Home / அரசியல் / திருவாளர் மோடிக்கு ஒரு கம்யூனிஸ்ட்டின் கடிதம் – 3
ஆஸ்திரேலியாவில் அதானியுடன் மோடி..

திருவாளர் மோடிக்கு ஒரு கம்யூனிஸ்ட்டின் கடிதம் – 3

இந்தியாவின் தலைமை அமைச்சர் மோடி அவர்களுக்கு வணக்கம்.

பதவியேற்றதிலிருந்து உள்நாட்டு – வெளிநாட்டுப் பயணங்கள். அதிகப் பயணக் களைப்பிலிருப்பீர்கள். பரவாயில்லை. தங்களுக்கு ஒரு கம்யூனிஸ்ட் எழுதுகிற கடிதம். எதைப்பற்றி எழுதலாம்? குஜராத்தைப் பற்றி பேசலாமா? உங்கள் சபர்மதி நதிக்கரையிலிருந்து தொடங்கலாமா? குஜராத்தின் இருதுருவங்களான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியையும், உங்களையும் பற்றிப் பேசுவோமா? திருவாளர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்களே! 2001 குஜராத் பூகம்பத்தின் விளைவாகப் பதவி இழந்த கேஷூபாய் படேலுக்குப் பதிலியாக 2001ல் முதலமைச்சரானதைப் பற்றியா? 2002 கோத்ரா 59 கரசேவகர்கள் ரயில் எரிப்பில் இறந்ததையொட்டி திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மதவெறி தாக்குதலில் 2000 இசுலாமியர் படுகொலைகளைப் பற்றிப் பேசலாமா? அல்லது 2005ல் மதச்சகிப்புத் தன்மை இல்லாதவர் எனக் கூறித் தங்களுக்கு விசா மறுத்த அமெரிக்காவைப் பற்றிப் பேசலாமா? 1987ல் பி.ஜே.பி யில் இணைந்து 1990ல் திரு அத்வானி தலைமையில் நடைபெற்ற சோம்நாத்திலிருந்து அயோத்தி வரையிலான ‘ராம்ரதயாத்திரை‘யை வடிவமைத்த தங்களது ஆற்றலைப் பற்றிப் பேசுவோமா? அல்லது திரு அத்வானி எதிர்ப்பை மீறி 2014 நடைபெற இருந்த பொதுத்தேர்தலுக்குப் பிரச்சாரத் தலைமைப் பொறுப்பாளராக நியமித்ததை அதன் தொடர்ச்சியாகப் பாரதீய சனதாக் கட்சியின் நாடாளுமன்றப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த பின்னணியைப் பற்றிப் பேசலாமா?

தங்களது கூட்டணி ஏகப்பெரும்பான்மை பெற்று, பிரதமராகப் பதவியேற்கும் முன்னரே ‘காஷ்மீர் சிறப்புச் சட்டத்தை நீக்குவோம்‘ எனக் கூறிய தங்களது உச்சபட்ச சனநாயகத்தைப் பற்றிப் பேசுவோமா? பிரதமர் பதவி ஏற்கும் முன் ‘வளர்ச்சி, வளர்ச்சி ‘ என மட்டுமே பேசித்திரிந்த தாங்கள் பதவி ஏற்ற பிறகு போகுமிடமெல்லாம், செல்லும் நாடுகளிலெல்லாம் தாங்கள் உதிர்க்கும் தாராளவாதப் பொருளாதார அறிவிப்புகளைப் பற்றிப் பேசுவோமா? அல்லது இந்துத்துவ அறிவிப்புகளைப் பற்றிப் பேசுவோமா? ஒவ்வொன்றாகப் பேசுவோமே மோடி அவர்களே! அய்யா மோடி அவர்களே! என்னைப்பற்றிச் சிலவரிகள் –

1976 பாதி வரை நான் ஒரு காளிபக்தன். ஆடியில் பிறந்ததால் மதுரை மீனாட்சி ஜோசியர் வழிகாட்டியபடி, குடும்பம் கூறியபடி துர்க்கைக்குக் குங்குமம் போட்டு, சூடம் ஏற்றி, ஆடி வீதி சுற்றிவந்தவன். 1976 எனது புதுமுக வகுப்பு விஞ்ஞானக் கல்வியும், டாக்டர் கோவூர் அவர்களது கட்டுரைகளும் ஆத்திகனான என்னை நாத்திகனாகப் புரட்டிப் போட்டது. கடவுள் மறுப்பாளனாகத் தொடங்கிய எனது அறிவுப் பயணம் 1977ல் தந்தை பெரியாரை நோக்கி திராவிடர் கழகத்தில் இணைத்தது. பகுத்தறிவு வாழ்க்கைமுறை, சாதிமறுப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு, இந்துச் சனாதன ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு சனநாயக உணர்வு, சமூக மாற்றத்திற்கான அடுத்தகட்டத் தேடலாக, மார்க்சிய – லெனினிய இயக்கம் நோக்கி 1982ல் ஒப்படைக்க வைத்த்து. கடந்த 38 வருடங்களாக எனது அரசியல் – பண்பாட்டுப் பயணம் சாதிய – நிலவுடைமைச் சுரண்டல் – ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, உலகமயப் பன்னாட்டுக் கைக்கூலி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, சிறுபான்மை இசுலாமியர் – கிறிஸ்தவர் – பௌத்தர் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினர், பெண்களுக்கு எதிரான, மதச்சார்பற்ற சனநாயகத்திற்கு எதிரான ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி காவிப்படையினரின் நடவடிக்கைகளுக்கு எதிரான களங்களில் இயங்கி வருகிறேன். 1990ல் ரதயாத்திரை தொடங்கி 1992 டிசம்பர் 6 உங்கள் கரசேவகர்கள் அயோத்தி பாபர் மஸ்ஸீத் இடித்ததின் தாக்கம் 1993ல் எனது முயற்சியில் தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் தொடங்கினோம். மண்ணின் மைந்தர்களான மாவீரன் பகத்சிங், அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார், அயோத்திதாசர் உள்ளிட்ட சிந்தனையாளர்களின் துணையுடன், பேராசான் காரல்மார்க்சின் சிந்தனை மரபில் கருத்தியல் தளத்திலும் பங்காற்றி வருகிறேன். போதும் என்னைப்பற்றி.

