Home / சமூகம் / இந்துத்துவம் / இசுலாமியர்களுக்கு எதிரான மனநிலையும்- பொய் வழக்குகளும்

இசுலாமியர்களுக்கு எதிரான மனநிலையும்- பொய் வழக்குகளும்

இசுலாமியர்களுக்கு எதிரான மனநிலையும்- பொய் வழக்குகளும் என்ற தலைப்பில், சென்னை மயிலையில் உள்ள கவிக்கோ மன்றத்தில், கடந்த வெள்ளியன்று ( 12-12-2014 ) ஓர் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இளந்தமிழகம் இயக்கமும், மாணவர் இந்தியா இயக்கமும் ( த.மு.மு.க. வின் மாணவர் அணி ) இணைந்து ஒழுங்கு செய்திருந்த இக்கூட்டத்தில், ஜாமியா மிலியா இசுலாமியா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் தோழர் மனிஷா சேத்தியின் “காஃப்காவின் நிலம்” நூல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நூல் இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பொய்யாக புனையப்படும் வழக்குகள், நிரபராதிகள் தண்டிக்கப்படுதல், போலி மோதல் கொலைகள் பற்றி தக்க ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், மாணவர் இந்தியா இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் அனீஸ், கம்யூனிஸ்டு கட்சி (மா.லெ) மக்கள் விடுதலையின், அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான தோழர் சதீஷ் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினரான, மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். ”காஃப்காவின் நிலம்” நூலைப் பற்றியும் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இளந்தமிழகம் இயக்கத்தின் பொருளாளர் தோழர் ஜார்ஜ், நிகழ்வு முழுவதையும் தொகுத்து வழங்கினார்.

நிகழ்வின் தொடக்கமாக, தோழர் அனீஸ் உரையாற்றினார். ஊடகங்களில் இன்று பெரும்பாலும் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் விலை பேசப்பட்டவையாகவே ( Paid News ) இருக்கின்றன. எங்கு குண்டு வெடித்தாலும் அடுத்த சில நொடிகளில், இசுலாமியர்களின் பெயர்கள் தான் சந்தேகத்துரிக்குயனவாக வெளியிடப்படுகின்றன. அநியாயமாக இசுலாமியர்கள் பழி சுமத்தப்படுகிறார்கள். இசுலாமிய சமூகத்தில் அரசியல் பின்புலமோ, அறிவு ஜீவிகளின் பின் புலமோ கிடையாது. மேலும் இசுலாமியர்கள் அதிகாரத்திலும் இல்லை. ஆகவே எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய சமூகமாக இசுலாமிய சமூகம் இருப்பதால், இந்திய அரசின் எளிய இலக்காக அது ஆகிவிட்டது என்பதே தோழர் மனிஷா சேத்தியின் நூலின் அடிப்படை என்பதை விளக்கிப் பேசினார்.

10849752_625939220862740_3430285232506528338_n

அடுத்து நூலாசிரியர் தோழர், மனிஷா சேத்தி, தன் நூலின் சாரமான விஷயங்கள் குறித்து உரையாற்றினார். பொய்யான வழக்குகளில் கைது செய்யப்படும் இசுலாமியர்களிடம் எப்படி பொய்யான வாக்குமூலங்கள் ( நார்கோ சோதனைகளின் போது) பதிவு செய்யப்படுகின்றன. இப்படிப்பட்ட வழக்குகளில், பல இடங்களிலும் ஒரே மாதிரியான அணுகுமுறை பின்பற்றப்படுவது குறித்தும், போலி மோதல் கொலைகளில், இரத்தச் சகதியாக கிடக்கும் இறந்த உடல்களில் இருந்து, கசங்காத, ஒரு சொட்டுக் கூட இரத்தக் கறை படியாத கடிதங்கள் எடுக்கப்பட்டதாக, காவல்துறை புனைவு கதைகளை எழுதுகின்றனர் என்றும் குறிப்பிட்டு பேசினார். மேலும் UAPA என்று அழைக்கப்படும், அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்தி ஒரு சில பத்திரிக்கைகள், சில புத்தக‌ங்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காகவே கைது செய்யப்பட்டவர்கள் பற்றியும் பேசினார். நிகழ்வின் முடிவில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார் தோழர் மனிஷா சேத்தி. இந்நூலை எழுதும் போது, அரசிடமிருந்து நெருக்கடிகள் இருந்ததா என்ற கேள்விக்கு, அப்படியொன்றும் தாம் சந்திக்கவில்லை என்றும், பல்கலைக்கழகத்தின் துணையோடு வேலை செய்ததால், ஒரு வேளை அப்படி நடக்கவில்லை என்றும் பதிலளித்தார். அனைவரும் ஒற்றுமையாக போராடி, இந்த அடக்குமுறைகளை முறியடிக்க வேண்டுமே தவிர வேறு வழி ஒன்றும் நமக்கு இல்லை என்றும் தெரிவித்தார். தோழர் மனிஷா சேத்தியின் ஆங்கில உரையை, தோழர் செந்தில் பிறகு தமிழில் மொழி மாற்றம் செய்து விளக்கினார்.

