Home / கலை / 12 Years a Slave – அடிமை வாழ்க்கை அங்கும், இங்கும்

12 Years a Slave – அடிமை வாழ்க்கை அங்கும், இங்கும்

பதினெட்டாம் நூற்றாண்டின் முன் பாதி, அமெரிக்காவில் அடிமை வணிகம் உச்சத்தில் இருந்த காலகட்டம். ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிடித்து வரப்பட்ட கறுப்பினத்தவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்நாள் முழுவதும் விவசாயப் பண்ணைகளில் வெள்ளை எஜமானர்களின் அடிமைகளாக வாழ்ந்து செத்துக் கொண்டிருந்தனர். அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கவில்லை. நியுயார்க் போன்ற நகரங்களில் கறுப்பினத்தவர் சுதந்திரமாக இருக்கவும் கல்வி கற்கவும் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

அப்படி நியுயார்க் மாகாணத்தில் அடிமையாய் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு கறுப்பினத்தவருக்குப் பிறந்தவர் சாலமன் நார்த்தப். சாலமன் சொந்தமாக நிலம் வைத்திருந்த விவசாயியாகவும் ஒரு தேர்ந்த வயலின் கலைஞராகவும் திகழ்ந்தார். தனது வாழ்க்கையை அமைதியாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்துவந்த சாலமன் 1841 ஆம் ஆண்டு இரண்டு வெள்ளையர்களால் ஏமாற்றப்பட்டுக் கடத்தப்படுகிறார். சுதந்திர மனிதனான அவரை அடிமை என்று பதிவு செய்து அடிமை முறை தீவிரமாக விளங்கிய தெற்கு மாகாணங்களுக்கு விற்று விடுகின்றனர்.அதற்குப் பிறகு பன்னிரண்டு வருடங்கள் கொடிய, மிகக்கொடிய வெள்ளை எஜமானர்களுக்கு அடிமையாய் இருந்த சாலமன் 1853 ஆம் ஆண்டு ஒரு வெள்ளையரின் உதவியோடு மீட்கப்படுகிறார்.

12 years a slave 1

தப்பித்து வந்த சாலமன் தன்னைக் கடத்தியவர்கள் மீது வழக்குத்தொடுக்கிறார். அவர்கள் கைதும் செய்யப்படுகிறார்கள். ஆனால் அப்போதைய அமெரிக்கச் சட்டப்படி ஒரு கறுப்பினத்தவர் வெள்ளையருக்கு எதிராக அளிக்கப்படும் சாட்சியம் செல்லுபடியாகாது என்பதால் அவர்கள் மீண்டும் விடுவிக்கப்படுகிறார்கள். இந்தப் பன்னிரண்டு ஆண்டுக் கால அடிமை வாழ்க்கையின் நினைவுகளைச் சாலமன் தனது “12 Years a Slave” என்ற நாவலில் பதிவு செய்திருக்கிறார். உலகில் எந்தப்பகுதியை எடுத்துகொண்டாலும் வரலாறு எப்பொழுதும் வெற்றி பெற்றவர்களாலேயே, அவர்களுக்குச் சாதகமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மாறாக இந்நூல் அடிமையின் வாக்குமூலமாக அமெரிக்க வரலாற்றின் கருப்பு அத்தியாயங்களைப் பேசுகிறது.

அந்த நாவலைத்தழுவி அதே பெயரில் திரைப்படமாகியுள்ளார் பிரித்தானிய இயக்குனர் ஸ்டீவ் மேக்குயின். இவரும் ஒரு கறுப்பினத்தவர் என்பது குறுப்பிடத்தக்கது. அடிமை வாழ்வில் அம்மக்கள் பட்ட துன்பங்களை வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது. அவற்றைக் காட்சி மொழியில் மிக அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார் மேக்குயின்.

படத்தில் ஆண், பெண் அடிமைகளை நிர்வாணமாக நிற்க வைத்து அவர்களை வெள்ளையினத்தவர்கள் மனைவிகளோடு வந்து சோதித்துப்பார்த்து ஆடு, மாடுகளைப்போல வாங்கிச்செல்லும் காட்சியில் நமக்கும் கோபம் கொப்பளிக்கிறது. கொடுங்கோலன் முதலாளி அடிமைப்பெண் பாட்ஸியை சவுக்கால் அடிக்கும் போது அவளின் முதுகுத்தோல் கிழிந்து நமது முகத்தில் ரத்தம் தெறிக்கிறது. கைகள் கட்டப்பட்ட நிலையில் கால்கள் தரையில் பட்டும் படாமலும் இருக்கச் சாலமன் தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கும் போது நமக்கும் மூச்சு முட்டுகிறது, சுற்றி நிற்கும் அடிமைகளைப்போலவே நாமும் கையறு நிலையில் இருக்கிறோம். அந்தக் காலக் கட்டத்தில் வெள்ளையர்கள் கறுப்பினத்தவர்களை விலங்குகளினும் கீழானவர்களாகவே நடத்தினர் என்பது தெளிவாகிறது.

