Home / FITE சங்கம் / ஐ.டி தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு ??????
நமது கரங்கள் ஒன்று சேர உதயமாகும் ஒரு புதிய எதிர்காலம்

ஐ.டி தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு ??????

டி.சி.எஸ் நிறுவனம் கடந்த டிசம்பர்(2014) மாதம் தொடங்கி வரும் பிப்ரவரி(2015) வரையிலான மூன்று மாதங்களில் 25,000 முதல் 30,000 வரையிலான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டு, நடத்தி வருவது, நாள் தோறும் செய்திகளில் வெளியாகிக்கொண்டிருக்கின்றது. சட்டத்திற்கு எதிரான இப்பணி நீக்கத்தை எதிர்த்தும், டி.சி.எஸ் தொழிலாளர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கவும் இளந்தமிழகம் இயக்கம் சார்பில் “தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றம்” ஒன்றை டிசம்பர் 29 அன்று உருவாக்கி, ஊழியர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வருகின்றது. இதற்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குச் சென்று ஊழியர்களுடன் கலந்துரையாடி, சில நகரங்களில் (ஹைதராபாத், மும்பை, சென்னை, பெங்களூரு) தொழிலாளர் ஆணையரைச் சந்தித்து நடைபெற்று வரும் பணி நீக்கத்தை நிறுத்த கோரி மனு அளித்துள்ளார்கள்.

FITE

தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றத்தின் இச்செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள்(யூனியன்) ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்பு வரை பணி நீக்க செய்தியையும், அதை மறுக்கும் டி.சி.எஸ் நிறுவனத்தின் மறுப்பையும் தெரிவித்து வந்தன‌ ஊடகங்கள். இன்று தொழிற்சங்கங்கள் தங்களது ஆதரவை ஐ.டி .தொழிலாளர்களுக்கு வழங்கிய பின்னர் ஊடக அறத்தை எல்லாம் மூட்டை கட்டி விட்டுத் தொழிற்சங்கத்திற்கு எதிரான தங்களது பதிவுகளை வெளியிடத் தொடங்கி உள்ளன. சில செய்திகளின் தலைப்புகள் இங்கே:

தொழிற்சங்கங்கள் ஐ.டி.துறையினுள் நுழையத் தொடங்குகின்றன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

தொழிற்சங்கங்களுக்கு ஐ.டி.துறையினுள் ஆதரவு பெருகுகின்றதா – லைவ் மின்ட்

எங்கே ஐ.டி துறை தொழிற்சங்கமயமாகிவிடுமோ என்ற அச்சம் ஐ.டி நிறுவனங்களைத் துரத்துகின்றது – தி சன்டே கார்டியன்

சாரமாக அவர்கள் சொல்லவரும் செய்தி இது தான் ஐ.டி.துறையின் வளர்ச்சிக்குக் காரணம் இதுவரை தொழிற்சங்கங்கள் அங்கு இல்லாதது தான். இன்று தொழிற்சங்க பூதங்கள் ஐ.டி.துறையையும் கைப்பற்ற முயற்சிக்கின்றன, இதனால் ஐ.டி.துறையின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படும். இனி தொழிலாளர்கள் ஒழுங்காக வேலை செய்ய மாட்டார்கள், தொழிற்சங்கங்கள் தான் அவர்களைக் கட்டுபடுத்தும் என்பது தான்.

