Home / அரசியல் / திருவாளர் மோடிக்கு ஓர் இசுலாமியனின் கடிதம் – 2

திருவாளர் மோடிக்கு ஓர் இசுலாமியனின் கடிதம் – 2

உங்களுக்கு இக்கடிதத்தை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்நல்வேளையில், ஜார்கண்ட் மாநிலத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக, வெற்றி மேல் வெற்றி வந்து உங்களைச் சேர்ந்து கொண்டிருக்கிறது. தொட்டதெல்லாம் பொன்னாகி வருகிறது. இந்தியாவின் பிரதமராகி விட்டீர்கள். பா.ஜ.க ஆட்சியமைக்க முடியாத மாநிலங்களில்லாம் வெல்வது, மத்தியில் நரேந்திர மோடியின் செல்வாக்கினால் தான் என உங்கள் கட்சியைச் சேர்ந்த‌ பரிவாரங்கள் தொலைக்காட்சிகளில் பெருமிதம் கொள்கின்றனர். எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறதல்லவா? போகட்டும்.

“12 ஆண்டுகளாக” என்று மேலே சொன்னேன் அல்லவா? அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பது தான் இங்கே மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. உங்களைக் கடுமையாக எதிர்க்கும் எல்லா மதச்சார்பற்ற முற்போக்கு அமைப்புகளும் இடதுசாரிகளும் அறிவு ஜீவிகளும், உங்கள் போலி வளர்ச்சிக் கொள்கைகளைப் பற்றி மட்டுமே தற்போது பேசிக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆறு மாத பா.ஜ.க ஆட்சியின் “ஒற்றை மைய” இந்துத்துவ போக்கு குறித்து தான் அவர்களது கவலை எஞ்சியிருக்கிறது. அதில் தவறேதுமில்லை. 12 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பது தற்போது விவாதப் பொருளாக இல்லை.

உங்களுக்காக, உங்கள் கட்சிக்காக வாக்களிக்கும் மக்கள் அச்சம்பவங்களை மறந்திருக்கலாம். வளர்ச்சி முகமூடியணிந்து வரும் உங்கள் மோடி வித்தையில் மயங்கியிருக்கலாம். பத்தாண்டு காங்கிரசு அரசின் ஊழல் மிகுந்த ஆட்சியின் எதிர் விளைவாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். இடைவிடாமல், உங்கள் புகழைப் பாடும் ஊடகத் திரைகள் மக்களின் கண்ணை மறைத்திருக்கலாம். இந்த “லாம்” களையெல்லாம் தாண்டி, இன்னும் பெரும்பான்மையோர் உங்களை மறுத்தே இருக்கின்றனர் என்பதை மட்டும் உங்களுக்கு இப்போது நினைவு படுத்திக் கொள்கிறேன். பாராளுமன்றத் தேர்தலின் போது 70% மக்கள் உங்களை நிராகரித்திருக்கின்றனர். அந்த 70% நிராகரிப்புகளுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அந்த 70% மக்களில், உள்ளடங்கும் ஒரு சிறுதொகை அளவு, இசுலாமியர்களின் மனதில் ஒரே ஒரு காரணம் தான் இருந்திருக்க முடியும். அது ஒரு கொடுங்கனவாக இன்னும் எம் மனதில் புகைந்து கொண்டு தான் இருக்கிறது.

