Home / FITE சங்கம் / மரியாதைக்குரிய ஐ.டி. துறை நண்பனுக்கு – 4

மரியாதைக்குரிய ஐ.டி. துறை நண்பனுக்கு – 4

என் சக ஊழியனே, தோழனே, வணக்கம்!

நானும், நீயும் சந்திக்கும் அன்றாட சிக்கல்களைப் பற்றி யாரிடம் பேசலாம் என்று அறியாமல் திரிந்த எனது எண்ணத்தில் தோன்றியதுதான் இந்த கடிதம். ஆம்! நாம் சந்திக்கும் சிக்கல்களை என்னுடைய சக ஊழியனான உன்னைவிட வேறு யாரால் சரியாக புரிந்து கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையில்தான் எழுதத் தொடங்கினேன்

நம் குடும்பங்களின் பொருளாதாரம் நிலையற்றதாக இருக்கிறது, அதை எப்படியாவது மேம்படுத்திவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் கண்ணாடிக் கட்டிடங்களுக்குள், குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்தவாறு கனவுகளைக் கருகவிட்டவர்கள் நாம். இப்படி நம்முடைய கனவுகள் ஒருபுறம் கருகிக்கொண்டிருக்கும் போதே, நம்முடைய கவலைகளையும், இன்னல்களையும் யாரிடம் பேசுவது என்று தெரியாமல் தனித்து போயிருக்கிறோம்.

நம்மைப் பற்றிய பெருமைகளை அடுக்கி, உனக்கு நான் முதல் கடிதத்தை எழுதிய போது நம்முன் இருக்கும் சில சிக்கல்களைத்தான் நாம் இணைந்து தீர்க்க வேண்டியுள்ளது,  இவை தவிர்த்து நாம் நன்றாகவே உள்ளோம் என்று நினைத்திருந்தேன்.

 ஆனால், பெங்களூரில் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட ராஜேஷ் சவுத்ரி(27) என் எண்ணத்தை சுக்குநூறாக உடைத்துவிட்டார். பெங்களூர், எலக்ட்ரானிக் சிட்டியில் வேலை பார்த்து வந்த நம்முடைய சக ஊழியன் ராஜேஷ் சவுத்ரி இன்று இல்லை. அவருடைய தற்கொலைக்கு காரணம் பணி நெருக்கடியா என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 ராஜேஷ் சவுத்ரியின் தற்கொலை ஒன்று மட்டுமல்ல இது போன்று நம் சக ஊழியர்களை பல்வேறு முறை, வெவ்வேறு வழிகளில் இழந்துள்ளோம்.

3592552798_ComputerTechiesWorkFL

நம்மைப் பற்றி பெருமை பொங்க எழுதத் தொடங்கியவன் இன்று பரிதாபமும், பயமும் ஒருசேரக் கலந்த நிலையில் எழுதுகிறேன். நம்முடைய சக ஊழியன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். அதற்குக் காரணம், பணி நெருக்கடியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், நாம் அதை வெறும் கால் பக்கச் செய்தியாக கடந்துவிட்டோம்.

நாளிதழ்களுக்கு வேண்டுமானால் அவை வெறும் செய்தியாக இருக்கலாம், நமக்கும் அப்படித்தானா? என்ற கேள்வி எழுவதை என்னால் தவிர்க்க இயலவில்லை. ராஜேஷ் சவுத்ரி மட்டுமல்ல. கடந்த ஆண்டு சென்னையில் உள்ள தகவல் தொழில் நுட்பப் பூங்காவின் 10-வது மாடியில் இருந்து ஒரு பெண் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அதுவும் வெற்றுச் செய்தியாகத்தான் போனது. மறுநாளே, அந்த தொழில்நுட்பப் பூங்காவில் எந்த சலனமுமின்றி வேலைகள் நடந்தன.

 பணி நெருக்கடியும், மன அழுத்தமும் யாருக்குத்தான் இல்லை; அதற்காக எல்லாம் தற்கொலை செய்து கொள்வதா? என்று நீ கேட்பது என் காதுகளை எட்டுகிறது. ஆம்! தற்கொலைகள் தீர்வு இல்லைதான். ஆனால், குழுவாகச் செயல்படுவோம் என்று ஆண்டு முழுக்க குழுச் செயல்பாட்டை பற்றி வகுப்பெடுக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும், ஆண்டின் இறுதியில் “நீ என்ன செய்தாய்?” என்று கேட்பதில் தொடங்குகிறது நம்முடைய தனித்த பயணம்.

