Home / அரசியல் / பெரியார் பேசிய தமிழ்த் தேசியம் – தோழர் தமிழேந்தி

பெரியார் பேசிய தமிழ்த் தேசியம் – தோழர் தமிழேந்தி

பெரியாரின் 136ஆம் பிறந்த நாளை முன்னிட்டு இளந்தமிழகம் இயக்கம் 2014 செப்டெம்பர் 20ஆம் நாள் சென்னை எழும்பூரில் ஒழுங்கு செய்த கருத்தரங்கக் கூட்டத்தில் “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” எனும் தலைப்பில் தோழர்.தமிழேந்தி ஆற்றிய கருத்துரை

பெரியாரின் பிறந்த நாள், கடந்த 17ஆம் நாள் தமிழகமெங்கும் நம்முடைய தமிழ்க் குடிமக்களால் நன்கு சிறப்போடு கொண்டாடப்பட்டது. இங்கும் பெரியாரைப் பற்றிய ஒரு புரிதலுக்கு உந்து விசையாக, மேலும் பெரியாரியத்தைச் செழுமைப்படுத்துகிற தன்மையிலே இந்தக் கருத்தரங்கிற்குத் தோழர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இங்கு எனக்கு முன்னாலே அறிமுகவுரை நிகழ்த்திய தோழர் கூட இன்று பெரியாரியம் தமிழ்த்தேசியத்துக்கு முரணானது அல்லது அரணானது என்கிற இரு வகையான மோதல் போக்குகள் இருக்கின்றன என்று குறிப்பிட்டார்கள். தோற்றத்தில் அப்படித் தான் இருக்கிறது. ஆனாலும் இந்தத் தமிழ்ச் சமுகத்தை ஒரு படியேனும் முன்னேற்றுகிற தன்மையிலே தான், பெரியாருடைய அணுகுமுறைகள் இருந்தன. பெரியாரின் ஆக்கங்களை அல்லது பெரியாரின் குறைகளை எடுத்துப் பேசுகிற எல்லோருமே நம்முடைய தமிழகம் சாதி ஒழிந்த, மத வேறுபாடற்ற, பெண்ணின விடுதலையை முன் நிறுத்துகிற,எல்லோர்க்கும் எல்லாம் என்கிற ஒரு கருத்தியலை வளர்த்தெடுக்கின்ற நோக்கத்தில்தான் இருக்க வேண்டும். அங்கனமே, இக்கருத்தரங்கமும் அமைய வேண்டும் என்ற என் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்த்தேசியம் வேறு திராவிடம் வேறு என்ற ஒரு கருத்தை இங்கிருக்கும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் முன் வைக்கிறார்கள். திராவிடம் என்று சொல்லும் போது பெண்விடுதலை, சாதி ஒழிப்பு, மத ஒழிப்பு, மூடநம்பிக்கைக் கருத்தியல் ஒழிப்பு என்று வரையறுக்கிறார்கள்.

திராவிடம் என்றாலும், தமிழியம் என்றாலும் சாரத்தில் ஒன்றாகத்தான் நான் கருதுகிறேன். பெண்ணிய விடுதலை, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, மத ஒழிப்பு, ஆண்டான் அடிமை என்கிற ஒரு பொருளியல் நிகர்மைக் கோட்பாட்டை முன்னெடுப்பதாகத்தான், (திராவிடமாக இருந்தாலும் சரி, தமிழ்த் தேசியமாக இருந்தாலும் சரி) இருக்க வேண்டும். இன்று தமிழகத்தில் வாக்கு அரசியல் நடத்தும் எல்லா அரசியல் கட்சிகளும் தம் கட்சியின் பெயரில் திராவிடத்தை வைத்திருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், ஏன் விஜயகாந்த் கூடத் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் என்றுதான் வைத்திருக்கிறார். இவர்களுக்கும் திராவிடத்துக்கும் என்ன தொடர்பு?

மேலே சொன்னக் கட்சிகளுள், திமுகவுக்கு மட்டும் கொஞ்சம் திராவிட வாசனை மிச்சமிருக்கிறது. எப்போதேனும் இராமனைப் பொறியாளரா என்று கேட்பார்கள், நெற்றிப் பொட்டைப் பார்த்து குருதிக்கறையா என்று கேட்பார்கள்? ஆனால் அவர்கள் இல்லத்தாரே, பொட்டும் குங்குமமும் சூடியிருப்பதைக் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆகவே அவ்வப்பொழுது அவர்களது சுயமரியாதை உணர்ச்சி விழித்தெழும்.