படம் பார்த்துவிட்டு அதைப்பற்றிய மேலதிக தகவல்களுக்காக இணையத்தில் தேடியபோதும் சில வெள்ளை நண்பர்களிடம் பேசியபோதும் பல அமெரிக்கர்கள் அவர்களின் முன்னோர்களின் செயல்களுக்காக வருத்தப்படுவதாகத் தெரிவித்திருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. அதற்காக அமெரிக்காவில் தற்போது இனவெறி முற்றாக ஒழிந்துவிட்டது என்று அர்த்தமில்லை. அங்கு இன்னமும் வெள்ளையின ஆதிக்க வெறியர்கள் உள்ளனர் என்பதற்கு, தற்சமயம் கறுப்பினத்தவர் மீது வெள்ளையின போலீசார் நடத்திவரும் போலி என்கவுண்டர்களே சாட்சி. அதே சமயத்தில் “ஒரு காலத்தில் நம்ம முன்னாடி கை கட்டி செருப்பு போடாம நடந்த பயலுக எல்லாம் இன்னைக்கு நம்ம முன்னாடியே ஜீன்ஸ் கூலிங் கிளாஸ் மாட்டிகிட்டு வண்டில போறான். கீழ கெடக்குறவன கைதூக்கி விடலாம்ன்னு பார்த்தா நம்ம வீட்டு பொண்ணயே கேக்குறானுக” என்ற டாக்டர் ராமதாஸின் சாதி வெறிப்பேச்சும் அதை மந்தைகள் போல் பலர் ஆரவாரம் செய்து இரசித்ததும் ஏனோ நியாபகம் வந்து தொலைக்கின்றது.

தாமிரபரணி(மாஞ்சோலை) படுகொலை

தாமிரபரணி(மாஞ்சோலை) படுகொலை

ஒரு திரைப்படம் என்பது அந்தந்த பகுதி மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். அவர்களின் வரலாற்றைப் பதிவு செய்வதாக இருக்க வேண்டும். நமது திரைப்படங்களில் காதல், காதல், காதல் காதலைத்தவிர வேறொன்றும் இல்லை. நமது சமூகத்தில் காதலிப்பதை தவிர வேறு பிரச்சனைகளே இல்லையா? அப்படியே ஓரிரு படங்கள் வந்தாலும் அவை ஆதிக்கச் சாதியினரை குளிர்விக்க அவர்களின் சாதி வெறியை தூண்டிவிட்டு தமது பணப்பசியைத் தீர்த்துக்கொள்வதாகத்தானே இருக்கின்றன. இன்றும் முக்குலத்தோர் இல்ல திருமணங்களில் “போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே” பாடிக்கொண்டுதானே இருக்கிறது. சசிக்குமார் படமென்றால் மதுரை ஏரியா கலெக்சனிலேயே போட்ட காசை எடுத்துவிடலாம் என்று எப்படிக் கூறுகிறார்கள்? விதிவலக்குகளாக வழக்கு எண் 18/9, மதுபானக்கடை, மெட்ராஸ் போன்றவை வருகின்றன.

இந்திய சாதிய கட்டமைப்பு என்பது அமெரிக்காவில் இருந்த‌ அடிமை முறையைவிட மோசமான அடிமைமுறை அங்காவது எஜமான் தனது அடிமையைத் தொட்டுப்பேசுவான் இங்குத் தொட்டாலே தீட்டு, பார்த்தாலே தீட்டு என்று ஒடுக்கப்பட்டார்கள். கறுப்பின பெண் அடிமைகள் அனுபவித்த பாலியல் கொடுமைகளுக்குச் சற்றும் குறைவில்லாத கொடுமைகளை வாச்சாத்தி பெண்களும் அனுபவித்துள்ளார்கள். கீழ் வெண்மணியில் தலித்துக்களைக் குடிசையோடு வைத்துக் கொளுத்தும்போது சாலமன் வாங்கிய சவுக்கடியைவிட அதிகமாக எரிந்திருக்கும். இன்னும் இன்னும் நம்மிடம் பதிவு செய்யப்பட்டே தீர வேண்டிய வரலாறுகள் ஏராளமாக உள்ளன, செய்யத்தான் ஆளில்லை. என்ன செய்வது தாமிரபரணியில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி அன்றைய தினம் கொல்லப்படாத மாரி செல்வராஜ்தானே வந்து சொல்ல வேண்டியுள்ளது.

 

கமலகண்ணன்

இளந்தமிழகம் இயக்கம்

About கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*