Home / அரசியல் / பெரியார் பேசிய தமிழ்த் தேசியம் – தோழர் கொளத்தூர் மணி

பெரியார் பேசிய தமிழ்த் தேசியம் – தோழர் கொளத்தூர் மணி

“பெரியாரும் தமிழ்த்தேசியமும்” என்ற பெயரில் ஒரு கருத்தரங்கத்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு இளந்தமிழகம் இயக்கம் ஒருங்கிணைத்தது. இதில் கலந்து கொண்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் , தோழர்.கொளத்தூர் மணியின் உரை காணொளியையும், அதன் வரிவடிவத்தையும் இங்கே கொடுத்துள்ளோம்.

விசை ஆசிரியர் குழு.

காணொளி

பெரியாரும் தமிழ்த்தேசியமும் என்ற பெயரில் இந்த கருத்தரங்கத்தை ஒருங்கிணைத்திருக்கும் இளந்தமிழகம் இயக்கத்தோழர்களுக்கும், இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்திருக்கும் அனைத்து தோழர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பெரியாரும் தமிழ்த்தேசியமும் என்ற தலைப்பில் சில செய்திகளை உங்களுடன் சுருக்கமாக பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பெரியார், தமிழ்த்தேசியம் அல்லது தேசியம் என்ற கோட்பாட்டை உள்வாங்கிக்கொண்டு அதனடிப்படையில் அல்லது அதற்குப் பொருத்தமாக ஒரு தேசியத்தை முன்வைத்தாரா என்றால் இல்லை. அவர் எடுத்துக்கொண்ட சாதி ஒழிப்புக் கொள்கையின் நீட்சியாகத்தான் தனித்தமிழ்நாட்டு கருத்தை முன்வைத்தார். என்றாலும்கூட தேசியம் என்ற சொல்லாடலில் உள்ள அனைத்து கூறுகளும் அதில் உள்ளடக்கி இருந்தன.

பெரியார் தனது கொள்கைகளை, கோட்பாடுகளாக வரையறுக்கவில்லை. அவர் அறிஞர்களை நோக்கி எழுதியவர் அல்ல; அறியாத பாமரர்களிடம் போய் பேசியவர். தான் அவர்கள் முன்னால் வைக்க விரும்பிய கருத்துக்களை, காண விரும்பிய மாற்றங்களை, ஏற்படுத்துவதற்காக அவர்களிடம் போய் அவர்கள் நடையில் அவர்கள் மொழியில் அவர்கள் அளவுக்கு இறங்கி பேசியவர்தான் பெரியார். அப்படிப்பட்ட கருத்து பதிவுகளைத் தொகுத்துத்தான் அவற்றை கோட்பாடுகளாக்க முயலுகிறோம். இது பெரியாரின் கொள்கை என்று ஒரு செய்தியை அறுதியிட்டு புரிந்து கொள்ள நாம் அவருடைய அனைத்து கருத்துக்களையும் படிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஒன்றிரண்டு கருத்துக்களைப் படித்துவிட்டு இதுதான் பெரியார் கொள்கை என்று கூறுவது பொருத்தமாக இருக்காது என்பது என் கருத்து. ஆனால் இப்போது பெரியாரைப் பற்றி வைக்கப்படும் விவாதங்கள்,விமர்சனங்கள் எல்லாம் எங்கோ யாரோ கூறியதை வைத்தும் ஏதோ ஏடுகளில் படித்ததை எடுத்துக்கொண்டும்தான் வைக்கிறார்கள்.

அந்த வாதத்திற்கு எப்படிப்பட்ட பதிலை நாம் தந்தாலும்கூட பெரியாரைக் கொச்சை படுத்த விரும்புபவர்கள் அதைப் புரிந்துகொள்ள முயற்சியைக்கூட எடுக்க  விரும்புவதில்லை என்பதுதான் நம் வருத்தம். “திராவிடர் கழகம்” என்ற பெயரைப்பற்றி கூட அண்மையில் அருகோ அவர்கள் எழுதியிருந்தார்கள். “காலையில் தமிழர் கழகம் என்றுதான் பெயர் வைப்பதாக இருந்தது மாலைக்குள் பெரியாருக்கு ஞானோதயம் வந்து தன்னை ஒதுக்கிவிடுவார்கள் என்று திராவிடர் கழகம் என்று மாற்றிவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.

10609476_584053061718023_8071643999041524942_n

திராவிடர் கழகம் என்ற பெயரை –  ஒன்றரை ஆண்டுகள் கட்சியில் விவாதித்து, ஏறத்தாழ எல்லா மாவட்ட அமைப்புகளின் கருத்துகளை, இயற்றியுள்ள தீர்மனங்களைக் கருத்தில் கொண்டு, தென்னிந்திய நல உரிமை சங்கத்தின் தலைமைப் பொதுக்குழு 1943ஆம் ஆண்டு (26-11-1943) சேலத்தில் கூடி அடுத்து ஆண்டு சேலத்தில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில், சங்கத்தின் பெயரை தமிழில் திராவிடர் கழகம் என்றும் ஆங்கிலத்தில் South Indian Dravidian Federation என்றும் மாற்ற வேண்டும் என்று தீர்மானித்தார்கள் அதைதான் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம்  (27-08-1944) செய்தார்கள். காலையில் முடிவு செய்து மாலையில் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. இதை நாம் பலமுறை பேசியிருக்கிறோம்; பலர் பலமுறை எழுதியிருக்கின்றனர். சத்தியமூர்த்தி அய்யர்  பெரியாருக்கு தொலைபேசியதாக அருகோ குறிப்பிட்டிருக்கிறார்.1943 ஆம் ஆண்டே மறைந்துவிட்ட சத்திய மூர்த்தி 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் தொலைபேசியில் பேசியிருக்க வாய்ப்பில்லை. இப்படியெல்லாம்தான் பெயரியார் மீது விமர்சனம் வைக்கின்றனர்.