இன்று அரசு விழாக்களில் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் உயிரான வரிகளையே எடுத்தவர்கள் இந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தாம்.

கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்
உன்னுதிரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும்
ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சிதையா உன்
சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே !

மேலே சொன்ன வரிகளில், “ஆரியம் போல உலக வழக்கு அழிந்தொழிந்து” என்ற உயிரான அந்த வரிகளையே நீக்கி விட்டு, வாக்கு அரசியலுக்காக மட்டும் இந்தியை எதிர்ப்பதும், வடமொழியை எதிர்ப்பதும் எப்படி அடித்தட்டு மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்யும்? இக்கேள்வியை, திராவிடக் கட்சிகளிடம் கேட்டால் விடை கிடைக்காது.

இன்றைக்குத் தமிழ்த்தேசியம் பேசுவோரிடம் எமக்குப் பகை ஒன்றும் கிடையாது. ஆனால் இன்று மத்தியில் அமைந்திருக்கும் மதவெறி, பிற்போக்கு ஆர்.எஸ்.எஸ் பா.ச.கட்சியினுடைய பாசிசத்தை எதிர்க்கிற ஒரு மிகப்பெரிய கருவியை நமக்குக் கையளித்துச் சென்றவர் பெரியார். இந்து மதவாத எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, பெண்ணடிமைத் தன எதிர்ப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு ஆகிய கருத்தியல் எல்லாவற்றுக்கும் ஒரு கவசமாக, அரணாக இருப்பது பெரியாரியம்தான். ஆனால் “பெரியாரைக் கட்டுடைக்கிறொம், பெரியாரை அம்பலப்படுத்துகின்றோம்” என்று கிளம்பும் தமிழ்த் தேசியவாதிகளின் செயல்பாடுகள் அனைத்துமே, மறைமுகமாக மதவாதிகளுக்கும், சாதி வெறியர்களுக்கும், பிற்போக்குவாதிகளுக்கும் ஆணாதிக்கவாதிகளுக்கும்தான் உதவியாக இருக்கும். பெரியாரை ஓரளவு சரியாகப் புரிந்து கொண்டவர்களின் நிலைப்பாடு இப்படியாகத்தான் இருக்க முடியும். தமிழ்த்தேசியக் கருத்தியல் என்பதைப் பார்ப்பனர்களும் ஏற்றுக்கொள்ள முடியும், கடவுளை ஏற்போரும் ஏற்றுக்கொள்ள முடியும், கடவுள் மறுப்புக் கொண்ட நாத்திகரும் ஏற்றுக்கொள்ள முடியும் என்ற ஒரு கருத்தைத் தமிழ்த் தேசியவாதிகள் முன் வைக்கின்றனர். கடவுளை ஏற்பது என்பது தனிநபரின் விருப்பு வெறுப்புகள் சார்ந்தது. அதில் சிக்கலில்லை. ஆனால் அதே நேரத்தில் கடவுள் நம்பிக்கையானது, அது மதவெறி எதிர்ப்பு அரசியலுக்கும், சாதி ஒழிப்புக்கும், பெண் விடுதலைக்கும், சுரண்டல் எதிர்ப்புக்கும் தடையாக அமைந்துவிடக் கூடாது.

தமிழ் வழித் திருமணமானாலும் சரி, பகுத்தறிவுத் திருமணமானாலும் சரி, தமிழ் மந்திரங்கள் எது வேண்டுமானாலும் ஓதலாம் என்றும் தமிழ்த் தேசியவாதிகள் சொல்கிறார்கள். ஆனால் இந்த மந்திரங்களின் பொருள் என்னவாக இருக்கிறது? அண்மையில், தமிழர் கண்ணோட்டத்தில் ஒரு திருமணத்தில் மாணிக்க வாசகப் பெருமானால் ஓதப்பட்ட வரிகளைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள்.

உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே என்கணவ ராவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையு மிலோமேலோர் எம்பாவாய்”

 என்று அவ்வரிகள் ஓதப்பட்டன. இதன் பொருள் என்ன? கணவனுக்கு அடிமையாய் நின்று ஏவல் செய்வோம் என்று வருகிறது. இது சமத்துவத்திற்கு எதிரானது. ஆனால் இது குறித்து எழுதும் அத்தோழர் “இவ்வரிகள் பெண்ணடிமைத்தனம். இந்த வரிகள் நமக்கு வேண்டாம். ஆனால் இதை எழுதிய மாணிக்க வாசகர் நமக்கு வேண்டும் என்று விளக்கம் அளிக்கிறார். மாணிக்க வாசகர் எப்படிப்பட்டவர்? மாணிக்க வாசகர் ஊழல் செய்தவர். பணம் கொடுத்து நாட்டின் படையணிக்குத் தேவையான குதிரைகளை வாங்கிவர அந்நாட்டு அரசன், மாணிக்க வாசகரைப் பணித்த போது, அவர் குதிரைகளை வாங்கி வராமல், அப்பணத்தைக் கொண்டு கோவில் கட்டினார். இதை எதிர்த்து அரசன் கேட்டபோது, இருக்கும் குதிரைகளையெல்லாம் நரியாக மாற்றினார் மாணிக்க வாசகர் என்று பெரிய புராணம் சொல்கிறது. மேலும் ஊழல், மதவாதம், பெண்ணடிமைத் தனம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகவே பெரிய புராணம் இருக்கிறது.

அக்காலத்தில் சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும், நீதிக்கட்சியும் ஒன்றோடொன்றுத் தொடர்புடையவையாகத்தான் இருந்தன. ஆனால் நீதிக்கட்சி “ராஜா”க்களின் கட்சியாக இருந்தது, பனகல் அரசர் ஒரு தெலுங்கர், டி.எம். நாயர் ஒரு மலையாளி என இன்று இனம் பிரிக்கிறார்கள். ஆனால் மேற்சொன்ன அந்த மூன்று இயக்கங்களும், இப்படிப் பிரித்து அரசியல் செய்யவில்லை. அவர்களின் அரசியல் என்பது, பார்ப்பனப் பிற்போக்கு ஆற்றல்களின் தொங்குச் சதையாக இருந்த காங்கிரசை, அதன் இன்னொரு வடிவமாக இருந்த சுயராச்சியக் கட்சியை எதிர்ப்பதாகத்தான் இருந்தது.
இன்று எதை முற்போக்கு என்கிறோம். பெண் விடுதலையை முற்போக்கு என்கிறோம், கோவில் நிலங்கள் மக்கள் சொத்து, அது பாதுகாக்கப்பட வேண்டியது என்று சொல்கிறோம். ஆதி திராவிடர்கள், தீண்டத்தகாதவர்களாகப் பன்னெடுங்காலமாக நடத்தப்படுகிறார்கள். அவர்கள் கோவிலினுள் நுழையும் உரிமையைப் பெற்றுத் தர வேண்டும் என்று சொல்வோமேயானால் அது முற்போக்கு. ஆணுக்கு இணையானவர்கள் பெண்கள். அத்தகைய பெண்ணினத்தின் ஒரு பகுதியினரை, “ஆண்டவனுக்குத் தொண்டு செய்பவர்கள், தேவர்களுக்கு அடியவர்கள்” என்று பொட்டிக் கட்டி, அடிமைப்படுத்தியது ஒரு நிலமானிய முறை. அறிவுக்குப் பொருந்தாத முறை. இதை எதிர்த்தவர்கள் தான் நீதிக்கட்சியின் முன்னோடியாக இருந்தவர்கள்.