மாயா கோட்னானி - பாபு பஜ்ரங்கி

மாயா கோட்னானி – பாபு பஜ்ரங்கி

”இந்த இசுலாமிய‌ தே.மகன்கள் இறந்த பின், எரிப்பதை விரும்ப மாட்டார்கள். அதனால் தான் அவர்களை கிணற்றில் தள்ளி, எரிவாயு உருளைகளை வெடிக்கச் செய்து எரித்துக் கொன்றோம்” என்று பாபு பஜ்ரங்கி என்றொரு சங்க பரிவாரம், நர மாமிசம் தின்ற நரியைப் போல, ஒரு காணொளியில் ஊளையிட்டது. நரோடா பாட்டியா என்ற இடத்தில், 200 குழந்தைகளும் பெண்களும் உயிரோடு கொளுத்தப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டனர். கரிக்கட்டைகளைப் போல் உடல்கள் திரட்டப்பட்டு, புகைப்படங்களில் பதிவாகியிருந்தது அந்தக் காட்சி. கணவரோடு, கடைக்குச் சென்ற கவுசர் பானுவின் வயிற்றில், சூலத்தை விட்டுக் குடைந்து, குழந்தையை வெளியே எடுத்து, அதையும் தீயிலிட்டு கொளுத்தினர் அந்த சங்க பரிவாரங்களின் ஒரு பகுதியினர். இந்த சம்பவங்கள் நடந்தது அனைத்தும் 2002 குஜராத் கலவரங்களின் போது. இச்சம்பவங்களில் தீக்கிரையாக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் அப்பாவி இசுலாமியர்களின் உயிர்கள். அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நீங்கள், காவல்துறையினரை ஒன்று கூட்டி, “தடுக்க வேண்டாம். இந்துக்கள் தங்கள் கோபத்தைத் தணித்துக் கொள்ளட்டும்” என்று அமைதியாகத் திருவாய் மலர்ந்திருக்கிறீர்கள். உண்மையை வெளியே அம்பலப்படுத்திய சஞ்சவ் பட் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அனைவரும் நேரடியாக உங்கள் அடக்குமுறைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இன்று 28 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் மாயா கோட்னானி, என்ற பெண்ணுக்கு, அப்போதைய உங்கள் குஜராத் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பதவி கொடுத்து, வாழ்த்தியதும் நீங்கள் தான். அவர் செய்த சாதனை, அந்த நரோடா பாட்டியாவில் 200 குழந்தைகளையும் பெண்களையும் எரித்துக் கொன்றது. மாநிலம் முழுவதும் இசுலாமியர்களைக் கொல்ல, மாருதி காரில் ஆயுதங்கள் ஏற்றிச் சென்று, தெருத்தெருவாக சங்க பரிவாரங்களுக்கு விநியோகித்ததும் தான்.

Gujarat Riots-Sanjiv Bhatt Arrest-Tehelka

என்ன தான் வளர்ச்சி வேடம் போட்டாலும், சட்டையில் படிந்திருந்த இரத்தக்கறையை அகற்றவே முடியவில்லை. எங்கு போனாலும், இறந்த ஆவிகள் உங்களைப் பின் தொடர்ந்து கொண்டே தான் இருந்தன. முசுலிம்களை ஆற்றுப்படுத்த வேண்டும். 2014 தேர்தலின் போது, இந்த ஆவிகள் மேடையேறி, வாக்குகளுக்கு எந்த சேதாரமும் நிகழ்ந்து விடக்கூடாது என்ற உந்துதலின் பேரில் உங்கள் மூளையில் உதித்த திட்டம் தான் “சத் பாவன” என்ற மூன்று நாள் மத நல்லிணக்க உண்ணாவிரதம். அலகாபாத்தில், அல்லாகு அக்பர் என்ற முழக்கத்தோடு தொடங்கிய உங்கள் உண்ணாவிரதத்தில், வணிக ரீதியாக லாபமடைந்த ஏராளமான “போரா” முசுலிம்கள் கலந்து கொண்டனர். உணர்ச்சி வயப்பட்ட ஒரு முசுலிம் மேடையேறி, உங்களுக்கு ஒரு குல்லாவை அணிவிக்க முயல, அனிச்சை செயலாக உங்கள் தலை அதை ஏற்க மறுத்து விட்டது. இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. நீங்கள் இம்மியளவு கூட மாறி விடவில்லை என்பதையே அந்நிகழ்வு எங்களுக்கு சுட்டிக் காட்டியது. சில ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத் கலவரங்களில் கொல்லப்பட்ட இசுலாமியர்கள் குறித்து, கரன் தாப்பர் கேள்வி கேட்ட போது, தண்ணீர் குடித்த நீங்கள், இப்போது “கொல்லப்பட்டவர்கள் என் காரில் அடிபட்ட நாய்க்குட்டிகளுக்குச் சமமானவர்கள்” என்று திமிர் பேச்சு பேசத் தொடங்கி விட்டீர்கள். 1947 ஆம் இந்தியா விடுதலை பெற்று, பிரதமரான தலைவர்களில், 172 மில்லியன் இசுலாமியர்கள் வாழும் நாட்டில், ரம்ஜான் வாழ்த்துச் சொல்லாத முதல் பிரதமர் நீங்கள் தானே? அதே போல கிறித்துமசுக்கும் நீங்கள் வாழ்த்துச் சொல்லவில்லை என்பதோடு, அந்நாளின் சிறப்பையே மழுங்கடித்து, வாஜ்பாய் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று சொல்லக் கூடிய அளவுக்கு உங்கள் வன்மம் பெருக்கெடுக்கிறது.இது தான் நரேந்திர மோடி.

