Home / அரசியல் / அதானியை மகிழ வைக்கும் மோடி !!! இந்தியாவை ???

அதானியை மகிழ வைக்கும் மோடி !!! இந்தியாவை ???

ஆஸ்திரேலியாவில் அதானி குழுமம் தொடங்கவுள்ள நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரூ.6,200 கோடி ரூபாய்களை வாரி வழங்கிட ஒப்புக் கொண்டுள்ளது. இந்த அதானி குழுமம் ஏற்கனவே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்பட பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் இதுவரை ரூ.72 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் பெற்று பல்லாண்டு காலமாக திருப்பிச் செலுத்தாமல் ஏப்பம் விட்டுள்ளது. இவ்வாறு இருக்க மேலும் ரூ.6,200 கோடி பணத்தை கடனாக வாரி வழங்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது வியப்பளிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த கடனும் அடைக்கப்படாது (வாராக்கடன்) என்பது தெளிவாகத் தெரிகிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்ட போது, அவரோடு அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உள்ளிட்டோர் அடங்கிய வர்த்தகக் குழுவும் பயணித்தது. இந்த கடன் வழங்கியதில் பிரதமர் மோடிக்கும், மோடியின் அரசுக்கும் முழு தொடர்பு  உள்ளது என்பது இப்பயணத்தின் மூலம் அப்பட்டமாகிறது . நாட்டு மக்களின் சேமிப்புப் பணத்தை பெருமுதலாளிகளின் நலன்களுக்காக இப்படி சூறையாடுகிற மத்திய பா.ச.க அரசும் ,அதன் பிரதமர் மோடியும் நடத்தும் நாடகத்தை மக்கள்  அறிந்து கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

வர்த்தக ரீதியாக இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படக் கூடிய ஒன்றல்ல. இத்தகைய திட்டங்களுக்குத் தேவைப்படுகின்ற நிதியை அளிக்கப் போவதில்லை என ஏற்கனவே சர்வதேச அளவிலான எட்டு மிகப் பெரிய நிதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இச்சூழலில் ஆஸ்திரேலியாவின் கர்மிக்கேல் நிலக்கரி சுரங்கத்திலிருந்து தோண்டப்படும் நிலக்கரியில் மூன்றில் இரண்டு பங்கினை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப் போவதாகக் கூறும் அதானி குழுமத்தின் திட்டமானது ஒரு கேலிக் கூத்தாகவே உள்ளது.அதிக செலவு பிடிக்கின்ற நிலக்கரி இறக்குமதியின் வாயிலாக இந்தியாவில் தனது எரிசக்தி பிரச்சனைக்குத் தீர்வைக் காண இயலாது என ஆஸ்திரேலியாவின் எரிசக்தித் துறை அமைச்சரே தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

அதானியின் விமானத்தில் மோடியின் பயணம்

அதானியின் விமானத்தில் மோடியின் பயணம்

இவ்வாறு வெற்றி பெற சாத்தியமில்லாத ஒரு திட்டதிற்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அளித்திடவுள்ள 6200 கோடி ரூபாய் கடனும் வாராக் கடனிலேயே போய்ச் சேர்ந்திடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை மேலும் இதன் மூலம் இந்த வெற்றி பெறாத திட்டத்திற்கு கொடுக்கப்படவுள்ள தொகையில் பிரதமர் மோடிக்கும் இதர பாசக வினர்களுக்கும் ஓர் முக்கிய பங்கு உள்ளது என்பதிலும் ஐயமில்லை.

நமது இந்திய நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் இன்று ஒரு சிறு தொழில் செய்யவோ , விவசாயத்திற்காகவும் கல்விக்காகவும் கடன் கேட்டு வங்கியை நாடும் சாமான்ய மக்கள் படும் துயரங்களைச் சொல்லி மாளாது. பல்வேறு சிரமங்களுக்குப் பின் பெரும்பாலோருக்கு கடன் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அத்தொகை எதிர்பார்த்த அளவும் இருப்பதில்லை., எதிர்பார்த்த நேரத்திலும் கிடைப்பதில்ல. இவ்வாறு இருக்க ஒரு பெரு முதலாளிக்கு பணத்தை வாரி வழங்குவது கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு பாதகமாகவும் ,முதலாளிகளுக்கு சாதகமாகவும் தான் இருக்கின்றன என்பதும் தெளிவாகிறது.