vaguppuvaari_urimai_yen

இன்று இங்கு வந்திருக்கும் பலர் வகுப்புவாரி உரிமையை ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கலாம். ஒரு தொழிலாளிக்கு எப்படித் தொழிற்சங்க உரிமை முதன்மையாக இருக்க வேண்டும் என்று வாதிடுகிறோமோ அப்படித்தான் இடப்பங்கீடு உரிமையும். எல்லா மட்டங்களிலும் சமமாகும் வரை, காலங்காலமாகச் சாதியின் பெயரால், நசுக்கப்பட்டு, உரிமைகளை இழந்து வாழும் மக்களுக்கு இடப்பங்கீடு, ஓர் இடைக்கால ஏற்பாடாக இருக்க வேண்டும் என்று கோருவது சமூக நீதிக் கொள்கை. நீதிக்கட்சியின் பனகல் அரசராக இருந்தாலும், டி.எம். நாயராக இருந்தாலும், தியாகராயராக இருந்தாலும், இத்தகைய மக்கள் நலக் கொள்கைகளையே முன்னிறுத்தினார்கள். அவர்கள் முற்போக்குவாதிகள். இன்று நம் கண்ணோட்டத்தில் அவர்கள் தெளிவானக் கொள்கைப் புரிதல்கள் இல்லாதவர்களாக இருந்தாலும் கூட, அன்று பார்ப்பனப் பண்ணையாக இருந்த காலக் கட்டத்திலேயே, படிப்பும் பதவியும் உழைக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்கு வந்து சேர வேண்டும் என்று பாடுபட்டத் தலைவர்கள் அவர்கள். அதற்காகத் தனது சொத்துச் சுகங்களை இழந்தார்கள். 1920 முதல் 1936 வரை நீதிக்கட்சி தமிழகத்தை ஆண்டது. அப்போது தியாகராயரைப் பதவியேற்க அழைத்த போது, “என் சார்பாக வேறொருவர் பதவியேற்கட்டும்” என்று மறுத்துவிட்டார். ஆகவே நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும் இறுதிப் பொருளில் ஒற்றுமை கொண்டவைதான். உழைப்பாளிகளுக்கு, பெண்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நலம் செய்தவை இவ்வியக்கங்கள். 1921 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி உரிமை நடைமுறைத்தப்படவில்லை. முத்தையா முதலியார் ஆட்சிக்கு வந்த பிறகே வகுப்புவாரி ஆணையம் நடைமுறைக்கு வந்தது. இலவசக் கல்வியும் நீதிக்கட்சியின் முயற்சியால்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. காமராசருக்கு முன்னரே, பள்ளிக்குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கப்பட்டதும் நீதிக்கட்சியின் ஆட்சியின் போதுதான்.

அது போலப் பெண்களுக்கு இந்தியாவிலேயே, சென்னை மாகாணத்தில் தான் முதன்முறையாக வாக்குரிமை வழங்கப்பட்டது. இது நடந்ததும் நீதிக்கட்சியின் ஆட்சியின் கீழ்தான். ஒரு பெண் சட்ட மேலவையினுடைய துணைத்தலைவராக வருவதற்கான வாய்ப்பை டாக்டர் முத்துலட்சுமிக்கு வழங்கியதும் திராவிட ஆட்சியின் கீழ்தான். பெண்களின் ஒரு பிரிவாக, தேவதாசி என்று பட்டம் கட்டப்பட்ட பெண்களுக்கு உரிமை வந்துசேர வேண்டும். அவர்களும் மற்றவர்களைப் போல மனிதர்கள்தான், கோவில் அடிமைகளாய், தேவதாசிகளாக அவர்கள் இருக்கக்கூடாது என்ற கோரிக்கைக்குச் சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பன ஆதிக்கச் சாதியினரால் கடுமையான எதிர்ப்பு வந்தது. மிகக் கடுமையான விவாதங்களுக்குப் பிறகு தேவதாசி ஒழிப்புச் சட்டத்தைத் தமிழ் மாநிலத்தில் நிறைவேற்றியது நீதிக் கட்சி ஆட்சி, திராவிடர் ஆட்சி. கோவில் என்பது பார்ப்பனர்களின் உயர்சாதிக்காரர்களின் பண்ணையமாக இருந்த காலத்தில், கோவில் சொத்துக்கள் எல்லாம் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும், அதன் வருமானமெல்லாம் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டுமென்றக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. பனகல் அரசர் ஆட்சியில்தான் இந்து அறநிலையச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இவையெல்லாம் சாதாரணச் செய்திகள் அல்ல தோழர்களே.
ஆனால் அன்று பார்ப்பனியம் கொடிகட்டிப் பறந்த காலம். தாழ்த்தப்பட்ட மக்களை “பறையன்” என்றும் “பள்ளன்” என்றுமே விளிக்கப்பட்ட அக்காலக் கட்டத்தில், அவர்களை அப்படி அழைக்கக் கூடாது. தாழ்த்தப்பட்ட மக்களை “ஆதி திராவிடர்கள்” என்றே அழைக்க வேண்டும் என இரட்டை மலை சீனிவாசன் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார். அதையும் ஏற்க மறுக்கிறார்கள். பேருந்து நிலையம், மருத்துவமனை உள்ளிட்டப் பொது இடங்களில், ஆதி திராவிடர்கள் புழங்கக் கூடாது என்று தடை இருந்த காலத்தில், அதை அகற்ற திராவிட இயக்கத்தோடு, நீதிக்கட்சியோடு இரண்டறக்கலந்திருந்த இரட்டை மலை சீனிவாசன், சகஜானந்தர், முனுசாமி, எல்.சி. குருசாமி போன்றவர்கள் போராடினார்கள். தாழ்த்தப்பட்ட மக்களைப் புழங்க விடாதவர்களுக்கு நூறு ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டது.

