யாத்திரையில்  இன்றைய பிரதமர் மோடி (அவர் தான் அதற்கு பின்புலம்)

அத்வானியின் முதல் ரத்த யாத்திரையில் இன்றைய பிரதமர் மோடி (அவர் தான் அதற்கு பின்புலம்)

சனநாயகமும் மதச்சார்பின்மையும்:

சர்வமதத்திற்குள்ளும், மத நல்லிணக்கத்திற்குள்ளும், நாத்திகவாதத்திற்குள்ளும் மதச்சார்பின்மையை வளர்த்தெடுக்க முடியாது. சனநாயகத்தின் பெயரால் தான் மதச்சார்பின்மை புரிந்துக் கொள்ளப்படுவதற்கான சாத்தியம் உண்டு. ஆனால் கெடுவாய்ப்பாக சனநாயகம் பெரும்பான்மைவாதமாக நம் நாட்டில் புரிந்துக் கொள்ளப்பட்டுவிட்டது. பெரும்பான்மை மதம் எதுவோ அதுவே அரச மதமாக இருக்க வேண்டும் என்று நம்பப்படுகின்றது.  ஆனால் ஒரு சனநாயக அரசு மதச்சார்ப்பற்றதாகத் தான் இருக்க வேண்டும் என்பதன் பொருள் அதுவன்று. ஒருவேளை இந்தியாவில் நூற்றுக்கு நூறு வீதம் ஒரு மதத்தவர்தான் வாழ்கின்றார்கள் என்றாலும் அது சனநாயக அரசென்றால் அது மதச்சார்பற்ற அரசாகத்தான் இருக்க வேண்டும்.

சான்றாக இந்தியாவில் இந்துக்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். தம் குடிமக்களில் யாரேனும் ஒருவர் மத நம்பிக்கையை கைவிடுவதாயினும் வேறு மதத்திற்கு மாறுவதாயினும் அதற்கு வழிவிடக் கூடியதாக அந்த அரசு இருக்க வேண்டும். அந்த ஒருவரின் வழிபாட்டுரிமையையும், தேர்வு உரிமையையும் பாதுகாக்க கூடிய அரசுதான் சனநாயக அரசாக இருக்க முடியும். எனவேதான் நாம் சனநாயக அரசு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்கிறோம். இந்துவெறி அரசியலால் ஒடுக்கப்படும் மதச்சிறும்பான்மை மக்களும் இந்துக்கள் என்று அறியப்படுபவர்களும் இணைந்து நின்று இந்துத்துவ வெறி அரசியலுக்கு எதிராக சனநாயகத்திற்காக கிளந்தெழுந்து போராடுவதன் மூலம்தான் இந்துவெறி அரசியலை முறியடிக்க முடியும். மதச்சார்பின்மை குறித்த சனநாயக உணர்வை வளர்த்தெடுப்பது ஒரு நீண்ட நெடிய போராட்டத்தின் ஊடாகவே சாத்தியம். அந்தப் போராட்டம் மிகக் கடினமானது. அது அளவற்ற ஈகங்களைக் கோரி நிற்கிறது. அதைத் தவிர வரலாறு வேறு வழி எதையும் விட்டுவைத்திருப்பதாகத் தெரியவில்லை.இதுவே கடந்த புராண, இதிகாச, பாவ புண்ணிய கதைகளுக்குள் சிக்குண்டிருக்கும் மக்களிடம் சனநாயக உணர்வை வளர்க்கும்.

செந்தில்
ஒருங்கிணைப்பாளர் – இளந்தமிழகம் இயக்கம்

மேலும் வாசிக்க‌:

http://www.keetru.com/index.php/2009-10-05-16-54-21/2011/13153-2011-02-22-10-58-24

About செந்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*