10801861_625936080863054_7741317239544935621_n

தோழர் சதீஷ், பொடா சட்டத்தின் மூலமாக தான் கைது செய்யப்பட்ட போது தனது சிறையனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். சிறையிலிருந்த காலத்தில், அவரோடு உடனிருந்த கோவை குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட இசுலாமியர்களின் கண்ணீர்க் கதைகளைப் பகிர்ந்து கொண்டார். விசாரணைக் கைதிகளாக பல ஆண்டுகள் சிறையில் கழித்த பின், விடுதலையான போது அவர்கள் தம் வாழ்வைத் தொலைத்திருந்தனர். இன்று இந்தியாவில் 60 விழுக்காடு சிறையில் இருப்பவர்களில் இசுலாமியர்களும் தலித்துகளும் பழங்குடியினருமே உள்ளடங்குவர் என்றும் குறிப்பிட்டார். கடந்த வாரம், ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில், சங்க பரிவாரங்கள் தம் எதிரிகளாக ஐந்து “M” களை இனங்காட்டியிருக்கின்றனர். இந்த ஐந்து “M” களையும் அவர்கள் முற்றாக அழிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். அந்த ஐந்து ’M’ களாக அவர்கள் குறிப்பிடப்படுவோர், M – Marxists, M – Muslim Extremism , M – Missionaries, M – Mekkaleism, M – Materialism ஆகியோர். ஆகவே இந்துத்துவ சங்க பரிவாரங்களை எதிர்த்து அணி திரள வேண்டியவர்களை, அவர்களே அடையாளம் காட்டி விட்டனர் என்றும் தன் உரையை நிறைவு செய்தார்.

இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், பேசும் போது, “காஃப்கா” என்பதன் பெயர்க்காரணத்தைக் குறிப்பிட்டார். காஃப்கா என்பவர் ஜெர்மானிய நாவலாசிரியர். அவர் நாவல்கள் அனைத்தும், அரசால் நிர்மாணிக்கப்படும் பயங்கரவாத நாட்டில், மக்கள் எப்படி அச்சுறுத்தலுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளாகின்றனர் என்பதைப்பற்றி இருந்தன. அதன் பொருட்டே, இந்நூலுக்கு, தோழர் மனிஷா சேத்தி, காஃப்காவின் நிலமாக, இந்திய நாட்டிற்கு அப்பெயரை வைத்திருக்கிறார்.