பெரியார் பேசிய திராவிடம் அல்லது திராவிடர் யாரைக்குறிக்கிறது? பெரியாரின் பொது வாழ்வு தொடங்கிய காலம் தொட்டே சாதி ஒழிப்பே அவரது முதன்மையான பணியாக இருந்தது. மறைமலையடிகள் அடிகள் தலித் மக்களை பற்றி வைத்த விமர்சனங்களுக்கு 1925 ஆம் ஆண்டு கரைக்குடி காங்கிரஸ் மாநாட்டை தலைமை தாங்கி பேசிய பெரியார் பதில் கூறுகிறார். நீங்கள் குளத்து நீரை குடிக்கவே அவர்களை அனுமதிக்காதபோது அவர்கள் குளிக்கவில்லை; உடை தூய்மையாக இல்லை என்று குறை கூற என்ன யோக்கிதை இருக்கிறது என்று பொது சமூகத்தைப் பார்த்துக் கேட்கிறார். மலத்தையும், குப்பையையும்,சளியையும், அழுகியவற்றையும்  தின்று வளர்ந்த கோழியை தின்பவன் உயர்ந்தவன், நல்ல புல்லையும், புண்ணாக்கையும் தின்று வளர்ந்த மாட்டைத் தின்பவன் தாழ்ந்தவன் ஆகிவிட்டானா? என்று வினவுகிறார். கள் குடிப்பது குற்றம், குடிப்பவன் தாழ்ந்த சாதியானால் மரத்தை வளர்த்து அதனால் வருமானம் பார்ப்பவனும், கள் இறக்கி வியாபாரம் செய்பவனும், கள் குடிப்பவனும் யார் என்று கேட்கிறார். 1927 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பின்பு சாதியம் என்பது தனியாக இல்லை, பெண்ணடிமை என்பதோடு பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிகிறார். இரண்டையும் சேர்த்து ஒழித்தாலொழிய சாதி ஒழியாது என்று கருதினார். புரட்சியாளர் அம்பேத்கரும் அதைதான் சொல்கிறார்.

காலப்போக்கில் பெரியார் சாதி ஒழிந்த, பெண்ணடிமைத்தனம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவேண்டுமென்றால் சாதியத்திற்கும் பெண்ணடிமைத்தனத்திற்கும் அடிப்படையான இந்துமதத்தின் அரசியல் வடிவமான இந்தியாவில் இருந்துகொண்டு இதை செய்ய முடியாது என்பதை உணர்ந்தார். ஆக சாதி ஒழிப்பின் நீட்சியாகத்தான் இந்தியாவை விட்டு வெளியே வரவேண்டுமென்று கருதினார். அதுதான் அவரது நோக்கமாக இருந்திருக்கிறது. இப்போது “தமிழ்நாடு தமிழர்க்கே” என்ற முழக்கத்தை யார் முதலில் வைத்தது பெரியாரா இல்லை தமிழறிஞர்களா என்று விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒரு மாநாட்டில் தமிழ் அறிஞர் ஒருவர்தான் முன்மொழிந்தார் என்று இப்போது கூறுகிறார்கள். மாநாடுகளில் எந்த  தீர்மானத்தை முன்மொழிய போகிறார்கள் என்று மாநாடு நடத்துபவர்க்குதான் தெரியும். தீர்மானத்தை வாசிப்பவரா முன்மொழிபவர்?

பெரியார் தனியாக செயல்படவில்லை; அப்போது இருந்துவந்த சென்னை மாகணத்தில் இருந்துதான் பொதுவாழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். சென்னை மாகாணம் என்பது தமிழர்கள் மட்டும் வாழும் பகுதியாக இருக்கவில்லை. தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி பேசும் மக்கள் வாழ்ந்த சில மாவட்டங்களையும் சேர்த்ததுதான் சென்னை மாகாணம். அப்போது அவருடன் இணைந்து செயல்பட்டவர்கள் தமிழ்நாடு தமிழர்க்கே என்றால் எங்கள் கதி என்னவென்று கேட்கிறார்கள். எனவே 1938 ஆம் ஆண்டு “தமிழ்நாடு தமிழர்க்கே” என்றவர் 1939 ஆம் ஆண்டு “திராவிடர் நாடு திராவிடர்க்கே” என்று முழக்கத்தை மாற்றுகிறார். அதற்கு விளக்கமும் அளிக்கிறார். 1940 ஆம் ஆண்டு திருவாரூரில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் “நான் கூறும் திராவிடநாடு என்பது சென்னை மாகாணம்தான்” என்று தீர்மானமிடுகிறார்.

periyar 1

மீண்டும் அந்த முழக்கம் எப்போது மாறுகிறது என்றால் மொழிவாரி மாநிலங்களாக 1956 ஆம் ஆண்டு கேரள, கர்நாடக, ஆந்திர மாநிலங்கள் தமிழ்நாட்டில் இருந்து பிரிக்கப்பட்ட பின்பு. இன்னும் எதற்கு திராவிட நாடு என்ற முழக்கம் “தமிழ்நாடு தமிழர்க்கே” என்றார். காரணம் அவர் பணியாற்றும் அரசியல் களத்தின் வடிவம் மாறியிருந்தது. ஆக 1956லேயே திராவிட நாடு திராவிடர்க்கே என்ற முழக்கம் முடிந்துவிட்டது. அதற்குப்  பிறகு அதை சொல்லிகொண்டிருந்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம் என்று கட்சி ஆரம்பித்தவர்கள்தான். பிறகு 1963 ஆம் ஆண்டு ஒரு தடைசட்டம் வந்தபின் அவர்களும் அதைக் கைவிட்டுவிட்டார்கள். அதை நாம் இப்போது விமர்சிக்க வேண்டியதில்லை. ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. 1963 முதல், அன்றிலிருந்து இன்றுவரை திராவிடநாடு பற்றி பேசுபவர்கள் யாருமில்லை. ஆனால் இன்றைக்கும் அந்த திராவிட என்ற சொல்தான் சிக்கலாக இருப்பதாக கூறுகின்றனர்.

