Home / ஈழம் / சிங்களப் பேரினவாதத்திற்கான அதிபர் தேர்தலும் தமிழீழமும் – 2015
மைத்ரிபால இராஜபக்சேவுடன் இருந்த பொழுது

சிங்களப் பேரினவாதத்திற்கான அதிபர் தேர்தலும் தமிழீழமும் – 2015

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலின் போது அத்தேர்தல் தமிழர்களின் போராட்டத்தை இன்றுள்ள நிலைமைக்கு முழுமையாகப் புரட்டிப் போடவிருக்கின்றது என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. மீண்டும் ஒரு முறை இலங்கை அரசியலிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் திருப்புமுனையை ஏற்படுத்த கூடிய ஒரு தேர்தல் இப்பொழுது இலங்கையில் நடக்க இருக்கின்றது.

எதிர் வரும் சனவரி 8 ஆம் நாள் இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தல் தமிழீழ போராட்டத்தின் நோக்கு நிலையில் இருந்து சில குறிப்பான அரசியல் விடயங்களைத் தாங்கியுள்ளது

• 2017 ஆம் ஆண்டு வரை இப்போதைய அதிபர் பதவியின் காலம் இருக்கும் நிலையில், இராசபக்சே முன்கூட்டியே இந்தத் தேர்தலை நடத்துகிறார். 2017 இல் தனக்கான ஆதரவு சிங்கள மக்களிடத்தில் எவ்வாறு இருக்கும் என்பதில் ஐயம் கொண்ட இராசபக்சே ஒருவேளை சனவரி 8 தேர்தலில் வெற்றி பெற்றால் 2023 ஆம் ஆண்டு வரை அதிபர் பதவியில் நீடிக்கலாம் என்று கணக்குப் போட்டுள்ளார்.

• கடந்த 2010 ஆம் ஆண்டு இராசபக்சே அரசாங்கத்தினால் இலங்கை அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 18வது சட்டதிருத்தத்தின் அடிப்படையில் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஒருவர் அதிபர் பதவிக்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகின்றார்.

• இதுவரை காலமும் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழர்களின் போராட்டத்தை உள்நாட்டுச் சிக்கல் என்று கூறிவந்தனர். ஆனால் கடந்த மார்ச்சு மாதம் நடைபெற்ற ஐ.நா.ம.உ.ம கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தற்பொழுது நடைபெற்ற வரும் மனித உரிமை மீறல் தொடர்பான பன்னாட்டு விசாரனை இலங்கை விடயத்தை ஒரு சர்வதேசச் சிக்கல் என்ற நிலையில் நிறுத்தி வைத்திருக்கும் சூழலில் இந்தத் தேர்தல் நடக்கின்றது

• இன்னும் குறிப்பாக இத்தேர்தல் இலங்கை சுதந்திராக் கட்சிக்கும் பொது வேட்பாளருக்கும் இடையில் நடைபெறும் தேர்தல் என்பதை விட அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடைபெறும் தேர்தலாக இருப்பது தான்.

சீன அதிபருடன் இராஜபக்சே

சீன அதிபருடன் இராஜபக்சே

எந்த இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஒர் இன அழிப்பு போரை தமிழ் மக்கள் மீது முள்ளிவாய்க்காலில் இலங்கை ஆட்சியாளர்கள் நடத்தி முடித்தார்களோ அந்த சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறீசேனாவும் அந்தப் இனக்கொலையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் இராசபக்சேவும் தற்பொழுது இலங்கை அதிபர் பதவிக்குப் போட்டி போடுகின்றனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த ஒரு மாத காலத்தில் இதுவரை இலங்கையின் ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்து பல்வேறு கட்சிகள் விலகி பொது வேட்பாளாரை ஆதரிப்பதாக அறிவித்து வருகின்றனர். பல்வேறு தனிநபர்கள் இருதரப்பிலும் மாறி மாறி கூட்டணி தாவும் நாடகமும் நடந்து வருகின்றது. இலங்கை முசுலிம் காங்கிரசு, இரணில் விக்ரமசிங்கே, சந்திரிகா குமாரதுங்க, சரத் பொன்சேகா எனப் பலரும் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றனர். அனைத்திற்கும் இறுதியாக ‘தமிழ் தேசிய கூட்டமைப்பு’ பொது வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.

