Home / FITE சங்கம் / உதயமாகியது ……. தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றம்.

உதயமாகியது ……. தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றம்.

நேற்று (29-12-2014) மாலை 3.30 மணியளவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றம் உதயமாகியது.  இதோ அம்மன்றத்தின் ஊடக அறிக்கை

 

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பணியாளர்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கான மன்றத்தை உருவாக்குகிறோம். இம்மன்றம் உருவாவதற்கான பின்னணியையும் இதன் தேவையையும் பின்வரும் அறிக்கை விளக்குகிறது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னோடியான டாடா குழுமத்தின் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவனத்தின் அலுவலகங்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள நாடுகளிலும் உள்ளன. இந்நிறுவனம் தன்னுடைய 25,000 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்ய இருக்கும் செய்தி திசம்பர் முதல் வாரத்தில் வெளியானது. இந்நடவடிக்கை ‘நிறுவன மறுசீரமைப்பு’ என்ற பெயரில் டி.சி.எஸ்ஸால் முன்னெடுக்கப்படுகிறது.
அசிஸ்டெண்ட் கன்சல்டண்ட் (AST), அசோசியேட் கன்சல்டண்ட் (ASC) ஆகிய பதவிகளில் இருக்கும் சுமார் 7 ஆண்டுகளுக்கு மேல் அனுபவமுள்ள பணியாளர்களே இந்த வெளியேற்ற நடவடிக்கைக்குக் குறிவைக்கப்பட்டிருப்பவர்கள். முன்பொரு காலத்தில் நிறுவனத்தின் தூண்கள் என்று அறியப்பட்டவர்கள்தான் இப்போது ‘திறனற்றவர்கள்’ என்று முத்திரையிடப்பட்டு வெளியேற்றப்படுகிறார்கள். அதிலும் ஒருவர் தொடர்ச்சியாக ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் ‘C’ மதிப்பீடு வாங்கி இருப்பதையே வெளியேற்றுவதற்கானக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ’C’ மதிப்பீடு என்பது நிறுவனத்தின் எதிர்ப்பார்ப்பை (meeting expectatioin) நிறைவு செய்பவர்களுக்குக் கொடுக்கப்படுவதாகும்.
இதில் பெரும்பாலோர் 30 வயதைக் கடந்தவர்கள். இதில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள். பலரும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளின் தாய், தந்தையாக இருப்பவர்கள். பெரும்பாலானோர் வீட்டுக் கடன் வாங்கி இருப்பவர்கள். இந்த வேலைதான் இவர்களின் வாழ்வாதாராம்.

இவர்களை வெளியேற்றிவிட்டு டி.சி.எஸ் நிறுவனம் 2014 – 2015 ஆம் ஆண்டில் மட்டும் 55,000 புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கவுள்ளது. கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு (2014 ஏப்ரல்) இலாபத்தில் 37.7% வளர்ச்சி அடைந்துள்ளதாக டி.சி.எஸ்ஸின் ஆண்டு நிதி அறிக்கைக் கூறுகிறது.

IMG_5142

டி.சி.எஸ். நிறுவனம் நட்டத்தில் செயல்படவில்லை. மேலும் பொருளாதார மந்த நிலைமையும் இல்லை. இந்த நிலையில் அனுபவமிக்கப் பணியாளர்களைத் துரத்திவிட்டு அதில் அனுபவம் குறைந்த ஆட்களை இட்டு நிரப்புவதே டி.சி.எஸ்ஸின் நோக்கம். திறனற்றவர்களை வெளியேற்றுகிறோம் என்று காரணம் சொல்லப்படுகிறது. இதைத் தான் ‘திறனற்றவர்களை’ வெளியேற்றும் ”நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கை” என்று டி.சி.எஸ். நிறுவனம் சொல்கிறது.

 

இந்த வெளியேற்றம் வழக்கமானதா?

இடை நிலையில் இருக்கும் இத்தனையாயிரம் பேரை வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டு உலகெங்கும் உள்ள டி.சி.எஸ். ஸின் அனைத்து அலுவலகங்களிலும் ப்ராஜெக்டுகளிலும் இது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது வழக்கமானதோ, முனைப்பற்றப் பணிமாற்றமோ (involuntary attrition) அல்ல.
திறன்மதிப்பீட்டுக் குறியீடு வெளியேற்றுவதற்கான அளவுகோலா?