இந்தியாவில் இதுவரை பதவியேற்ற தலைமை அமைச்சர்கள் எல்லாம் 1947க்கு முன்பு பிரிட்டிஷ் அடிமை இந்தியாவில் பிறந்தவர்கள். நீங்கள் மட்டுமே விடுதலை இந்தியாவில் 1950 செப்டம்பர் – 17ல் பிறந்தவர். எங்கள் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் செப் -17 பிறந்தநாள். எதிரெதிர் துருவங்கள் ஒரே தேதியில். விடுதலைக்குப் போராடாத ஜனசங்க ஆர்.எஸ்.எஸ் மரபில் வந்தவர்களுக்கு, விடுதலைக்குப் போராடி பல உயிர்களை இழந்த கம்யூனிஸ்ட் மரபில் விடுதலை இந்திய – தமிழ்நாட்டில் 1959ல் பிறந்தவனின் கடிதம். தங்களது குடும்பத்துக்குச் சொந்தமான தேநீர்க்கடையில் தாங்கள் நடமாடியது தேர்தலில் தங்களுக்குப் பிரச்சாரத்திற்குப் பயன்பட்டது. பிரச்சாரத்திற்கு டீக்கடைகள், பிரதமரானபின் கார்ப்பரேட் கம்பெனிகள். அய்யா, கோபப்படாதீங்க!

குஜராத்தின் சபர்நதிக்கரை இரண்டு நேரெதிர் அடையாளங்களைக் கொண்ட தங்களையும், காந்தியையும் தந்துள்ளது. கலவரங்களுக்கு எதிரான அடையாளமாக மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியையும், கலவரங்களின் படுகொலைகளின் அடையாளமாகத் தங்களையும் தந்துள்ளது. இந்துத்துவ மதவெறிக்கு எதிராகப் பேசிய இந்து என்பதால் சுட்டுக்கொல்லப்பட்டார் காந்தி. இந்துத்துவ மதவெறியைக் கட்டமைத்ததால் நாட்டின் தலைமை அமைச்சரான நீங்கள். விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாகத் திகழ்ந்த காந்தி பதவியை மறுத்தவர். பதவியை அடைவதற்கான பயணத்தை விரைவுபடுத்தியவர் தாங்கள். கோட்சேயால் கொல்லப்பட்டவர் காந்தி. கோட்சேயை உயர்த்திப்பிடிப்பவர் தாங்கள். ஆர்.எஸ்.எஸ் சின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி வழியாக ஆர்.எஸ்.எஸ் ஊழியரான மோடி அவர்களே! 1987ல் தான் பா.ச.க வில் நுழைகிறீர்கள். 1990 அயோத்தி பாப்ரி மஸ்ஜீத்தை இடிக்கும் நோக்கோடு ‘இராமர் கோயிலைக் கட்டுவோம்‘ எனும் முழக்கத்துடன் அத்வானி தலைமையில் நடந்த சோம்நாத் முதல் அயோத்தி வரையிலான ‘இராம் ரதயாத்திரை‘‘இராம் ரதயாத்திரை‘ இதன் ஒருங்கிணைப்பாளராக உங்களை முன்னே கொண்டு வந்தது. தாங்கள் 1998ல் பா.ச.க. கட்சியின் பொதுச்செயலாளர். 2001ல் குஜராத் நிலநடுக்கம். சாதி, மத வித்தியாசமில்லாமல் பேரழிவு. 20,000 பேர் பலி. நிவாரணத் திட்டங்கள் சாதி ரீதியாக, மத ரீதியாக வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள். சமாளிக்கத் திறனில்லாத உங்கள் கேஷூபாய் படேலுக்குப் பதிலாக நீங்கள் முதலமைச்சராக முன்னிறுத்தப்பட்டுப் பதவி ஏற்றீர்கள்.

a194192672348800181428604531580

பதவி ஏற்ற ஒரே வருடம். கோத்ரா ரயில் பெட்டி எரிப்பில் 59 இந்து கரசேவகர்கள் இறந்ததையொட்டி குஜராத்தில் நடந்த இந்துத்துவக் காவிப்படை மதவெறியாட்டம் 2000 முஸ்லீம் மக்களைப் படுகொலை செய்தது. மந்திரிகள், அதிகாரிகள், காவல்துறை என ஆர்.எஸ்.எஸ், பா.ச.க குண்டர்களுக்குத் துணையாக, நேரடியாக ஈடுபட்ட படுகொலை மதவெறிச் சம்பவம். குழந்தைகள், பெண்கள், முதியோர் என யாரையும் விட்டுவைக்கவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் உங்களது ஆட்சி. வாஜ்பாய் தலைமையில் தமிழகத்தின் தி.மு.க வும் அமைச்சரவையிலிருந்து கைகட்டி பதவி சுகம் அனுபவித்தது மறக்க முடியாதது. பெரும்பான்மை இந்துச் சமூக வாக்குகளைக் குறிவைத்த உங்கள் கட்சி, ‘இந்தியா ஒளிர்கிறது‘ எனச் சொல்லி தோற்றுப் போனது. ஆனால் நீங்கள் 2002, 2007, 2012 நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து முதலமைச்சர். பா.ச.க வுக்குள் அத்வானியை வீழ்த்தி பதவிக்கு வர இது போதாதா? மோடி அவர்களே ! தங்களை மதச்சகிப்புத் தன்மை இல்லாதவர் அதாவது நவீன உலகத்திற்குத் தாங்கள் பொருத்தமற்றவர் எனக் கூறி அமெரிக்கா தங்களுக்கு விசா தொடர்ந்து மறுத்து வந்ததை யாரும் மறக்க முடியாது. 2014ல் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலுக்குப் பிரச்சாரஅணித் தலைமைப் பொறுப்பாளராக 2013ல் நியமிக்கப்பட்டீர்கள். பாவம் அத்வானி தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடிப் பார்த்தார். ‘போரில் உறவுகளைப் பார்க்காதே‘ எனக் கிருஷ்ண பரமாத்மா பாரதப் போரில், பகவத்கீதையில் சொன்னதை உட்கட்சியில் நிரூபித்தவர் நீங்கள்.