அதானி குழுமத்திற்கு சொந்தமாக எண்ணெய் மற்றும்  நிலக்கரி சுரங்கங்கள் ,துறைமுகங்கள் ,ரயில்கள் ,ரயில் வழித்தடங்கள் ,கப்பல்கள் , மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என பல கோடி மதிப்பான சொத்துகள் இருக்கின்றன. இவ்வளவு சொத்துக்கள் இருந்தும் அவற்றில் பல கோடி வருமானம் இருந்தும் அதானி, தான் பொதுத்துறை வங்கிகளிடம் வாங்கிய பணத்தை திரும்ப செல்லுத்துவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆனால் அதே அதானிக்கு பணம் வழங்க இந்திய அரசு கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது .

ஒருவன் பெரு முதலாளியாக இருந்தால் பல்லாயிரம் கோடி கடன் வாங்கி செலுத்த இயலாது என அரசை ஏய்த்து விட்டு வசதியாக வாழலாம். ஆனால் சிறு தொழில் செய்யவோ , விவசாயம் செய்யவோ கடன் வாங்கி நட்டமடைந்து திரும்ப செலுத்த தாமதமானால் அவர்களுக்கு நோட்டீஸ் மேல் நோட்டீஸ் அனுப்புவது அவர்களது புகைப்படங்களை பத்திரிக்கைகளிலும் , வங்கி முகப்பிலும் போட்டு அவர்களை நிந்திப்பது மேலும் நகைக் கடனாக இருந்தால் அந்த நகைகளை ஏலம் விடுவது போன்று உழைக்கும் நடுத்தர வர்க்க‌த்தினரை மேலும் மேலும் துன்புறுத்துவதே பொதுத்துறை வங்கிகள் தமது தலையாய கடமைகளாகக் கொண்டுள்ளன . பெருமுதலாளிகளை கேள்வி கேட்க எந்த ஒரு கடன் வழங்கிய வங்கியோ நிதி நிறுவனமோ தயாராக இல்லை ஏனென்றால் அவர்களுக்கு மோடி போன்ற தலைவர்களின் நல்லாசி  இருக்கின்றது  இப்போதிருக்கும் அவல நிலை.

535947_862494303782775_3979598757426168664_n

ஆஸ்திரேலியா பயணம் சென்று பிரதமர் மோடி அவர்கள் அதானிக்கு  சுரங்கம் தோண்ட உதவியதோடு மட்டுமல்லாமல் அங்கு ஒரு கூட்டத்தில் பேசியபோது ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள், தாயகத்தில் கழிப்பறை கட்ட உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் . இது போன்று ஒரு வெட்க கேட்டை இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும்  மோடி அல்லாமல் வேறு யாராலும் வழங்க இயலாது . இந்தியாவின் நிதி நிலைமை , கழிப்பறை கட்ட பிச்சை எடுக்கும் நிலையிலா உள்ளது . படேலுக்கு சிலை அமைக்க ரூ.3000 கோடி ஒதுக்கும் இந்திய அரசிடம் கழிப்பறைகள் கட்ட நிதி இல்லாமல் போனது தான் இந்தியர்களால் சகித்து கொள்ள முடியாத விஷயம் . இந்தியா முழுதும் கழிப்பறைகள் கட்ட அதானிக்கு வழங்கியதில் ஆறில் ஒரு பங்கு செலவு கூட ஆகாது. இவ்வாறு நாட்டில் கழிப்பறை வசதிகள் இல்லை என்று தாமே ஒத்துக்கொள்ளும் மோடி அதில் கவனம் செலுத்தாமல் அதானி போன்ற தனி நபருக்கு அதுவும் ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்ய இவ்வளவு பணத்தை வாரி  வழங்குவது ஓட்டு போட்டு பிரதமராக்கிய மக்களை ஏமாற்றி ஏப்பம் விடும் செயல்.

இது அதானியோடு நிற்கப் போவதில்லை. டாடாவுக்கும், அம்பானிக்கும், எஸ்ஸாருக்கும் என இந்த நீட்சி தொடரத் தான் போகிறது. நம் மக்களின் உழைப்பை,வரிப்பணத்தை, இயற்கை வளங்களை, நிதியாதாரங்களை ஒட்டு மொத்தமாக பெரு முதலாளிகளுக்கு படையல் வைக்கும் அதிகார வர்க்கத்தை பொது வெளியில் அம்பலப்படுத்துவதும், அவர்களை எதிர்த்து மக்களை ஒன்று திரட்டி போராடுவதும் சனநாயக முற்போக்கு இயக்கங்களின் வேலைத் திட்டங்களில் முதன்மையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

தீபன் குமார்
இளந்தமிழகம் இயக்கம்

இரண்டாவது புகைப்படம் – நன்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

About தீபன் குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*