பொதுவாக, இப்போது கடைபிடிக்கப்பட்டுவரும் திறன்மதிப்பீட்டு அறிவியல் பூர்வமானதும் அல்ல. வெளிப்படையானதும் அல்ல.

  1. வாடிக்கையாளரின் நிறுவனம் இருக்கும் இடத்தில் (onsite) சென்று ஒருவர் பணியாற்றி வந்தால் அவருக்குக் கண்டிப்பாக ‘C’ அல்லது அதற்கும் குறைவான மதிப்பீடே கிடைக்க வாய்ப்புண்டு.
  2. ஒரு பெண் மிகச் சிறப்பாகப் பணியாற்றுபவராக இருந்தாலும்கூட அவர் பேறுகால விடுப்பு எடுத்திருப்பாராயின் அவருக்கு ‘C’ மதிப்பீடே கிடைக்க வாய்ப்பு மிகுதி.
  3. ஒரு ப்ராஜெக்ட்டில் 100 பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் ஒவ்வொரு மதிப்பீட்டு எண்ணுக்கும் (’A’, ‘B’, ‘C’, ‘D’, ‘E’) இத்தனை விழுக்காட்டினர்தான் இருக்க முடியும் என்ற வரையறை உண்டு. அதன்படி பத்துப் பேர் ஒரே வகையில் சிறப்பாகப் பணியாற்றி இருந்தாலும் பத்துப் பேருக்கும் ‘A’ கொடுத்துவிட முடியாது. 100 பேரில் கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினருக்கு ‘E’ கொடுத்தே ஆக வேண்டும். இதை வளைகோட்டைப் பொருத்துதல் (curve fitting) என்று அழைப்பர்.
  4. ஒரு ப்ராஜெக்டில் ‘C’ வாங்கியவர் பக்கத்து ப்ராஜெக்டில் ‘B’ வாங்கியவரை விடத் திறன்மிக்கவராக இருப்பதற்கு வாய்ப்புண்டு.

இக் காரணிகளைக் கணக்கில் எடுத்தால் ஒரு நிறுவனம் முழுமைக்கு ‘மதிப்பீட்டு’ எண்ணைப் பார்த்து திறன்மிக்கவர், திறனற்றவர் என்று முத்திரையிட்டு வெவ்வேறு ப்ராஜெக்ட்டில் பணியாற்றியவர்கள், வெவ்வேறு நகரங்களில் (சென்னை, பெங்களூர், ஹைதராபாத், பூனே, கொல்கத்தா, நொய்டா, கொச்சின்) பல்லாயிரக்கணக்கானோரை வெளியேற்றுவது எப்படிச் சரியாகும்?

 IMG_5160

 

மனிதத் தன்மையற்றப் பணிநீக்கம்:

ப்ராஜெக்ட்டில் பணியாற்றிக் கொண்டிருப்பவரை, மனிதவள மேம்பாட்டு அதிகாரி அழைத்து உரிய விளக்கம் அளிக்காமல், காலமும் வழங்காமல், ஒரு மாதத்தில் இந்த நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பணி நீக்கக் (டெர்மினேசன்) கடிதம் கொடுக்கப்படுகிறது. ”இன்னும் ஒரு மணி நேரம் தான் உங்களுக்குக் காலக்கெடு. அதற்குள் வந்து கடிதத்தை வாங்கிக் கொள்ளுங்கள்” என்று மிரட்டப்படுகிறார்கள்.

 

இலாபத்தை நோக்கமாகக் கொண்ட பணிநீக்கம்:

டி.சி.எஸ். ஸின் 2014 நிதி ஆண்டில் வெளியிடப்பட்ட வரவு செலவுக் கணக்கின் சுருக்கம் கீழே,

மொத்த வருவாய் – 81,809 கோடி

பணியாளர்களுக்கு ஊதியமாகக் கொடுக்கப்பட்ட தொகை  – 26,148 கோடி

(இதில் தலைமைச் செயலக அலுவலர் வரையில் அடக்கம்)

வரி கட்டியதற்குப் பின்னான மொத்த இலாபம் – 19,331 கோடி.