ஆர்.எஸ்.எஸ் உங்களை முன்னிறுத்தியே பா.ச.க தேர்தலைச் சந்திக்கப் பிரதம வேட்பாளராக அறிவிக்க வைத்தது. ஆர்.எஸ்.எஸ் வரலாற்றில் தனிநபரை முன்னிறுத்தும் சறுக்கல் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்துத்துவக் கருத்தியல் எடுபடவில்லை. தனிநபரின் கார்ப்பரேட் ஆதரவு முகம் தேவைப்பட்டது. ‘வளர்ச்சி, வளர்ச்சி‘ என்பதே தாரக மந்திரமாகத் தேர்தலில் மாறியது.

மோடி அவர்களே! திடீரென்று கார்ப்பரேட் நிறுவனங்களின், ஊடகங்களால் பூதாகரமாக்கப்பட்ட தங்களது பிம்பம், குஜராத்தில் எடுபட்ட தனது அரசியல் தோற்றுப்போகுமோ! எனப் பயந்த நீங்களும் உங்கள் கட்சியும் வதோதரா தொகுதி, வாரணாசி தொகுதி இரண்டிலும் வேட்பு மனுத்தாக்கல் செய்தீர்கள். தாங்களே எதிர் பார்க்காமல் இரண்டிலும் வெற்றிப் பெற்றதோடல்லாமல், உங்கள் கட்சி ஏகப்பெரும்பான்மை பெற்று இந்திய அரசியலில் கூட்டணி சகாப்தத்தைத் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வந்தது. அமைச்சரவையில் கூட அத்வானி போன்ற மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பில்லை. உங்களுக்குக் கட்சிக்குள் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியுள்ளது. பிரதமராகப் பதவியேற்கும் முன்னரே ‘காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சட்டம் இரத்துச் செய்யப்படும்‘ என திருவாய் மலர்ந்தீர்கள்.

ஏகப்பெரும்பான்மை நாடாளுமன்றத்திலிருந்தாலும் வரிசையாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. சனநாயக ரீதியாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றும் தன்மையைப் புறக்கணித்துக் காங்கிரஸ் டங்கல் திட்டம், அணு ஆயுத ஒப்பந்தம் என நாடாளுமன்றத்தைத் தவிர்த்ததோ அதேவழியில் ‘அவசரச் சட்ட அரசாக‘ மாறிக் கொண்டிருக்கிறது. நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்க அவசரச் சட்டம், காப்பீட்டுச் சட்டத்திருத்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் மூலம் அவசரச் சட்டம் பிறப்பிக்க அமைச்சரவை ஒப்புதல், பன்னாட்டுக் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விளைநிலங்களைக் கையகப்படுத்தி, கைமாற்றிக் கொடுக்க ‘நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் என மோடி அரசு ‘அவசரச் சட்ட அரசாக‘ மாறிக் கொண்டிருப்பது சனநாயகத்தில் நம்பிக்கையற்றதை வெளிக்காட்டுகிறது.

மோடி அய்யா, தங்களின் உள்நாட்டு, கூடுதலாக வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள், கலந்து கொள்ளும் கூட்டங்களில் அள்ளிவிடுவதும், தினசரி அறிவிப்பும் இதுவரை பேசாத பிரதமர்களான நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகியோரைப் பார்த்தவர்களுக்குப் புதிதாக இருக்கிறது. பேசுவதையே அரசியல் வாழ்க்கையாகக் கொண்டிருப்பதைப் பார்க்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எங்களுக்கு இவையெல்லம் அதிசயமாக இல்லை. ‘மேட் இன் இந்தியா‘(Made in India) என்பதை மாற்றி ‘மேக் இன் இந்தியா‘ (Make in India) என தங்கள் பன்னாட்டு முதலாளிகளை அறைகூவி அழைக்கும் கார்ப்பரேட் ஆதரவு நிலை வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தியாவின் 80கோடிப் பேர் 35 வயதுக்குக் குறைந்தவர்கள். குறைந்த உற்பத்திச் செலவில் அதிக இலாபம் கொள்ளையடிக்கத் தேவையான இளமையான மனித உழைப்பு எங்கள் நாட்டில் உள்ளது. வாருங்கள்! வாருங்கள்! இந்தியாதான் உங்களுக்குத் தகுந்த இடம் எனக் கூவிக் கூவி அழைப்பதில் காங்கிரசுக்கும், உங்களுக்கும் எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியவில்லை. ‘மேக் இன் இந்தியா‘ – 25 முக்கியத் துறைகள் – தொழில் துறைக்கான சட்டங்கள் மேலும் தளர்த்தப்படும், 30 நாட்களுக்குள் அனுமதி இசைவு ஒற்றைச்சாளர முறையில் தங்கு தடையில்லாமல் வழங்கப்படும். இந்தியாவின் இயற்கை வளங்களை, கனிம‌ வளங்களை, மனித வளத்தை வேட்டையாட பன்னாட்டு நிறுவனங்கள் வருகை தொடர்கிறது. உங்கள் சுதேசி முகம் கிழிந்து தொங்குகிறது. போபால் விஷவாயு அழிவுகளைச் சந்தித்த நாடாக, 20,000 தொழிலாளர்களை வீதியில் விரட்டிவிட்டுச் சென்னையில் தனது உற்பத்தியை நிறுத்திவிட்டு ஓடிய நோக்கியா நம்முன் சாட்சியாக உள்ளது. தொடர்ச்சியாக ஃபாக்ஸ்கான் நிறுவனமும் மூடுவதாக அறிவித்துள்ளான். வரிபாக்கி, வேலை இழப்பு இதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் சாதனை. உங்களது பன்னாட்டுச் சார்பு எங்கள் தொழிலாளர்களை வீதிக்கு விரட்டுகிறது. நிலம், மின்சாரம், வரிச்சலுகை, தொழிலாளர் சட்டங்களிலிருந்து விதிவிலக்கு, தொழிற்சங்க உரிமை மறுப்பு, ஒட்டச் சுரண்டிய பிறகு இறுதியில் ஓடிப்போவது! இதுதான் உங்களது தொழிற்கொள்கை. உள்நாட்டில் 50 கோடி கொடுத்தால் ஃபாக்ஸ்கான் ஆலை இயங்கத்தொடங்கும். ஆனால் பன்னாட்டு முதலாளி அதானிக்கு 6000கோடி ரூபாய் ஆஸ்திரேலியாவில் தொழில் தொடங்க அரசு உதவி. தொடக்கத்திலேயே இதுதான் தங்களது சுதேசி லட்சணம்.