நாட்டுமருந்து கடைகளில் மருந்து வாங்கும்போது மருந்து தின்றுவிட்டு புளி மட்டும் உண்ண வேண்டாம், உண்டால் மருந்து வேலை செய்யாது என்பார்கள். அதுபோல தமிழ்நாடு விடுதலைக்குத் தடையாக இருப்பது இந்த திராவிட என்ற சொல்தான் என்கிறார்கள். பெரியாரை விட்டுத்தள்ளுங்கள், சிறுஎண்ணிக்கையாக இருக்கிற பெரியாரிய இயக்கத்தவரை விட்டுத்தள்ளுங்கள்; மற்றவர்களால் ஏன் தமிழ்நாட்டு விடுதலையை வென்றெடுக்க முடியவில்லை? ஆடத்தெரியாதவள் கூடம் கோணல் என்றதைப்போல எதையோ பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறார்களே தவிர, நாம் இந்த முன்னெடுப்புக்கு என்ன செய்ய வேண்டும்என்ற முயற்சி அற்றவர்களாக இருக்கின்றனர் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

பிறகு ஏன் பெரியார் “திராவிடர்” என்ற சொல்லை பயன்படுத்திக் கொண்டிருந்தார் என்கிறார்கள். பெரியார் அரசியல் விடுதலைக்கு ‘ தமிழ் நாடு தமிழர்க்கே’  என்ற முழக்கத்தை வைத்திருந்தார் அதேபோல சமூக விடுதலை என்று வருகிறபோது திராவிடர் ஆரியர் என்ற எதிர்வுகளை வைத்து ஆரியர்களுக்கெதிரான பண்பாட்டுப்போரை ஒருபுறம் நடத்திக்கொண்டிருந்தார். தமிழர் என்ற அடையாளத்தோடு நம் நாட்டு அரசியல் விடுதலையை வென்றெடுக்க இந்தியாவிடமும், திராவிடர் என்ற அடையாளத்தோடு நமக்கெதிரான சாதி  தத்துவங்களைப் படைத்து நிலை நிறுத்திக்கொண்டிருக்கும் ஆரியத்திற்கு எதிராகவும் போராடினார் என்று புரிந்து கொள்ளலாம்.

periyar-by-manivarma

பெரியார்மீது இன்னொரு குற்றச்சாட்டு உண்டு. ஆரியர் திராவிடர் என்று தனித்தனியாக யாரும் கிடையாது, பெரியார் அறியாமையால் பேசுகிறார் என்கின்றனர். அதற்கும் அவரே விளக்கத்தைக் கூறிவிட்டு சென்றிருக்கிறார். “ஆரியர் திராவிடர் என்பது கலந்து போய் விட்டது. பிரிக்க முடியாது, இரத்தப் பரிசோதனையிலும் கண்டுபிடிக்க முடியாது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சே என்று சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்திருக்கலாமே தவிர ஆரிய திராவிட அனுஷ்டானங்கள் கலந்துவிட்டனவா? சட்டைக்காரர் என்றொரு கூட்டம் இருக்கிறது அது வெள்ளை ஆரிய – கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது என்றாலும் நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது?” என்று கேட்கிறார். ஆங்கிலேயர்களுக்கும் தமிழ்நாட்டில் இருந்த பெண்களுக்கும் பிறந்தவர்கள்தான் ஆங்கிலோ இந்தியர்கள். அவர்கள் தமிழர்கள் என்று உணர்ந்து கொள்கிறார்களா? அப்படித்தான் ஆரியர்கள் என்று சொல்கிறார்.

“இந்த நாட்டில் உள்ள பார்ப்பனர் ஆரியரும் திராவிடரும் கலந்த சமுதாயமாகும். ஆனால் கொள்கையில் நடப்பில் ஆரியர்களே ஆவார்கள்” இதுதான் பார்ப்பனர்களைப் பற்றிய பெரியாரின் கருத்து. நாம் இரத்தப் பரிசோதனை செய்து ஆரியர் திராவிடர் என்று பிரிப்பதில்லை அது அவர்களுடைய பழக்கவழக்கங்களை நடப்புகளை, கொண்டிருக்கின்ற கொள்கைகளைப் பார்த்து பிரித்துப்பார்க்கிறோம். அதில் ஏறத்தாழ பார்ப்பனராய் பிறந்த அனைவரும் அதே கருத்தோடுதான் இருக்கிறார்கள். தமிழை நாம் தாய்மொழி உயர்ந்தமொழி என்றால் அவன் அவனுக்கு சமஸ்கிருதம் தான் தாய்மொழி உயர்ந்தமொழி என்று மனதுக்குள் கருதிக்கொள்வான். ஆக இவற்றை வைத்து பெரியார் ஆரியர் திராவிடர் என்று பிரித்தாரே தவிர பிறப்பின் அடிப்படையில் அல்ல.