தனியார் பேருந்துகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஏற உரிமை மறுக்கப்பட்டிருந்த போது, அப்போது இராமநாதபுர மாவட்டப்பொறுப்பில் இருந்த ஊ.பு.அ. செளந்தரப் பாண்டியன், தனியார் பேருந்துகளில் தாழ்த்தப்பட்ட மக்களை ஏற்க மறுத்தால், தனியார் பேருந்து முதலாளிகளின் உரிமம் நீக்கப்படும் என்று சுற்றறிக்கை அனுப்பினார். இவை அனைத்துமே சமூக நீதியின் பாற்பட்டு, நம் முன்னோடிகள் எடுத்த நடவடிக்கைகள். ஆனால் இன்று பெரியாரிய, சுயமரியாதை, திராவிட இயக்கங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தீமையே செய்தன என வாதிடுகின்றனர்.

இதையெல்லாம் அன்புகூர்ந்து இக்கால இளைஞர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். நீதிக்கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே, தலைப்பாகை அணிந்து, பட்டாடை உடுத்தி, மேதாவிகளாக, உயர் சாதியினராகவே இருந்தனர் என்ற ஒரு கருத்து இங்கு நிலவுகிறது. ஆனால் அவர்கள் தம் கோடிக்கணக்கான சொத்துக்களை மக்களுக்காக இழந்தனர். பொது வாழ்க்கையிலிருந்து விடைபெறும் நேரத்தில், தியாகராயர் ஏழையாக மாறிப் போனார்.

பனகல் அரசர் முதலமைச்சராக இருந்த போதுதான், நிலப்பிரபுக்கள் அல்லாதார் மாநாட்டை நடத்தினார். இதனால் நிலப்புரபுக்கள், பனகல் அரசருக்கு வாக்கு அளிக்காமல் போகும் நிலைமையும் இருந்தது. ஆனால் பதவியில் இல்லாத போதும், கொண்ட கொள்கைக்காக இலட்சியத்திற்காக, பாடுபட்டார் பனகல் அரசர். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் ஐக்கியத்தை முன்னிறுத்தியது தான், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம். இன்று சிதம்பரத்தில் இருக்கும் நந்தனார் பள்ளியைக் கட்ட, சகதானந்தருக்குக் காங்கிரசுக் காலத்தில் இடம் மறுக்கப்பட்டது. ஆனால் நீதிக்கட்சியின் ஆட்சியின் கீழ், அவருக்கு நிலம் ஒதுக்கப்பட்டதோடு, அப்பள்ளியானது அரசு உதவிபெறும் பள்ளியாகவும் ஆக்கப்பட்டது.

இதே போலச் சென்னை நகரில், குருசாமி நடத்திய நான்கு பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதும், பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டுத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்பட்டதும் நீதிக்கட்சியின் ஆட்சியின் கீழ்தான். இன்று இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் ஆதி திராவிடர் நலத்துறை என்ற தனித்துறையின் மூலம் மிகுதியான தாழ்த்தப்பட்ட குழந்தைகள் படிக்கும் உண்டு-உறைவிடப் பள்ளிகள் இருக்கின்றன. இதற்கு வித்திட்டவர்களும் திராவிட இயக்கத்தின் முன்னோடிகள்தான்.
இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல், மேம்போக்காகத் தமிழ்த்தேசியம் என்பது திராவிட தேசியத்துக்கு எதிரானது என்று இன்று கருதுகின்றனர்.