டி.சி.எஸ். தன்னிடம் பணிபுரியும் 3.13 இலட்சம் பணியாளர்களுக்குக் கொடுக்கும் ஊதியம் 26,148 கோடி; டி.சி.எஸ் நிறுவனத்திற்குக் கிடைக்கும் இலாபம் மட்டும் 19,331 கோடி என்பது இங்குக் கவனிக்கத்தக்கது.
அடுத்து இப்போது டி.சி.எஸ். வெளியேற்ற இருக்கும் 25,000 பேருக்குப் பதிலாகக் குறைந்த அளவு ஊதியம் பெறக்கூடியவர்களை வேலைக்கு அமர்த்துவதால் டி.சி.எஸ் ஒரு பணியாளருக்கு 5 இலட்ச ரூபாய்ச் சேமிக்கிறது என்று வைத்துக் கொண்டால் (5,00,000 X 25,000) டி.சி.எஸ் நிறுவனம் மொத்தமாக 1250 கோடி ரூபாயை சேமிக்கக் கூடும். அந்தத் தொகை டி.சி.எஸ். ஸின் மொத்த இலாபத்தில் (19,331 கோடி) 6% மட்டுமே ஆகும். அதவாது 19,331 கோடி ரூபாய் இலாபத்தைச் சுமார் 20,581 கோடியாக ஆக்குவதற்கு 25,000 பேரை வேலையைவிட்டு விரட்டி அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தையும் இருட்டுக்குள் தள்ளுவதே ஆகும்.
தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த கொள்கை மாற்றம்!

AST க்கும் மேல் தகுதிகளைக் கொண்டோரை ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 6% ஆகக் குறைத்தல், ITA வின் எண்ணிக்கையை 18% ஆகக் குறைத்தல் அதற்கும் கீழாக உள்ளவர்கள் 73% என்பதை நோக்கி டி.சி.எஸ். நிறுவனம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. எனவே, AST, ASC என்பதிலிருந்து அடுத்ததாக ITA பதவியில் உள்ளோரும் வெளியேற்றப்படுவார்கள் என்று டி.சி.எஸ். ஸின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் இத்தகைய ஆட்குறைப்பு டி.சி.எஸ் இன் முடிவு மட்டுமல்ல. ஒட்டுமொத்த தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டிருக்கும் கொள்கை முடிவு என்று சில அறிக்கைகள் கூறுகின்றன. இப்போது இருக்கும் நாற்கூம்பு (pyramid) வடிவத்திலான பணியாளர் கட்டமைப்பு 2020 ஆம் ஆண்டிற்குப் பொறுத்தமற்றது என்று அவ்வறிக்கை சொல்கின்றது. எனவே, இதன் பொருட்டு இடைநிலையிலுள்ள பணியாளர்கள் பெருமளவில் வெளியேற்றப்படுவார்கள். அடுத்த மூன்றாண்டுகளில் 50,000 பேரை வெளியேற்றப் போவதாக விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இச்செயல் அனுபவமிக்கப் பணியாளர்களை ஒரு பத்தாண்டுப் பயன்பாட்டிற்குப்பின் சக்கையைப் போல் வீசி எறிவதே ஆகும்.

 

பணிநீக்கத்திற்கு  எதிரான பரப்புரை:
இந்தப் பின்னணியில்தான் தகவல் தொழில்நுட்பத் துறையினரால் தொடங்கப்பட்டுக் கடந்த ஆறு ஆண்டுகாலமாகச் செயல்பட்டுவரும் இளந்தமிழகம் இயக்கம் இந்தப் பணி நீக்கத்திற்கு எதிரான பரப்புரையைக் கடந்த திங்கள் ( 22-12-2014) அன்று தொடங்கியது. முகநூலில் “We are against TCS LayOff” (www.fb.com/AgainstTCSLayOff ) என்ற பக்கத்தைத் தொடங்கி இணையத்தளப் பரப்புரையை மேற்கொண்டது. சென்னையில் ஸ்டிக்கர், துண்டறிக்கை விநியோகம் ஆகிய பரப்புரைகளையும் செய்தது. இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதிலும் இருந்து பாதிக்கப்பட்டவர்களும், தான் பாதிக்கப்படாவிட்டாலும் இந்த வெளியேற்றத்தை எதிர்க்க வேண்டும் என்பவர்களும் எமது இயக்கத்தைத் தொடர்பு கொண்ட வண்ணம் உள்ளனர்.