இந்துத்துவக் கறை படிந்த அதிகார வர்க்கத்தின் அத்தனை தூண்களும் உங்களை இதுவரை காத்து வந்திருக்கின்றன. உங்களின் கொடிய இக்குற்றத்திற்கு, ஒரே ஒரு நாள் சிறை வாசத்தைக் கூட‌ உறுதி செய்ய, இந்திய நீதித்துறையில் இடமில்லை. மாறாக, வளர்ச்சியின் நாயகனாக நீங்கள் முன் நிறுத்தப்பட்டீர்கள். இந்து இந்தி இந்தியா என்ற ஒற்றை மைய அதிகார மையத்தைக் கட்டியமைப்பதற்கு முதல் படியாக, நரேந்திர மோடி என்கிற பிம்பம் கட்டியமைக்கப்பட வேண்டும் என்பது சங்க பரிவாரங்களின் செயல் திட்டமாக இருந்தது. மேலும், உங்களின் சர்வாதிகார போக்கின் உதவியால், நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் தங்கள் கைப்பைக்குள் எளிதில் வந்துவிடும் என்று உங்களின் நண்பர்களான அம்பானி அதானி உள்ளிட்ட பெரு முதலாளிகளின் நம்பிக்கை, உங்கள் பிம்பப்பெருக்கத்துக்கு வலு சேர்க்க ஆரம்பித்தது. பழைய பாவங்கள் மறைக்கப்பட்டு, வளர்ச்சியின் பெயரால் ஒரு புனிதராக, மாற்றங்களை உருவாக்கும் அவதார புருஷராக ஊடகங்கள் உங்கள் பிம்பத்தை ஊதிப் பெருக்கின. பெரும் பொருட் செலவில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இசுலாமியர்களே, நீங்கள் வளர்ச்சியின் நாயகன் தானோ என்று நம்புமளவுக்கு அந்த விளம்பரங்கள் இருந்தன. எல்லாம் கை கூடி வந்தது. எதிர்பார்த்தவாறு நீங்கள் இந்தியப் பிரதமராகி விட்டீர்கள். நல்லது.