ஆஸ்திரேலியாவில் அதானியுடன் மோடி..

ஆஸ்திரேலியாவில் அதானியுடன் மோடி..

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் இரகுராம்ராஜன் தனது பாரத் மெமோரியல் உரையில் ‘ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி என்பதை, இந்தியாவுக்கு உகந்த உத்தி அல்ல‘ எனக் கூறியுள்ளார். இந்திய பா.ச.க அமைச்சர்கள், தலைவர்கள், பா.ச.க ஆதரவு பொருளாதாரப் புலிகள் எனச் சிலர் பதிலளிக்க இறக்கி விடப்பட்டுள்ளனர். சரிபாதித் தொழிலாளர்கள் விவசாயத்தை நம்பியே உள்ள நமது நாட்டில் ஏற்றுமதிக்காக உற்பத்தி என்பது உலகச் சந்தையை நோக்கித் திருப்பப்படுவது அழிவைத் தரும் செயல் இல்லையா மோடி அவர்களே! உங்களுக்கு விசா மறுத்த அமெரிக்கா இன்று உங்களைக் கொண்டாடுகிறது. உங்கள் மீது பாசமா? பரிவா? இல்லை மோடி அவர்களே! கனிம வளம், மனித வளம், இயற்கை வளம் நிறைந்த நாட்டின் தலைமை அமைச்சர் . கொள்ளையடிக்க உங்கள் தயவு தற்போது தேவை. நீங்களும் தயார்தான். மன்மோகனைவிட வேகமாக உள்ளீர்கள் அய்யா. இந்தியாவின் இறையாண்மை ஏகாதிபத்திய நாடுகளால் சூறையாடப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நிலையில், இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் அமெரிக்காவின் அதிபர் ஒபாமா அவர்கள் இந்தியக் குடியரசு நாளில் விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

வேடிக்கைதான். கதரும், காவியும் ஒரே திசையில் தாராளவாத ஏகாதிபத்திய ஆதரவுப் பொருளாதாரக் கொள்கைகளை அமுலாக்கும் ஏகாதிபத்திய தாசர்களாக. வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தைக் கைப்பற்றி இந்தியாவிற்குக் கொண்டு வந்து பத்து சதவீத தொகை வருமான வரி செலுத்துவோர் கணக்கில் போடப்படும் என்று தேர்தலுக்கு முன் வாக்குக் கொடுத்தீர்களே நினைவிருக்கிறதா? அந்த வாக்குறுதி என்னவாயிற்று? உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் 150 என விலை நிலையிலிருந்து 50 விலைக்குக் குறைந்தது. உள்நாட்டில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை மூன்றில் ஒருபங்காகக் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உங்கள் அரசு பெயரளவிற்கு ஓரிரு ரூபாய்கள் குறைத்து விட்டு, அரசு வரிவிதிப்பின் மூலம் உலகச் சந்தை விலைக்கு ஏற்றவாறு குறைக்காமல் பார்த்துக் கொண்ட மக்கள் நல அரசு அல்லவா. தேர்தலுக்கு முன்பு விலையைக் குறைப்பேன் என்ற உங்களது சவடால் என்னவாயிற்று?

உங்களது இந்த வகையான முயற்சிகளுக்கு எதிரான மக்களின் போராட்டங்களைத் திசை திருப்ப தீவிரவாத எதிர்ப்பு, நக்சல்பாரி எதிர்ப்பு, முழக்கங்களும், ‘கிளீன் இந்தியா‘, ‘தூய்மை இந்தியா‘ நாடகங்களும் வருகின்றன. இதுதான் இராஜீவ் ஆட்சியிலும், இதுதான் வாஜ்பாயி ஆட்சியிலும். வாஜ்பாய் ‘பொடா‘ சட்டம் கொண்டு வந்தார். நீங்கள் எதைக் கொண்டு வரப் போகிறீர்களோ?

இந்தி வாரம் கொண்டாடச் சொல்வது, சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி எனக் கூறி மத்திய அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருத விழாக்கள் நடத்தக் கோருவது, அமெரிக்காவில் ஒபாமாவைச் சந்திக்கும்போது ‘பகவத்கீதை‘ நூலைக் கொடுத்ததோடல்லாமல் நாட்டின் தேசியப் புனித நூலாகப் ‘பகவத் கீதையை‘ அறிவிக்க உங்கள் குழாமைச் சேர்ந்தவர்கள் கத்துவதும், அடுத்தடுத்த செய்திகளாக மதச்சார்பற்ற சக்திகளையும், சிறுபான்மை மதச்சக்திகளையும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. தனது ஆட்சி மாநிலங்களை வலுப்படுத்துவதாக இருக்கும் என ஆட்சியேறியவுடன் சொன்ன நீங்கள் முதலில் மொழிப் பிரச்சனையில் தொடங்கியுள்ளீர். இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு – தாய்மொழி மறுப்பு எனத் தொடங்கியுள்ளீர்.