 

ஹைதராபாத், கொச்சி, பெங்களூர், பூனே, கொல்கத்தா, நொய்டா என்று பல்வேறு நகரங்களில் இருந்து அழைப்புகள் வந்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்தும் அழைப்புகள் வந்துள்ளன. முகநூல் பக்கத்தை ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் விரும்பியுள்ளனர். கடந்த சனிக் கிழமையன்றுச் சட்ட இரீதியாக இதை எதிர்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களும் சட்ட இரீதியாக இதை எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
இலட்சக்கணக்கானோர் பணிபுரியும் இத் துறையில் பணியாளர்கள் தங்களுடைய வேலையையும் அது சார்ந்த உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கான வலைப்பின்னல் தொடர்பு முறைகளே இல்லை. இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு முதலில் தகவல் தொழில் நுட்பத் துறைப் பணியாளர்களிடையே ஒரு வலைப்பின்னல் தேவை.
இப்படியான சட்டவிரோத வேலை நீக்கத்தைச் சட்ட இரீதியாக எதிர்கொள்வதோடு நடுவண், மாநில அரசுகளின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தையும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தையும் உடனடியாகத் தலையிட்டு இதைத் தடுத்து நிறுத்த கோர வேண்டும். இந்தக் கோரிக்கையை அரசிடம் எடுத்துச் செல்வதற்குத் தகவல் தொழில்நுட்பத் துறைப் பணியாளர்களுக்கான மன்றம் தேவை என்ற காரணத்தால் இந்த மன்றம் உருவாக்கப்படுகிறது.

IMG_5166

இணைய விண்ணப்பம்:  https://www.change.org/p/international-labour-organization-stop-the-indiscriminate-job-termination-of-it-employees-in-tcs

வலைத்தளம்:  www.fite.org.in

முகநூல்:  www.fb.com/ForumForITEmployees

கீச்சர்:  www.twitter.com/ITEmployeeForum

 

மன்றத்தின் முதன்மை நோக்கம்:

இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் பணிபுரியும் இந்தியக் குடியுரிமை கொண்ட தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களை இம்மன்றத்தின் உறுப்பினராக்கி ஒரு வலைப்பின்னலுக்குள் கொண்டு வருவதாகும்.

 

கோரிக்கைகள்:

  • டி.சி.எஸ். நிறுவனம் செய்து வரும் ஆட்குறைப்புக் குறித்து வெளிப்படையான அறிக்கையை வெளியிட வேண்டும்.
  • மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு டி.சி.எஸ். ஸில் நடந்துவரும் சட்ட விரோதப் பணி நீக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

 

இம்மன்றத்தின் உடனடி வேலைத் திட்டம்,

  • ‘திறனற்றவர்கள்’ என்ற காரணம் சொல்லி டி.சி.எஸ் செய்யும் சட்டவிரோதமான பணி நீக்கத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு இந்தியாவின் தலைமையமைச்சர், தொழிலாளர் அமைச்சர், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆகியோரைக் கோரும் இணைய விண்ணப்ப (Online Petition) இயக்கத்தைத் தொடங்குகிறது.
  • பெங்களூர், ஹைதராபாத், பூனே, கொல்கத்தா, தில்லி ஆகிய இடங்களிலும் உள்ள பாதிக்கப்பட்டோரைச் சந்தித்துச் சட்ட இரீதியாக இச்சிக்கலை எதிர்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது.
  • நடுவண், மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்களைச் சந்தித்து உடனடித் தலையீட்டைக் கோரி விண்ணப்பிக்க இருக்கிறது.
  • நடுவண், மாநில அரசுகளின் உடனடித் தலையீட்டைக் கோரிப் போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறது.

 

ஒருங்கிணைப்பாளர்

பரிமளா

 

 

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*