Home / அரசியல் / திருவாளர் மோடிக்கு ஒரு பெண்ணின் கடிதம் – 1

திருவாளர் மோடிக்கு ஒரு பெண்ணின் கடிதம் – 1

பிரதம மந்திரி மோடிக்கு,

உங்களுக்குக் கடிதம் எழுதச் சொல்லி சமூகசேவகர் ஒருவர் என்னை வற்புறுத்தியதால் இதை எழுதுகிறேன்… நான் தில்லி நகரத்தில் வசிக்கும் 42 வயது பெண். இசுலாமிய சமயத்தைச் சேர்ந்தவள்.

ரேஷன் அட்டையை வாங்தித் தருவதாகச் சொன்ன நபர்களை நம்பி ஏமாந்து எனது சமய அடையாளத்தைத் துறக்க நேர்ந்த எனது கதையிலிருந்து தொடங்கலாம் என்று நினைக்கிறேன். இஸ்லாமிய சமுதாயத்தில் பிறந்து வளர்ந்து, இஸ்லாமியர் ஒருவரை மணம் புரிந்து வாழ்ந்து வருபவள் நான். நாளுக்கு இரண்டு முறையாவது தொழுபவள். எனக்கு 3 பிள்ளைகள். இருவர் வேலைக்குச் செல்கின்றனர். இருவருமே மூன்றாம் வகுப்பு வரை படித்தவர்கள். மூத்தவனுக்கு வயது 15, இளையவளுக்கு 13. கடைசி மகளையாவது – அவளுக்கு வயது 10 – கல்லூரி வரை படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை. முடியுமா என்று தெரியவில்லை.

பக்கத்தில் பள்ளிக்கூடம் இல்லை. வாரம் ஒரு முறை ஒருவர் வந்து எழுத்தையும் எண்ணையும் கூடவே தொழுகைக்கான வாசகங்களையும் எங்கள் பகுதிப் பிள்ளைகளுக்குக் கற்பிக்கிறார். என் பிள்ளைகளுக்கு உடம்புக்கு சரியில்லை என்றால் நாட்டு வைத்தியம்தான். பக்கத்து வீட்டு (இந்து) அக்காதான் கைமருந்து தருவார். நானும் அவரும் சிநேகிதிகள். பேசுவோம், சண்டையிடுவோம், பசித்தால் ஒருவர் வீட்டில் மற்றவர் கேட்டு வாங்கித் தின்போம். எங்க வீட்டுப் பிள்ளைகள் அவள் வீட்டுப் பிள்ளைகள் என்று வித்தியாசம் பார்ப்பதில்லை. முடிந்த வரைக்கும் பிள்ளைகளைக் கவனிக்கும் பொறுப்பை இருவருமே மேற்கொள்வோம். நான் அணியும் முக்காட்டை அவர் பரிகசிப்பார். கண்களை மூடியும் மூடாமலும் அரை மனதுடன் அவர் செய்யும் பூசையைப் பார்த்து நான் சிரிக்காத நாளில்லை. இப்படி வாழும் எங்களுக்கு அவரவர் மதம் அவ்வப்போது – அதுவும் கணநேரத்துக்கு – நிம்மதியை தருவதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. நாங்கள் எதையும் எதிர்பார்ப்பதுமில்லை.

இப்படி வாழும் எங்களை மதம் மாறச் சொல்வதன் பொருள்தான் என்ன? உங்களுடைய கூட்டத்தார் ரேஷன் கார்ட் வாங்கித் தருவதாகச் சொன்ன போது யாரோ மக்கள் நல பணியாளர்தான் நம்மீது அக்கறை காட்டுகிறார் என்று நினைத்தேன். 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த கலவரத்தில் எனது ரேஷன் அட்டையை இழந்தேன். பிறகு இங்கு வந்து வாழத் தொடங்கிய பின், எனது ஒன்றுவிட்டு அண்ணனின் ரேஷன் கார்டை நம்பி வாழ்ந்தோம்… எங்களுக்கான கார்ட் குறித்து யோசிக்கவில்லை. அண்ணன் இறந்த பிறகுதான் எங்களுக்கான கார்ட் குறித்து யோசிக்கத் தொடங்கினோம்… நீங்களோ தீ வளர்த்து அதன் முன் அமர்ந்து எங்களுக்குப் புரியாத மொழியில் எதையோ சொல்லி, கடைசியில் கார்டையும் தரவில்லை … தயவு செய்து இப்படி எல்லாம் செய்வதை நிறுத்திவிடுங்கள். ஏதோ நாடகம் பார்ப்பது போல இருக்கு – ஆனால் எங்களுக்கு இந்த ஆட்டமும் வேண்டாம், நாங்கள் இதில் பங்கேற்கவும் விரும்பவில்லை.

