Home / FITE சங்கம் / கொலையைச் செய்தவன்தான் தீர்ப்பு எழுத வேண்டும் – நாஸ்காம்

கொலையைச் செய்தவன்தான் தீர்ப்பு எழுத வேண்டும் – நாஸ்காம்

டி.சி.எஸ். நிறுவனம் நடத்திவரும் சட்டத்திற்கு எதிரான வேலை நீக்கம் தொடர்பாகப் பின்வரும் கருத்தை ஐ.டி. நிறுவனங்களின் சங்கமான நாஸ்காம் தெரிவித்துள்ளது.

“நிறுவன விதிகளின்படி, பல காரணங்களுக்காக இது போன்ற பணி நீக்கம் நடப்பது நாம் எல்லாம் அறிந்ததுதான். வழக்கத்திற்கு மாறான, அளவுக்கு மீறிய ஒன்றும் இங்கே நடந்துவிடவில்லை என்பதே நாம் புரிந்துகொண்டது. இங்குள்ளச் சிக்கலுக்குத் தீர்வுக் காணப்படவேண்டுமென்றால், அக்குறிப்பிட்ட நிறுவனமே அப்பணியைச் செய்யும்”.

nasscom_logo_2704

“இத்துறையில் உள்ள நிறுவனங்கள் காலத்திற்கேற்பத் தங்களைத் தகவமைத்துக் (adaptation) கொள்ளவேண்டும், அப்படி நிறுவனங்கள் அவ்வப்போது தங்களைத் தகவமைத்துக் கொண்டுதான் வந்துள்ளன”.

“இத்துறையில் உள்ள நிறுவனங்களுக்கானச் சங்கமாகச் செயற்படும் நாங்கள், இத்துறையில் ஏற்படும் அனைத்து முதன்மையான சிக்கல்களையும் கவனத்தில் கொண்டு, தேவையான நேரத்தில் நிறுவனங்களுக்கு உரியத் தகவல்களைக் கொடுத்தும், அச்சிக்கல்களின் மீது நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவும் கோருகின்றோம்”.

முதல் பத்தியில் நாஸ்காம் சொல்ல வரும் செய்தியை நாம் இப்படிப் புரிந்துகொள்ளலாம்… வேலையை விட்டுத் தூக்குவது இங்கு நடக்கும் இயல்பான ஒன்றே. 25,000 முதல் 30,000 பேரை வேலையை விட்டு வெளியேற்றுவது ஒன்றும் அளவுக்கு மீறியச் செயல் அல்ல. அப்படி இதன் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அவர்களை வேலையை விட்டு நீக்கும் நிறுவனமே அதைச் செய்யும். அதவாது, கொலையைச் செய்தவன்தான் அவன் மீதானக் குற்றத்திற்குத் தீர்ப்பும் எழுத வேண்டும் என்கிறது நாஸ்காம்.

நாஸ்காம் சொல்வது போல நிறுவனங்கள் அவ்வப்போது தங்களைத் தகவமைத்துக் கொண்டுதான் வருகின்றன. ஆனால் அவையெல்லாம் தொழிலாளர் நலனின் அடிப்படையில் அல்ல, இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே. தொழிலாளர் நலன் என்றால் ‘கிலோ எவ்வளவு?’ என்று கேட்பதுதான் ஐ.டி. நிறுவனங்கள், நாஸ்காம் ஆகியவற்றின் வினாவாக இருக்கும் என்பதே உண்மைநிலை.

layoff-thumb

மேலும் நாஸ்காம் சொல்வது போல ஐ.டி. துறையைப் பாதிக்கும் முதன்மையான சிக்கல்களின் மேல் நடவடிக்கை எடுக்கின்றோம், நிறுவனங்களையும் நடவடிக்கை எடுக்கக் கோருகின்றோம் என்பது கூடப் பாதி உண்மைதான். முதலாளிகளை, முதலாளிகளின் இலாபத்தைப் பாதிக்கும் சிக்கல்களில் எல்லாம் நாஸ்காமும், ஐ.டி. நிறுவனங்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அமெரிக்கர்களுக்கு அங்குள்ள நிறுவனங்களில் கூடுதலான வேலைவாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும், இதற்காகக் கடவுச்சீட்டு (VISA) வழங்குதலை முறைப்படுத்த வேண்டும் என்று அங்குள்ள அரசியல்வாதிகள் சொன்னபொழுது, தங்கள் தலையை அடமானம் வைத்து இவர்கள் அதைத் தடுத்து நிறுத்தினார்கள். 2012 ஆம் ஆண்டு மட்டும் காக்னிசன்ட் நிறுவனம் 114 கோடி உரூபாயையும் (ஒரு இடாலர் 60 உரூபாய் எனக் கொண்டு), விப்ரோ நிறுவனம் 17.4 கோடி உரூபாயையும், நாஸ்காம் 6.9 கோடி உரூபாயையும் இலாபிக்காச் (கையூட்டு என்பதற்கு மேற்பூச்சுப் பூசப்பட்ட சொல்தான் இலாபி) செலவுச் செய்துள்ளார்கள்.

இதற்குக் காரணம் இந்தியத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதல்ல பொருள், இந்தியத் தொழிலாளர்கள் என்றால் குறைந்த ஊதியம் கொடுத்தால் போதும், அமெரிக்கர்கள் என்றால் அந்நாட்டுச் சட்டப்படி உரிய ஊதியம் வழங்க வேண்டும், வேலை நேரத்திற்கும் கூடுதலாக வேலைச் செய்யும் நேரத்திற்கும் உரியத் தொகை வழங்க வேண்டும் அதனால் தங்களது இலாபத்தில் சில விழுக்காடுக் குறையும் என்பதுதான் உண்மையான காரணம்.

நாஸ்காமும், ஐ.டி. நிறுவனங்களும் தொழிலாளர்கள் சிக்கலைத் தீர்ப்பார்கள் என்பது, பாலுக்குக் காவலாகப் பூனையை நிறுத்துவதற்கு ஒப்பான ஒன்றேயன்றி வேறல்ல. ஐ.டி. நிறுவனங்களுக்கு ஒன்றென்றால் குரல் கொடுப்பதற்கு நாஸ்காம் என்று ஒரு சங்கம் இருப்பது போல, தொழிலாளர்களுக்கு ஒன்றென்றால் நமக்குக் குரல் கொடுக்கவும் ஓர் அமைப்புக் கண்டிப்பாகத் தேவை என்பதை இக்கணத்தில் நாம் உணர வேண்டும். இல்லையென்றால் கொலைகாரர்கள்தான் தொடர்ந்து தங்கள் குற்றத்திற்கான தீர்ப்பை எழுதுவார்கள்.

– நற்றமிழன். ப‌.

மேலும் படிக்க –

http://www.moneycontrol.com/news/business/nothing-unusual-has-happened-at-tcs-says-nascom_1270414.html?utm_source=ref_article

http://articles.economictimes.indiatimes.com/2013-04-23/news/38763120_1_cognizant-indian-it-immigration-laws

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*