download

தமிழ்த்தேசியர்களிடம் சாதி உணர்வு இருக்கிறதே, என்று வினவினால் சினம் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் யாரை முன்னிறுத்துகின்றனர்? மறைமலை அடிகளாரை முன்னிறுத்துகின்றனர். மறைமலை அடிகளார் மீது எமக்கு மிகுந்த மதிப்பு உண்டு. தமிழ்நாட்டில் தனித்தமிழ் இயக்கம் செழிப்புற வித்திட்டவர். தமிழ், ஆங்கில, வட மொழிகளில் புலமை பொருந்திய அவரை முக்கடல் என்றுகூடச் சொல்லலாம். சுவாமி வேதாசலம் என்ற பெயரை, தூயத் தமிழ்ப்பற்றின் காரணமாக மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டவர். அவர் முன்னெடுத்த தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாகத் தான், சூரிய நாராயணச் சாஸ்திரி “பரிதிமாற் கலைஞராகவும்”, நாராணய சாமி “நெடுஞ்செழியனாகவும்”, இராமய்யா “அன்பழகனாகவும்”, கசேந்திரன் “வேழவேந்தனாகவும்”, சின்னராசு “சிற்றரசாகவும்” வடமொழிக் களைந்த தமிழ்ப் பெயர்களாக மாற்றிக் கொண்டனர். இம்முயற்சிகளுக்கெல்லாம் நாம் மறைமலை அடிகளாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஆனால் மறைமலை அடிகளாரோ, சங்கராச்சாரியார் உள்ளிட்டப் பார்ப்பனர்களுக்கு இணையான, சைவ வேளாளப் பற்றுகொண்டவர். சூத்திரன் சூத்திரனாகத் தான் இருக்க வேண்டும், தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்டவனாகத் தான் இருக்க வேண்டும். அவனுக்குக் கோவிலினுள் நுழைவதற்கான உரிமை இல்லை. அவர்கள் வழிபாடுவதற்கான உரிமை இல்லை என்று பேசுகிறார். அப்பேற்பட்ட மறைமலை அடிகளைத் தான் தமிழ்த்தேசியர்கள் போற்றுகின்றனர்.

எவ்வளவு உயர்ந்த சோப்புப் போட்டு சூத்திரன் குளித்தாலும் அவன் அழுக்குப் போகாது, அவன் கோவிலுக்குள் நுழைந்தால் தீட்டு உன்டாகும் என்று பேசும் சங்கராச்சாரியாரின் பேச்சுக்கு நிகரானது, மறைமலை அடிகளாருடைய பேச்சு. தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலினுள் நுழைவது பற்றி மறைமலை அடிகள் பின்வருமாறுச் சொல்கிறார்.

“இக்காலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் சிலர் கோவில்களுக்குள் போக இடம் பெறுவார்களில்லை. காரணம் அவ்வகுப்பாரிடம் துப்புரவான நடை உடை ஒழுக்கம் இல்லாமையே ஆகும். ஒரு வகுப்பார் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமானால் அவர்களே அதற்காக மிகவும் முயல வேண்டும். பிறகு எவ்வளவு தான் உயர்த்தினாலும் தாமே உயர மாட்டாதவர்கள், உயர்ச்சி அடையக் கூடாது. ஆதலால், தாழ்த்தப்பட்ட வகுப்பார், கொலையால் வரும் புலால் உண்ணலயும், கள் குடியையோ நீக்கி, துப்புரவு ஆடை வாய்ந்தவர்கள் ஆதலுடன், தாழ்ந்த ஒழுக்கத்தில் தாம் நின்ற காலத்து, தமக்கு வழங்கிய தாழ்ந்த சாதிப் பெயர்களை விட்டு, தாம் உயர்சாதி ஒழுக்கத்தை மேற்கொள்வதற்கு ஏற்பப் பாடுபட வேண்டும்.” என்று குறிப்பிடுகிறார் மறைமலை அடிகள்.

தமிழனாகப் பிறந்தவனிடம் சாதி, மத வேற்றுமை இருக்கக் கூடாது என்று பேசாமல், சூத்திரன் சூத்திரனாகத் தான் இருக்க வேண்டும் என்று பேசுகிறார் மறைமலை அடிகள்.
இராமன் ஆரியக்கடவுள், இராவணனன் தமிழ்க் கடவுள் என்ற பார்வை அன்றைய திராவிட இயக்கங்களிடையே இருந்தது. இது குறித்து பாரதிதாசன் கூட,

தென்திசையைப் பார்க்கின்றேன் என் செய்கேன்
என் சிந்தையெல்லாம் செய்கையெல்லாம் பூரிக்குதடடா
அன்றந்த இலங்கைதனை ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழைப்பதித்தோன்”

என்று இராவணனைப் புகழ்ந்துப் பாடியிருக்கிறார். இப்படிப்பட்ட கருத்து நிலவி வந்த காலத்தில்தான், இராமயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று பெரியார் முன் வந்தார். அதை மறைமலை அடிகளும் ஆதரித்தார். ஆனால் ராமாயணத்தில் இருக்கும் அதே அழுக்கும் சாதிப் பீடைகளும் பெரிய புராணத்திலும் இருக்கின்றன. நந்தனைக் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்காதது எது? இதே இந்துச் சைவ மதம்தான் எனப் பெரியார், பெரிய புராணத்தைக் கொளுத்த வந்தபோது, அதைப் பலமாக எதிர்த்தார் மறைமலை அடிகள்.

home

மறைமலை அடிகளும் அவர் சார்ந்திருந்த சைவ வேளாளர் வகுப்பும் அன்றிலிருந்து இன்றுவரை மாறவில்லை. தமிழன் என்கிற பெயரால் நாம் ஒன்று சேர வேண்டாமா? அதை விடுத்து, சாதியத்தைப் பாதுகாப்பவர்களும், மதத்தைப் போற்றுபவர்களும், பெண்ணடிமைத்தனத்தைக் காப்பாற்றுபவர்களும் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர்கள் தான்.