இந்த நூல் இஸ்லாமியர்கள் குறித்த முன் அனுமானங்கள் பற்றி பேசுகின்றது. இந்துக்கள் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள். அவர்கள் எப்படி தன் சொந்த நாட்டுக்கே குண்டு வைப்பார்கள். இந்து மதத்தின் கட்டமைப்பிலேயே வன்முறைக்கு இடமில்லை. இஸ்லாத் வன்முறையான மதம்” போன்ற தவறான கருத்துகள் புலனாய்வு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், நீதித்துறை, காவல் துறை என்றனைத்து துறையில் இருப்பவர்களிடமும் இருக்கிறது. இதற்கு ஒரு காரணம் இந்திய தேசியத்தின் தோற்றத்திலேயே இருக்கும் சிக்கல்.
உலகெங்கும் புரட்சியும் தேசிய விடுதலை போராட்டங்களும் மக்களால் முன்னெடுக்கப்பட்டன. இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டமானது, வேதகால பெருமையுடைய இந்தியாவை அந்நியர் ஆள்வதா? என்ற புராண கால பெருமைவாதத்தில் இருந்து தோன்றியது தான். மக்களால் மட்டுமே வரலாற்றை முன்னகர்த்த முடியும் என்ற எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் “காப்பிய மனநிலையிலையே” இன்றும் மன்னர்கள் புகழ் பாடும் ஒரு சூழல் நாட்டில் நிலவுகிறது. உலங்கெங்கும் மன்னராட்சியைக் குப்பையில் வீசியாயிற்று. ஆனால் இங்கோ ராஜராஜ சோழனும் மராட்டிய சிவாஜியும் இன்னும் புகழ் பாடப்படுகின்றனர். இந்துத்துவப் போக்கைப் பற்றி குறிப்பிடுகையில், ஒரு காலத்தில் மிதவாதி என்று வாஜ்பாய் புகழப்பட்ட காலத்தில், அத்வானி அதிரடியான தலைவராக இருந்தார். 1998 இல் எவர் கடும்போக்காளர்(அத்வானி) என்று அறியப்பட்டாரோ அவர் இன்று மிதவாதியென்று ஓரங்கட்டப்பட்டுள்ளார். அன்று ஒரு மிதவாதியை(வாஜ்பாய்) முன்னிறுத்த வேண்டிய தேவை ஆர்.எஸ்.எஸுக்கு இருந்தது. இன்று ஒரு இனப்படுகொலைகாரன்(மோடி) கூடப்பிரச்சனையில்லை என்பதுதான் உருவாகியுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடி விட்டுவைத்துள்ள யதார்த்தம். இந்தியாவின் சமூக அரசியல் வரலாற்றில், காந்தியின் படுகொலைக்கும், பாபர் மசூதி இடிப்புக்கு இடம் இருப்பதைப் போல் ‘வளர்ச்சியின்’ பெயரால் மோடி என்ற இனப்படுகொலையாளி ஆட்சிக்கு வரமுடியும் என்பதுதான் நமக்கு விடப்படும் அறைகூவல்.

சர்வமதத்திற்குள்ளும், மத நல்லிணக்கத்திற்குள்ளும், நாத்திகவாதத்திற்குள்ளும் மதச்சார்பின்மையை வளர்த்தெடுக்க முடியாது. சனநாயகத்தின் பெயரால் தான் மதச்சார்பின்மை புரிந்துக் கொள்ளப்படுவதற்கான சாத்தியம் உண்டு. ஆனால் கெடுவாய்ப்பாக சனநாயகம் பெரும்பான்மைவாதமாக நம் நாட்டில் புரிந்துக் கொள்ளப்பட்டுவிட்டது. பெரும்பான்மை மதம் எதுவோ அதுவே அரச மதமாக இருக்க வேண்டும் என்று நம்பப்படுகின்றது. ஆனால் ஒரு சனநாயக அரசு மதச்சார்ப்பற்றதாகத் தான் இருக்க வேண்டும் என்பதன் பொருள் அதுவன்று. ஒருவேளை இந்தியாவில் நூற்றுக்கு நூறு வீதம் ஒரு மதத்தவர்தான் வாழ்கின்றார்கள் என்றாலும் அது சனநாயக அரசென்றால் அது மதச்சார்பற்ற அரசாகத்தான் இருக்க வேண்டும். சான்றாக இந்தியாவில் இந்துக்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். தம் குடிமக்களில் யாரேனும் ஒருவர் மத நம்பிக்கையை கைவிடுவதாயினும் வேறு மதத்திற்கு மாறுவதாயினும் அதற்கு வழிவிடக் கூடியதாக அந்த அரசு இருக்க வேண்டும். அந்த ஒருவரின் வழிபாட்டுரிமையையும், தேர்வு உரிமையையும் பாதுகாக்க கூடிய அரசுதான் சனநாயக அரசாக இருக்க முடியும். எனவேதான் நாம் சனநாயக அரசு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்கிறோம். கடந்த கால புராண, இதிகாச, பாவ புண்ணிய கதைகளுக்குள் சிக்குண்டிருக்கும் மக்களிடம் சனநாயக உணர்வை வளர்க்க வேண்டும் என்று தன் உரையை நிறைவு செய்தார் தோழர் செந்தில்.