இப்போதெல்லாம் நிறைய இரத்தப் பரிசோதனை அறிக்கைகளை படிக்க நேரிடுகிறது. சமீபத்தில் சுபவீ யை வேற்று மொழியாளர் என்று எழுதியிருந்தார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சாதிப்படி பார்த்தாலும் அவர் தமிழர்தானே அவரை எப்படி வேற்று மொழிக்காரர் என்கிறார்கள் என்று. தோழர் குணா அவர்களின் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, அவரிடம் கேட்டுவிட்டு சொன்னார்; காவிரிப்பட்டினம் கடல் கொண்டபோது அங்கிருந்த நகரத்தார்கள் மேட்டுப்பகுதியை நோக்கி இடம் பெயர்ந்தனராம். அங்கு அவர்களிடம் வீட்டு வேலைக்கு வந்த நரிக்குறவப் பெண்களுக்கும் குழந்தைகள் பிறந்தனவாம். ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து அவர்களது சாதிப் பஞ்சாயத்து கூடி இனிமேல் அந்த குழந்தைகளையும் நம் சாதியோடு சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தனராம். சுபவீ யுனுடைய முக அமைப்பை பார்த்தால் நரிக்குறவ சாயல் தெரிகிறதாம் அதனால் அவர் பிற மொழியாளர் என்கின்றனாரம். தமிழின மீட்சியுனுடைய இரண்டாம் பதிப்பில் இதை எழுதியிருக்கிறார்கள்.இவற்றிற்கெல்லாம் நம்மால் பதில் கூற இயலாது.

மொழித்தூய்மை வாதம் என்பது தன்மொழிமீது செலுத்தப்படும் ஆதிக்கத்தை எதிர்ப்பது. சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம் என்று நம்மீது செலுத்தப்படும் எல்லா ஆதிக்கத்தையும் எதிர்க்கும் நாம், நம் மொழிமீது வேற்று மொழி ஆதிக்கம் செலுத்துவதை எதிர்ப்பது நியாயம் தான். பெரியாரும் பேசியிருக்கிறார் ஆங்கிலச்சொற்களைத் தமிழில் மொழி பெயர்க்கும்போது Disinfectant என்ற சொல்லுக்கு பூத நாசினி என்று சொல்லுகிறார்கள். நச்சு நீக்கி என்று சொன்னால் என்ன? Electrolysis என்ற சொல்லை ஏன் விக்தியோஜனம் என்று மொழிபெயர்க்கிறீர்கள்?  மின் பருக்கை என்று ஏன் கூற மறுக்கிறீர்கள்? பெரியார் கேட்கிறார்.

tamil  g

நம்மொழி மீது இன்னொரு மொழியின் ஆதிக்கம் வேண்டாம் என்பது சரி; ஆனால் இனத்தூய்மை வாதம் பேசுகிறபோதுதான் சிக்கலே வருகிறது. இனத்தூயமைவாதம் பேசுகிறவர்களிடம் நாமும் சில கேள்விகளை முன்வைக்க வேண்டிய தேவை வருகிறது. சோழப்பேரரசின் பெருமைகளை பேசுகிறவர்கள்அவர்களை இரத்தப்பரிசோதனை செய்தால் தெரியும் அவர்கள் தூய தமிழர்களா என்று. ஆனால் அது நமக்கு நோக்கம் அல்ல.

ஆரியர் திராவிடர் என்ற கருத்தாக்கத்தை பெரியார் 1956 ஆண்டே எப்போதிருந்து அவருக்கு அந்த கருத்து இருக்கிறது? 1929 ஆம் ஆண்டு காங்கிரசை விமர்சித்து பேசும்போது “தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு எப்போதெல்லாம் தங்களது மாயாஜாலம் பலிக்கவில்லையோ  அப்போதெல்லாம் வெளிநாட்டிலிருந்து ஆட்களைக் கூட்டி வருகிறார்கள்” என்று கூறுகிறார். சர்தார் வல்லபாய் படேலை தமிழ்நாட்டிற்கு கூட்டி வந்தபோது “முதலில் காந்தியைக்கூட்டி வந்தார்கள் பிறகு பஜாஜை கூட்டி வந்தார்கள் இப்போது படேலைக் கூட்டி வந்திருக்கின்றனர்” என்று குடிஅரசில் எழுதுகிறார். ஆக 1929 ஆண்டே வடநாட்டை வெளிநாடு என்றுதான் அழைத்திருக்கிறார். ஒரு அறிஞரின் ஆய்வறிக்கையைப் படித்தேன் அதில் அவர் பெரியார் தன்னை ஒரு கன்னடன் என்று கூறி நம்மை ஏமாற்றுகிறார் உண்மையில் அவர் ஒரு தெலுங்கர் என்று எழுதியிருந்தார்.

பெரியாரைப்பற்றி நீங்கள்  என்ன எழுதியிருந்தாலும் அது அவர் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியும். அவர் தன் இளமைக்காலத்தில் செய்த மைனர் சேட்டைகள் என்றாலும் சரி அவர் கன்னட பலிஜா நாயுடு சாதியைச் சேர்ந்தவர் என்றாலும் சரி அது அவரின் எழுத்து மூலமாகத்தான் உங்களுக்கு தெரியும். எதையும் நீங்கள் ஆய்வு செய்து கண்டுபிடிக்கவில்லை. வெளிப்படையாக தன்னைப்பற்றிய உண்மைகளை கூறிக்கொண்டவர் பெரியார். விதவா விவாக விளக்கம் என்ற நூலுக்கான அணிந்துரையைப் பெரியார் எழுதுகிறார் “என் அக்கா மகளுக்கு திருமணம் நடந்தது. அவரின் கணவர் இறந்துவிட்டார். மறுமணம் பற்றி பேச்சு வந்தது. நாங்கள் கன்னட பலிஜா நாயுடு வகுப்பை சேர்ந்தவர்கள்; எங்களுக்குள் விதவை மறுமண வழக்கம் கிடையாது என்று சொன்னார்கள். நான் அதை மாற்றி மறுமணம் செய்து வைத்தேன்” என்று எழுதியிருக்கிறார். அப்படித்தான் அவர் இன்ன சாதி என்று நமக்கு தெரியும். அவர் எந்த இடத்திலும் சாதிப் பெருமை பேசவில்லை; பெருமையாக தன் சாதியை சொல்லிக்கொள்ளவும் இல்லை.

