Home / சமூகம் / இந்துத்துவம் / வளைந்து கொடுக்கும் போப்பும், வளையாத மோடிகளும்….

வளைந்து கொடுக்கும் போப்பும், வளையாத மோடிகளும்….

இயற்கையின் விதிகளை மனித சமூகம் அறிய முனைந்த வரலாற்றின் தொடக்க காலத்தில் தங்களால் அறிய முடியாதவைகளை, குறிப்பாக இயற்கை சீற்றங்களினால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டதால் தங்களுக்கு அப்பாற்பட்ட சில சக்திகள் இயற்கையை கட்டுபடுத்தி வைத்திருப்பதாக நம்பினர். சமூகம் இயங்கும் விதிகளும் கூட இயற்கையை மீறிய சக்திதான் கட்டுபடுத்தி வைத்திருப்பதாகச் சொல்லி அனைத்தும் மத நம்பிக்கைகளாக மாற்றப்பட்டன.

சமூக வளர்ச்சியின் ஊடாக அறிஞர்கள் சிலர் இயற்கையின் இயங்கு விதியை கண்டுபிடிக்க கண்டுபிடிக்க அந்த கருத்துகள் மக்களிடம் போய்சேர விடாமல் மத நிறுவனங்கள்  தடுத்தன. உதாரணமாக புவி மையமாக நிலையாக இருக்க சூரியன் உட்பட இதரக் கோள்கள் புவியைச் சுற்றிவருவதாக முதலில் நம்பப்பட்டது.மதங்களும் இதனை வலியுறுத்தி வந்தன. பின்னர் சூரியனைச் சுற்றியே பூமி உட்பட சூரியக் குடும்பத்தின் கோள்கள் இயங்குவதும் கண்டுபிடிக்கப்பட்டது.  ஆனால் அறிவியலாளர்கள் அவ்வளவு எளிமையாக மக்களிடம் கொண்டுசெல்ல மத நிறுவனங்கள் விடவில்லை.கலிலியோ இதை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தால் கத்தோலிக்க கிறித்தவ மத நிறுவனத்தால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வாழ்நாள் முழுவதும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதான் 17 ஆம் நூற்றாண்டில் கிறித்தவ மதத்தின் நிலைமை.

நவீன அறிவியல் தொழில்நுட்பத்தால் 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டின் வளர்ச்சி என்பது முந்தைய பல நூற்றாண்டுகளின் வளர்ச்சியைவிட பல மடங்காக இருந்தது. இதற்கு அறிவியலாளர்களின் ஆராய்ச்சியும்,தொழிலாளர்களின் வியர்வையும் குருதியும் முக்கிய காரணமாகும். 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட பெரிய மாற்றம் உலகம் முழுவதுமுள்ள மக்களை அருகே இணைத்துள்ளது, அதனால் அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகள் நொடிப்பொழுதில் அனைவருக்கும் அறிய கிடைக்கின்றன. இந்தச் சூழல் உண்மையில் மதங்களுக்கு சிக்கலான தருணமே!

a-climate-change-pope-francis-higher-perspective-jpg

றிவியல் கல்வி:

அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் ரீகன் காலத்தில் கிறித்தவ மத அடிப்படைவாதிகள் சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை அறிவியல் பாடத்தில் சேர்க்கக்கூடாது என்று போர்க்கொடி உயர்த்தினார்கள். அதற்கு எதிராகப் பள்ளி ஆசிரியர்கள் அது மத நம்பிக்கை, இது அறிவியல் என போராடித்தான் பள்ளிகளில் இதைப் பாடமாக சேர்த்த வரலாறு அங்கிருக்கிறது.

இப்போதைய தகவல் தொழில்நுட்பக் காலத்தில் மக்களிடமிருந்து மேலும் அன்னியப்படாமல் இருக்க கத்தோலிக்க கிறித்தவ மதத் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பெருவெடிப்பு கோட்பாடும் ,  பரிணாமவியல் கோட்பாடும் உண்மைதான், கடவுள் ஒரு சாகசக்காரர் அல்ல என்று கூறியுள்ளார். இப்படி நவீன காலத்திற்காகத் தன்னை தகவமைக்க வேண்டிய தேவை மத நிறுவனத்திற்கு உள்ளது என அவர் யோசித்திருக்கக்கூடும்.

