Home / பொருளாதாரம் / சமையல் எரிவாயு நேரடிப் பணப் பரிமாற்றம் – மானிய ஒழிப்பின் முதல்படி

சமையல் எரிவாயு நேரடிப் பணப் பரிமாற்றம் – மானிய ஒழிப்பின் முதல்படி

2015 மே 15 முதல் இனி “சந்தை விலைக்கு” சமையல் எரிவாயு கிடைக்கவிருக்கிறது.  அதாவது தற்போது ரூபாய் 414க்கு கிடைக்கும் ( சென்னையில்) ஒரு சமையல் எரிவாயு உருளைக்கு, அடுத்த ஆண்டு மே மாதத்திலிருந்து சந்தை விலையான 880 ரூபாயை நாம் செலுத்த வேண்டி வருகிறது. நேரடி பண பரிமாற்றம் (Direct Benefit Transfer of LPG subsidy – DBTL) என்கிற திட்டத்தின் மூலம் மக்களின் வங்கிக் கணக்குக்கே மானியத் தொகை செலுத்தப்படும் என அரசு அறிவித்திருக்கிறது. அதுவும்  “தகுதியுடையவர்களுக்கு” மட்டுமே அந்த மானியமும் வழங்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது.

ஆதார் அட்டை இல்லையென்றாலும் வங்கிக் கணக்கு உடையவர்களுக்கு பணம் நேரடியாக பட்டு வாடா செய்யப்படும் எனவும் நடுவண் அரசு அறிவித்திருக்கிறது. இது நாள் வரை, மானியத்தொகையில் கிடைத்து வந்த சமையல் எரிவாயுவை நிறுத்தி விட்டு, உங்கள் வங்கிக் கணக்கில் அந்த மானியத்தொகையை போடுகிறோம் என நடுவண் அரசு அறிவிப்பதன் காரணமென்ன? என்ற‌ ஒரு கேள்வி நம்மிடையே இயல்பாக எழுகிறது. இந்த கேள்விக்கு விடையளிப்பதற்கு முன், இன்னும் சில காரணிகளை அலசுவோம்.
வங்கிக் கணக்கில் பணம் போடப்படும் என்றால், நாட்டில் எத்தனை பேரிடம் வங்கிக் கணக்கு இருக்கிறது? கடந்த 2013 வரை, இந்தியாவில் 35 விழுக்காடு மக்களிடம் மட்டுமே வங்கிக் கணக்கு இருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.சரி எல்லோருக்கும் வங்கிக் கணக்கு என்ற திட்டத்தின் படி, இதில் ஒரு ஐந்து விழுக்காடு அதிகரிக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். ஆக மீதமுள்ள 60 விழுக்காடு மக்களுக்கு இந்த மானியம் போய்ச் சேர வாய்ப்பே இல்லை.
LPG_1737903f

மேலும் இந்த 40 விழுக்காடு வங்கிக் கணக்கு உடைய மக்களுக்கு சரியாக மானியம் போய்ச் சேர்ந்து விடுமா என்றால் அதுவும் கிடையாது. “தகுதியுடையவர்களுக்கு” மட்டும் என்ற வரையறையின் கீழ், அதாவது ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் ஊதியம் வாங்குவேராயானால், அவருக்கும் இந்த மானியத்தொகை வழங்கப்படாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது.

கூட்டிக் கழித்து பார்த்தால், நாட்டில் 10 விழுக்காடு மக்களுக்கு மட்டுமே இந்த மானியத்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் விழக்கூடிய அளவுக்கு, சூட்சுமங்கள் கணக்கிடப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது. படிப்படியாக, அந்த பத்து விழுக்காடும் குறைக்கப்பட்டு, மண்ணெண்ணெய்க்கான மானியம் முழுவதுமாக நீக்கம் செய்யப்பட்டதைப் போல, சமையல் எரிவாயுவுக்கான மானியமும் முழுவதுமாக நீக்கப்படும்.
மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள், தொழில்துறைகள், வேளாண் பொருட்கள், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் மின்சாரம் இவற்றில் ஏற்படும் மந்த நிலை, தொய்வு, இழப்பு, விலைவாசி உயர்வு ஆகியனவற்றை சரி செய்யவோ அல்லது ஈடுசெய்யவோ ஒரு அரசு கொடுக்கும் தொகையே மானியம் ஆகும். இம்மானியத்தை குறைப்பதன் மூலம், சேமிக்கப்படும் பணம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் என்ற போலியான‌ வாதத்தை முன் வைக்கின்றது அரசு. கையூட்டு மற்றும் மோசடிகளை குறைக்கவும், மானியம் பெறுவோர் பற்றிய விவரங்களை
எளிமையாகவும், சிறப்பாக கையாளவும் மற்றும் மானியப் பரிமாற்றத்தின் போது ஏற்படும் சுரண்டல்களை தடுக்கவும் இத்திட்டம் பயன்படும் எனவும் இன்னுமொரு பொய்யையும் சொல்கிறது அரசு. மக்களுக்கு வழங்கும் இம்மானியத்தை எப்படியேனும் கை கழுவி விட வேண்டும் என்ற நோக்குடன் அரசு வெறிகொண்டு அலைகின்றது. அதன் ஒரு பகுதியாகத் தான் “நேரடிப் பண பரிமாற்றம்” என்கிற மோசடி வார்த்தையும் இங்கே புழக்கத்துக்கு வருகிறது. வழக்கம் போல இந்த மோசடியில் காங்கிரசு, பா.ஜ.க என எந்த வேறுபாடும் இல்லை.
LPG-subsidy