உள்ளுக்குள் இப்படிப் பலவகை அணி சேர்க்கை நடைபெற்றாலும் வெளிப்படையாகத் தெரிவது இரண்டே அணிகள் தான். இலங்கையை மையப்படுத்தித் தனது நலனை பாதுகாக்கும் பொருட்டுத் தான் விரும்பும் ஒரு தலைமையைக் கொண்டுவர முயன்று வரும் அமெரிக்காவின் பொது வேட்பாளர். இரண்டுக்கும் மேற்பட்ட துறைமுகங்கள், வானூர்தி தளங்கள், விளையாட்டு மைதானங்கள், பெருவிடுதிகள், தொழில் நிறுவனங்கள் எனப் பல்லாயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்திருக்கும் சீனாவின் நலனைப் பாதுகாக்கும் இராசபக்சே. 2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலைப் போல 2015 ஆண்டு சனவரி தேர்தலிலும் வெல்லப்போவது சீனாவா அல்லது அமெரிக்காவா என்பது தான் இப்பொழுது எழுந்திருக்கும் கேள்வி.

மைத்ரிபால இராஜபக்சேவுடன் இருந்த பொழுது

மைத்ரிபால இராஜபக்சேவுடன் இருந்த பொழுது

ஒருபுறம் இந்தியப் பெருங்கடலில் பிற நாடுகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா தனக்கான ஒரு தலைமை இலங்கையில் வேண்டுமெனத் தீர்மானகரமாக வேலை செய்து கொண்டிருக்கின்றது. மறுபுறம் தற்காலத்தில் தனக்குச் சிறந்த நண்பனாக இருக்கும் இராசபக்சே வெற்றி பெற வேண்டும் என்று சீனா தனது முழு ஆதரவையும் வழங்கி வருகின்றது.

இலங்கையின் அண்டை நாடாக இருக்கும் இந்தியாவோ ஒருபுறம் இராசபக்சே வெற்றி பெற வாழ்த்துத் தெரிவிப்பது போலத் தோற்றத்தை உருவாக்கி இருந்தாலும் மறுபுறம் மைத்திரி வெற்றி பெற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுத் தந்திருக்கின்றது என்பதை கவனிக்க வேண்டும் .

”இலங்கையில் நீடித்து வரும் இனச்சிக்கலுக்கு இராணுவத்தின் மூலம் தீர்வு காண்பேன்” என்று கூறிய இராசபக்சேவைப் பெரும்பான்மை சிங்கள மக்கள் 2005 ஆம் ஆண்டு வெற்றி பெறச்செய்தனர். முள்ளிவாய்க்கால் இனவழிப்பு போர் மே 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பொழுது பெரும்பான்மை சிங்கள மக்கள் கொல்லப்பட்ட தமிழ் மக்களை மறந்து கொன்று குவித்த இராசபக்சேவை ஒரு வெற்றி வீரனாகப் பார்த்தார்கள். அப்பொழுது இராசபக்சே தன்னை சிங்களப் பேரினவாதத்தின் ஒற்றை முகமாக நிறுவி கொண்டார்.

இன்று இலங்கையில் குவிந்துவரும் அயல்நாடுகளின் சீரற்ற முதலீடுகள் அதன் பின்னணியில் பெருகி வரும் ஊழல், பொருளாதார வீழ்ச்சி என்று உள்நாட்டு அரசியல் சூழலில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை ஏற்பட்டுள்ளதாக ஒரு தோற்றம் உருவாகி இருக்கின்றது.

இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் மேற்குலக நாடுகள் தங்கள் நலனில் இருந்து இன அழிப்பை ‘மனித உரிமை மீறல் சிக்கல்’ என்று கூறி ஐ.நா மன்றங்களில் பேசு பொருளாக வைத்துள்ளனர். சர்வதேச அரங்கில் தங்கள் நாட்டு இராணுவ வீரர்களும் இராசபக்சேவும் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவதைப் பெரும்பான்மை சிங்கள மக்கள் ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. அதனால் தான் இவர்களின் வாக்கை தக்க வைக்கும் நோக்கத்தில் தேர்தல் பரப்புரைகளில் பேசும் போது, பொது வேட்பாளர் தேர்தலில் தான் வெற்றி பெற்றாலும் மனித உரிமை மீறல் தொடர்பாக யாரையும் விசாரிக்க அனுமதிக்கப் போவதில்லை என கூறுகின்றார். இதை நம்பி பெரும்பான்மை சிங்கள மக்கள் மைத்திரிக்கு அதிபர் பதவியை கொடுப்பார்களா? என்பது தான் இப்பொழுதுள்ள கேள்வி