பெரியார் பெங்களூரு சென்றிருந்தபோது கன்னடத்தில் பேச சொல்லுகிறார்கள். நான் முயற்சி செய்கிறேன் என்று கூறிவிட்டு இரண்டொரு வார்த்தை பேசுகிறார். பிறகு மன்னிக்கணும் எனக்கு கன்னடம் வரவில்லை வேண்டுமானால் தெலுங்கிலோ மலையாளத்திலோ பேசுகிறேன் வியாபாரம் செய்ய சென்றபோது கொஞ்சம் கற்றிருக்கிறேன் என்று கூறிவிட்டு தமிழில் பேசுகிறார். இதற்கான பதிவுகள் இருக்கின்றன. சரி அவர் தெலுங்கர்களையாவது நம்மவர்களாக நினைத்தாரா என்றால் அதுவும் இல்லை. நெல்லூரில் நீதிக்கட்சி நடத்தும் தென்னிந்திய நல உரிமை சங்கத்தின் மாநாடு நடக்கிறது. பெரியார் காங்கிரசோடு ஒப்பிட்டு பார்த்து ஒப்பீட்டளவில் நீதிக்கட்சியை ஆதரித்துக்கொண்டிருந்த காலம். அந்த மாநாட்டில் பார்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளாம் என்று ஒரு முன் மொழிவு இருப்பதாக அறிகிறார் அதனால் நெல்லூர் மாநாடு என்ற தலைப்பில் 22.9.1929 ல் ஒரு அறிக்கை எழுதுகிறார்.

“இம்மாநாடு தெலுங்கு நாட்டில் கூடுவது நமக்கு மிகவும் பலவீனமானது என்றே தோன்றுகிறது. ஏனெனில் தெலுங்கு நாட்டு மக்களுக்கு இவ்விசயம் அவ்வளவு கவலைப்படத்தக்கதாக இல்லை. அவர்களுக்கு இன்னும் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதோர் என்ற விஷயம் அர்த்தமானதாகவே சொல்வதற்கில்லை. இதற்கு முக்கிய உதாரணம் என்னவென்றால் ஆந்திர தேசத்தில் இன்னும் காங்கிரசுக்கு மதிப்பு இருப்பதே ஆகும். ஆந்திர தேசத்து பார்ப்பனர் அல்லாதவர்கள் இன்னும் மத சம்பந்தமான புராணங்களிலும் குருட்டு நம்பிக்கைகளிலும் ஈடுபடுபவர்கள் ஆவர். எவ்வளவுக்கெவ்வளவு குருட்டு நம்பிக்கைகளிலும் புளுகு புராணங்களிலும் ஈடுபடுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் மேதாவிகள் எனவும் பெரியவர்கள் எனவும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள். எனவே மூட நம்பிக்கைகளிலிருந்தும் கண்மூடி பின்பற்றும் குருட்டு நடவடிக்கைகளிலிருந்தும் என்று ஆந்திர தேசத்தவர் விடுதலை பெறுகிறார்களோ அன்றுதான் அவர்கள் பார்ப்பனர்களின் மதிப்புகளிலிருந்தும் அரசியல் புரட்டுகளிளிருந்தும் விடுதலை அடைய முடியும். ஆதலால் நாம் எந்த வகையிலும் ஆந்திர தேசத்தவரை பின்பற்றுவது மறுபடியும் நம்மை படுகுழியில் கொண்டுபோய் தள்ளும்” என தமிழர்களை, தமிழ்நாட்டுத் தலைவர்களை எச்சரிக்கிறார்.

பிறகு 1956 ஆம் ஆண்டு மீண்டும் எழுதுகிறார்  “ பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்து நாட்டு பிரிவினையில் எனக்கு கவலையில்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும் மலையாளமும் சீக்கிரம் பிரிந்தால் தேவலாம் என்று எனக்குத் தோன்றியது. அதற்குக் காரணம்  கன்னடியனுக்கோ மலையாளிக்கோ இன பற்றோ, இன சுய மரியாதை உணர்வோ பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். சூத்திரன் என்பது பற்றி இழிவோ வெட்கமோ பெரும்பாலானோருக்குக் கிடையாது எப்படியெனில் அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. மத மூட நம்பிக்கைகளில் மூழ்கிவிட்டவர்கள். மத்திய ஆட்சி என்னும் வடவராட்சிக்கு அவர்கள் நாடு அடிமையாய் இருப்பதுபற்றி அவர்களுக்கு சிறிதும் கவலை இல்லை. ஆகவே இவ்விரு துறைகளிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணம் கொண்டவர்களை நாம் எதிரிகள் என்றே சொல்லலாம். அதுமட்டும் அல்லாமல் அவர்கள் ஏழில் ஒரு பாகஸ்தர்களாக இருந்துகொண்டு தமிழ் நாட்டின் அரசியல் பொருளாதாரம் உத்தியோகம் முதலியவைகளில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைந்துகொண்டு, இவர்கள் கலந்திருப்பதால் நம் நாட்டை தமிழ்நாடு என்று சொல்வதற்குத் தடையாக தடுத்தாண்டு கொண்டிருக்கிறார்கள். இதை நான் ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக்கொண்டே வந்திருக்கிறேன். இவர்கள் சீக்கிரம் ஒழியட்டும் என்றே கருதி வந்தேன் அந்த வகையில் நல்ல சம்பவமாக பிரிய  நேர்ந்து விட்டார்கள்.  ஆதலால் இந்த பிரிவினையை நான் ஆதரிக்கிறேன்”  இவ்வாறு மொழி வாரி மாநிலங்களாக பிரிந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறார் பெரியார். இவரைத்தான் திராவிடம் திராவிடம் என்று பேசி தமிழ் நாட்டில் அன்னியர் ஆதிக்கத்தை உண்டாக்கிவிட்டார் என்று குற்றம் சாற்றுகின்றனர்.