கலவரத்தினால் பாதிக்கப்பட்ட குத்புதீன் அன்சாரி

கலவரத்தினால் பாதிக்கப்பட்ட குத்புதீன் அன்சாரி

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்திய அரசியலைமைப்புச் சட்டமும் அதைத் தான் சொல்கிறது. மதச்சார்பின்மையை வலியுறுத்தும் சட்டங்களின் மீதும், சனநாயக விழுமியங்களின் மீதும் இந்திய முசுலிம்களாகிய நாங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தோம். 1992 ஆம் ஆண்டு, பாபர் மசுஜிது இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட போது, சிதைந்து போனது அம்மசூதியின் மினாராக்களும் கற்களும் மட்டும் அல்ல. எங்கள் நம்பிக்கைகளும் தான். அதன் பிறகான கலவரங்களில் ஏராளமான முசுலிம்கள் கொல்லப்பட்டனர். அச்சுறுத்தலும் பாதுகாப்பின்மையும் எங்களைத் துரத்த ஆரம்பித்தன. ‘இது எங்களுடைய மண்’ என்ற உரிமையை இழக்கும் தருணங்கள் கொடுமையானவை. 2002 குஜராத் கலவரங்களின் போது, இன்னும் கொடூரமாக முசுலிம்கள் கொல்லப்பட்டனர். விரல்களுக்கிடையில் நழுவும் ஆற்று நீரைப் போல, எஞ்சியிருந்த நம்பிக்கையும் எங்கள் மன இடுக்குகளிலிருந்து ஒழுக ஆரம்பித்தது. நீதி கேட்டு போராடத் தகுதியற்றவர்களாக நாங்கள் சித்தரிக்கப்பட்டோம். எங்கு குண்டு வெடித்தாலும் இசுலாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அதற்காகவே தடா பொடா யு.ஏ.பி.ஏ போன்ற கருப்புச்சட்டங்கள் உருவாக்கப்பட்டன. விசாரணைக் கைதிகளாக மட்டுமே ஆண்டுக்கணக்கில் எதிர்காலத்தைத் தொலைத்தவர்கள் எங்களுள் ஏராளம். 14 ஆண்டுகளாக சிறையில் கிடந்து, நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டவர்கள் நாங்கள். ஒவ்வொரு இசுலாமியனும் நெற்றியில் “நான் பயங்கரவாதி இல்லை” என்று பச்சைக்குத்தி கொண்டு நடக்க வேண்டிய சூழல் உருவானது. இந்த கொடுமைகளுக்கெல்லாம், மதச்சார்பின்மை பேசும் இந்திய அரசியல் கலாச்சாரத்தில் இடமுண்டு என்று நாங்கள் படிப்படியாகத் தான் புரிந்து கொண்டோம். இறுதியாக, ஒரு இனப்படுகொலையாளர் இந்தியா எனும் மிகப்பெரிய சனநாயக நாட்டிற்கு பிரதமராக வர முடியும் என்ற நிலை வருகிற போது தான், ஒரு இசுலாமியன் மேற்சொன்ன அனைத்து சனநாயக விழுமியங்களையும் நம்பிக்கைகளையும் சாக்கடையில் வீச எத்தனிக்கிறான்.

போர் முறைகளில்லாம் மிகவும் குரூரமானது உளவியல் போர். அத்தகைய உளவியல் போரை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு இன்று ஒவ்வொரு இசுலாமியரும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பாபர் மசுஜிது இடித்த இடத்தில், ராமர் கோயில் கட்டியே ஆக வேண்டும் என்றொரு சங்க பரிவாரம் அடம் பிடிக்கிறது. இசுலாமியர்களின் வாக்குரிமையை பறிப்பேன் என்று இன்னொரு சுனா சாமி இல்லாத மீசையை முறுக்குகிறது. பகவத் கீதையை தேசிய நூலாக்குவேன் என்று ஒரு அமைச்சர் கூவுகிறார். ராமருக்கு பிறக்காத யாராக இருந்தாலும், அவர்கள் தகாத முறையில் பிறந்தவர்கள் என இன்னொரு துறவி அமைச்சர் எங்களின் பிறப்பைச் சந்தேகிக்கிறார். ரேசன்,ஆதார் அட்டையை வாங்கித் தருகிறோம் என்று சேரியில் வாழும் ஏழை இசுலாமியர்களைக் கூட்டிச் சென்று, நவக்கிரக ஓமம் வளர்த்து, இந்துக்களாக திரும்பவும் சுத்திகரிக்கிறோம் என்று “தாய் மத” புராணம் பாடுகின்றன சங்க பரிவாரங்கள். இவையனைத்தும் நடப்பது உங்கள் ஆட்சியில் தானே? இதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன?

