Home / அரசியல் / தொழிலாளர்களைத் தெருவில் நிறுத்தியிருக்கும் “வளர்ச்சி”!
டி.சி.எஸ் உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் சமகாலச் செயல்பாடு இப்படித் தான் உள்ளது.

தொழிலாளர்களைத் தெருவில் நிறுத்தியிருக்கும் “வளர்ச்சி”!

2014 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர், அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம், அதிகம் விற்பனையான புத்தகம் என நடக்கும் கருத்து கணிப்புகளின் வரிசையில் நாம் கட்டாயம் சேர்க்க வேண்டிய மற்றொன்று “அதிகமாகப் புழங்கப்பட்ட சொல்” என்பதுதான். இந்த ஆண்டில் அதிகம் புழங்கப்பட்ட சொல் எது ? என்று ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினால், முதல் இடத்தைப் பிடிப்பது “வளர்ச்சி” என்கிற சொல்லாகத்தான் இருக்கும்.

இந்த நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள யாரிடமும் ” அரசு என்ன செய்ய வேண்டும் ?” என்கிற கேள்வியைக் எழுப்பினால், ” வளர்ச்சி வேண்டும்” என்பதுதான் பதிலாக இருக்கும். வளர்ச்சியின் தேவை வேண்டுமானால் வேறுபடலாமே ஒழிய, பதில் ஒன்றாகத்தான் இருக்கும்.

வளர்ச்சி முழக்கம் என்பது 2014-ல் உச்சத்தைத் தொட்டிருந்தாலும், இதன் வேர்கள் 1990-களில் உலகமயத்தை உள்வாங்கி, சந்தையை திறந்த நாட்களில் இருந்து தொடங்குகிறது. இவ்வாறான வளர்ச்சியின் பலன்கள் ஜிடிபி, சென்செக்ஸ், பங்கு மதிப்பு என சாதாரண மனிதனுக்கு புரியாத சொற்களில் சொல்லப்பட்டாலும், இந்த வளர்ச்சியின் கொடூரமான பாதிப்புகள் மட்டும் நம்மைப் போன்ற எளிய மனிதர்களுக்கு புரியும் மொழியிலேயே இருந்தது, இருந்தும் வருகிறது.

அப்படி ஏற்பட்ட பாதிப்புகளில் முக்கியமானவையாக இந்த ஆண்டு இருந்தவை; நோக்கியா ஆலை மூடல், அதனைத் தொடர்ந்து பாக்ஸ்கான், இப்போது 25000 தொழிலார்களை பணியைவிட்டு நீக்கும் டாடா கன்சல்டன்சி நிறுவனம் என பட்டியல் தொடர்கிறது.

2005 ஆம் ஆண்டு 31000 பேருக்கு வேலை வாய்ப்புகள் என விளம்பரப் பகட்டுகளுடன் தொடங்கப்பட்டது நோக்கியா நிறுவனம். குறைந்த குத்தகை விலையில் நிலம், வரிச் சலுகைகள் என்று மக்களின் வரிப் பணத்தில் இருந்து வாரி இறைக்கப்பட்ட காசில் கட்டியெழுப்பப்பட்டது நோக்கியா.

நோக்கியா அலைபேசி வாங்குபவர்களுக்கு தெரியாது பாதிக்கப்படும் தொழிலாளர்களின் வலி

நோக்கியா அலைபேசி வாங்குபவர்களுக்கு தெரியாது பாதிக்கப்படும் தொழிலாளர்களின் வலி

நோக்கிய விற்பனை செய்த ஒவ்வொரு கைபேசிக்கும் அரசுக்குத் தரப்பட வேண்டிய மதிப்புக் கூட்டு வரியையும் நோக்கியா நிறுவனத்திற்கே வழங்கப்பட்டது. இந்த மதிப்புக் கூட்டு வரிவிலக்கால் நோக்கியா பெற்ற லாபம் மட்டும் 650 கோடி. இதில் விந்தை என்னவென்றால் நோக்கியா ஆலைக்கான மொத்த முதலீடும் 650 கோடி என்பதுதான்.