அடக்குதல், ஒடுக்குதல், அழித்தொழித்தல்’ என்று மேலோட்டமாகத் தோன்றும் ‘தமிழர் எதிர்ப்பு’ விதியில் நூற்றாண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ள கெட்டித் தட்டிப் போன சிங்களப் பேரினவாதத்தின் முழு வடிவத்தை விளங்கி கொள்வதற்கு இலங்கை தீவில் வெளியில் இருப்பவர்களுக்கும், இந்தியா மற்றும் மேற்குலக அரசுகளுக்கும் நடக்கவிருக்கும் இந்தத் தேர்தல் முடிவு மீண்டும் ஒரு வாய்ப்பு.

SRI_INFOGRAPHICS_FIG3
இராணுவ ஆக்கிரமிப்பு, காணி பறிப்பு, சிங்கள குடியேற்றம், பெண்களின் பாதுகாப்பு, முன்னாள் போராளிகள் சட்டவிரோதமாகத் தடுத்து வைப்பு, தொடரும் ஆட்கடத்தல் என நாளும் தாங்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களுக்கு எந்த தீர்வும் சொல்லாத இரண்டு தலைவர்கள் இலங்கையின் தென் பகுதியில் போட்டியிடுகின்றனர். அதனை வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் வேடிக்கை பார்க்கும் பங்கேற்பாளராக மட்டுமே உள்ளனர். தமிழ் மக்கள் அளிக்கும் வாக்கு இந்த தேர்தலிலும் தங்கள் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க துணை செய்வதாக அமையப்போவதில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு வேட்பாளரை நிறுத்தி தமிழர்களின் முதல் வாக்கை கூட்டமைப்பு வேட்பாளருக்கும் இரண்டாவது தெரிவு வாக்கை மைத்திரிக்கும் அளித்து ஒர் அரசியல் பேரத்தை நடத்துவதற்கான வாய்ப்பு இலங்கை அரசியல் அமைப்பில் உள்ளது. ஆனால் கூட்டமைப்பு அத்தகைய வாய்ப்பை தமிழர்களுக்கு வழங்கவில்லை.

கூட்டமைப்பு எடுத்த முடிவின் படி மைத்திரியை ஆதரிப்பது அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறுவது போல தேர்தலை புறக்கணிப்பது என்ற இரண்டு வாய்ப்பு தான் இன்று தமிழர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சரணாகதிவாதத்திற்கும் சாகசவாதத்திற்கும் இடையில் சிக்குண்டிருக்கும் நிலைமையில் மாற்றம் வேண்டும். யதார்த்தப் பூர்வமான அரசியல் தெரிவுகள் தமிழ் மக்களுக்கு முன் வைக்கப்பட வேண்டும்.

இன்று வடக்கு கிழக்கில் வீசும் காற்றிலும் அரசியல் கலந்திருக்கின்றது. அதனை சரணாகதி வழியில் எதிர்கொள்வதோ அல்லது சாகச வழியில் புறக்கணிப்பதோ தமிழர்களின் அரசியலை, வாழ்நிலையை இன்னும் கடினமானதொரு சூழலுக்கு இட்டுச் செல்லும்.

இலங்கை அரசியலில் வெளியில் இருந்து உருவாகும் முரண்பாடுகளைத் தமது நலனில் இருந்து கையாள்வது, எதிரிகளுக்கிடையேயான முரண்பாடுகளை கூர்மையடையச் செய்வதில் வெற்றி காண்பதை உறுதி செய்வது உள்முரண்பாடுகளைக் களைவதில் வெற்றி காண்பது அதிலிருந்து விடுதலையை நோக்கி மெல்ல மெல்ல நகர்தல் என்ற கடமை தமிழீழ விடுதலை ஆற்றல்களுக்கு இருக்கின்றது.

ச.இளங்கோவன்
இளந்தமிழகம் இயக்கம்

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*