Home / ஈழம் / மீரியபெத்தை மண்சரிவு 30ம் நாள் நினைவஞ்சலி கூட்டமும் மலையக மக்களின் சொந்த வீடு, காணி எழுச்சி கோஷமும்!

மீரியபெத்தை மண்சரிவு 30ம் நாள் நினைவஞ்சலி கூட்டமும் மலையக மக்களின் சொந்த வீடு, காணி எழுச்சி கோஷமும்!

மீரியபெத்தை மண்சரிவு 30ம் நாள் நினைவஞ்சலி கூட்டமும் மலையக மக்களின் சொந்த வீடு, காணி எழுச்சி கோஷமும்!

பதுளை மாவட்டம் கொஸ்லந்தை – மீரியபெத்தை தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டு கடந்த 29ம் திகதி சனிக்கிழமையுடன் ஒருமாதம் பூர்த்தியாகியுள்ள நிலையில், அந்த மக்களுக்கான வீட்டுத் தேவையை பூர்த்தி செய்து கொடுக்க இன்னும் அடிக்கல் நாட்டும் பணிகூட ஆரம்பிக்கப்படவில்லை. மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல மண்சரிவில் உயிர்கள், உறவுகள், உடமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு துன்பத்திற்கு மேல்; துன்பமே வந்து சேர்கிறது. 30ம் நாள் நினைவின் போது மீரியபெத்தை மக்கள் ஓரளவேனும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று பார்த்தால் உணவு கேட்டு அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்ட அவலத்தையே காண முடிந்தது.

Meeri 3

மண்சரிவு ஏற்பட்டு அதன் தாக்கம் மலையகத்திலும் நாடெங்கிலும் முழு உலகிலும் வியாபித்த நிலையில் 30ம் நாள் நினைவு அவ்வளவு பெரிதாக கணக்கிலெடுக்கப்படாத ஒரு நிகழ்வாகியதை காண முடிகிறது. மீரியபெத்தை மண்சரிவில் உயிர்நீத்த 38ற்கும் அதிகமான மலையக இரத்த உறவுகளின் வரலாறு முப்பதே நாட்களுக்குள் மறக்கப்பட்டுவிட்டதா என்ற கவ‌லையுடனான கேள்வி சமூகத்தில் எழுந்துள்ளது.

இருப்பினும் நாட்டில் பல பாகங்களிலும் மீரியபெத்தை மண்சரிவு 30ம் நாள் நினைவு நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. மலையக சிவில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த நினைவு நிகழ்வுகள் பூனாகலை – மாகந்த தொழிற்சாலையிலும் கந்தபளை நகரிலும் லிந்துலை – திஸ்பனை தோட்ட பெரட்டுக்களத்திலும் கொழும்பு இராமகிருஸ்ணமிசனிலும் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த நினைவுகூட்டம் கொழும்பு பழைய நகர மண்டபத்திலும் நடைபெற்றது.

இந்த நிகழ்வுகளின் போது மண்சரிவில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சர்வமத ஆத்மசாந்தி பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. விசேடமாக அனைத்து நிகழ்வுகளிலும் ஒருமித்த குரலாக மலையக மக்களுக்கான சொந்த வீடு சொந்த காணி என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டது.

அடையாளம் அமைப்பின் பொதுச் செயலாளர் பழனி விஜயகுமார், சூரியகாந்தி பத்திரிகையின் பொறுப்பாசிரியர் சிவலிங்கம் சிவகுமாரன், சமூக ஆர்வலர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட லிந்துலை – திஸ்பனை நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஆசிரியர் அருள்செல்வம் குழுவினரின் வீதி நாடகம் இடம்பெற்றது. மலையக மக்களின் வீடு, காணிப் பிரச்சினையை முன்வைத்து இந்த வீதிநாடகம் அரங்கேற்றப்பட்டது.

Lindula 2

அருட்தந்தை மா.சத்திவேல் தலைமையில் பூனாகலை – மாகந்த தொழிற்சாலையிலும் சிவம் பிரபாகரன் தலைமையில் கந்தப்பளை பிரதேசத்திலும் சட்டத்தரணி இ.தம்மையா, பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோராஜன் ஆகியோர் தலைமையில் கொழும்பு இராமகிஸ்ணமிசன் மண்டபத்திலும் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கொழும்பு பழைய நகர மண்டபத்திலும் நடைபெற்ற அஞ்சலி கூட்டங்களில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

திஸ்பனை, கந்தப்பளை, பூனாகலை நினைவஞ்சலிக் கூட்ட கோரிக்கைகள் :

 •  மீரியபெத்தை மண்சரிவில் இழப்புக்களை சந்தித்து வெறுமையாய் நிற்கும் மக்களுக்கு வாராந்தம் உதவி தொகை கொடுத்தல் வேண்டும்.
 •  உயிர், உடமை இழந்த மக்களுக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.
 • பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு என்று பாராளுமன்றின் ஊடாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
 • மலையகத்தில் மண் சரிவு ஏற்படும் இடங்களை அடையாளப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செயதல் வேண்டும்.
 •  2013 வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்த ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
 • தனி வீடு, சொந்த காணி கோரிக்கையை ஏழுப் பேர்ச், பத்து பேர்ச் என கொச்சைப்படுத்தி மலையக மக்களை தொடர்ந்து அடிமை நிலைக்கு தள்ள முயற்சிக்கக்கூடாது.
 • மலையக மக்களின் வீடு, காணி தேவையை பூர்த்தி செய்ய மலையகத்திற்கென சுதந்திர காணி ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும்.
 • நாட்டில் காணி இல்லாதோருக்கு காணி வழங்கும் போது கடைப்பிடிக்கும் காணி கொள்கையை மலையகத்திலும் கடைப்பிடித்தல் வேண்டும். (விசேடமாக ஆடு, மாடு, கோழி வளர்ப்பதற்கும், மரக்கறிச் செய்கையில் ஈடுபடுவதற்கும், பெருந்தோட்டத் தொழிலில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கும் தேவையான அளவு காணி வழங்கப்படுதல் வேண்டும்.)
 • பாதிக்கப்பட்ட மீரியபெத்தை மக்களுக்கு கிராம வடிவிலான மாதிரி வீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக அந்த மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவும் வேண்டும்.