சில நாட்களுக்கு முன்பு நாளேடுகளில் வந்த செய்தி – இராஜஸ்தான் மாநிலத்தில், இரண்டரை வயதான பெண் குழந்தை ஒன்றை, அக்குழந்தையின் பெற்றோரே உயிரோடு எரித்துக் கொன்றிருக்கிறார்கள். அக்குழந்தையானது கடவுள் அவதாரமென்றும், அஃது உயிரோடு வாழ முடியாது, எரித்துக் கொன்றபின் அக்குழந்தைக்குக் கோவிலும் எழுப்பியிருக்கிறார்கள். ஊடகங்களும் இதைச் சென்று படம் பிடித்திருக்கின்றன. இப்படியான பிற்போக்குத் தனங்கள் நாடு முழுதும் மண்டிக்கிடக்கின்றன. உலகிலேயே குழந்தைத் திருமணங்கள் மிகுதியாக நடக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாமிடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் வங்கதேசம் இருக்கிறது. இந்தியாவில் குறிப்பாக, பா.ச.க. ஆளும் இராஜஸ்தான் மாநிலத்தில்தான் இந்தக் குழந்தைத் திருமணங்கள் இன்றும் மிகுதியாக நடக்கின்றன.

ஒப்பீட்டளவில், இந்தியாவில் ஆயிரம் ஆண்களுக்கு, 920 பெண்கள்தான் இருக்கிறார்கள். இராமர் பாலமென்றும் அதை இடிக்கக் கூடாதென்றும், பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்டலாம் என்றும் நீதிமன்றங்களே தீர்ப்பு வழங்குகின்றன. திருப்பதிக்கோவிலில் கடந்த மூன்று மாதத்தில் இறக்கப்பட்ட முடிகளின் விலையே, 13 கோடிக்கு ஏலம் போகின்றது. இப்படியாக மதவாதக் கருத்தியலும், மூடநம்பிக்கையும் இந்த நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் ஒழிந்து, மனிதன் மனிதனாக நடத்தப்பட வேண்டும். சாதி ஒழிப்புக் கருத்தியல் இங்கே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்குப் பாடுபட்ட இயக்கம் பெரியாரிய இயக்கம், பாடுபட்டவர் பெரியார்.

பெரியாரின் சில கருத்துகள் மீது போதாமைகள் இருக்கலாம். குறிப்பாக அவரது மொழிக்கொள்கை இங்கே மிகுதியாக விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகிறது. பெரியார் என்பவர் ஒட்டு மொத்தத் தமிழ்ச்சமூகத்தின் விடுதலைக்குப் பாடுபட்டவர். அந்த வகையில், தடாலடியாக அவர் சில கருத்துகளைச் சொல்லியிருக்கலாம். ஆனால் இன்றைக்கு மதவாதம் தலைதூக்கியிருக்கிற, இக்கட்டான இக்காலக் கட்டத்தில், ஒற்றை அதிகார மையமாகப் பா.ச.க. அரசுப் பொறுப்பேற்றிருக்கிற வேளையில், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குத் தடையாக இருக்கும் இச்சக்திகளை எதிர்த்துப் போராடவே, அன்று பெரியாரிய இயக்கங்கள் இருந்தன.