மோடியின் வியக்க வைக்கும் அறிவியல் பார்வை!

இந்தியாவில் இதற்கு நேர்மாறாக நடக்கிறது…  இந்துமத அடிப்படைவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-இல் பயிற்சிபெற்று அதன் வெகுமக்கள் கட்சியான பா.ச.க. மூலம்  இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் ஆகியுள்ள திருவாளர் நரேந்திர மோடி சில சிந்திக்க வைக்கக்கூடிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.

“கர்ணன் தன் தாயின் கருப்பையிலிருந்து தோன்றவில்லை என மகாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதன்பொருள் உயிர் அணு அறிவியல் அந்தக் காலத்தில் வளர்ந்திருந்தது என்பதுதானே…?

பிள்ளையார் யானைத் தலையுடன் பிறந்தார் எனில் அந்தக் காலத்திலேயே ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருந்தார்கள் என்பதுதானே…?”

modinepal

இதை ரிலையன்ஸ் மருத்துவம், ஆராய்ச்சி நிறுவனத்தில் பேசியுள்ள  ”மின்னனு இந்தியா” மோடி, ஏதோ திடீரென இப்படி பேசிவிட்டார் என நினைக்க வேண்டாம். ஏற்கனவே குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போது ஆர்.எஸ்.எஸ். வழிவந்த தினாநாத் பத்ரா என்பவரின் புத்தகங்களை 42,000 பள்ளிகளின் பாடத் திட்டத்தில் சேர்த்துள்ளார் மோடி, அதில் குந்தி மற்றும் கவுரவர்கள் காலத்திலேயே உயிர் அணு ஆராய்ச்சி இருந்தது என்றும்,மகாபாரதக் காலக்கட்டத்திலேயே தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டது என்றும், வேத காலத்திலேயே மோட்டார் வாகனம் இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதான் மோடியின் பார்வையும். விரைவில் இந்த ஆராய்ச்சி(?) முடிவுகள் இந்திய பொது பாடத்திட்டத்திலும் சேர்க்கப்படலாம். மெல்ல இந்நாட்டின் வரலாறு திரிக்கப்பட்டு பொய்ப் புரட்டும் அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துகளும் திணிக்கப்பட்டு கல்வி காவிமயமாக்கப்படும்.

சீனாக்காரர், சப்பான்காரர், இந்தியாக்காரர் சந்தித்த கதைகள் சிலகாலத்திற்கு முன்பு அதிக பிரபலம். அதில் மற்றவர்கள் தங்கள் பெருமையைப் பேசியபின் இந்தியாக்காரன் கடைசியாக பேசுவது நகைச்சுவையாக இருக்கும், அது போலத்தான் ”வளர்ச்சி” என்ற மாயையின் நாயகன் மோடி பேசியதும் உள்ளது. ஒரு காலத்தில் பாம்பு பிடிக்கும் காட்டுமிராண்டிகள் என இந்தியர்களைச் சொன்னார்கள், இப்போது நாங்கள் “மௌசை”(mouse) பிடிப்பவர்களாகிவிட்டோம் என்று அமெரிக்காவில் மோடி முழங்கினார், ஆனால் உயிரணு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை என ”நாங்க அந்த காலத்திலேயே அந்த மாதிரி” என்று பேசி காட்டுமிராண்டி காலத்தில் தான் இருக்கிறோம் என்று நம்மை அடையாளப்படுத்தும் வேலையைத்தான் செய்கிறார். இப்படியான அபத்தங்கள் முடிவுக்கு வர மக்கள் அறிவியலையும், அதிகாரத்தையும் கையிலெடுப்பதை நோக்கி முன்னேற வேண்டும். கல்வி காவிமயமாக்கப் படாமல் தடுக்க வேண்டியது நமது உடனடி கடமையாக இருக்கிறது.

– வினோத்

இளந்தமிழகம் இயக்கம்

About வினோத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*