2a_1978748f

பெட்ரோல் விலை குறையவில்லை. மின் கட்டண விலை உயர்கிறது. மன்னெண்ணெய்க்கான மானியம் நீக்கப்பட்டிருக்கிறது. ரயில் கட்டணம் கூடுகிறது. ஆனால் இங்கே அதானிக்கு 6000 கோடி கடன் கிடைக்கிறது. அவரை ஆசுதிரேலியா கூட்டிச் சென்று நிலக்கரிச் சுரங்கம் வாங்கித் தருகிறீர்கள். மன்மோகன் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் முதலாளிகளைக் கூட்டிச் செல்வார். ஆனால் இப்போது முதலாளிகள் தான் உங்களை வெளிநாடுகளுக்கு கூட்டிச் செல்கின்றனர். காரணம் என்ன? நீங்கள் சொன்ன வளர்ச்சி என்பது யாருக்கானது ? நிச்சயமாக‌ மக்களுக்கானது அல்ல. அது பெருமுதலாளிகளுக்கானது மட்டுமே என்ற உண்மையை உங்களை நம்பி வாக்களித்த ஒவ்வொரு குடிமகனும் புரிந்து கொள்ளும் நேரம் வந்து விட்டதல்லவா ? ஆறு மாதங்கள் கடந்து விட்டன. நீங்கள் சொன்ன வளர்ச்சி எங்கே? 2005 ஆம் ஆண்டு காங்கிரசு அரசால் நியமிக்கப்பட்ட‌ சச்சார் கமிட்டியின் அறிக்கை, இந்தியாவில் தலித்துகளின் நிலையை விட, இசுலாமியர்களின் நிலை மோசமாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டியதோடு நின்று விடாமல், இந்தியாவில் இசுலாமியர்களின் வாழ்நிலையை மேம்படுத்த பல பரிந்துரைகளையும் முன் வைத்தது. இந்த கமிட்டியை நியமித்த காங்கிரசு அரசே, அப்பரிந்துரைகளை காற்றில் வீசிய நிலையில், இந்தியாவில் இந்துக்களைத் தவிர, எந்த மதத்தைப் பின்பற்றுவரும் வாழவே கூடாது என்ற கொள்கையோடு செயல்படும் உங்களைப் போன்றவர்கள் எப்படி மக்களின் வளர்ச்சி பற்றி கவலை கொள்ள முடியும்?

இசுலாமியர்கள் மட்டுமல்ல. இந்தியாவின் அனைத்து தேசிய இன மக்களும், தலித்துகளும் மதச்சிறுபான்மையினரும் சிறுகச் சிறுக தங்கள் உரிமையை இழந்து கொண்டிருக்கிறார்கள். ஆறு மாத மோடி ஆட்சி, எங்களை நிம்மதியிழக்கச் செய்து கொண்டிருக்கிறது. நீங்கள் இசுலாமியர்களுக்கு மட்டும் எதிரியில்லை. உங்கள் மீது நம்பிக்கை கொண்டு, உங்களை ஆதரித்து வாக்களித்து, உங்களை இப்பதவியில் அமர வைத்திருக்கும் இந்துக்களுக்கும் நீங்கள் எதிரியே என்பதை இந்நாட்டு மக்களுக்கு உணர வைப்பதே எங்களின் தலையாய நோக்கமாக இப்போது இருக்கிறது.

நாங்கள் தனித்து விடப்படவில்லை. எங்களோடு இணைந்து போராட, சக ஒடுக்கப்பட்டவர்களின் கூட்டம் துணை நிற்கிறது. எங்களோடு சேர்ந்து பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தலித்துகள் இருக்கிறார்கள். நிலங்களை இழந்த விவசாயிகள் இருக்கிறார்கள். காடுகளையும் மலைகளையும் காக்கப் போராடும் பழங்குடியினர் இருக்கிறார்கள். உங்கள் நட்பு நாடுகளின் துப்பாக்கி ரவைகளுக்கு பலியாகும் மீனவர்களும் எம் சொந்தங்கள் தான். எதிர்கால சந்ததியினருக்காக போராடும் அணு உலை எதிர்ப்புப் போராளிகளும் எம் மக்கள் தான். இடது சாரி முற்போக்கு அமைப்புகளும் எமக்காக பேசுபவர்கள் தான். மனித உரிமைப் போராளிகளும் சூழலியலாளர்களும் இந்நாட்டில் உருவாகிக் கொண்டே தான் இருப்பார்கள். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நாங்கள் அனைவரும் உங்களை எதிர்த்து நிற்க, ஒரு காரணம் போதும். எமக்குள் இருக்கும் முரண்பாடுகளைக் களைந்து, நாங்கள் ஒன்றிணைய நீங்களே களம் அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் எதிரிகளை நீங்களே தீர்மானிக்கிறீர்கள்.

இப்படிக்கு
ஒரு இசுலாமியன்

–கருத்து சித்திரம் – நன்றி – தி இந்து

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*