ஆக்ராவில் இந்துத்துவ சக்திகளால் நடத்தப்பட்ட தாய்மதம் திரும்பும் கட்டாய மதமாற்றம் வருங்காலம் குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது. கடந்த காலங்களில் முதன்மையாகச் சமூகத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறையிலிருந்து தப்பிக்க இந்தியாவிற்குள் வந்த இசுலாமிய, கிறிஸ்தவ மதங்களுக்கு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மதம் மாறினர். இந்தியாவில் தோன்றிய பௌத்த, சமண மதத்தவர்களைத் திருஞானசம்பந்தர் சைவ மதத்திற்குக் கட்டாயமாக மாற்றினார் எனும் வரலாற்றுச் சம்பவங்கள் எமது தமிழ்நாட்டில் உண்டு. சீனா, சப்பான், இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் செல்வாக்கோடு இருக்கும் பௌத்தம் இந்தியாவில் கட்டாய மதமாற்றத்தினால் தனது ஆளுமையை, செல்வாக்கை இழந்தது. சைவ மதத்திற்கு மாற மறுத்த சமணர்கள் ஆயிரக்கணக்கில் கழுவிலேற்றிக் கொல்லப்பட்டதாக எமது மதுரையில் வரலாற்றுச் சுவடுகள் உண்டு. ‘தாய்மதம் திரும்புங்கள்‘ எனும் முழக்கம் உங்களது இந்துத்துவக் காவிப்படைக் கூட்டத்தால் முன்வைக்கப்பட்டுச் சலுகைகள் வழங்கப்பட்டும், கட்டாயப்படுத்தப்பட்டும் இசுலாமியர்களும், கிறிஸ்தவர்களும் மதம் மாற்றம் செய்யப்படுகின்றனர். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் எந்த வர்ணத்தில் வருபவர்களைச் சேர்ப்பீர்கள்? எந்தச் சாதியில் அவர்களுக்குத் துண்டு போட்டு இடம் பிடித்துக் கொடுப்பீர்கள். சாதி மறுப்புத் திருமண எதிர்ப்பிலும், காதல் திருமண எதிர்ப்பிலும் முன்னிற்கும், சாதியக் கௌரவக் கொலைகளுக்குத் துணை நிற்கும் உங்களது காவிப்படை பிற்போக்குச் சக்திகள் மதம் மாற்றம் செய்து எந்தச் சாதியில் சேர்ப்பீர்கள்? வெளிப்படையாகச் சொல்ல முடியுமா? சூத்திர மோடி அவர்களே!

unnamed1

ஊழலில் கடந்த வாஜ்பாயி அரசிலேயே தங்களது கட்சியின் பங்காரு லட்சுமணன் தொடங்கி, அருண்சோரி, ஜஸ்வந்த்சிங்கின் தொலைத்தொடர்பு ஊழல் பிரபலமானது. சவப்பெட்டி ஊழலும், பாரக் ஏவுகணை ஊழலும், கர்நாடக எடியூரப்பாவும், நிலக்கரிச் சுரங்க ஊழலும் என ஊழலுக்குப் பா.ச.க. வும் அப்பாற்பட்ட புனிதரில்லை என்பதைக் காட்டுகிறது.

சி.பி.ஐ, நீதிமன்றம், அரசு இயந்திரங்களில் செல்வாக்குச் செலுத்துவது என்பது அப்பட்டமாக குஜராத் படுகொலைகள் – பாதிக்கப்பட்ட இசுலாமியர்கள் மீது பொடாசட்டமும், தாக்கிய, படுகொலை நடத்தியவர்கள் மீது சாதாரண வழக்குகளும் போட்டது நாடறிந்ததே. 2005ம் ஆண்டு குஜராத்தில் சொராபுதீன் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார். நேரில் பார்த்த சாட்சி துளசி பிரஜாபதி 2006ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத் உள்துறை அமைச்சர், உங்களது நண்பர் அமித்ஷாவுக்கு தொடர்புள்ளதாக சி.பி.ஐ குற்றம் சாட்டியது. 2010ல் கைது செய்யப்பட்டார். மோடியின் குஜராத் அமைச்சரவையிலிருந்து பதவி விலகினார். 2012ல் வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டு, 2013ல் சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்திய நாட்டின் தலைமை அமைச்சராக நீங்களும், பா.ச.க கட்சியின் தலைவராக குற்றவாளி என அறியப்பட்ட அமித்ஷா பதவியேற்றார். எப்படி அமித்ஷாவின் வழக்கு நேர்மையாக நடக்கும். ஆதாரம் இல்லை என அமித்ஷா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதுபோன்ற விசயங்களில் செல்வாக்குச் செலுத்துவது நியாயமா மோடி அவர்களே? சமூகத்தில் இணக்கமான சூழலைத் தொந்தரவு செய்பவர்கள் நீங்கள் என்பது அயோத்தி மசூதி இடிப்பிலும், குஜராத் படுகொலையிலும் வெளிப்பட்டது போதாது என்று தற்போது தாஜ்மகால் மீது உங்கள் கரசேவைக் கண்கள் படியத் தொடங்கியுள்ளது வரை நிரூபணமாகியுள்ளது.

இந்தியா பௌத்தர். சமணர், இசுலாமியர், கிறிஸ்தவர், இந்து எனப்படுபவர்கள், இந்துக்கள் எனப் பல மதங்களைச் சார்ந்தவர்கள், பல வழிபாட்டு முறைகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். பல மொழி பேசும் தேசிய இனங்களின் பன்முக அடையாளங்களை அழிக்கும் உங்களது இந்து ஓரடையாளமோ, இந்தி, சமஸ்கிருத அடையாளங்களோ எடுபடாது என்பது இன்னுமா புரியவில்லை. நீங்கள் தேர்தல் அரசியலில் வென்றிருக்கிறீர்கள். மீண்டும் தோற்க வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே வாஜ்பாயி சந்தித்த சூழல் தங்களுக்கு வராது என எண்ணாதீர்கள்.