தற்போதிருக்கும் சுரண்டல் அமைப்பை, பெண்ணடிமைத்தனத்தை, சாதியவாதக் கருத்தியலைத் துணிவுடன் எதிர்கொள்ளப் பெரியார் இன்று தேவையாக இருக்கிறார். பெரியாரை வழிபட வேண்டும் அவரை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாம் சொல்லவில்லை. பெரியாரே ஒரு கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். “நான் மூன்று நான்கு மணி நேரம் பேசுகிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில், யாரேனும் ஒருவர், இராமசாமி என்ற காட்டுமிராண்டி ஒருவர் பேசிச் சென்ற கருத்துக்களெல்லாம் இக்காலத்தில் தேவைப்படாது. அதை விட முற்போக்கானதாக, மானுட விடுதலை குறித்துச் சிந்திப்பதாக, ஒருவர் கருத்துகளைச் சொல்வாரேயானால் அதை நான் வரவேற்பேன்” என்று மக்களுக்காகச் சிந்தித்த, மக்களுக்காக இயங்கிய, மக்களுக்காகப் பாடுபட்டப் பெரியாரை, பெரியாரியத்தை நாம் வளர்த்தெடுப்போம். சாதியவாதத்தையும், பெண்ணடிமைத்தனத்தையும், மதவாதத்தையும், சுரண்டல் அமைப்பையும் எதிர்கொள்வதற்குப் பெரியாரின் துணைகொண்டு, சமூக விடுதலைக்காகப் போராடுவது, போராடும் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கிறது. 1974 ஆம் ஆண்டு பெரியார் இறந்த போது பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய பாடலை நினைவுகூர்கின்றேன்.

பெரும்பணியைச் சுமந்த உடல்!
பெரும்புகழைச் சுமந்த உயிர்
பெரியார்என்னும்
அரும்பெயரைச் சுமந்த நரை!
அழற்கதிரைச் சுமந்தமதி:
அறியா மைமேல்
இரும்புலக்கை மொத்துதல் போல்
எடுக்காமல் அடித்தஅடி!
எரிபோல் பேச்சு!
பெரும்புதுமை! அடடா, இப்
பெரியாரைத் தமிழ்நாடும்
பெற்றதம்மா!

மணிச்சுரங்கம் போல்அவரின்
மதிச்சுரங்கத் தொளிர்ந்தெழுந்த
மழலைக் கொச்சை!
அணிச்சரம் போல் மளமளவென
அவிழ்கின்ற பச்சை நடை!
ஆரி யத்தைத்
துணிச்சலுடன் நின்றெதிர்த்துத்
துவைத்தெடுத்த வெங்களிறு!
தோல்வி யில்லாப்
பணிச்செங்கோ! அடடா, இப்
பகுத்தறிவைத் தமிழ் நாடும்
சுமந்த தம்மா!

உரை யழகிங் கெவர்க்குவரும்?
உடலழகிங் கெவர்பெற்றார்?
ஒளிர்மு கத்தின்
நரையழகிங் கெவர்க்குண்டு?
நாளெல்லாம் வாழ்க்கையெல்லாம்
நடை நடந்து
திரையுடலை, நோயுடலைச்
சுமந்துபல ஊர்திரிந்து
தொண்டு செய்த
இரைகடலை அடடா, இவ்
வெரியேற்றைத் தமிழ்நாடும்
இழந்த தம்மா!

எப்பொழுதும் எவ்விடத்தும்
எந்நேர மும்தொண்டோ டிணைந்த பேச்சு!
முப்பொழுதும் நடந்தநடை!
முழுஇரவும் விழித்தவிழி! முழங்கு கின்ற
அப்பழுக்கி லாதவுரை!
அரிமாவை அடக்குகின்ற அடங்காச் சீறற்ம்!
எப்பொழுதோ, அடடா, இவ்
வேந்தனையித் தமிழ்நாடும் ஏந்தும் அம்மா?
பெற்றிழந்தோம், பெரியாரை!
பெற்றிழந் தோம்! அவரின்
பெருந்த லைமை
உற்றிழந்தோம்; உணர்விழந்தோம்
உயிரிழந்தோம்; உருவிழந்தோம்!
உலையாத் துன்பால்
குர்றுயிராய்க் குலையுயிராய்க்
கிடக்கின்ற தமிழினத்தைக்
கொண்டு செல்லும்
நெற்றுமணித் தலைவரினை,
அடடா, த் தமிழ்நாடும்
நெகிழ்த்த தம்மா!

பெரியாரைப் பேசுகின்றோம்;
பெரியாரை வாழ்த்துகின்றோம்;
பீடு, தங்கப்
பெரியாரைப் பாடுகின்றோம்;
பெரியார்நூல் கற்கின்றோம்;
பீற்றிக் கொள்வோம்!
உரியாரைப் போற்றுவதின் அவருரைத்த பலவற்றுள்
ஒன்றை யேனும்
சரியாகக் கடைப் பிடித்தால்
அடடா, இத் தமிழ்நாடும்
சரியா தம்மா!

தமிழ்நாட்டின் சரிவை மீட்கப் பெரியாரைத் துணைக் கொள்வோம் என்றுச் சொல்லி விடைபெறுகிறேன். நன்றி.

உரை தட்டச்சு – தோழர்.செய்யது – இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*