10801861_625936077529721_2996769868036274735_n

நிகழ்வின் இறுதியாக தோழர் பேரா.ஜவாஹிருல்லாவின் உரை அமைந்தது. தற்போது இந்தியாவில், பெண் பாலியல் வல்லுறவுக்கொலை வழக்கின் காரணமாக யுபர் கட்டண ஊர்தி சேவை தடை செய்யப்பட்டிருக்கிறது. இதனால், இந்தியாவில் இயங்கும் அனைத்து ஊர்தி சேவைகளையும் தடை செய்யவேண்டும் என்ற பேச்சும் எழுகிறது. உண்மையில் இந்தியாவில் இது போன்ற குற்றங்கள் நிகழாவண்ணம், தடை செய்யப்பட வேண்டிய துறை ஒன்று இருக்கிறது என்றால் அது இந்தியாவின் காவல்துறையாக மட்டுமே இருக்க முடியும். அத்தனை குற்றங்களும் கொட்டடிக் கொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் காவல்துறையாலேயே நிகழ்த்தப்படுகின்றன. செய்தி ஊடகங்களைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், ஓரிடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த மறுகணமே, உடனடி செய்தியாக அடுத்த சில நொடிகளில் இந்தியன் முஜாஹிதின் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக செய்திகள் வெளியிடுகின்றனர். அடுத்த சில மணி நேரங்களில், லஷ்கர் இ தொய்பா பொறுப்பேற்று மின்னஞ்சல் அனுப்பியிருப்பதாகவும் கதை கட்டுகின்றனர். இப்படியான பொய்ச் செய்திகளைத் தான், இசுலாமிய சமூகத்திற்கு எதிராக ஊடகங்கள் பரப்புகின்றன.

டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கு, நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கு, அக்‌ஷர்தாம் கோவில் தாக்குதல் வழக்கு ஆகிய இம்மூன்று வழக்குகளிலும் ஒரு ஒற்றுமையைக் காண முடியும். இம்மூன்று வழக்குகளிலும், இறந்தவர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட கடிதங்களைக் கொண்டுதான் வழக்குகளைத் துவக்கியிருக்கின்றனர். ஆனால் அந்த மூன்று கடிதங்களுமே இரத்தக்கறை படியாத புத்தம் புதிய காகிதங்கள். இது குறித்து நீதிமன்றம், காவல்துறையை எள்ளி நகையாடிய போது “When you are making fiction; That fiction should make sense” என்று தீர்ப்பில் சொல்லியதை நினைவு கூர்ந்தார் பேராசிரியர். ’சிமி தான் த.மு.மு.க. என்ற பெயரில் செயல்படுகின்றது. ஜவஹிருல்லா சிமியைச் சேர்ந்தவர்தான்” என்று காரணம் சொல்லி சிமியின் தடையை நீடிக்க இந்திய அரசு முயன்றது. அப்போது தடை நீடிக்கலாமா? வேண்டாமா? என்று ஆய்வு செய்ய தமிழகத்திற்கு நீதிபதி கீதா மிட்டலிடம் தான் 1989 ஆம் ஆண்டு வரை தான் சிமி அமைப்பில் இருந்தேன். அதன் பிறகு சிவில் மனித உரிமைக் கழகத்தில் பணியாற்றினேன். பின்னரே த.மு.மு.க. வில் இணைந்தேன் என்று விளக்கினேன். அதை கவனமாக கருத்தில் எடுத்துக் கொண்டார் கீதா மிட்டல். நீதிபதி கீதா மிட்டல் அக்குறிப்புகளால், சிமி அமைப்பு தமிழ்நாட்டில் செயல்படுவதற்கானத் தடையை நீக்கியது குறித்தும் தன் நினைவுகளைப் பகிர்ந்தார்.
தோழர் ஜார்ஜ், காஃப்காவின் நிலம் நூலைத் தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பை இளந்தமிழகம் இயக்கம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். தோழர் ஷமீம், நிகழ்வின் நன்றியுரையை வழங்கினார். இறுதியில், தோழர்கள் மனிஷா சேத்தியின் நூலைப் பெற்றுக் கொண்டு, சிறிது நேர உரையாடல்களுக்குப் பின் கலைந்தனர்.

அ.மு.செய்யது
இளந்தமிழகம் இயக்கம்.

About அ.மு.செய்யது

One comment

  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*