ஆக்ராவில் நடைபெற்ற மதமாற்றம்

ஆக்ராவில் நடைபெற்ற மதமாற்றம்

 

நானும் சரி, எனது அடுத்த வீட்டு இந்து தோழியும் சரி, நாங்கள் குப்பை சேகரித்துப் பயனுள்ள குப்பையை விற்று வாழ்பவர்கள். யாரும் செய்ய விரும்பாத வேலையைச் செய்பவர்கள். அவள் எஸ்.சி. அவள் நகரத்தில் வாழ்வதால் கொஞ்சம் மரியாதையோடு வாழ முடிகிறது என்று என்னிடம் அடிக்கடி சொல்லுவாள். அவள் பிறந்து வளர்ந்த ஊரில் அவளது சமுதாயத்துப் பெண்கள் சந்திக்கும் தொல்லைகள் பற்றிக் கதைகதையாகச் சொல்லுவாள்… தண்ணீர் குளத்தில் அவர்கள் சமுதாயத்துப் பெண்கள் தண்ணீர் எடுக்கத் தடையாம், அவர்கள் வீட்டு ஆண்கள் பேண்ட் போட்டுக் கொண்டு மிடுக்காக நடந்து செல்வதை ஊரார் பொறுத்துக் கொள்ள மாட்டார்களாம்… எஸ்.சி பெண் பிள்ளை படித்துவிட்டால் ஊரில் யாருக்கும் பிடிப்பதில்லையாம். அவளை எப்படியாவது அவமானப் படுத்தி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி… இப்படிச் செய்ததில் அவளுடைய தெருவைச் சேர்ந்த 2 பிள்ளைகள் தற்கொலை செய்து கொண்டார்களாம். இதையெல்லாம் மீறி அவள் தனது மகள்களைப் படிக்க வைத்திருக்கிறாள் – ஆஸ்டலில் படிக்கிறார்கள். அவர்களை ஆஸ்டலுக்கு அனுப்பிய கையோடு அவளும் அவளுடைய கணவரும் நகரத்துக்கு வந்து விட்டார்கள்… அவருக்குப் பழைய சாமான்களை விற்கும் தொழில்…

இவர்களுக்கு இவர்கள் சார்ந்த மதம் மன நிம்மதி அளிக்கலாம், ஆனால் இவர்களை மனிதர்களாக நடத்தச் சொல்லி பிற இந்துக்களை வற்புறுத்துவதில்லையே… ஏன் நீங்கள் கூட இது பற்றி ஏதும் சொல்வதில்லை. ஊர் சுத்தமாக இருக்க வேண்டும் என்கிறீர்கள். ஆனால் சுத்தம் செய்பவர்கள், குப்பையைக் கிளறி பயனுள்ளதை எடுத்து மீண்டும் உபயோகத்துக்கான பொருளாக அதை ஆக்க வேலை செய்பவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்துப் பேசுவதில்லை. சுத்தம் செய்வது என்பது சாதி தொழில் என்று எனது மாமியார் கூறுவார். சாதி தொழில் செய்ய விரும்பாதுதான் நமது முன்னோர்கள் மதம் மாறினார்கள் என்பார் – எது எப்படியோ, நீங்கள் சாதியமைப்பை குறித்தோ அதை விட்டு நீங்கி வாழ நினைப்பவர் பற்றியோ பேசுவதில்லை.

குறிப்பாகச் சாதி அமைப்பில் பெண்கள் படும்பாடு குறித்துப் பேசுவதில்லை. அன்று நான் தொலைக்காட்சியில் ஒரு படம் பார்த்தேன்… சாதி விட்டும் மதம் விட்டும் திருமணம் செய்து கொண்டவர்கள் பற்றிய படம். நிறையப் பேர்கள் பேசினார்கள். பெண்கள் பேசும் போதுதான் எனக்குப் அது புரிந்தது – பெண்கள் சாதியை விட்டு விலகி பிடித்தவரை திருமணம் செய்து கொண்டால், கொலை செய்யப்படுவார்கள் என்று. இது மட்டுமல்ல. படித்துவிட்டு சொந்த கால்களில் நிற்க நினைத்தாலோ, காதலித்தாலோ, திருமணம் வேண்டாம் என்று இருந்தாலோ கூடப் பிரச்சனை. இந்நிலை எங்கள் சமுதாயத்திலும் உண்டு. பெண்கள் என்றால் துச்சம்தான். நாங்கள் என்னதான் சண்டையிட்டு மரியாதையாக வாழ நினைத்தாலும் …என்ன வித்தியாசம் என்றால் நாங்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளில் எங்கள், அதாவது பெண்கள் பிரச்சனை குறித்துப் பேச யாருக்கும் நேரமும் இல்லை, பேச எங்களுக்குக் காலமும் சரியாக வாய்ப்பதில்லை.