சில ஆண்டுகளுக்கு முன்பு, நியாயவிலைக் கடைகளில், மானிய விலைக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. பின்பு மண்ணெண்ணெய்க்கான மானியம் குறைக்கப்பட்டு, சமையல் எரிவாயு அடுப்பு , எளிதில் எரிவாயு இணைப்பு என சமையல் எரிவாயுவுக்கு மானியம் வழங்கப்பட்டதோடு ஏராளமான சலுகைகளும் சிறப்புத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. தற்போது சமையல் எரிவாயுக்கான மானியமும் நிறுத்தப்படக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிகின்றன. சில நாட்களுக்கு முன்பு, நம் அலைபேசியில் ஒரு குறுந்தகவல் வந்தது. நாட்டின் வளர்ச்சிக்காக, சமையல் (LPG) எரிவாயுவுக்கு அரசு கொடுக்கும் மானியத்தை மறுப்போம் என்று மெய்சிலிர்க்கும் தேசபக்தியைத் தூண்டியவாறு, ஆங்கிலத்தில் அச்செய்தி வந்திருந்தது.

இக்குறுஞ்செய்தியைப் பார்த்த ஒரு குஜராத்தி தேசபக்தர் ஒருவர், சுதிர் ஜூமானி மறுநாளே எனக்கு இந்த மானியம் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்ததோடு, தன் நண்பர்களுக்கும் இதைச் செய்யுமாறு வேண்டிக் கொண்டிருக்கிறார். சுதிர் ஜூமானியைப் போன்ற தேசபக்தர்கள், 20க்கும் மேற்பட்டோர் டெல்லி, கேரளா,ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழகத்திலும் கூட, இம்மானியத்தை மறுத்து, தம் நாட்டுப்பற்றை பறை சாற்றியிருக்கின்றனர்.  “நம்மைப் போன்றோர்” மானியத்தை மறுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் அறிவுரை கூட அதற்கு பிறகு தான் வந்திருக்கிறது. மானியங்களிலேயே அதிக பணம் செலவாவது சமையல் எரிவாயுவுக்கு தான் என்றும், கடந்த 2013‍ – 2014 ஆண்டுகளில் மட்டும் 40,000 கோடி ரூபாய் சமையல் எரிவாயுக்கான மானியத்திற்காக செலவாகியிருக்கும் தொகை என ஒரு தகவல் சொல்கிறது. இத்தொகையை குறைப்பதன் மூலம், நாட்டின் நிதி பற்றாக்குறையை (Fiscal Deficit) சீர் செய்ய முடியும் என அருண் ஜெட்லி அள்ளி விடுகிறார்.
நிச்சயமாக இத்தொகை நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக செலவழிக்கப்படப் போவதில்லை என்பதோடு, பெட்ரோலிய நிறுவனங்கள் மட்டுமே இம்மானியக் குறைப்பால் லாபமடையப் போகின்றனர் என்பது தெளிவு.மேலும் விலைவாசி உயர்வால் ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் தலையில் இன்னுமொரு பாரமும் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி, மக்களின் ஆற்றல் தேவைகளுக்கு எப்போதும் அந்நிய நாடுகளையே நம்பியிருக்கும் இப்போக்கை சரி செய்ய, அரசிடம் நீண்ட கால செயல்திட்டம் ஒன்று இல்லாததும், அரசின் ஆற்றல் சார் கொள்கைகளில் இருக்கும் ஓட்டைகளையே வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.
முதலாளிகளின் அரசே - மோடி அரசு (அம்பானி, அதானி,மோடி)