அன்று முதல், நம்முடைய சிக்கல்களை, இடர்களை, தோல்விகளை, மேலாளருடனான நம்முடைய சண்டைகளை, நாம் சுரண்டப்படுவதை என எதையும் சக ஊழியர்களுடன் பகிர்வதை நிறுத்திவிடுகிறோம். எனக்கும், உனக்கும் இடையே ஒரு நம்பிக்கையின்மையை உருவாக்கி, அதன் பலன்களை அறுவடை செய்கின்றன நிறுவனங்கள்.

காலையில் ஒருவேளை காபியும், மதிய உணவும் உன்னுடன் உண்ணும் சக ஊழியர்கள், உன்னுடைய அலுவலுக சிக்கல்களைத் தீர்க்க உதவாதவாறு உனக்கும் அவர்களுக்கும், உனக்கும் எனக்கும் என நம்மிடையே ஒரு மாயவேலி கட்டப்பட்டுள்ளது, உனக்குத் தெரிகிறதா? இந்த மாயவேலியை உடைத்து நீயும், நானும், நம் சக ஊழியர்கள் அனைவரும் நமக்காக பேச வேண்டியுள்ளது. எனக்காக அல்ல; நமக்காக சற்று நேரம் ஒதுக்கி சிந்தித்துப் பார்!

நம்மால் எப்படி முடியும் என்று கேட்கிறாயா?, நாம் இந்த மாயவேலியை உடைத்த ஒரு நிகழ்வை சொல்கிறேன், கேள்!

ஓராண்டிற்கு முன்பு, உமா மகேஸ்வரி என்னும் நம்முடைய சக தோழி, சென்னை சிறுசேரியில், அவருடைய அலுவலகமான டாடா கன்சல்டன்சி  அருகே கொலையுண்டு கிடந்தார். காவல்துறையும், அவர் வேலை பார்த்த நிறுவனமும் அந்த சம்பவத்தை அலட்சியப்படுத்தினர். இதனைப் பார்த்து வெகுண்டெழுந்த 600-க்கும் மேற்பட்ட ஐ.டி ஊழியர்கள், உமா மகேஸ்வரியின் கொலைக்கு நீதி கேட்டும், பணியிடங்களில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் தெருவுக்கு வந்து போராடினர். அதன் மூலம் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, இன்று அந்த கொலையாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 10801854_618825008240828_6972351866263100321_n

மாயவேலி எப்படி உடைந்தது என்று இப்போது உனக்கு புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். கொலை, தற்கொலை, தாக்குதல், உழைப்புச் சுரண்டல், பணி நீக்கம் என நம்மைச் சுற்றி முளைக்கும் சிக்கல்களை தீர்க்க நானும், நீயும், நம் சக ஊழியர்களும் ஒருங்கிணைவது அவசியம்.

கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்ட ராஜேஷ் சவுத்ரி, இந்த ஆண்டு தொடக்கத்தில் கொலையான உமா மகேஸ்வரி, அவரைத் தொடர்ந்து சக ஊழியரால் கொலை செய்யப்பட்ட வைசியா, பூனேவில் கொலையான மொஹ்சின் என நம் சக ஊழியர்களின் வரிசையில் நீயோ, நானோ, நம்மில் ஒருவரோ வந்துவிடக் கூடாது என்கிற அச்சத்தில் சொல்கிறேன்.

 நம்மைப் பாதுகாத்து கொள்ள, நம் உரிமைகளைப் வென்றெடுக்க நாம் ஒருங்கிணைவது காலத்தின் கட்டாயமும், இன்றைய தேவையும் கூட.

 கொஞ்சம் சிந்தித்துப் பார்! மீண்டும் சந்திப்போம்!

 இப்படிக்கு,

உன் சக ஊழியன்

======================================

முந்தைய கடிதங்கள்

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 3

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 2

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 1

About விசை

8 comments

  1. இன்னும் தங்கள் தரப்பில் இருந்து TCS செய்யும் ஆட்குறைப்பு பற்றி கட்டுரை வரவிலையே,

  2. Please start a group in fb and discuss on this to get more supporters

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*