download

ஒரு விதத்தில் நீங்களும் நீங்கள் சார்ந்திருக்கும் கட்சிகளும்தான் இதற்குக் காரணம் – நாங்கள் இந்தத் தில்லி நகரத்தில் வாழ வந்ததற்கு முன் மும்பையில் வசித்தோம், நீங்கள் பாபர் மசூதியை இடித்த நாட்களில் எங்களுடைய வாழ்க்கையும் இடிந்து போயிற்று. எனது அம்மா, அப்பா, சகோதரர்கள் யாரும் இன்று உயிரோடு இல்லை. உறவு என்று சொல்லிக் கொள்ளப் பாட்டி, அண்மைக்காலம் வரை உயிரோடு இருந்த ஒன்றுவிட்ட அண்ணன்…இவர்கள் மட்டுமே. என் கணவருக்கும் யாருமில்லை. என்னை நேசித்த மாமியாரும் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். கொல்லப்பட்டுக் கொளுத்தப்பட்டார்கள்.

எல்லாவறையும் இழப்பதற்குமுன் மும்பையிலுள்ள இசுலாமிய பெண்களுக்கான தையல் மையத்தில் நான் வேலை செய்து வந்தேன். அங்கு வேலைப் பார்த்த என்னைப் போன்ற பெண்கள் நிறையப் பேசுவோம் – எங்களுடைய கனவுகள், காதல்கள், குடும்பம், எங்களுக்குப் பிடித்த சினிமாக்கள்… கூடவே எங்களுக்கான உரிமைகள் பற்றியும் சிலர் பேசுவர், எங்களுடைய மதம் அதற்கு எப்படி இடமளிக்கிறது, எப்படி நாங்கள் சமமான நீதியான வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டுமே நல்ல இசுலாமியர்களாக இருக்க முடியும்… ஆனால் மசூதி இடிக்கப்பட்டு, எங்கள் குடும்பங்கள் அழிக்கப்பட்ட பின்னணியில் நாங்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதி மறுப்பு, படிக்க, வேலைக்குச் செல்ல தடைகள்… பயம், எங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால்… நாங்கள் “கெட்டு”ப் போய்விட்டால்… இப்படியான நிலைமையை நாங்கள் கடந்து வருவதற்கு முன்னர்த் தொடர்ந்து அச்சுறுத்தல்கள்…மீண்டும் கலவரங்கள்… வழக்குகள், அதற்கான செலவு…

நீங்கள் முதலமைச்சராக இருந்த குஜராத்தில்தான் மிக மோசமான சம்பவங்கள் நடந்ததென்று சொல்கிறார்கள்… நடக்கக்கூடாததெல்லாம் நடந்ததாம் – நிறைமாத இசுலாமிய கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றிலிருந்து குழந்தை வெட்டி எடுக்கப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டதாம். ஆயிரமாயிரம் இசுலாமிய பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனராம், கோரமான வகையில்… நான் அப்போது தில்லி நகரத்தின் கோடியில் உள்ள குடிசைப் பகுதியில் வாழ்ந்து வந்தேன். மும்பையிலிருந்து வந்து 2 ஆண்டுகள் ஆகியிருந்தன. சிலபல செய்திகள் என்னை வந்தடையும். ஆனால் நான் அச்சமயம் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை – சித்தப்பிரமை பிடித்தவள் போல் இருந்தேன். என் வேலை, குடும்பம்… அன்றாட வாழ்க்கையைக் கடந்த எதையும் கண்டு பயந்த காலம் அது… தற்சமயம் அப்படியில்லை… எனக்குச் சில விஷயங்கள் புரிபட்டுவிட்டன.

இப்படியெல்லாம் நடந்த ஊரின் முதலைம்மசராக இருந்த நீங்கள் – அன்று ஏன் ராஜிநாமா செய்யவில்லை? நடந்து முடிந்த வன்முறை நிகழ்வுகள் குறித்து உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா? உங்களைப் பற்றி யாரும் எதுவும் பேசக்கூடாது என்று உங்கள் கட்சித் தலைவர் மிரட்டுகிறார் – அப்படியென்றால் நடந்துமுடிந்த சம்பவங்களில், குறிப்பாகப் பெண்களுக்கு நேர்ந்த கதி என்பதைப் பொருத்தமட்டில் உங்களுடைய பொறுப்பு எத்தகையதாக இருந்தது என்பதை நாங்கள் எவ்வாறு அறிவது? குறிப்பாக நீங்கள் இது பற்றியெல்லாம் பேசாத போது? நடந்த குற்றங்களுக்குத் தார்மீக பொறுப்பு ஏற்காதபோது…

