Home / சமூகம் / இனிவரும் பொங்கல் நமக்கான பொங்கல்

இனிவரும் பொங்கல் நமக்கான பொங்கல்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத புகழென்று சங்கே முழங்கு.
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.பொங்கல் திருவிழா தமிழர் திருநாள் மட்டுமல்ல, உழவனின் திருவிழா, உலகுக்கே உணவளிக்கும் தாய்மையின் திருவிழா, விதைத்து விளைவித்து முத்திச் சிரிக்கும் நெல் மணிக் கதிரை அறுத்து, திசைகளே சுவர், வானமே கூரை, ஞாயிறே ஒளி, கூடிக் குதூகலித்து குலவையிட்டு நாவுக்கு இனியதை தின்று, மனதுக்கு இனியதைப் பாடிக் கழிக்கும் பண்பாட்டுத் திருவிழா.

யாதும் ஊரே, யாவரும் கேளிர். இது சாதாரண‌ வரியல்ல. பிரபஞ்சவெளியில் அணுக்களின் இயக்கம் கரையானில் துவங்கி புல்லாகி,பூண்டாகி,பூவாகி, மனிதனாய் வியாபித்த அடையாளம். உயிர்தினைகள் என்பதை உயர்த்திக்காட்டி, மானுட நாகரீகம் என்பதே உயர்ந்தபட்ச மனிதாபிமானம் தான் என்பதை முதன்முதலில் மனிதகுலத்துக்கே வரையரைத்துக் காட்டிய வரிகள். இதுவே தமிழ் இனத்தின் இலட்சிய முழக்கமாக உச்சரிக்க படவேண்டும்.தமிழா.. இன்று முதல் மோசி கிரணும், முரசு கட்டில் என்கிற பழம் பெருமைகளை துடைத்தெறி. “முள்ளிவாய்க்கால்” கொடூர நிகழ்வை நெஞ்சில் ஏற்று. கோபமுறு. நெருப்பை நெஞ்சில் மூட்டு. ஏறு… ஏறு… ஏறி நின்று பாரடா உன் மானுட பரப்பை. அவர்களின் கல்லறையை தோண்டு… தோண்டு… தோண்டி எலும்புகளை எடு…உன் கோபம் நிறைந்த கண்ணீரால் அவர்களின் இலட்சியத்துக்கு உயிர் கொடு. கொடியோர் செயல் அறவே.என்றோ ஒருமுறை வர்ணம் பேசி களாவாடபட்ட நம் தென்மங்களை மீட்டெடுக்க வள்ளுவன், பாரதி,பாரதிதாசன் என்கிற புதிய படை சேர்போம், கோடிகளுக்கு அலையும் வண்ண கொடிகளின் கீழ் பிரிந்து நில்லாதே. தமிழ் இனம்,மனிதகுலத்தின் முன்னோடி என்பதை முன்னெடு.

உயிர் வதை மட்டுமே உயர்வாய் நினைத்து குளம்படிகளும்,குத்தீட்டிகளும், கொடுவாளுமாய் அலைந்து கால் சுவடுகளால் எல்லை விரிவாக்கிய கொடையும்,கொற்றமும் காணாமல் போயிருக்கலாம். “தாராளமயம்” என்கிற அசுர கொடையின் நஞ்சு படிந்த நிழலில் பூமிப்பந்தையே கையகப்படுத்தும் புதிய முயற்சிகளை முறியடிக்க வேண்டிய கட்டாய கடமை தமிழுக்குண்டு, உன் போர்க்குரலைப் பதிவு செய்.

unnamed
இனி வரும் நாட்களில் பொய், களவு, சூது, வன்மம், சாதி, தீண்டாமை இவைகளை சாம்பலாக்கும் நெருப்புக்குண்டங்களை தயார் செய்வோம். தாலமிக்கு முன்னரே பிரபஞ்ச இயக்கத்தை தொலை நோக்கை, கோள்களின் இயக்கத்தை கணித்து கூறிய வானவியல் சிந்தனைகளை புதிய தொழில்நுட்ப இயக்கத்தோடு இணைத்துக் கொள்வோம். வள்ளுவனை களவாட நினைக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்போம். அறிவினை விரிவு செய், அகண்டமாக்கு.புதியதோர் உலகம் செய்வோம்.

மாசு படாத காற்று, மாசு படாத நீர், மாசு படாத மண் போற்றி வளர்ந்த பூமியின் தாய்மை, அகம், புறம், உண்மை அன்பும், சிரிப்பும்

நட்பின் வெளிபாடு.

பசி, பட்டினி, சாபமுமல்ல, பாபமுமல்ல.

உண்பதும், உடுப்பதும், வரமுமல்ல,ஆசியுமல்ல.

உழைப்பின் உன்னதம், வேர்வையின் கொடை.

தேடலும், கண்டுபிடிப்பும் தேவையின் நிர்ப்பந்தம்.

உடலுக்கேற்ற உழைப்பு, தேவைக்கேற்ற பங்கீடு

காக்கை குருவி எங்கள் சாதி, கடலும் மலையும் எங்கள் கூட்டம்.

உயிர்திணைகள் கண்டு வாழ்ந்த உன்னத சமூகம்.

கோயில் வந்தது

குலம் வந்தது

சமயம் வந்தது

சாதி வ‌ந்தது

குடும்பம் வந்தது

சமூகம் சிதைந்தது

மனிதம் சாகத் துவங்கியது.

அழிவின் தொடக்கம் ஆரம்பமானது.

இன்று பணம் மட்டுமே உலக எஜமான்.

உழைப்பவன், அடிமையென்பது தீர்மானிக்கப்பட்ட உலக விதி.இனிவரும் பொங்கல், நமக்கான பொங்கல்.நல்லவர் காணும் பொங்கல். வேர்வைதுளிகள் போற்றப்படும் நாளாக போற்றும் நாளாய் மாற்றப்பட வேண்டும். அதுவே இனிய பொங்கல் வாழ்த்தாய் தெரிவித்துக் கொண்டாடுவோம்.

பாரதிதாசன்

இளந்தமிழகம் இயக்கம்

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*