இவர்களிடம் நான் கேட்கிறேன்  பெரியார் பொதுவாழ்விற்கு வந்த பிறகுதான் கன்னடர்களும் மலையாளிகளும் தெலுங்கர்களும் தமிழ் நாட்டிற்கு வந்தார்களா? பெரியார்தான் இவர்களை எல்லோரையும் கூட்டிக்கொண்டு வந்தாரா? அவர்கள் எப்போதும் இங்கேதான் இருந்தார்கள். நம்முடைய தமிழ் மன்னர்களுக்கும் வேறு மன்னர்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. மராட்டியர்கள், நாயக்கர்கள், முகலாயர்கள் என்று பல மன்னர்கள் தமிழ் நாட்டை ஆண்டிருக்கிறார்கள். அப்படி வேற்று மன்னர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தபோதெல்லாம் அவர்கள் தங்கள்ஆட்களை கூட்டிவந்து இங்கே பொறுப்பில் உட்காரவைத்து விடுவார்கள். அப்படி வந்தவர்கள்தான் வேற்று மொழி பேசும் மக்கள். அதனால்தான் வளமான இடங்களில் அவர்கள் வசிக்கிறார்கள். நமது மன்னர்கள் வேறு நாடுகளைப் பிடித்தபோது இவ்வாறு குடியேற்றங்கள் எதையும் நிகழ்த்தவில்லை. அந்த நாட்டு மன்னனையே ஆட்சியில் இருக்க அனுமதித்தார்கள். அவன் வருடத்திற்கு ஒருமுறை இம்மன்னன் பிறந்தநாள் அன்று வந்து வணங்கி திரைகட்டி சென்றால் போதும் என்றே எண்ணினார்கள். தமிழர்களும் பிற தேசங்களுக்கு சென்றார்கள் ஆனால் கூலிகளாக சென்றார்கள் ஆட்சியாளர்களாக இல்லை.

dravidar_ariyar_unnai

பெரியார் குடிஅரசில் எழுதியதோடு நின்றுவிடாமல் 26.10.1956 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் மத்திய குழுவைக் கூட்டி “வடநாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து முழு சுதந்திரத்துடன் விலக வேண்டும் எனும் முயற்சிக்கு ஒத்துழைக்க இஷ்டப்படாத ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக  நாடுகள் திராவிட நாட்டிலிருந்து விலக்கமடைந்து விட்டதற்கு இக்கமிட்டி மகிழ்ச்சி அடைவதோடு, இனி தமிழ்நாடு முழு சுயேட்சை விடுதலைக்கு அதிதீவிரமாக பாடுபட வேண்டியதென இக்கமிட்டி தீர்மானிக்கிறது” என்று தீர்மானம் இயற்றுகின்றார்.

பெரியார் மீதான இன்னொரு குற்ற்றச்சாட்டு.  அவர் இனவாதி என்கிறார்கள். பெரியார் பார்ப்பனர்களே கூடாது என்றார் என்கிறார்கள். தவறு, பெரியார் கூறினாலும் தவறுதான். இவர்களெல்லாம் பெரியார் பார்ப்பனர்களைபற்றி என்ன வரையறை வைத்திருந்தார் என்று படிக்காமல் பேசுகிறார்கள் என்றுதான் கூறுவேன். பார்ப்பனர் ஒருவர் வந்து நானும் திராவிடன் என்று சொன்னால் நமக்கென்ன சிக்கல் என்று சொல்கிறார். அவரிடம் சில கேள்விகளை மட்டும் கேட்பேன் என்கிறார். உனக்கேன் முதுகில் பூணூல்? உனக்கேன் தலையில் உச்சிக்குடுமி? என்று கேட்பேன். இரண்டையும் மறுத்தால்,எடுத்துவிட்டால் எனக்கென்ன சிக்கல்? அதற்குப் பிறகு உனக்கு குறள் உயர்ந்ததா கீதை உயர்ந்ததா? எனக் கேட்பேன். குறள் உயர்ந்ததா, வேதம் உயர்ந்ததா? எனக் கேட்பேன். தமிழ் உயர்ந்ததா, சமஸ்கிருதம் உயர்ந்ததா? எனக்கேட்பேன். அவன் குறள்தான் உயர்ந்தது, தமிழ்தான் உயர்ந்தது என ஒப்புக்கொண்டால் எனக்கென்ன ஆட்சேபனை எனக் கூறுகிறார். எல்லோரையும் ஒன்றாக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கமே தவிர ஏதாவது ஒரு காரணம் கூறி ஒருவரை விலக்கி வைப்பது என் நோக்கம் அல்ல. ஜன சமூகம் ஒன்றாக இருக்க வேண்டும்; அதற்குத் தடையாக இருக்கும் பார்ப்பனர்தான் என் எதிரி என்கிறார். அதை அவர்கள் விட்டுவிட்டு என்னோடு வந்தால் அவர்களை ஏற்றுக்கொள்வதில் எனக்கென்ன தடை என்கிறார்.