முதலாளிகளின் அரசே – மோடி அரசு (அம்பானி, அதானி,மோடி)

மானியக்குறைப்பால் அரசுக்கு இழப்பு தானே? பிறகு ஏன் அரசு மக்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என வாதிடுவோர், அம்பானி, அதானி, டாடா போன்ற பெருமுதலாளிகளுக்கு விவசாய நிலங்களும், காடுகளும்,குடிநீரும்,மின்சாரமும் ஏறக்குறைய இலவசமாக வழங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்புவதில்லை. உற்பத்தி வரி, வருமான வரி, சுங்கவரி ஆகியவற்றில் வரிச்சலுகைகள் என்ற பெயரில் ரூ.5,28,163 கோடியைப் பெரு முதலாளிகளுக்கு நடுவண் அரசு வாரி வழங்கியிருக்கிறது. இதெல்லாம் அரசுக்கு இழப்பு கிடையாதா?  கடந்த‌ தீபாவளி பரிசாக 367 கோடி ஏக்கர் காடுகள் அதானிக்கு வழங்கப்பட்டது. ஆண்டு தோறும் அம்பானி கட்டும் மின்கட்டணத் தொகையில் பல கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
குடிநீருக்காக பல மைல்கள் நடந்து செல்லும் மக்கள் வாழும் நாட்டில் தான், அம்பானியின் கார்கள் கழுவவும் நாய்க்குட்டிகளை குளிப்பாட்டவும் கோடிக்கணக்கான லிட்டர் குடிநீர் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வளவு ஏன்?  கொழுத்த லாபம் சம்பாதித்து விட்டு, கடையை மூடும் சென்னை நோக்கியா ஆலைக்கு 99 ஆண்டுகளுக்கு 210 ஏக்கர் நிலங்கள், ஏக்கருக்கு ஒரு ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. இதில் 8.4 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என கணக்குத் தணிக்கை ஆய்வாளர் அறிக்கை சொல்கிறது. இதெல்லாம் அரசுக்கு இழப்பு இல்லையா? நாட்டின் நிதிப்பற்றாக்குறைக்கு இதெல்லாம் காரணமாக முடியாதா?  ஆட்சியில் இருந்த போது, குஜராத்தில் மோடி மட்டும் 30000 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதாவது ஒரு மாநிலத்தின் இழப்பு மட்டுமே இத்தனை கோடிகள். அப்படியான குஜராத்தில் தான் சுதிர் ஜூமானிகள் அரசு வழங்கும் மானியத்தை மறுப்பதை பெருமையாகக் கருதுகின்றனர். சமீபத்தில் வெளியான கணக்குத் தணிக்கை ஆய்வறிக்கையின் படி சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு வழங்கிய சலுகைகளினால் 88,000 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.இதில் வெறும் 38% நிறுவனங்கள் தான் செயல்பாட்டில் உள்ளன.
எல்லா பித்தலாட்டங்களுக்கும் “வளர்ச்சி” என்ற ஒற்றைச் சொல் சமாதானமாகி விடுவது தானே இங்கே பேரவலம். இந்த சொல்லை முன் வைத்து தானே நம் மக்களின் உழைப்பும் வாழ்வாதாரமும் இயற்கை வளங்களும் நீராதாரங்களும் சுரண்டப்படுகின்றன‌. இந்த மாய பிம்பங்களை உடைப்பது தானே நம்முடைய தலையாய கடமையாக இருக்க முடியும்? கடன்களில் சிக்கித் தவிக்கும் மூன்றாம் உலக நாடுகளிடம் மானியங்களைக் குறைக்கச் சொல்லி உலக வங்கி அறிவுரை வழங்குகிறது. நிச்சயமாக, இந்த மானியங்களால் அரசுக்கு இழப்புகள் ஏற்படப்போவதில்லை. மேலும் இம்மானியக்குறைப்பால் நாட்டின் நிதிப்பற்றாக்குறையும் சீராகி விடப்போவதில்லை. மாறாக, பெரு முதலாளிகளுக்கு வழங்கப்படும் அநீதியான வாய்ப்புகளால் மட்டுமே நாம் அனுதினமும் இழப்பை சந்தித்து வருகிறோம் என்ற ஒரு உண்மையை மட்டும் புரிந்து கொள்வோம்.
அ.மு.செய்யது
இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

2 comments

  1. Nalla sindhanai parvai.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*