Meeri 4

பெருந்தோட்ட நடவடிக்கை குழு அஞ்சலி கூட்ட பிரகடனம் :

1. மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களில் விடுபட்டு பாதுகாப்பாக வாழ்வதற்கான குடியிருப்புகளை அமைத்து கொள்வதன் அடிப்படை உரிமையை வெளியரங்கப்படுத்தி, இதுவரை காலம் தனி வீடில்லாது தொழிலாளர் (சிறை) முகாம்களாக இருக்கும் லயன் அறைகளிலிருந்து வெளியேறி தனி வீடுகளில் வாழ்வதற்கான எமது உரிமையை பிரகடனம் செய்கின்றோம்.

2. இயற்கை அனர்த்த ஆபத்தற்ற இடங்களில் தனி வீடுகளை அமைத்துக் கொள்வதற்கு குடும்பமொன்றுக்கு 20 பேர்ச்சஸ் காணியை சொந்தமாக பெற்றுக் கொள்ளவும், அதில் சொந்தமான வீடுகளை அமைத்துக் கொள்ள வசதிகள் பெற்றுக் கொள்ளவும் பொது உடன்பாட்டுடனான கூட்டு நடவடிக்கைகளை எடுப்போம் என பிரகடனம் செய்வதுடன் ஒக்டோபர் 29 ஆம் திகதியை மலையக மக்களின் காணி வீட்டு உரிமைக்கான தினமாக பிரகடனம் செய்கின்றோம்.

3. புதிதாக அமைக்கப்படவுள்ள குடியிருப்புகள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கிராம அல்லது நகர குடியிருப்புகளாக அங்கீகரிக்கப்பட்டு மத்திய, மாகாண, உள்;ராட்சி, பிரதேச செயலக, கிராம உத்தியோகத்தர் பிரிவு போன்றவற்றின் கீழான நிர்வாகத்திற்குள்ளாக்கப்பட்ட உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை, பொது வசதிகளை கொண்டதாக இருக்க வேண்டுமென பிரகடனம் செய்கின்றோம்.

Meeri 5

4. மண்சரிவு அபாய பிரதேசங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்படவும் அவ்வாறு வெளியேற்றுகின்ற போது தோட்டத் தொழிலை இழப்பவர்களுக்கு வேறு தோட்டங்களில் அல்லது மாற்று தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கைகளை எடுப்போமென பிரகடனம் செய்கின்றோம்.

5. தோட்டத் தொழிலாளர்களின் தொழில் தருநர்கள்ஃதோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளுக்கும் பாதுகாப்பிற்கும் முழுமையாக பொறுப்பாக்கப்பட வேண்டுமென்றும் பெருந்தோட்ட சமூகத்தின் உயிர்வாழ் உரிமைகளை உறுதி செய்யும் அனைத்து விடயங்களுக்கும் அரசாங்கம் பொறுப்பாக வேண்டுமென்றும் பிரகடனம் செய்கின்றோம்.

அத்துடன்

 • மீரியபெத்த அனர்த்தத்தில் உயிர் உடைமை இழந்த குடும்பங்களுக்கு போதுமான இழப்பீடுகள் வழங்கப்படவும்,
 • மீரியபெத்த மற்றும் மண்சரிவு அபாயமுள்ள இடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ள குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் நிரந்தரமாக குடியேற்றப்படுவதை அவர்களுக்கான வாழ்வாதார நிவாரணங்கள் கொடுப்பனவுகள் வழங்கப்படவும்,
 • மீரியபெத்த அனர்த்தத்தினால் பெற்றோர்களை இழந்த சிறுவர்களின் வாழ்வையும், மேம்பாட்டையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவும்,
 • மீரியபெத்த அனர்தத்தில் ஏற்பட்ட உயிர், சொத்து அழிவுகள் பற்றிய சரியான, நம்பகமான தகவல்களை பதிவு செய்யவும்,
 • மீரியபெத்த அனர்த்தம் பற்றிய முன்னெச்சரிக்கையை கவனத்தில் எடுத்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தத் தவறிய நிறுவனங்கள், அதிகாரிகளையும் கண்டறிந்து சட்ட நடவடிக்கைக எடுப்பதற்காக நம்பகமான விசாரணையை நடத்தவும் வலியுறுத்தி கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வோம், எனவும் பிரகடனம் செய்கின்றோம்.

meeri 1

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் தளம்பல் நிலையை மலையக தலைவர்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களது பேரம் பேசும் வலிமையைக் கொண்டு மலையக மக்கள் காணி, வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமாகும். சுமார் 150 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக வியர்வை, இரத்தம் சிந்தும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்கள் நம்பிக்கையுடன் சந்தா செலுத்தும் தொழிற்சங்கங்கள், கட்சிகள் செய்ய வேண்டிய நன்றிக்கடன் இதுவென்பதை மீரியபெத்தை மண்ணுக்குள் மாண்ட மலையக இரத்த உறவுகளின் ஆத்மாவின் பெயரால் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பழனி விசயகுமார்

ஊடகவியலாளர் – ஈழம்

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*