திராவிடர் என்ற சொல்லை ஒரு குறியீட்டு சொல்லாகத்தான் நான் பார்க்கிறேன். ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பொருளை நாம் ஏற்றுகிறோம் அதற்கு இருக்கும் பொருள் வேறாக இருக்கலாம். வகுப்பு அல்லது Class என்றொரு சொல் உள்ளது அதை ஒரு ஆசிரியர் பார்த்தால் ஒரு பொருள்; அதை ஒரு பொதுவுடைமையாளர் பார்த்தால் அதற்கு வேறு பொருள். Subjects என்றொரு பதம் உண்டு பள்ளிகூடத்தில் அதற்கு ஒரு பொருள் அதே சொல் ஆட்சியாளர்களுக்கு தன்னிடம் அடிமைப்பட்டு கிடப்பவர்கள் என்று பொருள். Atom என்றொரு சொல் இருக்கிறது அப்படியென்றால் பிளக்க முடியாதது என்று பொருள். ஆனால் இன்று அதைப்பிளக்க முடியும் என்று கண்டுபிடித்து விட்டார்கள் ஆனால் அதை இன்னும் Atom என்றுதான் அழைக்கிறோம். ஏன்? அதைத்தான் பிளக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டாயிற்றே?அது அந்த பொருளுக்கு இந்த சொல்லைப் பொருத்தி, ஏற்றி நீண்ட காலம் ஆகிவிட்டது. “திராவிடர்” என்ற சொல்லில் பெரியார் ஏற்றி இருக்கிற பொருள் “சாதீயத்திற்கு, இந்து மதத்திற்கு, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரானவர்கள்” என்பதேயாகும்.

சுயமரியாதை திருமணம் என்பதை பெரியார் அறிமுகப்படுத்தினார். பார்ப்பன  புரோகித விலக்கு, புரியாத வடமொழி விலக்கு, அறியாத சடங்குகள் விலக்கு, பெண்ணடிமை விலக்கு என்பதெல்லாம் சேர்த்துதான் சுயமரியாதை திருமணம். பெரியாருடன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்ற சைவர்கள் போராட்டம் முடிந்தவுடன் 1939 ஆம் ஆண்டு ஜுலை மாதம் சென்னையில் தமிழர் திருமண மாநாடு கூட்டினார்கள் அங்கு தமிழ் திருமண முறை என்று ஒன்றை அறிமுகப்படுத்துகிறார்கள். பொதுவாக தமிழர்கள் என்பதில் நாம் வைத்திருக்கும் பொருள் என்னவென்றால் வெள்ளாள மனப்பான்மை உடையவர்கள், அந்த உடை, அந்த உணவு உண்பவர்கள் என்பதுதான். யார் தமிழர்? உங்களுடைய அடையாளமெல்லாம் யாரைக் குறிக்கிறது? வேட்டிதான் தமிழர் உடையென்றால் இன்றைக்கு கிராமத்தில் யாரும் வெள்ளை வேட்டி அணிவதில்லை லுங்கிதான் அணிகிறார்கள். லுங்கி இப்போது வந்திருக்கலாம் அதுதான் அவர்களுக்கு வசதியாக உள்ளது. இப்போது அவன் தமிழனா, இஸ்லாமியனா? தவிலும் நாதஸ்வரமும்தான் மங்கள இசை அப்படியென்றால் பறை என்ன இசை? இவர்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அதுதான் தமிழ் உணவு. இதையெல்லாம் நாம் உடைத்தெறிந்து,  உழைக்கும் மக்கள் என்ன உண்கிறார்களோ அதுதான் நம் உணவு, – அவர்கள் என்ன உடுத்துகிறார்களோ அதுதான் நம் உடை – அவர்கள் இசைதான் நம் இசை என்று ஏற்றுக்கொள்கிற மனப்பான்மை இல்லாதவர்கள்.

15 (1)

அவர்கள் சொன்ன தமிழ் முறைத்திருமணம் என்னவென்றால் வடமொழிக்கு பதில் தமிழ், புரோகிதருக்கு பதிலாக சைவர்கள் இருப்பார்கள் அவ்வளவுதான். அதில் சாதி மறுப்போ, பெண்ணடிமை ஒழிப்போ, மூட நம்பிக்கை எதிர்ப்போ எதுவும் இல்லை. இவ்வளவுதான் தமிழ் முறை திருமணம். இதை பெரியார் எதிர்த்திருக்கிறார். அதைப் பிடித்துக்கொண்டு பெரியார் தமிழ் திருமணத்தை எதிர்த்தார் அதை இழிவாகச் சொன்னார் என்று இப்போது விமர்சிக்கின்றனர்.  இப்படி விமர்சிப்பவர்களுக்கு பின்னால் இருக்கக்கூடிய மனப்பான்மையை புரிந்துகொள்ளுங்கள் என்பதுதான் என் வேண்டுகோள். 1960 ஆம் ஆண்டு ஐநா மன்றத்தில் அரசியல் உரிமைகளை பற்றிய ஒரு அறிக்கை வெளியிடப்படிருக்கிறது. அதனுடைய முதல் கூறு “ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தன்னுடைய தேசிய இனத்தை மாற்றிக்கொள்கிற உரிமை உண்டு” என்பதுதான். இந்த தாய்க்கும் தகப்பனுக்கும் பிறந்தவன்தான் இந்த தேசிய இனத்தை சார்ந்தவன் என்றிருந்தால்  எப்படி நான் எனது தேசிய இனத்தை மாற்றிக்கொள்வது? தேசிய இனம் என்பதற்கான இன்றைய வரையறை என்ன?