வாஜ்பாயி, மாளவியா ஆகியோருக்கு பாரத ரத்னா அறிவிப்பதும், கிறிஸ்துமஸ் நாளான டிசம்பர் – 25 அன்று நல்லாட்சி நாளாக அறிவித்து விடுமுறையை மறுப்பதும் நல்லதில்லையே மோடி அவர்களே! காந்தி அவர்களைக் கொலை செய்த கோட்சேவுக்கு சிலை வைப்போம் என உங்கள் ஆட்கள் பேசுவது இந்தியாவின் மன உணர்வுகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாத தன்மையையே காட்டுகிறது. அய்யா தாங்கள் மக்களவையில் பெரும்பான்மை பெற்றிருக்கிறீர்கள். மாநிலங்களவையில் 64 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளீர்கள். முக்கிய சட்ட முடிவுகள் இரண்டு அவைகளிலும் நிறைவேறினால் தான் சட்டமாகும். என்ன செய்வீர்கள்? கூட்டு அமர்வுக்கு முனையணும். ஆனால் உங்களுக்கு நாடாளுமன்றமே ‘சைட் டிஷ்‘ தான். அவசரச் சட்ட அரசு நடத்தத் தயாராகி விட்டீர்கள். அதென்ன? காங்கிரஸ் திட்டமிட்டு தற்காலிகமாகக் கைவிட்ட எரிவாயு மற்றும் இதர மானிய விலைபொருள்களுக்கு மானியத்தை அவரவர் வங்கிக் கணக்கில் போடுவது எனும் திட்டத்தை நீங்கள் கையிலெடுத்திருக்கிறீர்கள். விலையேற்றம், மானிய வெட்டு உலகமயத்தின் வெளிப்பாடு. காங்கிரசின் அதே பொருளாதாரக் கொள்கைகளை அவர்களைவிட வேகமாக நீங்கள் அமுலாக்கத் தொடங்கி விட்டீர்கள். முழுப்பணத்தைக் கட்டி எரிவாயு உருளை வாங்கும் பழக்கத்தை உருவாக்க காங்கிரசு கட்சி ‘உங்கள் பணம் உங்கள் கையில்‘ என்றார்கள். நீங்கள் சொல்வது ‘அவரவர் பணம் அவரவர் கையிலா?‘ மக்களை உலகமய தாராளவாதத்திற்கு ஏற்றவாறு மாற்றிப் பழக்கப்படுத்த காங்கிரசை மிஞ்சும் பா.ச.க வின் மோடி. தங்களது சுதேசித் திறமைக்கு பாராட்டுக்கள்.

தாராளமயமாக்கம் இந்தியாவுக்கு அவசியமானது எனத் தத்துவ விளக்கம் கொடுத்த முன்னாள் பிரதமர், உலகவங்கி அதிகாரி மன்மோகன்சிங், மான்டெக் சிங் அலுவாலியா, ப.சிதம்பரம் கதி என்னவாயிற்று? நாட்டின் சிறுதொழில்கள், பாரம்பரியத் தொழில்கள் , விவசாயம், சில்லறை விற்பனை அனைத்தையும் நாசமாக்கியது 1990 முதல் அமுலான தாராளவாதப் பொருளாதாரக் கொள்கை, அமுலாக்கத்தில்தானே.

tamilnadu

2016ல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க வுக்கு பெரும் பின்னடைவு ஒரு தொகுதியில் கூட வரவில்லை. 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுச் சிறைசென்று திரும்பினாலும், முதலமைச்சராக நீடிக்க முடியாமல் ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக்கியது தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உருவானது என எண்ணி நீங்களும், பா.ச.க. தலைவர்களும் குதூகலிக்கிறீர்கள்.

மோடி அய்யா, இந்தியத் துணைக்கண்டத்தில் வட இந்தியாவும், தென் இந்தியாவும் ஒரே மாதிரி இல்லை. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் அய்யா. அதிலும் தமிழ்நாடு குறிப்பாக மாறுபட்டுள்ளது. ஆந்திர, கர்நாடகாவில் உங்களுக்கு வாய்ப்பளித்தது போல தமிழ்நாடு இருக்காது. ஆந்திராவில் – 3, கர்நாடகாவில் – 17, தமிழ்நாடு – 1, ஒடிசா – 1, கேரளாவில் ஒன்றுமில்லை. இதுதான் உங்கள் நிலை. தமிழ்நாட்டிலும் நாடார் சாதி வாக்குகளினால் 1 இடம். இந்தச் சூழலைப் புரிந்து கொண்டதால்தான் சாதி அமைப்புகளோடு கரம் கோர்க்க முனைந்துள்ளீர்கள். உங்கள் ஆர்.எஸ்.எஸ் – பா.ச.க. வகையறா தேர்தலுக்கு முன்பு கச்சத்தீவு பிரச்சனையில் தலையை நுழைப்பதும், ஈழத்தமிழர் உரிமைக்கான மேடைகளில் தலையைக் காட்டியதும் செய்தீர்கள். ஆனால் உங்கள் பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் இராசபக்சேவை அழைத்தது தொடங்கி, உங்கள் கூட்டணி சலசலக்கும் அளவிற்கு அம்பலப்பட்டு நிற்கிறீர்கள்.