மாதத்திற்கு ஒன்றரை கோடி கைபேசிகள் உற்பத்தி, ஐந்தே ஆண்டுகளில் 15 கோடி கைப்பேசிகள் உற்பத்தி என நோக்கியா நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் முன்னேற இரவு பகல் பாராமல் வேலை பார்த்த தொழிலாளர்கள் இன்று நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

நோக்கியாவின் முன்னேற்றத்திற்காக உழைத்த தொழிலாளர்களை நடு ஆற்றில் விட்டுச் செல்லும் இந்த நிறுவனம், இந்திய, தமிழக அரசுகளிடமிருந்தும் சுமார் 25000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது. இதையொட்டிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நோக்கியாவில் வேலை பார்த்த 13000 தொழிலாளர்களோடு சேர்த்து, அதனைச் சார்ந்து இயங்கி வந்த நிறுவனங்களின் தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

இந்த வரிசையில் தனது ஆலையையும் மூடுவதாக மின்னணு சாதனங்களுக்குத் தேவையான பாகங்களை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனமான பாக்ஸ்கான் அறிவித்துள்ளது. இதை படிப்படியாக செய்யப் போவதாக அறிவித்து டிசம்பர் 15 ஆம் தேதியில் இருந்து தொடங்குவதாக அறிவித்தும் விட்டது. சென்னையில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் பணிபுரிந்து வந்த 1500 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

டி.சி.எஸ் உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் சமகாலச் செயல்பாடு இப்படித் தான் உள்ளது.

டி.சி.எஸ் உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் சமகாலச் செயல்பாடு இப்படித் தான் உள்ளது.

 

உலகமய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் வளர்ச்சியின் பலனாக அரசாலும், நடுத்தர மக்கள் பிரிவினாராலும் உதாரணம் காட்டப்படும் மற்றொரு துறையான தகவல் தொழில்நுட்பத் துறை தொழிலாளர்களின் நிலைமை இன்னும் படுமோசமாக உள்ளது.

இந்திய அளவில் பெரிய நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் மொத்தம் சுமார் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களில் 25000 பேரை வருகின்ற 2015 பிப்ரவரி மாதத்திற்குள் பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்து, நடவடிக்கையும் எடுக்கத் தொடங்கிவிட்டது.

இதற்கும் டி.சி.எஸ் நிறுவனம் 55000 பேரை புதிதாக பணிக்கு அமர்த்துகிறோம் என்று ஒருபுறம் அறிவித்துவிட்டு, மறுபுறம் 25000 பேரை பணியை விட்டு நீக்குகிறது. இந்த நடவடிக்கைக்கு அவர்கள் வைத்துள்ள பெயர் “மறுசீரமைப்பு”. ஆனால், டி.சி.எஸ் நிறுவனத்தின் ஆண்டு நிதி அறிக்கையைப் பார்க்கும் போது, அங்கு மறுசீரமைப்பிற்கான தேவை இருப்பது போலத் தெரியவில்லை. ஆம்! டி.சி.எஸ் நிறுவனத்தின் இந்த ஆண்டு வருமானம், கடந்த ஆண்டு வருமானத்தைவிட 22.9 விழுக்காடு அதிகம்.

தகவல் தொழில்நுட்பத் துறையின் நிலைமை நோக்கியா, பாக்ஸ்கான் நிறுவனத் தொழிலாளர் நிலைமையை ஒப்பிடும் போது ஒரு விதத்தில் மிக மோசமாக உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, தங்கள் உரிமைகளைப் பெறவோ, குறைகளைத் தெரிவிக்கவோ தொழிலாளர்கள் சேர்ந்து சங்கம் அமைக்கும் உரிமைகூட இல்லை.

இப்படி வளர்ச்சி முழக்கங்கள் விண்ணைப் பிளந்த இந்த ஆண்டில், வளர்ச்சியின் மறுபக்கத்தைக் காட்டிய தொழிலாளர் பிரச்சினையைத்தான் 2014 ஆம் ஆண்டு 2015-க்கு கையளிக்கப் போகிறது. வேலை இழந்தும், வேலைப் பறிப்பை எதிர்நோக்கியும் இருக்கும் தொழிலாளர்களின் கதறல்களோடு விடைபெறுகிறது 2014.

கதிரவன்
இளந்தமிழகம்

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*