ஒரு செய்தியின் இரு தரப்பு பார்வையும் வெளியிட வேண்டும் என்பது தான் ஊடக அறம் அல்லது நடுநிலையாகும், ஆனால் இங்குப் பெரும்பான்மை ஊடகங்களுக்கு ஊடக அறம் என்பது தொழிற்சங்கத்திற்கெதிரான முதலாளிகள் தரப்பு, முதலாளிகளின் நலன்களை மட்டுமே கொண்டிருக்கின்றனவே தவிர, இதில் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர் தரப்பைப் பற்றியோ, அவர்கள் எதிர் கொண்டு வரும் பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது என்பது பற்றியோ ஒரு வரி கூட இல்லை. ஊடகங்கள் இயங்குவது பெரும்பான்மை விளம்பரங்களினால் வரும் பணத்தைக் கொண்டு தான், விளம்பரங்களைக் கொடுப்பது நிறுவனங்கள் அதனால் நிறுவனங்களுக்கு ஆதரவான நிலையை அவர்கள் எடுத்து வருகின்றார்கள். எல்லா ஊடகங்களுமே அப்படித் தான் செயல்படுகின்றன என்பதும் தவறான பார்வையே, தொழிலாளர்களின் நிலையை எடுத்துச் சொல்லும் சில ஊடகங்களும் இருக்கின்றன.

சரி இந்த ஊடகங்களின் பார்வையில் தொழிற்சங்கங்கள் ஐ.டி துறையினுள் நுழையக்கூடாது என்றால், ஐ.டி ஊழியர்கள் எதிர்கொண்டு வரும் பின்வரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு தான் என்ன?

1) டி.சி.எஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சட்டத்திற்குப் புறம்பான வேலைநீக்கங்களைத் தடுப்பது எப்படி?

2) உரிய நிவாரணத் தொகை (Compensation) அளிக்கப்படாமல் துரத்தப்படும் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகையைப் பெற்றுத்தருவது யார்?

3) வேலையிலிருந்து தாங்களாகவே விலகுகிறேன் என்று எழுதித் தருமாறு ஊழியர்களை மிரட்டி வற்புறுத்தும் ஐ.டி நிறுவனங்களைத் தடுப்பது எப்படி?

4) காலவரையறையின்றி இரவு பகல் பணிசெய்வதால் ஐ.டி.தொழிலாளர்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகவும், இதனால் தற்கொலையும், மணமுறிவும் அதிக அளவில் உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் விவரிக்கின்றன. இதைச் சரி செய்வது எப்படி?

5) 20 வயதில் வேலைக்குச் சேர்ந்து 35 வயதில் வேலையிலிருந்து நீக்கப்படும் ஐ.டி தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புக்கு வழி என்ன?

6) மத்திய, மாநில அரசுகளிடமிருந்து குறைந்த விலைக்கு நிலம், மின்சாரக் கட்டணத்தில் சலுகை, பல வரிச்சட்டங்களிலிருந்து விலக்கு பெறுவதற்கான ஒரே காரணம் நாங்கள் வேலை வாய்ப்பை உருவாக்கின்றோம் என ஐ.டி நிறுவனங்கள் சொல்லும் ஒரு சொல் தானே அன்றி வேறல்ல. இன்று அந்த வேலைவாய்ப்பில் இவர்களே உருவாக்கியுள்ள நிச்சயமற்றத்தன்மையை இந்த அரசுகள் கேள்வி கேட்காமல் வேடிக்கை பார்ப்பது சரியா?

நமது கரங்கள் ஒன்று சேர உதயமாகும் ஒரு புதிய எதிர்காலம்

நமது கரங்கள் ஒன்று சேர உதயமாகும் ஒரு புதிய எதிர்காலம்

இதற்கெல்லாம் எந்த ஒரு தீர்வையும் முன்வைக்காமல் வெறுமனே தொழிற்சங்கங்களைப் பூதமாகச் சித்தரிப்பது, முதலாளிகளின் குற்றங்களுக்கு உடந்தையாக இருக்கும் செயலே அன்றி வேறல்ல. பூமி உருவானதலிருந்து மாற்றங்கள் நாள்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. தொழிற்புரட்சி காலகட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க தொழிற்சங்கங்கள் தோன்றின. அந்தத் தொழிற்சாலையிலிருந்து மாறுபட்டதாகச் சொல்லிக்கொள்ளும் ஐ.டி. உள்ளிட்ட சேவை சார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க ஒர் அமைப்பு தேவை. அதுகுறித்து விவாதிப்பதற்கான காலம் இதுவே !

நற்றமிழன்.ப‌

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*