ம.தி.மு.க வெளியேறி உள்ளது. பா.ம.க, தே.மு.தி.க என வெளியேற முகூர்த்த நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மண்டல் கமிசன் இடஒதுக்கீட்டுக்கு எதிராக வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த உங்கள் ஆர்.எஸ்.எஸ், பா.ச.க வகையறா மோகன் பாகவத் இடஒதுக்கீட்டை ஆதரித்து அறிக்கை விடுகிறார். தனியார்மயமாகி வருவது அதிகரித்த சூழலில் இடஒதுக்கீடு ஆதரவு உண்மையென்றால் தனியார் துறையில் இடஒதுக்கீடு அறிவிப்பு செய்யுங்களேன். இந்தியாவின் நகர் மயமாக்கம் உங்களது இன்றைய ஈர்ப்பு மையமாக இருக்கலாம். அய்யா மோடி அவர்களே! நகர்மயமாக்கத்தை ஏற்கனவே விரைவான மாற்றத்தைக் கண்டது தமிழ்நாடு தெரியுமா? மோடி, தருண் விஜய் எனப் தமிழ்ப் பெருமிதம் பேசத் தொடங்கியுள்ளனர். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்ய வைத்ததின் மூலம் தன்னை மீனவர் பங்காளியாகக் காட்ட முயற்சித்த தங்களது நாடகம் ஒப்பனை கலைந்து நிற்கிறது அய்யா மோடி அவர்களே! தமிழ்நாடு மதச்சார்பற்ற முற்போக்கு மரபைக் கொண்டது. சித்தர்களும், சாருவாகர்களும், பின்னர் நவீன சமூகக் கட்டமைப்பின் முன்னோடிகளாக அயோத்திதாசரும், தந்தை பெரியாரும் நவீனச் சிந்தனைப்போக்கை வளர்த்தெடுத்து நடைமுறைப்படுத்தினர். வேதகால எதிர்ப்பும், மூடநம்பிக்கை எதிர்ப்பும், சாதி எதிர்ப்பும், இந்துமதச் சனாதன எதிர்ப்பும் கருத்தியலாக மட்டுமில்லை, இயக்கமாக இயங்கிய தமிழ்நாடு. காந்தியை தனது காலம் முழுவதும் எதிர்த்துக் கொண்டிருந்த தந்தை பெரியார் கோட்சேயால் காந்தி கொல்லப்பட்டவுடன் கண்டித்ததுடன், இந்தியாவுக்கு ‘காந்தி தேசம்‘ எனப் பெயர் சூட்ட வேண்டும் என்றார். காங்கிரசை ஒழிப்பதே தனது வாழ்க்கையின் இலட்சியம் என இயங்கிய தந்தை பெரியார் இடஒதுக்கீடு, கல்வி, அரசு வேலை என பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான திட்டங்களை அமுலாக்கத் தொடங்கிய காங்கிரசின் காமராசரை ஆதரித்தார்.

Koodankulam-March-16-400x266

பெரியாரையும், அண்ணாவையும் எதிர்த்து அரசியல் செய்ய முயற்சிக்கும் உங்களது ஆர்.எஸ்.எஸ் தமிழ்ப் பெருமிதத்தை, திருக்குறளைப் பேசி தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிக்கிறீர்கள். 1967க்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளின் தயவில்லாமல் நிற்க முடியாது எனும் நிலை உருவாகி உள்ளது. ஈழத்தமிழர் பிரச்சனையில் இலங்கை அரசுக்குத் துணை போனதன் விளைவு காங்கிரசை மட்டுமல்ல, காங்கிரசுக்குத் துணை போன தி.மு.க வையும் துடைத்தெறிந்து உள்ளனர் தமிழ்நாட்டு வாக்காளர்கள். உங்கள் இராம பஜனையும், இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலும், இராமர் பாலக் கற்பனையும், பகவத் கீதையும் தமிழகத்தில் காலூன்ற துணை செய்யாது. தமிழ்நாட்டிற்கு காவிரித் தண்ணீர் தர மறுக்கும், முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக, பாலாற்றின் தமிழக உரிமைக்கு எதிராக, கர்நாடகாவில், கேரளாவில், ஆந்திராவில் இனவெறியூட்டும் கட்சியினர் மத்தியில் உமது ஆர்.எஸ்.எஸ், பா.ச.க. நிலை என்ன மோடி அவர்களே! கர்நாடக இந்து – தமிழ்நாட்டு இந்துவுக்கு, கேரள இந்து – தமிழ்நாட்டு இந்துவுக்கு, நீர்தர மறுக்கிறானே! உங்களது இந்து இந்தி இந்தியா பிற்போக்குத்தனமானது. பல தேசிய இனங்களைக் கொண்ட இந்திய ஒன்றியத்தை தேசிய இனக் குடியரசுகளின் கூட்டமைப்பாக சம அந்தஸ்தோடு மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது மோடி அவர்களே!

உங்களை விட கோவில் கும்பாபிசேகம் நடத்தும் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் இங்குண்டு. அரைப் பா.ச.க வாக தி.மு.க வும், அ.தி.மு.க வும் உள்ளது. ‘மக்கள் முதல்வரை‘ தண்டனையிலிருந்து காப்பாற்றி மீண்டும் முதல்வராக்க காவடி எடுப்பதும், ஓமகுண்டம் வளர்ப்பதும், மண்சோறு சாப்பிடுவதும், தங்கத்தேர் இழுப்பதும், உருளுவதும், பூஜை புனஸ்காரங்களும் என உங்களைத் தோற்கடிக்கும் வகையில் கட்சிகள் உள்ளது. முகூர்த்தக் கால் ஊன்றாமல் மாநாடு நடத்த மாட்டார்கள்.

25.10.14 அன்று மும்பையில் எச்.என். ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்துப் பேசிய தாங்கள் ‘மகாபாரதத்தில் கர்ணன் குந்தியின் கருப்பையிலிருந்து பிறக்கவில்லை, டெஸ்ட்டியூப் குழந்தை பற்றி அன்றே சிந்தித்து உள்ளார்கள் என்றும், நாம் வழிபடும் கணேசன் அதாவது பிள்ளையார் யானையின் தலையை மனிதனின் உடலில் பொருத்தக் கூடிய அளவுக்கு ‘பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை‘ பற்றிய அறிவு இருந்துள்ளது என மருத்துவர்கள் முன்னிலையில் பேசியதை மருத்துவர்கள் யாரும் மறுக்காமலிருந்தது உங்களது அறிவை மெச்சியோ! மரியாதை காரணமாகவோ இல்லை, அச்சம்! அச்சம்!