காந்தியை மகாத்மா என்றழைக்காமல் காந்தி என்றே அழைத்தவர்கள் அம்பேத்கர், ஜின்னா மற்றும் பெரியார் மூன்று பேர் மட்டும்தான். இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் அரசு இந்தியர்களை ஈடுபடுத்துகிறது. காங்கிரசின் அனுமதி இல்லாமல் எப்படி இந்தியர்களை ஈடுபடுத்தலாம்? இங்கிலாந்தின் பெருமையைக் காப்பதற்காக என்றார் சர்ச்சில்;அதற்கு இந்தியர்கள் ஏன் போரிட வேண்டும்? என்று காந்தி அறிக்கை விடுகிறார். எப்போதும் காந்தியை எதிர்க்கும் அம்பேத்கர் “நான் காந்தியின் அறிக்கையை வரவேற்கிறேன்” என்கிறார். கூடவே காந்தியாரே உங்களிடமும் எனக்கொரு கேள்வி உள்ளது “இந்திய விடுதலை போரில் எங்கள் மக்களை ஈடுபட வேண்டும் என்று அழைக்கிறீர்களே நாங்கள் போராடி இந்திய விடுதலையை அடைந்தபின் எங்களுக்கென்ன லாபம்? என்று கேட்கிறார். விடுதலைக்குப் பின்னால் இந்திய சமூக படிநிலையில் எங்களின் நிலை என்னவாக இருக்கும் என்று சொல்லுங்கள் பிறகு நாங்கள் இந்திய விடுதலையை ஆதரிப்பதா வேண்டாமா என்று கூறுகிறோம் என்று சொல்கிறார். இதே கேள்வியோடுதான் தமிழ்நாடு விடுதலையைப் பெரியார் பேசினார். வெறும் அரசியல் விடுதலை மட்டும் அல்ல. அண்டை மாநிலங்களோடு உள்ள பிரச்சனைகளைப் பற்றி பேசும்போது இதற்கு பெரிதும் காரணம் மத்திய அரசுதான் என்பதை நாம் காணத் தவறிவிடுகிறோம் என்கிறார்.

பெரியாரை புரிந்துகொள்ளாமல் எங்கோ படித்ததையும் கேட்டதையும் வைத்துகொண்டு செய்கிற விமர்சனம் தவறானது என்றும் ஏதேனும் குறை பிழை இருக்கிறதென்று சொன்னால் அதை திருத்திக்கொள்ள வேண்டும். பெரியார் அதற்குத் தயாராக இருந்தார் அப்படிச்சொல்ல வேண்டும் என்று மற்றவர்களை கேட்டுகொண்டார். புத்தருக்கு பிறகு பெரியார்தான் சொன்னார். நம் கருத்துக்களை விவாதிக்கிறபோதுதான் அதிலுள்ள தவறுகளை திருத்திக்கொள்ள முடியும். 1971 ஆம் ஆண்டு சேலம் மூட நம்பிக்கை மாநாட்டின்போது ஜி.டி.நாயுடு பேசியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பெரியார் கதர் கடையைத் திறப்பதற்காக சென்றபோது  ஜி.டி.நாயுடுவின் வீட்டில் தங்கியிருக்கிறார். காங்கிரஸில் இருந்து வெளியே வந்திருந்தாலும் கதர் மேல் அவருக்கு ஈடுபாடு இருந்த காலம் அது. இரவு இருவருக்கும் விவாதம்.கதர் சரியானதா தவறானதா என்று. பொருளாதார அடிப்படையிலும் சரி எந்த அடிப்படையிலும் சரி கதர் எந்த அடிப்படையிலும் சரியானது அல்ல என்று ஜி.டி.நாயுடு நிறுவி விடுகிறார்.

அடுத்த நாள் கதர் கடை திறப்பிற்கு சென்ற பெரியார் “கதர் திட்டம் என்பது காதொடிந்த ஊசிக்கும் பயன்படாத ஒரு திட்டம்” என்று பேசிவிட்டு வருகிறார். அப்படிப்பட்ட கருத்தை கொண்டிருந்தவர்தான் பெரியார். அப்படிப்பட்ட கருத்தைக் கொண்டிருப்பவர்கள்தான் நாங்கள். எனவே சரியான குற்றச்சாட்டுகள் வந்தால் திறனாய்வுகள் வந்தால் மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறோம். பெரியார் முதலில் ஆங்கில வழியில் தான் கல்வி கற்பிக்கப்படவேண்டும் என்றார். 1980 ஆண்டு இறுதியில் திராவிடர் கழகம் தமிழ்தான் பயிற்று மொழியாக இருக்கவேண்டும் என்று அந்த முடிவை மாற்றி அறிவித்துவிட்டது. அப்போதிருந்த சூழலில் பெரியார் அந்த முடிவெடுத்திருக்கலாம் ஆனால் இப்போது கல்வியாளர்களும் உளவியலாளர்களும் தொடக்கப்பள்ளியில் தாய்மொழிக்கல்வியைத்தான் வலியுறுத்துகிறார்கள்; நாங்களும் எங்கள் முடிவை மாற்றிக்கொண்டு விட்டோம். நாங்கள் மாற்றிக்கொள்ள தயாராக இருப்பவர்கள்தான் எனவே நியாயமான குறைகளை நேர்மையான திறனாய்வுகளை வைக்க வேண்டுமே தவிர வெறும் சொற்களை வைத்துக்கொண்டு விதண்டாவாதம் பேச வேண்டாம் என்ற கோரிக்கையோடு இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்த இளந்தமிழகம் இயக்கத்தினருக்கு மீண்டும் நன்றிகளைக் கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

உரை தட்டச்சு – தோழர்.கமலகண்ணன் – இளந்தமிழகம் இயக்கம்

About கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*