ஒரு பெண் என்ற வகையில் எனக்கு வேண்டியது இதுதான் – நான் உழைக்கத் தயாராக இருக்கிறேன். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வேண்டும். மரியாதை வேண்டும். பொதுவில் பயமின்றிப் புழங்க பாதுகாப்பு வேண்டும். என் கணவர் அவ்வப்போது என்னைக் கடிந்து கொண்டாலும் அவ்வளவு மோசமானவர் அல்ல. ஆனால் அவருடைய சம்பளத்தில் பாதிக்கு மேல் கடனுக்கு வட்டி செலுத்துவதில் போய் விடுகிறது. எஞ்சிய பணத்தில் என்னுடைய, குழந்தைகளுடைய சொற்ப வருமானத்தையும் சேர்த்து நாட்களைக் கடத்துகிறோம். அவருடைய வேலைக்கு உத்திரவாதம் வேண்டும். எங்களை அழுத்தும் கந்து வட்டி ஒழிக்கப்பட வேண்டும். எங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும். நீங்கள் வளர்ச்சி, வளர்ச்சி என்று பேசுகிறீர்கள் – ஆனால் உங்கள் கணக்கில் எங்களுடைய தேவைகள் அடங்குமா என்பது எங்களுக்குப் புரியவில்லை.

Organic-Farming-In-India

எங்கள் பக்கத்து வீட்டு அக்காவின் தம்பி அவர்களுடைய சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார். அவர் மாதாமாதம் கொஞ்சம் கோதுமை அனுபுவார் – வீட்டுச் செலவுக்கென்று… ஆனால் இனியும் அது முடியுமா என்று தெரியவில்லை. அவருடைய நிலத்தின் மீது பாலம் கட்டப் போகிறார்கள்… இந்த மாதிரி நாடு முழுவதும் நிலத்தை விழுங்கிய ரோடுகள், பாலங்கள்… என்று அன்று ஒருவர் டிவியில் கவிதை போன்ற மொழியில் சொன்னார்… யாருக்காக இந்த வேகம், வளர்ச்சி, யாருடைய உழைப்பு இதில் செலவாகிறது? யாருக்கு இலாபம்… நீங்கள் வளர்ச்சி, வளர்ச்சி என்று பேசுகையில் இந்தக் கேள்விகளைக் கேட்பதில்லை… காரணம் வளர்ச்சி விழுங்கிய மக்களில் பலர் மிக வறியவர்கள், அவர்களில் சரிபாதிக்கு மேல் பெண்கள்… இவர்களுக்கு வளர்ச்சியால் என்ன பயன்?

“வளர்ந்த” இந்தியாவில்தான் எங்களுக்கு என்ன வாய்த்திருக்கிறது? படிக்க, வேலைப் பார்க்க ஊரைவிட்டு ஊர்ச் செல்வோருக்கு வாழ இடமில்லை, ரோட்டிலும், மேட்டிலும் பெவாழ்க்கை… பெண்களுக்கு இதனால் எத்தனை தொல்லைகள். எங்களைப் போன்ற ஏழைகளுக்கு மட்டும்தான் பிரச்சனை என்று நினைத்தேன்… ஆனால் படித்து வாழ்க்கையில் தன்னை முன்னேற்றிக் கொள்ள வந்த நிர்பயாவுக்கு நேர்ந்த கதி? நான்கூட அச்சமயம் அவளுக்காக விசேஷ “துவா” செய்தேன்.

எனக்குச் சொல்ல நிறைய இருக்கிறது – நீங்கள் காது கொடுத்து கேட்பீர்களா என்று தெரியவில்லை. உங்களிடம் மனம் விட்டுப் பேச எனக்குத் தயக்கம்தான். ஆனால் தேர்தலில் வெற்றிபெற்று நீங்கள் பிரதம மந்திரி ஆன பிறகு நீங்கள் பொறுப்பில் இருக்கும் பதவியை முன்னிட்டு உங்களிடம் பேச வேண்டும் என்று அந்தச் சமூகச் சேவகர் கூறியதால் இதை எழுதுகிறேன். நான் சொல்ல அவர் எழுதிய இந்தக் கடிதத்தை என்னைப் போன்ற பெண்கள், மாண்புடன், சுய-மரியாதையுடன் அமைதியாகவும் எல்லோருடன் நட்புணர்வுடன் வாழ நினைக்கும் பல இந்து, இசுலாமிய, கிறித்தவ ஏன் நாத்திக பெண்கள் எழுதும் கடிதமாகக் கொள்ளவும்.

இப்படிக்கு
ஒரு சாதாரணப் பெண்

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*