தமிழ்நாட்டில் இராசேந்திர சோழன் ஆயிரமாவது முடிசூட்டு விழா கொண்டாட ஆர்.எஸ்.எஸ் முயற்சி, கங்கை கொண்ட சோழபுரத்தான் களவெற்றிகளையும், ஆட்சிச் சிறப்புகளையும் உயர்த்திப் பிடித்து, இந்திய கடற்படை கொண்டாட முடிவெடுத்துள்ளார்கள். என்ன முதன்மைக் காரணம்? வடமொழியான சமஸ்கிருதமே வளர்க்கப்பட்டது. வேதம் ஓதும் பிராமணர்கள் கொண்டாடப்பட்டனர். தஞ்சையில் மாமன்னன் இராசராசனும், கங்கை கொண்ட சோழபுரத்தில் மகன் இராசேந்திரனும் மலைகளில்லாத மருத நிலத்தில் கற்களால் கோயில்களைக் கட்டினர். கோவில்களிலும், மடங்களிலும் வேதம் முழங்கிற்று‘ என்கிறார் கே.கே.பிள்ளை தனது ஆய்வுகளில்.

முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும், பௌத்தர்களும், சீக்கியர்களும், சமணர்களும் வாழும் இந்தியாவில்‘ இந்துத்துவமே தேசிய அடையாளம்‘ எனக் கொக்கரிக்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பாகவத். பெயரளவிலான மதச்சார்பற்ற இந்திய ஒன்றியத்தை இந்து நாடாக்க உங்களது அறிவிப்புகளும், முயற்சிகளும் உள்ளது மோடி அவர்களே!

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டங்களும், மீத்தேன் எதிர்ப்புப் போராட்டங்களும், காவிரி, முல்லை பெரியார், பாலாறு ஆற்று நீர் உரிமைப் போராட்டங்களும், இந்தித் திணிப்பு, சமஸ்கிருதக் கொண்டாட்டங்களுக்கு எதிரான போராட்டங்களும், நிலக் கையகப்படுத்தல் சட்ட, காப்பீடு தனியார் மயமாக்க எதிர்ப்பு போராட்டங்களும், கோவில், மடத்து, மற்றும் பஞ்சமி நிலங்களுக்கான போராட்டங்களும், இந்து மதக் கட்டமைப்பைக் காப்பாற்றும் சாதியை ஒழிப்பதற்கான போராட்டங்களும், இந்துத்துவ காவி பயங்கரத்திற்கு எதிரான போராட்டங்களும், ஒன்று மாறி ஒன்று, கலந்து நின்று உங்களை தமிழ்நாட்டில் காலூன்ற விடாது மோடி அவர்களே! முன்பு உங்களை அனுமதிக்க மறுத்த தற்போது தலையில் வைத்துக் கொண்டாடும் அமெரிக்காவும், பன்னாட்டு கார்ப்பரேட்டுகளும், கீதாபதேசம் செய்த உங்கள் கிருஷ்ண பரமாத்பாவும் தங்களைக் காப்பாற்ற முடியாது மோடி அண்ணன் அவர்களே! எச்சரிக்கை! கார்ப்பரேட் கட்டமைக்கும் உமது முகமூடிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் கோர முகம் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது மோடி அவர்களே!

வடமாநிலங்களின் சோசலிஸ்ட்டுகள் லோகியாவின் வாரிசுகளை விலைக்கு வாங்க முடிந்தது, இந்துமத எதிரியான அம்பேத்காரின் வாரிசுகள் பலர் உங்களுடன் உறவாடித் தங்களை இழந்தனர், இந்து மத அழிவுவேலைக்குச் சொந்தக்காரரான தந்தை பெரியாரின் வாரிசுகளான தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க ஆகியோரைப் பதவி ஆசை காட்டி விலைக்கு வாங்க முடிந்தது. பா.ம.க, தே.மு.தி.க, இந்திய சனநாயகக் கட்சி என புதிய வகை சாதிய, பிற்போக்கு சக்திகளை விலைக்கு வாங்க முடிந்தது. உங்களால் விலைக்கு வாங்க முடியாத அரசியல் சக்திகள் யார்? தேர்தல் களத்தில் நின்றாலும், இல்லையென்றாலும் கம்யூனிஸ்ட்டுக்களை, செங்கொடி அரசியலை உங்களால் இதுவரை நெருங்க முடியவில்லை. கம்யூனிஸ்ட் இயக்கம் பெரும்படையாக சனநாயகம் காக்க, சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்களின் பாதுகாப்பிற்காக, உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்காக இதுவரை முன்நின்று போராடியிருக்கிறது. இனியும் களமாடும். இந்துமதச் சனாதனத்தை, இந்துத்துவ சாதியக் கட்டுமானத்தை, இந்துத்துவ காவி பயங்கரவாதத்தை முறியடிக்கும். இந்து இந்தியா, இந்தி இந்தியா எனத் துப்பாக்கி முனையில் கட்டி ஆளும் பிற்போக்கு, ஏகாதிபத்திய ஆதரவு, ஒற்றை இந்திய அதிகாரம் முறியடிக்கப்பட வேண்டும். பல தேசிய இனங்களைக் கொண்ட இந்திய ஒன்றியத்தை தேசிய இனக் குடியரசுகளின் கூட்டமைப்பாக சம அந்தஸ்தோடு, சுயசார்போடு மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது மோடி அவர்களே! செங்கொடியின் படபடக்கும் அசைவின் சிறகாய், செம்படையின் ஒரு வீரனாய், ஒரு கம்யூனிஸ்ட்டின் எச்சரிக்கைக் கடிதத்தை முடித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
ஒரு கம்யூனிஸ்ட்

About சிறப்பு கட்டுரையாளர்கள்

One comment

  1. மிகச் சிறப்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*